குப்பை என்பது எந்த வகையான பொருளிலுமிருந்து கிடைக்கும் வீணான பகுதி ஆகும்.

குப்பைகளின் வகைகள்

உலர்ந்த குப்பை (அ) திடமான குப்பை

இதில் வீடுகள், தெருக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வேளாண் துறையில் இருக்கும் தேவையற்ற மற்றும் வீணான கழிவு பொருட்கள் அடங்கும்.

இதில் பொது மற்றும் வீட்டுக்குப்பை இருக்கும். அவை :

1. பயனற்ற பொருள், காய்கறிகளில் தேவையற்ற பகுதிகள் மீதமான உணவு

2. வீணானவை, பயனற்றகாகிதம், உடைத்த கண்ணாடி, குப்பிகள் மற்றும் டின்கள், உலோகம், பிளாஸ்டிக் மற்றும் கந்தல் துண்டுகள்.

3. எரியும் விறகு அடுப்புக்கரி மற்றும் மாட்டுச்சான எரிபொருள்களிலிருந்து ஏற்படும் சாம்பல்.

4. விலங்குகளின் மலக்கழிவு

5. தெருக்குப்பைகள்

6. உதிர்ந்த இலைகள்

7. செத்த விலங்குகள்

ஈரக்குப்பைகள் அல்லது நீர்மக்கழிவுகள்

1. வீடுகளிலிருந்து வரும் கழிவுநீர்: குளித்தபிறகு, துணிகள், பாத்திரங்கள், காய்கறிகள், முதலியவற்றைக் கழுவிய பிறகு வருபவை.

2. பொதுக்கிணறுகள் மற்றும் சலவையகங்களிலிருந்து வரும் கழிவுநீர்

3. கால்நடைக் கூடங்கள் மற்றும் கடைகளிலிருந்து வரும் கழிவுநீர்

4. சாயம் மற்றும் நெசவுத் தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவுநீர்.

குப்பைகளை எடுக்காமல் விட்டுவிடுவதால் ஏற்படும் இடர்பாடுகள்

* ஈக்கள் மற்றும் பிற பூச்சிகள், எலிகள் பெருகுதல்

*நாய்கள் மற்றும் காக்கைகளுக்கு ஊக்கம் தருதல்.

நுண்ணுயிர்கள் வளர்தல், ஈக்கள், தூசி மற்றும் தொற்று மாசுள்ள நீர் ஆகியவற்றால் தொற்று பரவுதல்.

*பார்க்க அருவருப்பு மற்றும் கெட்ட நாற்றம்

*மனிதர் கீழே விழும் ஆபத்து (எடு) பாதையில் கிடக்கும் பழத்தோலினால் விழும் அபாயம்.

*குப்பை குவியல்களாகக் கிடக்கும் போது, தீ விபத்து ஏற்படலாம்.

நீர்மக்கழிவுகள் தேங்கிய குட்டை நீராக விடப்படுவதால் ஏற்படும் இடர்பாடுகள்

* கொசுக்களின் இனப்பெருக்கம்

* வழங்கும் குடிநீரை மாசுபடுத்தும் ஆபத்து

* வீடுகளில் நீர் ஒதம் (Dampress) மற்றும் கட்டிடங்களின் அடிப்படைக்கு ஆபத்து.

* கெட்ட நாற்றங்கள்.

மனிதக்கழிவுகளை அகற்றுவது முறைப்படி இல்லாததால் அது கீழ்கண்ட முறைகளில் நோய்பரவ வழிவகுக்கிறது

* ஈக்கள், மலத்திலிருந்து உணவுக்கு நுண்ணுயிரிகளையும், புழு உருவாகும் கரு முட்டைகளையும் கொண்டு வந்து சேர்க்கும்.

*நோய்த்தொற்றும் நிலையடைந்த மலத்தால் குடிநீர் தொற்று மாசு அடையக்கூடும்.

*மலம் கழித்த பிறகு போதிய அளவு கைகளைக் கழுவாதால், உணவு தொற்று மாசு அடையலாம்.

*காய்களும், பழங்களும் நிலத்தில் அல்லது எருவில் உள்ள புழு உருவாகும் கருமுட்டைகளால் தொற்று மாசு அடையலாம். அவற்றைக் கழுவாமல் அல்லது சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவது தவறு.

* மனிதர் அல்லது விலங்குகளின் கழிவுகள் நிலத்தில் இருப்பதன் மூலம் தோலில் உள்ள புண்கள் அல்லது பிளவுகளில் ரணஜன்னி தொற்று உண்டாக்கலாம்.

a. நுண்மம் சார்ந்த நோய்கள் (Bacterial Diseases) காலரா, டைபாய்டு மற்றும் குடற்காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் (Paratyphoid) நுண்மம் சார்ந்த சீதபேதி (bacillary dysentery)

b. ஒட்டுயிரி தரும் நோய்கள் (Parasitic deseases) அமீபா சம்பந்தமானவை (Amoebiasis) குடலில் உள்ள புழுக்களான கொக்கிப் புழு (Hook worms) உருண்டைப் புழு (Ring worms) மற்றும் நாடாபுழு (Tape worms)

c. நச்சு நுண்ம நோய்கள் (Viral diseases), இளம்பிள்ளைவாதம் மற்றும் நோய்த்தொற்றுக் கல்லீரல் அழற்சி (Infections Hepatitis)

கழிவு அகற்றுதல்

குப்பை அகற்றும் முறைகள் (Methods of Refuse Dispasal)

1. திறந்த வெளியில் புதைத்தல் (Open dumping): பள்ளமான தரையை நிரப்பி மட்டமாக்கப் பயன்படும் ஒருமுறை இது. ஆனால் இதில் நலவாழ்வுக்கான இடர்பாடுகள் இல்லாமல் இல்லை. இப்படிக் கொட்டி குவிக்கும் இடம் வீடுகளுக்குப் போதிய அளவு தூரத்தில் இருக்கவேண்டும். இல்லை எனில் அதை ஈக்களும் எலிகளும் அணுகும் மற்றும் கெட்ட நாற்றமும் வீசும்.

2. புதைத்தல் (அ) கட்டுப்படுத்தப்பட்ட கவிழ்ப்பு (Controlled dipping): இதற்கு 3 அடி ஆழத்தில் குழி அல்லது பள்ளம் வெட்ட வேண்டும். இதனால் நாய்கள் அல்லது எலிகள் குப்பையை அணுக முடியாது. குப்பையைக் கொட்டும் ஒவ்வொரு தடவையும் சிறிதளவு மண்ணால் அதை மூடவேண்டும். இதையே பெரிய அளவில் செய்யும்போது அதைக் 'கட்டுப்படுத்தப்பட்ட கவிழ்ப்பு' (Controlled Tipping) முறை எனப்படும். குப்பை நுண்மங்களால் உடைக்கப்பட்டு எருவாக மாற்றப்படுகிறது. 3 முதல் 6 மாதத்திற்குள் எருவாகப் பயன்படுத்தலாம். புதிய குப்பையைப் போட அந்தக் குழியை மீண்டும் பயன்படுத்தலாம்.

3. எரித்தல் (Burning): மருத்துவமனைக்கழிவுகளை அகற்ற இது சிறந்த முறை ஏனென்றால் தெருக்கழிவுகளை விட இவை தொற்று அதிகம் நிறைந்தது. எரித்தொட்டி (Incinerator) ஒன்றில் அதிகம் நிறைந்து அதை எரிந்துவிடவேண்டும். எரித்தொட்டி கழிவுகளை அகற்றுவதில் சிறந்த முறை என்றாலும், முக்கியமான பின் விளைவு சமுதாயத்தில் உரமிடுதல் பாதிக்கப்படும்.

4. கலப்பு உரம் ஆக்குதல் (Composting): குப்பைகளும், மனிதக்கழிவுகளும் சேர்ந்து அகற்றும் முறை கலப்பு உரம் ஆக்குதல்' எனப்படும். 3 மீட்டர் ஆழத்துக்கு ஒரு குழி வெட்டு. வீட்டுக்குப்பையையும், மாட்டு சாணத்தையும் 8:2 என்ற விகிதத்தில் மாற்றி மாற்றிப் படுக்கைகளாகப் (Alternate Layers) பரப்பிக் குழியை நிரப்பு. மேலே உள்ள படுக்கை குப்பைப் படுக்கையாகவும், மண்ணால் மூடப்பட்டுத் தரைமட்டத்துக்கு மேல் உயரமாகவும் இருக்கவேண்டும்.

பாக்டீரியாக்களின் செயல் விளைவினால் குழியின் உள்ளே வெப்பம் உண்டாக்கப்படுகிறது. இந்த வெப்பநிலையில் நோயை உண்டாக்கும் கிருமிகளும், மற்ற நுண்ணுயிரிகளும் கொல்லப்பட்டு அழிக்கப்படுகின்றன. படிப்படியாக குழி குளிர்ச்சி அடையும். 4-6 மாதங்களுக்குப்பிறகு குப்பை நுண்மங்களாக உடைக்கப்பட்டு எருவாக மாற்றுப்படுகிறது. இந்த உரத்தை விளைநிலங்களுக்கு பயன்படுத்தலாம். குப்பையும் கழிவுகளும் சேர்ந்து அகற்றும் இந்த முறைக்கு 'வெப்பகலக்குதல் முறை' என்று பெயர் (hot fermentation Process).

மனிதக்கழிவு நோய்த்தொற்றுக்கு ஒரு ஆதாரம். சுற்றுசுழல் மாசுபடுவதற்கு இது முக்கியமான காரணமாகும். கழிவுகளை நீக்குவதற்கும் அகற்றுவதற்கும். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கடமை உண்டு. எனவே அது பொது சுகாதாரத்தை பாதிக்காது.

சரியான முறையில் அகற்றப்படாவிட்டால் ஏற்படும் சுகாதார இடர்பாடுகள்

1. நிலம் மாசுறுதல் (Soil pollution)

2. தண்ணீர் மாசுறுதல் (Water pollution)

3. உணவுப்பொருட்கள் கெட்டுப்போதல் (Contamination of foods)

4. ஈக்கள் பெருகுதல்

கழிவுகளை அகற்றுவது முறைப்படி இல்லாததால், டைபாய்டு, பாரா டைபாய்டு, காய்ச்சல், சீதபேதி, பேதி, காலரா, கொக்கிபுழு, உருண்டைப்புழு, கல்லீரல் நோய்த் தொற்று அழற்சி மற்றும் குடல் தொற்றுகள் மற்றும் ஒட்டுயிரிதரும் நோய்கள் போன்றவை பரப்பப்படுகின்றன.

கழிவுகளை அகற்றும் முறைகள்

கழிவுகளை அகற்ற நிறைய முறைகள் உண்டு, அவை:

A. பணிவிடை வகை (Service Type)

B. கழிவு நீக்கத்திற்குரிய கழிவறைகள் (Sanitary Type)

1. ஆழ்துளை கழிவறை (BoreholeLatrine)

2. குழிக்கழிவறை (Hole Latrine)

3. நீர் மூடிக்குழிக்கழிவறை (Watersealtypeof Latrine)

4. கழிவுத்தொட்டி

c. எளிய கழிவறைகள்

* ஆழமற்ற குழி கழிவறை

* ஆழமான குழிகழிவறை

* குழி கழிவறை

* ஆள்துளை கழிவறை

A. பணிவிடை வகை (Service type Laterine): இந்த வகைக் கழிப்பறையைக் கையாள, ஒருவர் தேவை. அவர் கழிவுக் கூளத்தை (Night-soil) வாளிகளில் எடுத்துச் சென்று காலி செய்து விட்டு வருவார். படுக்கை அறைக்கழிகலம் (commodle) அல்லது நோயாளி கழிகலம் (bedpan) நோயுற்ற நிலையில் பயன்படுத்தப்படும். தவிரப் பிற இடங்களில் இதைச் சிபாரிசு செய்வதில்லை.

B. கழிவு நீக்கத்துக் குரிய கழிவறை (Sanitary Laterine): கழிவு கண்ணில் படுவதால் அல்லது நாற்றத்தால் அருவெறுப்பு உண்டாக்காததும், கழிவு திறந்தபடி இல்லாததும் நிலத்தையோ அல்லது நீர்வள ஆதாரங்கள் எதையுமோ மாசுபடுத்தாததுமான கழிவறையை சுகாதாரக் கழிவறை என்கிறோம். அது இருவகைப் படும்.

a. ஆழ்துளை கழிவறை (Borehole Laterine): இது இந்தியாவில் 1930 ஆம் ஆண்டு கொக்கிப்புழு கட்டுப்பாட்டுத்திட்டத்தில் ராக்பெல்லர் நிறுவனத்தால் அறிமுகப் படுத்தப்பட்டது.

இந்த கழிவறையின் வட்டவடிவதுளை 30-40 செ.மீ ஆகும். குழி ஆறு மீட்டர் ஆழம் கொண்டதாக இருக்கும் சிமெண்ட் கான்கிரீட்டால் ஆன நடுதுளையுடன் பாதத்தட்டுடன் மற்றும் சரியான மறைப்பு இருக்கவேண்டும்.-

5(அ) 6 பேர் உள்ள குடும்பத்துக்கு ஒரு வருட காலத்திற்கு பயன்படுத்தலாம். குழிநிறைந்து விட்ட பிறகு அதை மண்ணோடு மூடிவிட்டு, புதியதாக கட்டப்பட்ட மற்றக் கழிவறையைப் பயன் படுத்தலாம். குழியில் உள்ள கழிவு உயிர் ஆக்ஸிஜன் இல்லாமல் வாழும் நுண்மங்களால் (Anaerobic Bacteria) ஆபத்தில்லாததாக ஆக்கப்பட்டு விடுகிறது. இது வீட்டுக்கருகில் வசதியான இடத்தில் ஆனால் நீர் ஆதாரம் ஏதாவது இருந்தால் அதிலிருந்து 15 மீட்டர் தொலைவில் அமைக்கப்படவேண்டும்.

ஆழ்துளை கழிவறையின் பயன்கள்

1. தினமும் கழிவு கூளத்தை (Night soil) அகற்ற ஆட்கள் தேவை இல்லை .

2. ஈக்கள் இனப்பெருக்கத்திற்கு உகந்தது அல்ல

3. நீர் மற்றும் நிலம் மாசுறுதல் ஏற்படாது.

ஆழ்துளை கழிவறையின் தீமைகள்

1. இந்தக் குழி கழிவறை விரைவில் நிரம்பிவிடும்.

2. குழி தோண்டுவதற்கு ஆகர் எனப்படும் சிறப்பான உபகரணம் தேவை.

குழி அல்லது வெட்டப்பட்ட கழிவறை (DugwellLatrine)

இந்கு குழியின் விட்டம் 75 செ.மீ (30 inches) மற்றும் ஆழம் 3 35 மீட்டர் (10-12 Feet)

குழி அல்லது வெட்டப்பட்ட கழிவறையின் பயன்கள்.

1. இதை சுலபமாக அமைக்கலாம். சிறப்பான உபகரணம் தேவையில்லை .

2. இதன் சதுர அடி பரப்பு அதிகமாக இருப்பதால் நீண்ட நாட்களுக்கு பயன் படுத்தலாம்.

3. ஆக்ஸிஜன்யில்லாமல் வாழும் நுண்மங்களால் (Anaerobic Bacteria) சுத்தப்படுத்தப்படுகிறது.

C. நீர்முடி கழிவறை (Watersealtype laterine): இதற்கு நீர் பீச்சியடிக்கும் கழிவறை என்றும் பெயர் உண்டு (Handflushed Latrines). இவைகள் மலிவானதும் மற்றும் பல அமைப்புகளில் உண்டாக்கப்பட்டும் இருக்கும். அதில் 2 அமைப்புகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

1. PARI-Planning Action and Research Institute at Lucknow.

2. R.C.Atype -ResearchCumAction

RCA வகை கழுவறை பல அமைப்புகளில் நாடு முழுவதும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

RCA கழிவறையின் முக்கிய காரணிகள் (The Essential Features ofRCALatrine)

1. இடம் (Location) : இந்தக் கழிவறை நீர் ஆதாரத்திலிருந்து 15 மீட்டர் தொலைவுக்குள் அமைக்கப்படக்கூடாது

மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு அல்லது தண்ணீர் தேங்கும் இடங்களில் அமைக்கப்படக்கூடாது.

2. அமரும்தட்டு (Squattling Plate) : இது சிமெண்ட் காங்கிரீட்டினால் ஆனது. 3 அடி சதுரமும் 2 அங்குலப் பருமனும் கொண்டு இருக்கும்.

3. கலம் (Pan) : இதன் தளம் வழவழப்பாக மலம் இதன் பக்கங்களில் ஒட்டாதவாறு இருக்கவேண்டும். முன் புறமிருந்து பின்புறம் சாய்வாக இருக்கும்.

4. முடக்கி (Iran): இது 3 அங்குல விட்டமுடைய வளைந்த குழாய் கலத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் இது நீரை பிடித்து வைத்துக் கொள்கிறது. அதனால் நீர் மூடியாகச் செயல்படுகிறது. நீர்மூடி (WaterScal) இரண்டு வேலைகளைச் செய்கிறது.

a. குழியிலுள்ள கழிவிலிருந்து வரும் கெட்ட நாற்றத்தைத் தடுக்கிறது.

b. ஈக்களைத் தடுக்கிறது.

5. இணைக்கும் குழாய் (Commecting Pipe) : இது 3 அங்குல விட்டமும் 3 அடி நீளமும் உள்ள குழாய். இது முடக்கியுடன் இணைக்கப்பட்டு சாய்வாகக் குழிக்குள் சேரும்படி அமைக்கப்பட்டது.

6. குழி அல்லது வெட்டப்பட்டக்குளம் (piterdug / well) : இது பொதுவான 30 அங்குல விட்டமும் மற்றும் 10-12 (3 முதல் 4 மீட்டர்) அடி ஆழமும் உடையது. மேலும் தரைமட்டத்துக்கு மேல் மூடி இருக்கும். குழி நிறைந்தவுடன், பக்கத்தில் தோண்டியிருக்கும் மற்றக் குழியுடன் இணைக்கும் குழாயை இணைக்க வேண்டும்.

7. மேல்கட்டிடம் (Super structure): இது வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்புக்காகவும் மறைப்புக்காகவும் கட்டப்படுவது.

8. கழிவறைப் பராமரிப்பு: இந்தக் கழிவறையை கவனமாகப் பயன்படுத்திப் பராமரித்தால் நீண்ட நாட்கள் பயனுள்ளதாக இருக்கும். அமரும்தட்டு அடிக்கடி கழுவப்பட்டு, உலர்ந்ததாகவும் சுத்தமாகவும் வைக்கப்பட வேண்டும். மலம் கழிக்கப் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் போதுமான அளவு நீர் கொண்டு விசையுடன் நீ ஊற்றப்பட (Flushed) வேண்டும். சோப்புநீர் மற்றும் பீனால் போன்ற தொற்று நீக்கிகளை குழியினுள் ஊற்றக்கூடாது.

d) கழிவு தொட்டி (Septic Tank): கழிவு தொட்டி என்பது சுகாதாரத்திற்கு கேடில்லாமல் மளிதக்கழிவுகள் தூய்மைப் படுத்தப்படலாகும்.

அமைப்பின் தரங்கள்

1. கொள்ளளவு: (Capacity): கழிவுத்தொட்டியின் கொள்ளளவு பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையை பொறுத்தது. ஒருவருக்கு 90-145 லிட்டர் பரிந்துரைக்கப்படகிறது.

2. நீளம் (Length): கழிவுத்தொட்டியின் நீளம், அகலத்தைவிட அதிகமாக இருக்கும், அதன் விகிதம் 2.1

3. ஆழம் (Depth): தொட்டியின் ஆழம் 5-7 அடி (1.5 - 2 மீட்டர்) ஆனால் தண்ணீரின் ஆழம் 4 அடி (1.2 மீட்டர்) மட்டும் தான்.

4. காற்றிடம் (Airspace): குறைந்தது 1 அடி காற்றிடம் இருக்கும் (30cm )

5. உள்வழி, வெளிவழி (Inter, outlet): கழிவு தொட்டியின் மேல் உள்வழி, வெளிவழி உள்ளது.

6. உறை (Cover): கழிவு வாயுபோக்கி (Manhole) மேலே பொருத்தப்பட்டிருக்கும்.

7. தேங்கும் நிலை (Retention Period): கழிவு தொட்டியின் தேங்கும் நிலை 23 அங்குலம் இருக்குமாறு அமைக்கப்படவேண்டும்.

முகாம்களில் பயன்படுத்தும் தற்காலிக கழிவறைகள்

a). ஆழமற்ற குழி கழிவறை (Shallow trench latrine): ஆழமற்ற எளியவகை கழிவறைகள் முகாம்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஏற்றதாக இருக்கும். 30 செமீ அகலமும் 90 செ.மீ ஆழமும் கொண்ட ஆழமற்ற குழி சாணம் மற்றும் சாதாரண பொருட்களைக் கொண்டு கட்டப்பட வேண்டும்.

பயன்படுத்துபவர்கள் மலம் கழித்த பின் மண்ணால் மூடி, குழி மூன்றில் ஒருபாகம் நிறைந்திருக்கும் வரை கழுவுவதற்கு தண்ணீர் பயன்படுத்தி மண்ணால் மூடவேண்டும். தேவைப்பட்டால் இதேபோன்று ஒரு குழி பக்கத்தில் அமைக்கலாம். கழிவுகள் வளிமண்டல பாக்டீரியாக்களால் சுத்தம் செய்யப்படும்.

b). ஆழமான குழி கழிவறை (Deeptrench latrine): இந்தக் குழியின் ஆழம் 6-8 அடி. (1.8 - 2.5மி. இந்த வகையான கழிவறைகள் நீண்டகால முகாம்களுக்கு ஏற்றது. இந்த கழிவுகள் ஆக்ஸிஜன் இல்லாமல் வாழும் நுண்மங்களால் (Anaerobic Bacteria) சுத்திகரிக்கப்படுகிறது.

கழிவுநீர் அமைப்பு (Sewage System)

கழிவுகளை அகற்றுவதற்கு நீர் வழி எடுத்துச் செல்லும் அமைப்பு இதற்கென உள்ளது. கழிவு நீர் குழாய்கள் (Sewers) வீட்டு வடிகால்களிலிருந்து வரும் நீரையும், கழிவுநீர் (Sewage) எனப்படும் கழிவு சாக்கடை நீர் மற்றும் மழைநீர் ஆகியவற்றை அகற்றுவதற்கு இந்த அமைப்பு பயன்படுத்துவதாகும்.

கழிவுநீர் அமைப்பு மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.

1. வீட்டு வடிகால் நீர் (House drainage)

2. வடிகால் மற்றும் கழிவுநீர் சாக்கடை (Draing and Sewers)

3. சாக்கடையை சுத்தம் செய்தல் மற்றும் அகற்றுதல்

வீட்டு வடிகால் நீர் (House Drainage): இதில் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய வீடுகளிலிருந்து பெறப்படும் திரவக்கழிகள் மற்றும் அவை வடிகாலுடன் இணைக்கப்பட்டிருக்கும். அவை.

a. மூடிய கழிவுநீர் அமைப்பு

b. குளியலறைகள்

C. கழுவுமிடங்கள்

d. கழிவுத்தொட்டி (Sink)

e. மழை நீர்க் குழாய்கள்

a) மூடிய கழிவுநீர் அமைப்பு (Water Closet): கீழ்கண்ட பகுதிகள், கலம் (Pan) - இது அமரும்தட்டு போன்றவகை முடக்கி (Trap) - இது U வடிவத்தில் இணைக்குழாய் கலத்தை பூமியில் உள்ள குழாயுடன் இணைக்கப்படுகிறது. இது தரைக்குழாயிலிருந்து வாயுக்கள் வெளியாவதைத் தடுக்கிறது.

விசையுடன் நீர் கொட்டுதல் (Flush) - இதில் 14 லிட்டர் நீர் விசையுடன் கொட்டப்படுகிறது.

b) குளியலறை (Bathroom): சதுரம் (அ) வட்டவடிவதுளைகள் இரும்பு சல்லடை தகட்டினால் மூடப்பட்டு தண்ணீர் வடிக்கப்படுகிறது.

C) கழுவுகலன் (Washbasin): இதற்கு கீழே 'U' வடிவத்தில் முடக்கி (Map) உள்ளது. வடிகால் குழாய் குளியலறையின் சாக்கடை முடக்கியில் (gullerytrap திறக்கப்படுகிறது.

d) கழிவுத்தொட்டி (Sink): இதில் சமையலறையிலிருந்து பெறப்பட்ட கழிவுநீர் இருக்கும். இந்த கழிவு நீரில் குப்பை, வண்டல் மற்றும் காய்கறிகளின் தோல் முதலியவை அடங்கும்.

மழைநீர் குழாய் அமைப்பு (Rainwater Pipe System): கட்டிடத்தின் வெளிச்சுவரில் 3 வகையான குழாய்கள் பொதுவாக காணப்படும். கட்டிடத்தின் மேல் பரப்பில் உள்ள நீர் இந்த குழாயின் மூலம் சாக்கடை முடக்கிக்கு அனுப்புகிறது.

கழிவுநீரை அகற்றுதல் (Sewage Disposal): கழிவுநீர் என்பது சமுதாயத்திலிருந்து வரும் நீரில் திட மற்றும் திரவ கழிவுகள் அடங்கியிருத்தலாகும். இந்தக் கழிவுகள் வீடுகள், தெருக்கள், சலவையகங்கள், மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து பெறப்படுகின்றன. இந்த அசுத்தமான நீரில் துர்நாற்றம் வீசும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு (Treatment of Sewage)

இது நான்கு பகுதிகளாக பிரிக்கப்படும்.

1. ஆரம்ப நிலை சுத்திகரிப்பு (Preliminary Treatment): கடினமான மற்றும் மிதக்கும், பொருட்களை பிரித்தெடுத்தல்

2. முதல் நிலை கனிமப்பொருட்களை படியச் செய்து சிதைத்து ஆக்ஸஸிஜனில்லாமல் வாழும் நுண்மங்களால் (Anaerobic) சிறியவைகளாக மாற்றப்படுதல்

3. இரண்டாவது நிலை: சிதைக்கப்பட்ட பொருட்களை இறுதியில் உயிர்வளி வாழும் நுண்மங்களால் (aerobic) நிலைப்படுத்துதலாகும் நிலைப்படுத்துதல் (Stabilization) என்பது கனிமப்பொருட்கள் முழுவதுமாக சிதைக்கப்பட்டு சிறியவைகளாக மாற்றப்படுதல், எனவே சிதைவுறுதல் மீண்டும் நடைபெறாது.

4. முடிவுநிலை (Final): நோயை உண்டாக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது.

தொடக்க கழிவுநீர் சுத்திகரிப்பு (Preliminary Treatment)

a. திரையிடுதல் (Screening): உலோகத்தால் ஆன திரை ஒன்று, மிதந்து வரும் குப்பைகளான மரத்துண்டுகள், கந்தைகள் போன்றவற்றை நீக்கி விடுகிறது. இந்தக் குப்பை புதைக்கப்பட்டு அகற்றப்படுகிறது.

b. பொடிக்கல் அறை (Grit Chamber): அடுத்து நீண்ட குறுகலான பள்ளம். இதற்கு பொடிக்கல் அறை என்று பெயர். மணல், கற்கள் போன்ற கடினப்பொருட்கள் இதில் படிந்துவிடுகின்றன.

ii. ஆரம்ப கழிவுநீர் சுத்திகரிப்பு (Primary Treatment): இந்த கழிவுநீர் இப்போது குளத்தில் பாய்கிறது. இதற்கு ஆரம்ப வண்டல் படியும் குளம் (Primary Sedimentation) என்று பெயர். கழிவு நீர் தொடர்ந்து மெதுவாக 6-8 மணிநேரம் பாய்கிறது. அப்போது பிறகடினப் பொருட்கள் படிந்து 'சாக்கடைக் கசடு' (Sludge digester) எனப்படும். கறுப்பு சேறு ஆகிவிடுகிறது.

iii. இரண்டாவது கழிவுநீர் சுத்தகரிப்பு (Secondary Treatment)

a. நீர் ஒழுக்கு வடிகட்டி முறை (Trickling Filtermethod) : நீர் ஒழுக்கு வடிகட்டியின் படுக்கை கற்களால் ஆனது. இதன் ஆழம் 4, 8 அடி மற்றும் விட்டம் 6 100 அடி. ஆரம்ப வண்டல்படியும் குளத்திலிருந்து வரும் கழிவுகள் வடிகட்டிப் படுக்கையின் மேல் பாயும். அது அப்படி செல்லும் போது, ''உயிர்ப்பதற்கு தனி ஆக்ஸிஜன் வேண்டுகிற" நுண்மங்களால் (Aerobic Bacteria) உயிரகத்துடன் இணைந்து இதனால் சுத்திகரிக்கப்படுகிறது. இந்தக் கிருமிகளின் வளர்ச்சிக்கு "Zoogleal Layer'' என்று பெயர். இந்த உயிரியல் வளர்ச்சி சாக்கடைக் கழிவுகளின் சுத்திகரிப்புக்கு முக்கியமானது.

iv. முடிவு நிலை சுத்திகரிப்பு: முடிவுநிலை சுத்திகரிப்பில் சாக்கடைக் கழிவுகள் தொற்று நீக்கம் செய்யப்படுகின்றன.

a. குளோரின் இடுதல் (Chlorination): குளோரின் (அ) சலவைத்தூள் (bl Powder) 2-5ppm என்ற விகிதத்தில் சேர்க்கப்படுகிறது.

கழிவுநீர் அகற்றுதல் (Slage Disposal): நகரம் மற்றும் மாநகராட்சிகளில் கழிவுநீர் பாதாள சாக்கடை முறையில் அகற்றப்படுகிறது. கொசுக்கள் மற்றும் ஈக்களின் இனப்பெருக்கத்தை தடுக்கவும் மேலும் துர்நாற்றத்தை நீக்கவும் கழிவுநீர் சரியான முறையில் அகற்றப்படவேண்டும்.

ஊறும் குழி (Soakpit): ஊறும் குழி எளிமையானதும், நம்பகமானதும் சுகாதார முறையில் கழிவுநீர் அகற்ற சரியான முறையாகும். ஊறும் குழியில் நீர் செலுத்தப்படுவதால் நிலத்தடிநீரை மீண்டும் பயன்படுத்தலாம்.

ஊறும் குழியை அமைப்பதற்கு கீழ்கண்டவைகள் பின்பற்றப்படவேண்டும்.

1. ஊறும் குழியை அமைக்க வீட்டிலிருந்து தொலைவிலும், கிணற்றுப்பகுதியில் இருந்து 10 மீட்டர் தூரத்திலும் சரியான இடத்தை தேர்ந்தெடு.

2. 1 மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் ஆழம் கொண்ட ஒரு குழியை தோண்டு.

3. குழியின் ஆழத்தை 4 பகுதிகளாகப்பிரி குழியின் அடிப்புற பாகத்தை தேங்காய் வடிவ அளவு கற்கள் மற்றும் செங்கற்கள் கொண்டு நிரப்பு. குழியின் இரண்டாவது பாகத்தை பெரிய ஆப்பிள் வடிவ அளவு கற்கள் மற்றும் செங்கற்கள் கொண்டு நிரப்பு. குழியின் மூன்றாவது பாகத்தை எலுமிச்சைபழ அளவு கொண்ட கற்கள் மற்றும் செங்கற்களால் நிரப்பு. குழியின் மேற்பகுதியில் செலுத்தும் குழாய் வெற்றிடமாக இருக்கும்.

4. குழியின் உட்புற குழாய் கீழ்கண்டவாறு அமைக்கப்பட வேண்டும்.

b. குழியின் நடுவில் நான்கு செங்கற்கள் 5 செ.மீ இடைவெளிவிட்டு நடுவில் 12.5 செ.மீ x 12.5 செ.மீ வெற்றிடம் உருவாக்கப்படவேண்டும்.

இடைவெளிவிடாமல் இரண்டாவது படுக்கையில் செங்கற்களை வைக்க வேண்டும். தேவைப்பட்டால் இதேபோன்று மூன்றாவது மற்றும் நான்காவது படுக்கையிலும் வைக்கலாம்.

5. 1 ச. அடி கோணி அல்லது சாக்குப் பையை உள் குழாயின் மேல் மூடவேண்டும்.

6. கோணிப்பையை துளையுடன் கூடிய பாலிதீன் பேப்பரால் மூட வேண்டும்.

7. குழியின் மேல் புறப்படுக்கையை மண் படுக்கையால் மூட வேண்டும். இப்போது குழி பயன்படுத்தும் நிலையில் தயாராக உள்ளது.

8. குழியின் வெளி உறைக்கும் உள் உறைக்கும் இடையில் வடிகால் 110 செ.மீ ஆழமும் 7 செ.மீ அகலமும் இருக்க வேண்டும்.

9. வடிகாலின் நடுவில் முடக்கி (Trap) ஒன்றை வைத்து கரையாத திடப்பொருள்கள் குழியில் நுழைவதை தடுக்கலாம்.

10. முடக்கியையும் உள்பக்க குழாயையும் தட்டையான கற்களால் மூட வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்