நுண்ணுயிரியல் நுண்ணுயிரியல் என்பது கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளை பற்றி படிப்பது. இந்த நுண்ணுயிரிகள் மிகவும் சிறியதாகவும், நுண்நோக்கியின் உதவிக்கொண்டு மட்டுமே காணக்கூடியதாகவும் இருக்கும். பாக்டீரியா (Bacteria) வைரஸ் (Viruses) பூஞ்சைக்காளான் மற்றும் புரோட்டோஸோவா போன்றவை இவற்றில் அடங்கும். வைரஸிற்கு செல் அமைப்பு இல்லை. மற்ற நுண்ணுயிரிகள் செல்களால் ஆனது. நுண்ணுயிரியல் தினசரி வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக ரொட்டி, பூஞ்சைக் காளான் இல்லாமல் உற்பத்தி செய்ய முடியாது. வேளாண்மைத் துறையிலும், தொழிற்சாலைகளிலும் நுண்ணுயிரியலின் அணுகுமுறை மிகவும் அதிகமாக உள்ளது. நுண்ணுயிரிகள் கழிவுநீர் பாசனத்தில் முக்கிய இடத்தில் செயல்படுகிறது. அவைகள் இறந்த பொருட்களை அல்லது உயிரிகளை சிதைத்து பயனுள்ள கனிமங்களாக சுற்றுசுழலுக்கு அனுப்புகிறது. அதே நேரத்தில் சில நுண்ணுயிரிகள் நமக்கு தீமை விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. அவைகள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், பல நோய்கள் உண்டாக காரணமாக அமைகிறது. மற்ற நுண்ணுயிரிகள் உணவை நச்சுப்படுத்துவதாக இருக்கிறது. நுண்ணுயிரிகளின் வகைகள் நுண்ணுயிரிகளை நான்கு முக்கிய பிரிவுகளாக பிரிக்கலாம். 1. பாக்டீரியா 2. வைரஸ் 3. புரோட்டோசோவா 4. பூஞ்சைக் காளான் பாக்டீரியா பாக்டீரியாக்கள் பல வகைகளைக் கொண்டதும். விலங்கு மற்றும் தாவர வகையை சார்ந்ததாகவும் இருக்கும். அவைகளில் காக்கை (Cocci) பேசில்லை ஸ்பைரில்லா, மற்றும் ஸ்பைரோகீட்ஸ் உள்ளன. வகைகள் ஸ்ட்ரெப்டோ காக்கை (Streptococci): இவை வட்ட வடிவத்தில் சங்கிலி போன்று இருப்பவை இவைகள் கிராம் பாசிடிவ் (Gram - positive), நீந்த முடியாத, நோயை உண்டாகக்கூடியது. மேலும் சாதாரண நுண்மத்தொகுதி வளர்ப்பு ஊடகத்தில் வளராமல். இரத்தத்திலும், சீரத்திலும் வளரக்கூடியது. ஸ்டேஃபிலோ காக்கை (Staphylococci): ஸ்டேஃபிலோகாக்கை என்பவை திராட்சை போன்று கொத்தாக இருப்பவை. இவைகள் grampositive வகை மற்றும் பிரித்தெடுக்கும் போது ஊதாநிறத்தில் காணப்படும். இவைகள் இடம்விட்டு இடம் நகரமுடியாத. கரு அணுக்களாக அமையாத நுண்ணுயிரிகள். இவற்றில் இரண்டு வகை நோயை உண்டாக்கக்கூடியது. ஸ்டேஃபிலோகாக்கை ஆல்பஸ் (Staphylococcus albus) ஸ்டேஃபிலோகாக்கை ஆயூரியஸ் (Staphylococcus aureus) டிப்ளோ காக்கை (Diplococci): டிப்ளோகாக்கை என்பவை இணையாகச் சேர்ந்து இருக்கும் கிராம் நெகடிவ் நுண்ணுயிரிகள். எடுத்துக்காட்டு: நைசிரியா கோனோகோகஸ், நைசிரியா மெனிஞ்கோ கோகஸ் (Neisseriagonococci, Neisseriameningococci). வைரஸ் (Viruses) வைரஸ்கள் என்பவை மற்ற நுண்ணிய அங்கக உயிரிகளை விட மிகவும் சிறியவை. மிக நுண்ணிய சல்லடை வழியாகக் கூட நுழைந்துவிடும். இவற்றை சாதாரண நுண்நோக்கி வழியாகப் பார்க்கமுடியாது. மின்னணு நுண்நோக்கி வழியாகத் தான் பார்க்க முடியும். இவை பல நோய்களை உண்டாக்குகின்றன. (எடு) சாதாரண சளி, தட்டம்மை. சின்னம்மை, பெரியம்மை. வெறிநாய்கடி நோய் மற்றும் இளம்பிள்ளை வாதம். புரோட்டோசோவா (Protozoa) இவை ஒற்றை சொல்லால் ஆன விலங்குகளை ஒத்த உயிரினங்கள் காளான் (Fungi) இவை ஒற்றை செல் மற்றும் பல செல்களால் ஆன நுண்ணுயிரிகள். இவைகள் பச்சையம் இல்லாததாகவும் கரு அணுக்களாக (Spares) அமைந்து கசையிழையுடன் காணப்படும். தொற்றுதல் உடலிற்குள் வரும் வழிகள் நுண்ணுயிர்கள் மூன்று வழிகளின் மூலம் உடலினுள் நுழையலாம். செரிப்புப்பாதை உணவு அல்லது நீருடன் நோய் நுண்ணுயிர்களையும் விழுங்கிவிடுதல். சுவாசப்பாதை காற்றுடன் கூட நுண்ணுயிர்களையும் மூச்சில் இருந்துவிடுதல். தோல் மற்றும் சளி சவ்வு விதானம், ஒரு காயம் அல்லது வலிமை இழந்த மேல் தோல் அல்லது ஊசி போடுதலின் போது உள்ளே வருபவை. தொற்று உள்ள ஆளின் (தொற்று உள்ளவரின்) உடலிலிருந்து அங்கே உயிரிகள் கீழ்க்காணும் வழிகளில் வெளியேறுகின்றன: கழிவு மலம் மற்றும் சிறுநீர் இருமல், தும்முதல் மற்றும் கோழை சீழ் மற்றும் கட்டியில் இருந்து வெளியேறும் நீர் இரத்தம் (எடு) கொசுக்கடி அல்லது போடப்படும் ஊசி தொற்றுநோய் உள்ளவரிடமிருந்து நலமுள்ள உடம்புக்குள் செல்லவும் வெளியேறவும் ஒவ்வொருவகை நுண்ணுயிரிகளும் தமக்கே உரிய வழிகளை கொண்டுள்ளன. மலத்திலிருந்து வாய்மூலமாக பரவுதல் மலங்களிலிருந்து தோலுக்கு தொற்றுநோய் பரவுதல் காற்றிலுள்ள சிறு சளித்துளிகள் மூலம் பரவும் நோய்கள் அ) மலத்திலிருந்து வாய் மூலமாக பரவுதல் மலங்களில் கீழ்காண்பவை அடங்கியுள்ளது: குடல் ஒட்டுண்ணிகள் அல்லது குடல் புழுக்களின் முட்டைகள் சீதபேதி உண்டாக்கும் அமீபாக்கள் காலரா, டைபாய்டு அல்லது சீதபேதி உண்டாக்கும் பாக்டீரியாக்கள் இளம்பிள்ளை வாதம், கல்லீரல் அழற்ச்சி உண்டாக்கும் வைரஸ்கள் மலங்களிலிருந்து அங்கே உயிரிகள் (அ) நுண்ணுயிரிகள் குடிநீரை வந்து சேரலாம் அல்லது ஈக்களின் அல்லது அசுத்தமான கைகளால் உணவில் வந்து கலக்கப்படலாம். குழந்தைகள் அழுக்கான விரல்களைச் சப்பும். மலங்களிலிருந்து வாய் மூலம் வரும் தொற்றை கீழ்கண்ட முறைகளில் தவிர்க்கலாம்: உணவு தயார் செய்யும் முன்பும் சாப்பிடும் முன்பும் கைகளை நன்றாக கழுவவேண்டும். சுத்தமான உணவையே உண்ணவேண்டும். ஈக்களிடமிருந்து உணவைப் பாதுகாக்க வேண்டும். ஈக்கள் பெருகும் இடங்களை தவிர்த்து ஈக்களை ஒழிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கொதிக்க வைத்த நீரை குடித்தல். கழிவறைகளை பயன்படுத்துதல் அல்லது மலம் கழித்த பின் மண்ணைக் கொண்டு மூடிவிடுதல். மலம் கழித்த பின்பு கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். ஆ) மலங்களிலிருந்து தோலுக்கு தொற்றுநோய் பரவுதல் மலங்கள் வழியாக வெளியேறும் கொக்கிப்புழு முட்டைகள் மண்ணில் லார்வா புழுக்களாக பொரிக்கப்படுகின்றன. இந்த லார்வாக்கள் காலணிகள் அணியாத பாதங்களின் தோல் வழியாக உடலினுள் சென்று குடல்களில் முழுப்புழுக்களாக வளர்ச்சியடைகின்றன. கழிவறை பயன்படுத்துவது மூலமாகவும் காலுக்கு மிதியடி அணிவதன் மூலமாகவும், கொக்கிப்புழு தொற்று வராமல் தடுக்கலாம். இரணஜன்னி பாக்டீரியாக்கள் மனிதர் மற்றும் விலங்குகளின் குடல்களில் வாழ்கின்றன. அவை மாட்டுச்சாணத்திலும், மண்ணிலும் இருக்கின்றன. இது தோல் காயத்தின் வழியாகவோ அல்லது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி வழியாகவோ உடலுக்குள் நுழையும் தன்மை கொண்டவை இரணஜன்னி நோய் வராமல் தடுக்கலாம். இ) காற்றிலுள்ள சிறு சளித்துளிகள் மூலம் பரவும் நோய்கள் சாதாரண சளி அல்லது காசநோய் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதோ. தும்மும் போதோ அல்லது பேசும் போதோ அவரது மூச்சு காற்றிலுள்ள சிறு சளித்துளிகள் வழியாக நுண்ணிரிகள் வெளிக்காற்றுடன் கலக்கின்றன. அந்த சிறிய சளித்துளிகள் காய்ந்து தொற்று உள்ள தூசியால் உடல், தரை பற்றும் உபயோகத்திலுள்ள பொருட்களின் மேல் படியும். மற்றவர்கள் அதை சுவாசிக்கும்போது தொற்றுநோய் அடைகிறார்கள். தொண்டை அடைப்பான், புட்டாளம்மை, தட்டம்மை, சின்னம்மை, கக்குவான் இருமல் நிமோனியா, மேல் சுவாச உறுப்புகளின் தொற்று நோய்கள் ஆகியவை காற்றிலுள்ள சளித்துளிகள் தொற்றினால் பரவும் நோய்களாகும். சளித்துளிகள் தொற்றுதலைத் தடுக்கும் வழிகள் சுத்தமான காற்றையே சுவாசிக்க வேண்டும் மற்றும் கூட்டமாக இருக்கும் இடங்களைத் தவிர்த்திடவேண்டும். போதிய அளவு சத்துணவை உண்ணவேண்டும். இருமும் போது சிறுகைக்குட்டையினால் மூக்கையும், வாயையும் மூடிக்கொள்ள வேண்டும். காசநோய் உள்ளவர்கள் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். தட்டம்மை, சின்னம்மை, தொண்டை அடைப்பான், முதலியவை உள்ளவர்களை தனிமை படுத்த வேண்டும். தடுப்பூசிகள் முக்கியமாக குழந்தைகளுக்கு போட வேண்டும். நுண்ணுயிர்களை கண்டறியும் முறைகள் நுண்ணுயிர்கள் மறைமுகமாக எதிரிகளாக மனிதனுக்கு அமைகின்றன. அவைகளை நுண்நோக்கி மூலமாக மட்டும் தான் காணமுடியும். அவைகளை கண்டறிய கீழ்கண்ட முறைகள் பின்பற்றப்படுகின்றன. பூச்சு ஒட்டுதல் (Smear) ஒட்டுதல் (Fixing) தொங்கு துளி (Hanging drop) சாயம் பூசப்படல் (Staining) நுண்ம தொகுதி வளர்ப்பு ஊடகம் (Culture) பிராணிகளில் உட்செலுத்துதல் (Animal inoculation) நுண்ணோக்கி (Microscope) நுண்ணோக்கி கண்ணுக்குப் புலப்படாத மிக நுண்ணிய அல்லது சிறிய பொருட்களையும் அவற்றின் அமைப்பும் கண்டறிய பயன்படுகிறது. நுண்ணுயிரியல் நுண்ணுயிர்களை அடிப்படையாகக் கொண்டு இருப்பதால் நுண்ணோக்கி ஆய்வகங்களில் பாக்டீரியாக்களை கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கிறது பலவகையான நுண்ணோக்கிளில் மூன்று வகைகள் முக்கியமானது. கூட்டு நுண்ணோக்கி நுண்மங்கள்: Bacteria பரிசோதனைக்கு பயன்படுகிறது. இருள் பரப்பு நுண்ணோக்கி (Darkfield microscope): ஸ்பைரோகீட்டுகளை கண்டறிய பயன்படுகிறது. E.g: Trepenoma பல்லிடும் மின்னணு நுண்ணோக்கி: அதிக ஆற்றல் வாய்ந்தது. ஒரு பொருளை பலதடவை பெரிது படுத்தி காணப் பயன்படுகிறது. இது நச்சுநுண்மங்களை (Viruses) கண்டறியப் பயன்படுகிறது. நோய்த்தடுப்பாற்றல் (Immunity) குறிப்பிட்ட உயிரினங்களால் ஏற்படுத்தப்படும் நோய்த்தொற்றுதலுக்கு ஏற்றவாறு அதனை எதிர்த்து உருவாகும் தடுப்பு சக்தியே நோய்த்தடுப்பாற்றல் எனப்படும். மனிதர்களில் நோய்த்தடுப்பாற்றல் நன்மையை தூண்டும் காரணிகள் இயற்கையாய் அமையப்பெற்றவை: இனசம்பந்தமானது (Racial): குறிப்பிட்ட சில இனங்கள் குறிப்பிட்ட சில நோய்களினால் பாதிக்கப்படும் நிலையிலோ அல்லது நோய்த்தடுப்பாற்றல் பெற்றோ இருக்கலாம். எடுத்துக்காட்டாக மற்ற மனிதர்களை விட ஹீப்ருஸ் இனத்தவர் காச நோய்க்கு அதிக நோய்த்தடுப்பாற்றல் பெற்றுள்ளார்கள். சிற்றினம் (Species): விலங்குகளில் சில சிற்றினங்கள் குறிப்பிட்ட சில நோய்களுக்கு எதிரான தடுப்பு தன்மை பெற்றுள்ளார்கள். (எ.கா) தட்டம்மை அல்லது டைஃபாய்டு காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கக்கூடிய நிலையில் மனிதன் இருந்தபோதும் சிறிய விலங்குகள் இவற்றால் தாக்கப்படுவதில்லை. கால்நடைகளையும் மனிதர்களையும் தாக்கும் டியூபர்கிள் பேசில்லையால் பறவைகள் நோய்த்தொற்று அடைவதில்லை. தனிநபர் (Individual): சில மனிதர்கள் இயற்கையாகவே ஒரு சில நோய்களுக்கெதிரான தாக்குப் பிடிக்கும் திறன் அல்லது நோய்த்தடுப்பு தன்மை பெற்றிருப்பார்கள். இதற்கு தனிநபர் நோய்தடுப்பாற்றல் எனப்பெயர். நோய் தடுப்பாற்றலின் வகைகள் இயற்கையான தடுப்பாற்றல்: சில குறிப்பிட்ட நோய்களான தட்டம்மை போன்ற நோய்களைப் பெறுவதன் மூலம் இயற்கைத் தடுப்பாற்றல் தோன்றுகிறது. இது வழக்கமாக வாழ்நாள் இறுதி வரை தொடர்கிறது. செயற்கையான தடுப்பாற்றல்: போலியோ சொட்டு மருந்து போன்றவைகளை போடுவதனைத் தொடர்ந்து செயற்கையான தடுப்பாற்றல் ஏற்படுகின்றன. செயல்மிகு தடுப்பாற்றல்: செயலிழக்கச் செய்யப்பட்ட நுண்ணுயிரிகள் எதிர் தோன்றிகளான உடலில் செலுத்தப்படுவதால் உடலானது இந்த எதிர் தோன்றிகளுக்கு எதிரான எதிர்ப்பொருட்களை உருவாக்குகிறது. இயல்பான தடுப்பாற்றல்: இம்யூனோகுளோபுலின்கள் அல்லது எதிர்ப்பொருட்கள், ஒரு எதிர்த்தோன்றிய நடுநிலைப் படுத்துவதற்காக தடுப்பு மருந்து செலுத்தப் படுகின்றன. பெறப்பட்ட தடுப்பாற்றல்: பெறப்பட்ட நோய் தடுப்பாற்றல் இயற்கையானதாகவோ அல்லது செய்கையானதாகவோ இருக்கலாம். பெறப்பட்ட செயற்கை தடுப்பாற்றல்: தடுப்பு ஊசி நச்சு மற்றும் சீரம் இவற்றை உடலில் செலுத்துவதன் மூலம் செயற்கையாகப் பெறப்பட்ட தடுப்பாற்றல், பெறப்பட்ட செயற்கை நோய்த்தடுப்பாற்றல் எனப்படும். பெறப்பட்ட இயற்கையான செயல்மிகு தடுப்பாற்றல். ஒரு குறிப்பிட்ட நோயினால் பாதிக்கப்படுவர் அந்நோயிற்கான தடுப்பாற்றலை பெறுவர். பெறப்பட்ட இயற்கையான இயல்பான தடுப்பாற்றல்: தாயிடமிருந்து சேயானது. எதிர்ப்பொருட்களை தாய்சேய் இணைப்புத் திசு மூலம் பெறுகின்றது. தடுப்பூசித் திட்டத்தின் வகைகள் செயல்மிகு தடுப்பூசிமுறை: இம்முறை மூலம் ஒரு நபரின் திசுக்களில் எதிர்பொருள் உற்பத்தி தூண்டப்படுகிறது. இம்முறை எதிர்ப்பு தயாரிப்பினை உணர்த்துகின்றது. இதுவே செயல்மிகு தடுப்பாற்றல் எனப்படுகிறது. எ.கா. பிசி.ஜி. தடுப்பூசி B.C.G.) இயல்பான தடுப்பூசி முறை: குறிப்பிட்ட எதிர்ப்பொருட்களை பெற்றுள்ள சீரம் நேரடியாக செலுத்தப்பட்டு இயல்பான தடுப்பாற்றல் உருவாகியது. எ.கா. டீப்தீரியாவின் எதிர்நச்சு சீரம் (குதிரையின் சீரத்திலிருந்து தயாரிக்கப்பட்டது) மற்றும் டெட்னஸ் இம்யூனோகுளோபின்கள். தடுப்பூசி மருந்துகள் கீழ்கண்டவற்றை பெற்றிருக்கலாம் உயிருள்ள வீரியமுள்ள உயிரிகள் குறை சொல்லி அளவுடன் எ.கா. காலரா தடுப்பூசி. ஆன்ட்டிராபிஸ் தடுப்பூசி. உயிருள்ள உயிரிகள் (attenuated) எ.கா. அம்மை தடுப்பூசி, டியூபர்குளோசிஸ் BCG) மற்றும் மஞ்சள் காய்ச்சல். இறந்த உயிரினங்கள் எ.கா. டைபாய்டு தடுப்பூசி, காலரா மற்றும் பிளேக். உயிரிகளின் விஷங்கள், நச்சுகள். எ.கா. டிப்தீரியா தடுப்பூசி, டெட்டனஸ், ஸ்கார்லெட் காய்ச்சல். நுண்ணுயிர்களை அழித்தலும் கட்டுப்படுத்துதலும் ஏசெப்ஸில் (Asepsis): நோய்த்தொற்று இல்லாமல் இருத்தல் அல்லது நோய்க்கிருமிகளுடன் தொடர்பு இல்லாதிருத்தல். ஆண்டி செப்டிக் (Antiseptic) கிருமிநாசினி: இது நுண்ணுயிர்களைக் கொல்லாமல் அவைகளின் வளர்ச்சியினைக் கட்டுப்படுத்தும் வேதிப்பொருளாகும். நீராவி அழுத்தம் (Autoclaving): ஆட்டோக்ளேவ் என்கின்ற உபகரணமானது பொருட்களை நீராவி அழுத்தத்தில் கிருமி நீக்கம் செய்யப்பயன்படுவதாகும். பாக்ட்டீரியோசைட் (Bacteriocide): இது நுண்ணுயிரிகளை கொல்லக் கூடிய ஒரு பொருளாகும். அசுத்தப்படுதல் (Contamination): அசுத்தப்படுத்தும் செயல் அல்லது, சுகாதாரம் அற்ற தொடர்பினால் அசுத்தம் ஆகுதல். தொற்று நீக்கம் (Disinfection): தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அல்லது தொற்று நோயினை ஏற்படுத்தும் திறனுள்ள உயிரினங்களைக் கொல்லக்கூடிய ஒரு வேதியியல் பொருளாகும். உடன் நிகழ்வு தொற்று நீக்குதல் (Concurrent Disinfection): நோய்வாய்ப் பட்டிருக்கும் போதே அவரின் தொற்றுடைய பொருட்களை மலம், சிறுநீர், படுக்கைத்துண்டு போன்றவற்றை தொற்று நீக்கம் செய்தல். முடிவு தொற்றுநீக்கம் (Terminal Disinfection): நோயின் எல்லை முடிவில் அல்லது நோயாளி நோயிலிருந்து முற்றிலும் குணமான பிறகோ அல்லது இறந்துவிட்ட பின்போ செய்யப்படும் தொற்று நீக்கம். தொற்றுநீக்கி (Disinfectant): நோயை உண்டாக்கக்கூடிய நுண்ணுயிரிகளைக் கொல்லக் கூடிய ஒரு வேதியியல் பொருளாகும். சளித்துளிகள் தொற்று (Droplet Infection): சாதாரண சளி அல்லது காசநோய் உள்ள ஒருவர் இருமினால், தும்மினால் அல்லது பேசினால் கூட, அவரது வெளிமூச்சு அங்கே உமிழ்கள் மற்றும் அவரது கோழை மிகச்சிறிய துளிகளாகக் காற்றில் கலந்துவிடுவதால் அதை மற்றொருவர் உள் சுவாசிக்க வேண்டும். நோய்த்தொற்று (Infection): உடலினுள் நோய் நுண்ணுயிர்கள் நுழைந்து நோயை உண்டாக்குவதையே நோய்த் தொற்று என்கிறோம். நோய்த்தடுப்பு மருந்துகளை அளித்தல் (Immunisation): ஒருவருக்கு நோய்த்தடுப்புப் பால் அல்லது சீரம் ஊசி மூலம் அளிப்பதன் மூலம் அவரிடம் நோய் எதிர்ப்பு திறனை உண்டாக்க முடியும். தனித்து வைத்தல் (Isolation): நோய் வாய்ப்பட்டவர்களைத் தனித்து வைத்தலின் மூலம் நோயாளியிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவும் வழிகளை தடுக்கலாம். புரையோடுதல் (Sepsis): ஊடலினுள் சீழ் உண்டாக்கக் கூடிய நுண்ணுயிரிகள் காணப்படுதல். நோய்க்கிருமிகள் இல்லாமல் ஆக்குதல் (Sterilisation): Sterilisation எனப்படுவது ஒரு பொருளின் மேற்பரப்பு அல்லது ஊடகத்திலுள்ள எல்லா நுண்ணுயிரிகளும் (நோயை உண்டாக்கும் நுண்ணுயிரி நோயை உண்டாக்காத நுண்ணுயிரி) அதன் வளர்ச்சிக் காலத்திலே நீக்கப்படுதலாகும். நோய்கிருமிகளை அழித்தல் நோய்கிருமிகளை அழிப்பதற்கோ அல்லது வளர்ச்சியை தடுப்பதற்கோ மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. அவை: நோய்த்தொற்றை தடுத்து நோய் பரவுதலை தடுத்தல், உணவுகள் சிதைந்து கெட்டுப்போவதை தடுத்தல், நுண்மவளர் ஊடகங்களில் நோய்தொற்றை தடுத்தல். நுண்ணுயிரறச் செய்தல் (நோய்கிருமிகளை நீக்குதல்) (Sterilisation) நோய் கிருமிகள் இல்லாமல் ஆக்குதல் என்பது Sterilisation நோயை உண்டாக்கும் அல்லது உண்டாக்காத நுண்ணுயிரிகளை முற்றிலும் அழித்தல் அல்லது நீக்கி விடுதலாகும். தொற்று நீக்குதல் (Disinfection) என்ற வார்த்தைக்கு முற்றிலும் நுண்ணுயிரிகள் இல்லாதிருத்தலாகும். தொற்று நீக்க முறைகள் இயற்கை முறை: சூரிய ஒளி, காற்று இயற்பியல் முறை: உலர் வெப்பம், ஈரபதமான வெப்பம், கதிரியக்கம் வேதியல் முறைகள்: திரவங்கள், திடப்பொருள்கள், வாயுக்கள். இயற்கை முறை: இந்த முறை தொற்று உடைய துணிகள் மற்றும் படுக்கை கழிகலன்களை தொற்று நீக்கம் செய்ய பயன்படுகிறது. நேரிடையாக சூரிய வெளிச்சம் நுண்ணுயிரிகளை அழிக்கக்கூடியது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை படுக்கை துணிகளையும், படுக்கை கழி கலன்களையும் சூரிய வெளச்சத்தில் ஆறுமணிநேரம் வைக்கவேண்டும். அ) உலர் வெப்பம் ஆ ஈரவெப்பம் மற்றும் இ கதிரியக்கம். ஊசி மற்றும் குழல் உட்பட கண்ணாடிப் பொருட்களை நுண்ணுயிர் நீக்கப் பொதுவாக வெப்பக்காற்று அடுப்பில் 160*C யில் ஒருமணி நேரத்துக்கு வைக்கப்படுகிறது. இம்முறையில் கருமூலங்களுடன் மற்ற எல்லா நுண்ணுயிர்களும் கொல்லப்படுகின்றன. ரப்பர் இந்த வெப்பத்தைத் தாங்காது. கட்டுத் துணிகள், துண்டுகள், அங்கிகள் ஆகியவற்றில் வெப்பம் ஊடுருவிச் செல்ல வேண்டி இருப்பதால் அவற்றிற்கு கிருமி நீக்கம் செய்ய இம்முறை ஏற்றதல்ல. ஆ) ஈரவெப்பம் கொதிக்க வைத்தல்: இந்த முறையானது எனாமல், உலோகம், கண்ணாடி ரப்பர் பொருள்களுக்கு ஏற்றது. பாத்திர கொதிகலன் பெரிய பொருட்களுக்கும், சிறிய கொதிகலன் கருவிகளில் கிருமி நீக்கம் செய்யவும் பயன்படுகிறது. நினைவில் இருக்கவேண்டிய குறிப்புகள்: பொருள்கள் முற்றிலும் சுத்தமாக இருக்கின்றனவா, நீரில் முழுவதும் மூழ்கி இருக்கின்றனவா என்றும் பார்க்கவும். நீர் கொதிக்கத் தொடங்கும் போதுதான் நேரத்தைக் கணக்கிட தொடங்கவேண்டும். மேலும் அதிகப் பொருள்களைச் சேர்த்தால் நுண்ணுயிர் நீக்கத்துக்கு ஆகவேண்டிய நேரத்தை மீண்டும் அப்போதிருந்து கணக்கிடத்தொடங்க வேண்டும். 5 நிமிடங்களுக்குத் தீவிரமாகக் கொதிக்க வைத்தல் கருமூலத்தை (Spores) கொல்லாது. நுண்ணுயிர் நீக்கிய சீட்டில் இடுக்கியால் அல்லது வெளியே எடுக்கும் வேறு இடுக்கியால் பொருட்களை எடுத்து நுண்ணுயிர் நீக்கிய இடத்தில் வைக்கவும். அழுத்த நீராவிமுறை (Autoclaving): அழுத்த நீராவிமுறை சிறந்த, பாதுகாப்பான, நம்பகமான தொற்றுநீக்க முறை. இந்த முறை எல்லாக் கருமூலங்களையும், நுண்மங்களையும் அழித்துவிடும். இந்த முறையில் அறுவை சிகிச்சைக்கு தேவையான ஊசி பீச்சுக்குழல்கள். ஊசிகள், கட்டுத்துணிகள் மற்றும் எல்லாவகையான உலோகக் கருவிகளையும் தொற்று நீக்கம் செய்ய பயன்படுகிறது. சிறந்த தொற்று நீக்கத்திற்கு, அழுத்த கலரில் நீராவி 15Ibs/Inch (1.05 kg/Cm2) அழுத்தம் 121°C அல்லது 250 - 255°C வெப்பநிலை. இந்த அழுத்தத்திலும், வெப்பநிலையிலும் 30 நிமிடங்கள் வைக்கப்படவேண்டும். அழுத்த நீராவி முறைக்கு உரிய கருவி உலோகத்தால் ஆன இரண்டு உறைகளை (சுவர்களை) உடைய ஒருபெட்டி இதன் வெளிப்புறத்தை சுற்றிலும் உறை. ஒரு மூடி அல்லது கதவு ஆகியவை இருக்கும். மூடி இறுக்கமாக மூடப்பட்டு இருக்கும். ஒரு கொதிகலனில் அல்லது வெளிஉறையில் நீராவி உற்பத்தி செய்யப்படுகிறது. உலோகப் பெட்டியிலிருந்து நீராவியை பாய்ச்சி இடப்பெயர்ச்சி மூலமாக அல்லது வெற்றிடம் உண்டாக்கும் கருவி மூலமாக காற்று வெளியேற்றப்படுகிறது. பிறகு நீராவி அந்த பெட்டிக்குள் செலுத்தப்பட்டு அழுத்தம் உண்டாகச் செய்யப்படுகிறது. சில நீராவிக்கலன்கள் வெப்பநிலைமானி இணைக்கப்பட்டுள்ளது. தொற்று நீக்கம் செய்யப்படுதலின் மூலம் நீராவி உட்செலுத்தப்படுகிறது. நீரின் கொதிநிலை 121°C க்கு 15 பவுண்டு நீராவி அழுத்தத்திலும் பொருட்கள் 30 நிமிடங்கள் இருக்கவேண்டும். தொற்று நீக்கத்திற்கு பொருட்களை தயார்படுத்துதல்: ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் தேவையான உலோகக்கருவிகள், பஞ்சு சுற்றிய குச்சிகள், பஞ்சுகள், கட்டுத்துணிகள் மற்றும் துணிகளை தொற்று நீக்கம் செய்ய சுலபமான முறை இது. இந்த பொருட்கள் பீப்பாய்களிலும், கட்டுகளாகவும், பெயர் எழுதப்பட்டு தொற்று நீக்கம் செய்ய தயார் நிலையில் வைக்க வேண்டும். பொருட்கள் கவனமாக அடுக்கப்பட்டு, முதலில் தேவையானதை முதலிலேயே இருக்கவேண்டும். பொருட்களின் கட்டுகள் நீராவி உட்செல்லுவதற்கு ஏதுவாக தளர்ச்சியான நிலையில் கட்டப்பட வேண்டும். பீப்பாய்களின் துளைகள் திறந்திருக்கவேண்டும். கட்டுகள் இரண்டு முறை துணிகளால் அல்லது காகிதத்தால் சுற்றப்படவேண்டும். கதிரியக்கம்: புறஊதாக்கதிர்கள் வேலை செய்யும் இடப்பரப்பை தொற்று நீக்கம் செய்ய சிறந்த முறை. இந்தக் கதிர்கள் காற்று மூலம் பரப்பும் நுண்மங்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. இது விலை உயர்ந்தது. காமா கதிர்கள் ஊடுருவி செல்லக்கூடியது மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தொற்று நீக்கம் செய்ய பயன்படுகிறது. எடு: பீச்சுக்குழல்கள், ஊசிகள், இரப்பர் குழாய்கள், கூர்மையான கருவிகள் மற்றும் கத்திகள். வேதியல் முறை: கிருமிநாசினி மற்றும் தொற்று நீக்கி (நச்செதிர்ப்பு மருந்துகள்) நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கக்கூடியது. பல இராசாயனப்பொருட்கள் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் இவற்றின் பண்புகள் அதிக அளவில் வேறுபடும். இவைகளில் சில பொருட்கள் புரதத்தை சிதைக்க கூடியதாகவும், என்சைம்களை அழிக்கக்கூடியதாவும் உள்ளது. இரசாயனப் பொருட்களுக்கு எடுத்துக்காட்டுகள்: பீனால் மற்றும் கிரிசால், ஆல்கஹால், குளோரின் மற்றும் அயோடின், சாயங்கள். ஆல்டிஹைட் (Aldehydes) அமிலங்கள், காரங்கள், பொட்டாசியம் பர்மாங்கனேட், ஹைட்ரஜன் பெராக்சைடு மாதிரிப் பொருட்களை சேகரிக்கும் முறைகள் சேகரிக்கப்படும் மாதிரிப் பொருட்களின் வகைகள் துடைப்பு பஞ்சுகள் (Swab): இது பொதுவாக தொற்று நீக்கம் செய்யப்பட்ட சோதனைக்குழாயில் , மாதிரி தொற்று அடையாதபடி எடுக்கப்படவேண்டும். தொண்டை துடைப்பு பஞ்சு உருண்டைகள் (Throat swab): இது தொண்டைப்பகுதியில் நல்ல வெளிச்சத்தில் நாக்கு அழுத்தியின் உதவியுடன், மாதிரி தொற்று நிறைந்த பகுதியில் இருந்து எடுக்கப்படவேண்டும். சளி (Sputum): இது தொற்று நீக்கும் செய்யப்பட்ட வாய் அகன்ற சோதனைக்குழாயில் சேகரிக்கப்பட வேண்டும். நோயாளியின் இருமலுக்குப்பின் நேரிடையாக சளி மாதிரியை சேகரித்து ஆய்வுகூடத்துக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். சிறுநீர் (Urine): சிறுநீர் மாதிரி வேதியல் மற்றும் நுண்ணுயிரியல் பதிசோதனைக்கு சுத்தமான அல்லது தொற்று நீக்கம் செய்யப்பட்ட சோதனைக்குழாயில் சேகரிக்க வேண்டும். மலம்: மலம் நுண்ம ஆய்வுக்காக சேகரிக்கப்படும். இரத்தம்: இது தொற்று நீக்கம் செய்யப்பட்ட சோதனைக் குழாயில் சேகரிக்கப்பட வேண்டும். செவிலியர் முதுகு தண்டுவட நீர் சேகரிப்பதில் மருத்துவருக்கு உதவிசெய்ய வேண்டும். மருத்துவருக்கு உதவியாக இருக்கும்போது தொற்று நீக்க முறையை பின்பற்றி மாதிரி தொற்று அடையாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். மாதிரிகளை சேகரிப்பதற்கு பொதுவான விதிகள் ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுப்பதற்கு முன்னதாக நுண்மஊடக வளர்ப்புக்கு (Culture) மாதிரிகள் சேகரிக்கப்படவேண்டும். முடிந்த அளவு தொற்று உள்ள மாதிரியை வாய் அகன்ற கலனில் சேகரிக்கவும். மாதிரி சோதனைக்கலத்தின் வெளிப்பகுதியில் ஒட்டிக் கொள்ளாதவாறு கவனமாக கையாளவேண்டும். எயிட்ஸ், ஹெப்படைடிஸ் போன்ற நோயாளிகளின் மாதிரியை நேரிடையாக கையாளக்கூடாது. மாதிரியின் மேல் சரியான அடையாளச் சீட்டு ஒட்டப்பட வேண்டும். அந்த நபருடைய முழுப்பெயர், வயது, பால், வார்டு .படுக்கை எண் மற்றும் தேதி, நேரம் போன்றவை குறிக்கப்படவேண்டும். எய்ட்ஸ், கல்லீரல் அழற்சி (AIDS, Hepattis) போன்ற நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியின் மேல் பயோஹசாடு (BIOHAZARD) என்று குறிப்பிடவேண்டும். மாதிரிகளை சோதனைச்சாலைக்கு உடனே அனுப்பவேண்டும் அல்லது சரியான குளிர் வெப்பநிலையில் பாதுகாக்கவேண்டும். அன்ரோபிக் (Anaerobic) நுண்ம ஊடக மாதிரியை காற்றுடன் தொடர்பு இல்லாத பார்த்துக் கொள்ளவேண்டும். மாதிரியை அனுப்புதல் நோயாளியின் பெயர் ............. வயது ……………. படுக்கை எண்…………… வார்டு எண் .................. O.P. எண். ………..... I.P.No …………..... மாதிரியின் பெயர்............. பரிசோதனையின் பெயர்............... சேகரித்த நாள் ...........................................கையொப்பம்..................................... மாதிரிகள் பூர்த்தி செய்து கையொப்பமிடப்பட்ட படிவத்துடன் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட வேண்டும். மாதிரிகள் சேகரிக்கப்பட்டவுடன் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டால் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படவேண்டும். ஆதாரம்: தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்