உடல் அவயவங்களுக்குத் தேவையான சக்தியைத் தொடர்ச்சியாக வழங்கிவரும் இதயத்தின் சீரான இயக்கத்திற்குத் துணை புரிவது இதயத் தசைகள்தான். இந்தத் தசைகளுக்கு சக்தியை வழங்கவென்று பிரத்தியேகமான இரத்தக்குழாய்கள் இருக்கின்றன.

அந்த இரத்தக் குழாயில் அடைப்புகள் ஏற்பட்டு, இதயத் தசைகளுக்கான இரத்த ஓட்டம் தடைப்பட்டு, அந்தத் தசைகள் பழுதடைவதையே மாரடைப்பு என்கிறோம். ஒரு முறை அந்தத் தசைகள் பழுதாகி மாரடைப்பு ஏற்பட்டுவிட்டாலே, அங்கு நிரந்தரமாகப் பிரச்சினைகள் குடியேறிவிடும். அந்தத் தசைகளை மீண்டும் சீரமைக்க முடியாது. ஆகையால், மாரடைப்பு நோய் வருமுன், அவற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதே சிறந்தது.

மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய காரணிகளுள் மிக முக்கியமானவை ஆறு.

1. புகையிலை பாவனை.

2. அதீத இரத்த அழுத்தம்

3. நீரிழிவு நோய்

4. கொழுப்பின் அளவு

5. தொப்பை மற்றும் உடல் பருமன்

6. மன உளைச்சல்

சிகரெட்டில் நிக்கோட்டின் உட்பட பல நச்சுப் பொருட்கள் இருக்கின்றன. இந்த நிக்கோட்டின், இருதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டுசெல்லும் இரத்தக் குழாயைச் சுருக்கிவிடுகிறது. இதனால்தான் புகை பிடிப்பவர்களுக்கு மாரடைப்புக்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதுமட்டுமல்ல. புகைபிடிப்பதால், மேலே கூறப்பட்ட ஏனைய ஐந்து காரணிகளும் தாமாகவே எட்டிப் பார்க்கின்றன.

இரத்த அழுத்தம் ஒரு மௌன உயிர் கொல்லி. ஏனெனில், இது தம் உடலில் இருக்கிறது என்பதை எவராலும் இலகுவாக அறிந்துகொள்ள முடியாது. அறிகுறியும் காட்டாது. ஆனால் இது விஸ்வரூபம் எடுக்கும்போது, உடனடியாக உடலின் ஐந்து முக்கிய உறுப்புகளான மூளை, கண்கள், இருதயம், சிறுநீரகம் மற்றும் இரத்தக் குழாய்கள் என்பவற்றைத் தாக்கும். ஆகையால், சீரான கால இடைவெளியில், இரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, இரத்தத்தில் அதிக சர்க்கரை சேருமானால், அது இருதயத் தசைகளைப் பாதிக்கலாம். அல்லது இருதயத்துக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பின் அளவை அதிகப்படுத்தலாம். இரத்த அழுத்தத்தை உண்டாக்கலாம். இவை மாரடைப்பை உண்டாக்கிவிடும்.

அடுத்து கொழுப்பு. கொழுப்பில் ஐந்து விதமான கொழுப்புகள் உண்டு. அவற்றுள், எல்.டி.எல். என்பது (Low-density lipoprotein) கெட்ட கொழுப்பு. எச்.டி.எல். என்பது (High-density lipoprotein) நல்ல கொழுப்பு. உடலில் நல்ல கொழுப்பின் அளவு, கெட்ட கொழுப்பைவிட அதிகமாக இருக்க வேண்டும். இதற்கு மிக அவசியமானவை, உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி.

உணவுக் கட்டுப்பாட்டைப் பொறுத்தளவில், எண்ணெய்யில் பொரித்த, வறுத்த பதார்த்தங்களை விலக்கவேண்டும். சமையலுக்காக சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலெண்ணெய், ஒலிவ் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதுவும் இவற்றை வாரந்தோறும் ஒன்று மாற்றி ஒன்றைப் பயன்படுத்துவதால், இவை ஒவ்வொன்றிலுமுள்ள தனித்துவமான குணங்கள் பூரணமாகக் கிடைக்கும். ஆனால் எந்த எண்ணெய் ஆயினும் பொரிப்பது ஆகாது.

இறுதியாக மன உளைச்சல். நீங்கள் வேகமாக நடக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பத்து நிமிடங்கள் தொடர்ந்து நடக்கும்போது, இரத்த அழுத்தம், சாதாரண நிலையான 120லிருந்து படிப்படியாக 160, 180 என்று கூடிச் செல்லும். ஆனால், உங்களுக்குள் ஏற்படும் கோபம் அல்லது கவலையால், உங்கள் இரத்த அழுத்தம் ஒரே நொடியில் உச்சத்தை எட்டுகிறது. சாதாரண நிலையில் இயங்கும் இருதயம், சடுதியாக வேகமாக இயங்கவேண்டி ஏற்பட்டால், அது செயலிழக்கிறது.

இதனால் தான், பலரும், கடுமையான மன உளைச்சலின்போது, இருதயம் செயலிழந்து மரணத்தைத் தழுவுகிறார்கள். இதைத் தவிர்ப்பதற்கு மனதுக்குப் பயிற்சி கொடுக்கவேண்டும். யோகா, தியானம், இனிமையான இசை, நேர்மறைச் சிந்தனைகள் என்று மனதை அமைதிப்படுத்திக் கொள்ளப் பழகிவிட்டால், மன உளைச்சலால் மாரடைப்பு என்ற ஒன்று உங்களை ஒருபோதும் அண்டாது.

ஆதாரம்: டாக்டர்.எம். சென்னியப்பன்