அறிமுகம்

இமை விளிம்பு உள்நோக்கி பிறழும் குறைபாடே இமை உட்பிறட்சி ஆகும். வெளித்தெரியும் விழிக்கோள பரப்பில் இதனால் எரிச்சல் ஏற்படும். விழியிணைப்படல மற்றும் விழிவெண்படலப் பரப்பில் சிதைவு ஏற்பட்டு வெண்படல அரிப்பும், வடுவும், மென்மையுறலும், புதுக்குழல் உருவாக்கமும் உண்டாகும். முற்றிய நிலையில் வெண்படலத்தில் புண்ணும் துளையும் ஏற்படலாம்.

இமை உட்பிறட்சியின் முக்கிய வகைகள்:

- உள்ளுருள்பவை

- தழும்புள்ளவை

- கடும்விறைப்புடையவை

- பிறவி

எல்லா வயதினரையும் பாதித்தாலும் வயதானவர்களிடம் அதிகம் காணப்படுகிறது.

உள்ளுருளும் வகை பெரும்பாலும் வயதானவர்களைப் பாதிப்பதோடு பல நோய்களோடு இணைந்து காணப்படுகிறது.

நோயறிகுறிகள்

இமை விளிம்பு உள் நோக்கி மடிதலால் முன் கண் பரப்பில் ஏற்படும் உறுத்தலினால் அறிகுறிகள் தோன்றுகின்றன.

நோயாளிகளுக்குக் காணப்படுபவை:

- கண்ணில் அயல் பொருள் இருப்பதுபோல் உணர்வு.

- இமை மயிர் உள்நோக்கி இருப்பதால் கண் உறுத்தல்.

- கண் சிவப்பு

- கண்ணில் நீர் வடிதல்

- கண்ணில் கசிவு

- கண் வலி

- ஒளிக்கூச்சம்

- வெண்படல சிராய்ப்பு

- வெண்படலப் புண்

- இமை விழிகோளத்தோடு ஒட்டுதல்

- இயல்பான இமை விளிம்பு வடிவம் இழப்பு உ-ம். இமை மயிர் இல்லாமை

- கெராட்டினாக்கத்தால் கண் உலர்தல்

காரணங்கள்

உள்ளுருளும் இமை உட்பிறட்சி:

இது மிகவும் பொதுவான வடிவம். கீழ் இமையை மட்டுமே பாதிக்கிறது. வயது தொடர்பான மாற்றங்கள் இமை உட்பிறட்சிக்கு வழிகோலுகின்றன.

- இமைகளை மூடும் போது விழிமூடுதசையின் முன் இடைச்சுவர் பகுதி முன் இரப்பை பகுதிக்கு மேலாகச் செல்லுகிறது. இதனால் இரப்பையின் கீழ் விளிம்பு விழிக்கோளத்தை விட்டு விலகியும் மேல் விளிம்பு கோளத்தை நோக்கியும் செல்லுகிறது.

- இரப்பை மற்றும் கண்மூலை தசைநார் மெலிதலாலும் செயல்திறன் இழப்பதாலும் செங்குத்து இமைத் தளர்வு ஏற்படுகிறது. இத் தளர்வால் கீழ் இமையின் நடுப்பகுதி விழிக்கோளத்தை விட்டு இழுக்கப்படும்போது தனது இயல்புநிலைக்கு மீண்டு வருவதில்லை.

- கீழ்நோக்கிப் பார்க்கும்போது கீழிமையின் நகர்ச்சிக் குறைவைக் கொண்டு, கீழ் இமை பின்னிழுப்புப் பலவீனத்தை மருத்துவ ரீதியாக மதிப்பிடலாம்.

- விழிக்கோளத்தின் மென்திசுக்கள், குறிப்பாகக் கொழுப்பு, ஆழ்விழியை உருவாக்கலாம். இது நிலையற்ற இமை இருப்பையும் இமை உட்பிறழ்வையும் உண்டாக்கும்.

தழும்புடைய இமை உட்பிறழல்:

இமைசார் விழியிமைப் படலத்தில் வடு ஏற்படுவதால் தழும்புடைய இமை உட்பிறழல் உண்டாகிறது. வடு, இமை விளிம்பை விழிக்கோளத்தை நோக்கி இழுக்கிறது. மண்டல மற்றும் வளர் அழற்சி நிலைகளில் இரண்டாம் கட்டமாக இது உருவாகும்.

தழும்புடைய இமை உட்பிறழ்ச்சிக்குக் காரணமானவை:

- கண்நோய்

- விழிவெண்படலத்தில் வேதிப்பொருளால் ஏற்படும் புண்

- கண் வடு குமிழ்சருமம்

- ஸ்டீவென்ஸ்-ஜாண்சன் நோய்த்தாக்கம்

- காயம்

- மருத்துவ ரீதியாக உருவானது: உ-ம். அறுவை, கதிர்வீச்சு, வேதி மருந்துகளுக்குப் பின் ஏற்படுவது.

கடும் விறைப்புடையது:

இது விழிமூடு தசையின் விறைப்பால் உருவாகிறது.

இது:

- தொற்று, கண்ணிமை அழற்சி அல்லது காயத்தால் ஏற்படும் கண் எரிச்சலினால் உண்டாகிறது.

- மருத்துவ சிகிச்சைக்குப் பின்: உ-ம். அறுவைக் காயத்தினால்

- இன்றியமையா இமைச்சுருக்கம்

பிறவி இமை உட்பிறழல்:

உண்மையான பிறவி இமை உட்பிறழல் மிக அரிதானது.

பின் வருபவற்றால் இது ஏற்படலாம்:

- இரப்பைத் தகட்டு உள் விளிம்பில் பின்வலிக்கும் தசைநார் பிணைப்பு செருகல் தகுந்த முறையில் உருவாகாமை.

- இமையின் பின் தகட்டில் இருக்கும் செங்குத்து திசுக்களின் பற்றாக்குறை.

- இரப்பைத் தகட்டின் அமைப்புக் குறைபாட்டால் உருவாகும் இரப்பை நெளி நோய்த்தாக்கம்.

- குழந்தைகளில் முக வாதம் (மாறாக, பெரியவர்களுக்கு ஏற்படும் முக வாதம் கண்ணிமைத் துருத்தலை உண்டாக்கும்).

இமை உட்பிறழல் பொறிநுட்பம்:

இமைமூடு தசை, இரப்பை, கீழிமை மீள்வலிப்பான்கள் மற்றும் கண்மூலை தசைநார்கள் ஆகியவற்றால் கீழ் இமை நிலைப்படுத்தப் பட்டுள்ளது.

- கிடைக்கோட்டு இமை நிலைத்தன்மை: கண்மூலை தசைநார்கள் மற்றும் இரப்பைத் தகட்டால் இது அளிக்கப்படுகிறது. செங்குத்து இழுவிசை தளர்வதால் இமை விளிம்பு சுழற்சி ஏற்படுகிறது.

- செங்குத்து இமை நிலைத்தன்மை: செங்குத்து நிலைத்தன்மையை கீழ் இமை மீள்வலிப்பான்கள் வழங்குகின்றன. கீழ் இமை மீள்வலிப்பான்களுக்கும் இரப்பைத் தகட்டின் கீழ் விளிம்புக்கும் இடையில் உள்ள தூரத்தை உள்ளுருளும் இமை உட்பிறழல் அதிகப்படுத்துகிறது. இந்தச் செங்குத்து நிலைத்தன்மை அமைப்பு தளர்வதால் இமை உட்புறமாகச் சுழல்கிறது.

- முன் – இடைச்சுவர் இமைமூடு தசை ஒன்றின்மேல் ஒன்று புரள்தல்: கீழ் இமை மீள்வலிப்பான்களுக்கும் இமைமூடு தசைக்கும் அதன் மேல் உள்ள தோலுக்கும் நுட்பமான விரிவாக்க இணைப்புகள் உண்டு. இணைப்புகளில் ஏற்படும் பலவீனம் அல்லது வெடிப்புகளால் இமைமூடு தசையின் முன் இடைச்சுவர் பகுதி முன் இரப்பைப் பகுதியின் மேல் உருள்கிறது. இதனால் இமை விளிம்பு விழிக்கோளத்திற்கு எதிராகச் சுழல்கிறது.

- விழிக்கோளக் கொழுப்பு: வயதாதல் அல்லது காயத்தால் விழிக்குழி கொழுப்பின் அளவு குறைந்து அழுந்துகண் உருவாகிறது. இதனால் இமைக்கும் விழிக்கோளத்திற்கும் இடையில் உள்ள இடம் அதிகரிக்கிறது. இது கீழ் இமைத் தொய்வையும் அதிக விழிமூடுதசை மேற்புரளலையும் ஏற்படுத்துகிறது.

நோய் கண்டறிதல்

நோய்க்காரணிகளையும் மருத்துவ சோதனைகளையும் கொண்டு நோய்கண்டறியப்படுகிறது.

சோதனையில் கீழ்வரும் அம்சங்கள் காணப்படலாம்:

- முக விறைப்பு, தோல் எரிச்சல் அல்லது தொற்று.

- போலி இமைமயிர் உட்சுருளல்.

- இமை விளிம்பு அமைப்பை சோதித்தால் இமைமயிர் இழப்பு காணப்படலாம்.

- நீடித்த எரிச்சல், இணையிமை உருவாதல் அல்லது வளைவு குறுகுதல் போன்றவற்றால் தூண்டப்பட்டு கெராட்டினாக்கம் உண்டாகி விழியிணைப்படல சோதனையின் போது உலர் கண் அம்சங்கள் காணப்படும்.

- விழிவெண்படலத்தில் சிராய்ப்பு, வடு, மெலிவு, புதுக்குழல் அல்லது புண் காணப்படும்.

உள்ளுருள்வு இமை உட்பிறழல்:

- உள் மற்றும்/அல்லது பக்க கண்மூலை தசைநார்களில் கிடைமட்ட தொய்வு காணப்படும்.

- மீள்வரல் சோதனை: பரிசோதனையாளர், நோயாளியை இமைக்க அனுமதிக்காமல், கீழ் இமையைக் கீழே இழுத்து விட்டு அது தன் இயல்பு நிலையை அடைவதைக் கவனிக்கிறார். பொதுவாக இமைப்பு தேவை இல்லாமலேயே இமை தன் இயல்பு நிலையை அடைகிறது. ஆனால் தொய்வு இருந்தால் இமைப்பதன் மூலமாகவே இமை தன் இயல்பு நிலையை அடையும். பரிசோதனையாளர் கீழ் இமையை விழிகோளத்தில் இருந்து விலகும்படி முன்பக்கமும் இழுக்கிறார். உள்ளுருள்வு இமை உட்பிறழல் இருந்தால் அது 6-15 மி.மீ அளவுக்கு விழிக்கோளத்தில் இருந்து இழுபடும். இயல்பான நிலையில் 2-3 மி.மீ இழுபடும்.

- கீழ் இமை மீள்வலிக்கும் செயல்பாடு: கீழ் நோக்கிப் பார்க்கும் போது கீழ் இமைச் செலவு அளக்கப்பட்டு இது மதிப்பிடப் படுகிறது. கீழ்நோக்கிய பார்வையில் கீழ் இமை மீள்வலிப்பான்கள் கீழ் இமை விளிம்பை 3-4 மி.மீ. கீழ் நோக்கி நகர்த்துகின்றன. கீழ் இமை பலவீனம், வெடிப்பு அல்லது செருகாமை இருந்தால் இந்த நகர்வு இருக்காது.

- இமை வெளித்திருப்பம்: உள்ளுருள்வு இமை உட்பிறழ்வில் இமையை எளிதாக வெளித் திருப்பலாம்.

தழும்புடைய இமை உட்பிறழ்வு:

- விழியிமைப்படல வடு: நோயாளிக்கு விழியிமைப்படல வடு காணப்படும்.

- இமை இழுப்பு: இழுப்புக்குத் தடையும் கிடைக்கோட்டு இமை இழுப்பில் தொடர்ந்து இமை உட்பிறழலும் இருக்கிறது.

- இமை வெளித்திருப்பம்: உள்ளுருள்வு இமை உட்பிறழலைப் போல் அல்லாது இமை வெளித்திருப்பம் கடினமானது.

கடும் விறைப்பு இமை உட்பிறழ்தல்:

- இமையை வலிந்து மூடும் போதுவிழிமூடு தசையின் முன் இடைச்சுவர் பகுதி முன் இரப்பைப் பகுதியின் மேல் புரளும்.

பிறவி இமை உட்பிறழ்தல்:

- முழு கீழ் இமையும் இமைமயிரும் உட் திரும்பி இருத்தலைக் காட்டுகிறது.

- கீழ் இமை மடிப்பு இருப்பதில்லை.

கீழ் வருபவைகளில் இருந்து இமை உட்பிறழல் வேறுகாணப்பட வேண்டும்:

- இமைமயிர் உட்சுருளல்: முன்னர் இயல்பாக இருந்த இமை மயிர்கள் பின்புறமாக திசைமாற்றம் பெறுதல். இமை விளிம்பு உட்திரும்புவதில்லை.

- பிறவி ஈரிமை: மெய்போமியன் சுரப்பி துளைகளில் அல்லது சிறிது பின்னாகப் பகுதி அல்லது முழு இரண்டாவது வரிசை இமைமயிர் காணப்படுதல். இவை இயல்பான இமை மயிரை விட மெல்லியதும், குட்டையானதும் குறைவான நிறமியுடனும் இருக்கும்.

- பெறப்பட்ட மெட்டாபிளாஸ்டிக் இமைமயிர்: ஸ்டீவென்ஸ் ஜாண்சன் நோய்த்தாக்கம், கண்நோய் மற்றும் வேதிப் புண்களின் பின் நிலைகளில் பெறப்பட்ட மெட்டாபிளாஸ்டிக் இமைமயிர் உருவாகலாம். இதில், இமை மயிர்கள் மெய்போமியன் சுரப்பி துளை அருகில் வெளியேறும். மேலும், விழியிமைப் படலக் கெரோட்டினாக்கம் போன்ற மாற்றங்களில் தொடர்புடையதாக இருக்கும்.

- பிறவி இமைத்தோல் மடிப்பு: பரவலான பிறவி இமைத்தோல் மடிப்பில் இருந்து இமை உட்பிறழலை வேறுபடுத்திக் காண வேண்டும். இமைத்தோல் மடிப்பில் ஒரு கூடுதல் கிடைக்கோட்டு தோல் மடிப்பு இமை விளிம்பு முழுவதும் காணப்படும். இமை மயிர்கள் மேல் நோக்கி திரும்பி இருக்கும், குறிப்பாக உட்புறமாக. இவை வெண்படலத்தைத் தொட்டாலும் அரிதாகவே கண்ணுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இமையைக் கீழ் நோக்கி இழுக்கும் போது இந்நிலையின் வேறுபாடு தெரியும். இமைத்தோல் மடிப்பில், இமை மயிர் வெளிப்புறமாகத் திரும்பி இருக்கும். இமை விளிம்பின் இயல்பு நிலை புலனாகும். பிறவி இமை உட்பிறழலில், முழு இமையும் விழிகோளத்தை விட்டு விலகுமாறு இழுக்கப்பட்டிருக்கும்.

நோய் மேலாண்மை

மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

மருத்துவ மேலாண்மை:

கீழ் வருவனவற்றிற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்:

- அறுவையை மறுக்கும் நோயாளிகள்

- அறுவை சிகிச்சை வரை இடைக்கால நடவடிக்கையாக

- அறுவை செய்ய முடியாதபடி நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள்

- காலப்போக்கில் குணமாகக் கூடிய நோயாளிகள்.

அறுவை சிகிச்சை அற்ற மருத்துவம்:

- கன்ன எலும்போடு கீழ் இமையை டேப் செய்தல்

- இமையை நேராக்க சயனோஅக்ரலைட் திரவக் கட்டிடுதல்

- விழிமூடுதசையில் போட்டுலினம் டாக்சின் ஊசி இடுவது அதைப் பலவீனப்படுத்தி மேலுருளலைத் தடுக்கும்.

- கண் பரப்பைப் பாதுகாக்க செயற்கை மசகுக் கண்ணீரை பயன்படுத்துதல்.

விறைப்பு இமை உட்பிறழலுக்கு, கண் அழற்சியைத் தடுக்க, இமை சுத்தம், நுண்ணுயிர்க்கொல்லி மற்றும் ஊக்க மருந்து பயன்பாடு ஆகியவை உதவிகரமாக இருக்கும்.

அறுவை மருத்துவம்:

உள்ளுருளும் இமை உட்பிறழல்:

- பல முறைகள் கையாளப்படுகின்றன: உ-ம்: தீய்ப்பு, இமை சுழற்சி தையல், கீழ் இமை மீள்வலிப்பான்களைக் குறுக்குதல், வைஸ் மற்றும் ஃபாக்ஸ் முறை.

தழும்புடைய இமை உட்பிறழல்:

- இலேசான நேர்வுகளுக்கு இரப்பை முறிவாலும் கடுமையான நேர்வுகளுக்கு சளிச்சவ்வுப் படல ஒட்டலாலும் சிகிச்சை அளிக்கலாம்.

கடும் விறைப்பு இமை உட்பிறழல்:

- இமை நிமிர்த்தல் தையல்கள்.

பிறவி இமை உட்பிறழல்:

- இரப்பை பொருத்து தையல் வெண்படலச் சிதைவைத் தடுக்கும்.

ஆதாரம்: தேசிய சுகாதார இணையதளம்