அறிமுகம்

தைராயிடு சுரப்பியின் அசாதாரணமான வீக்கமே கண்டமாலை என அழைக்கப்படுகிறது. தைராயிடு சுரப்பியின் வீக்கத்தால் கழுத்தும் குரல்வளையும் வீக்கம் அடைகின்றன. இந்த வீக்கம் தைராயிடு சுரப்பி சரிவர செயல்படுகிறதா இல்லையா என்பதோடு தொடர்புடையது. தைராயிடு சுரப்பி ஒரு சிறு வண்ணத்துப்பூச்சியின் வடிவில் மூச்சுக் குழாயின் முன்புறம் கழுத்துப் பகுதியில் அமைந்துள்ளது. உடலின் வளர்சிதை மாற்றத்தை (உணவை ஆற்றலாக மாற்றும் முறை) சீர்ப்படுத்தும் தைராயிடு இயக்குநீரை இது சுரக்கிறது.

இந்நோய் பரவலாகக் காணப்படுவதற்குக் காரணம் அயோடின் குறைபாடே. இதனால் இது அயோடின் குறைபாட்டுக் கோளாறு என்றும் அழைக்கப்படுகிறது. உலக அளவில் 150 கோடி மக்கள் அயோடின் குறைபாட்டு கோளாறுகளால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். இவர்களில் 20 கோடிப் பேர் இந்தியாவில் உள்ளனர்.

கண்டமாலையின் வகைகள்: இரு வகையான கண்டமாலைகள் உள்ளன:

மென்சிறு கண்டமாலை: முழு தைராயிடு சுரப்பியும் வீங்கி தொடுவதற்கு மென்மையாக இருக்கும்.

திரளைக் கண்டமாலை: தைராயிடு சுரப்பியின் சில பகுதிகள் வீங்கித், தொடுவதற்கு முடிச்சுகள் போல இருக்கும்.

நோயறிகுறிகள்

தைராயிடு சுரப்பியின் வீக்கமே கண்டமாலையின் முக்கிய அறிகுறி. இதனால் தொண்டையில் முடிச்சு உருவாகிறது.

கீழ்க்காணும் அறிகுறிகள் இதனுடன் தொடர்புடையன:

மிகைச்சுரப்பு:

எடை குறைவு

பசி கூடுதல்

வெப்பம் பொறுக்க இயலாமை

குறைச்சுரப்பு:

எடை கூடுதல்

மலச்சிக்கல்

குளிர் தாங்கமுடியாமை

களைப்பு

உலர்ந்த செதில் போன்ற தோல்

காரணங்கள்

அயோடின் குறைபாடு: இதுவே கண்டமாலையின் முக்கிய காரணம். இது ஹஷிமோட்டோவின் நோய் எனப்படும். கிரேவின் நோய் போலவே ஹஷிமோட்டோவின் கண்டமாலை நோயும் ஒரு தன்தடுப்பாற்றல் நோயாகும். சுரப்பியை மிகையாகத் தூண்டுவதற்குப் பதில் ஹஷிமோட்டோவின் நோய் சுரப்பியின் இயக்கு நீர் உற்பத்தித் திறனில் குறுக்கிடுகிறது. இதை ஈடுகட்ட உடல் சுரப்பியை வீங்கச் செய்வதால் கண்டமாலை உருவாகிறது.

மிகைச்சுரப்பு: தைராயிடு சுரப்பி அதிகமாகச் சுரந்தாலும் கண்ட மாலை உருவாகும். அதிக சுரப்பால் தூண்டப்பட்டு சுரப்பி வீங்குகிறது. இதற்கு முக்கியக் காரணம் கிரேவின் நோயே. இதனால் உடலின் நோய்த்தடுப்பு மண்டலம் எதிர்பொருட்களை தைராயிடு சுரப்பிக்கு அனுப்புகிறது. இவை தைராயிடு சுரப்பியைத் தூண்டி அதிகமான இயக்குநீரை வெளிவிடச் செய்கிறது.

குறைச்சுரப்பு: தைராயிடு சுரப்பி குறைவாகச் சுரந்தாலும் கண்டமாலை ஏற்படுகிறது. போதுமான அளவுக்கு இயக்குநீர் சுரக்கப்படாததால் உடல் சுரப்பியைத் தூண்டும்போது அது வீங்குகிறது.

நோய்கண்டறிதல்

உடல் பரிசோதனை: வீக்கத்தைப் பரிசோதிப்பதின் மூலம் மருத்துவர் கண்டமாலையைக் கண்டறிகிறார்.

மென்சிறு கண்டமாலை: முழு தைராயிடு சுரப்பியும் வீங்கி இருக்கும்.

திரளைக் கண்டமாலை: தைராயிடு சுரப்பியின் சில பகுதிகள் வீங்கி முடிச்சுகள் போல இருக்கும்.

தைராயிடு செயல்பாட்டுச் சோதனை: இரத்தத்தில் காணப்படும் தைராயிடு இயக்குநீர் அளவைக் கொண்டு மிகைச் சுரப்பும் குறைச் சுரப்பும் கண்டறியப்படுகிறது. தைராயிடு சுரப்பி சுரக்கும் தைராக்சின் மற்றும் டிரைஅயோடோதைரோனைனையும், தைராயிடு சுரப்பியில் இயக்குநீர் உற்பத்தியைத் தூண்டும் பிட்யூட்டரி சுரப்பி வெளிவிடும் வேதிப்பொருளான தைராயிடு தூண்டும் இயக்குநீரையும் மருத்துவர் அளந்தறிகிறார்.

தைராயிடு சுரப்பி இரண்டு இயக்குநீர்களைச் சுரக்கிறது:

தைராக்சின்

டிரை அயோடோ தைரோனைன்

இவ்விரு இயக்குநீர்களும் அதிகமாகச் சுரப்பது தைராயிடு சுரப்பியை அதிகமாகச் சுரக்கவைக்கும் கிரேவின் நோய் போன்ற கோளாறுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

தைராயிடு குறைச்சுரப்பு: இரத்த ஓட்டத்தில் குறைவான அளவில் தைராயிடு இயக்குநீரும், உடல் தைராயிடு இயக்குநீர்களை அதிகமாக உற்பத்தி செய்ய முனைவதால் தைராயிடு தூண்டும் இயக்குநீர் அதிக அளவிலும் காணப்படுவதைக்கொண்டு இது கண்டறியப்படுகிறது. இதற்கு மாறான நிலையே தைராயிடு மிகைச்சுரப்பு. தைராயிடு தூண்டும் இயக்குநீர் குறைந்த அளவிலும், தைராயிடு இயக்குநீர்கள் அதிகமாகவும் இரத்த ஓட்டத்தில் காணப்படும்.

மிகைத் தைராயிடு சுரப்பைத் தீர்மானிக்க மருத்துவர்கள் சில தைராயிடு எதிர் பொருட்களைக் கண்டறியும் பிற இரத்த சோதனைகளையும் செய்கின்றனர். இவ்வகை எதிர்பொருட்கள் அதிக அளவில் இருப்பதைக் கொண்டு மிகைச்சுரப்பின் காரணத்தை மருத்துவர்களால் அறிய முடியும்.

கேளா ஒலி: கழுத்துப் பகுதியின் சாதாரண கேளா ஒலிச் சோதனையும், கதிரியக்க அயோடைடு உள்வாங்கல் ஊடுகதிர்ச் சோதனையும் மருத்துவர் நோய் கண்டறியத் தேவைப்படலாம். தைராயிடு சுரப்பியில் கதிர்வீச்சு அயோடைடு இருக்கும் சரியான இடத்தைக் காட்டும் படத்தை மருத்துவர் ஒரு தனிவகை படலத்தைப் பயன்படுத்தி உருவாக்குகிறார். திடீரெனத் தோன்றும் முடிச்சுகள் திரவம் நிரம்பிய நீர்க்கட்டிகளாகும். பெரும்பாலும் அவை தீங்கற்றவை. அவற்றை அறுவை அற்ற கேளா ஒலி சோதனையால் மதிப்பிடலாம். சோதனையில் இந்த முடிச்சுகள் அதிக இயக்குநீரை உற்பத்தி செய்கின்றன என்று கண்டாலும் வேறு அறிகுறிகளைக் கொண்டும் மருத்துவர் தைராயிடு மிகைச்சுரப்புக்கு சிகிச்சை அளிக்கிறார்.

இங்கு தரப்படும் தகவல்கள் ஆரோக்கியத்தைப் பற்றி புரிந்து கொள்வதற்கே. மேலும் விவரங்களுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

நோய்மேலாண்மை

குறை அல்லது மிகைத் தைராயிடு சுரப்பைப் பொறுத்தே கண்டமாலை நோய்க்கு மருத்துவம் அமைகிறது.

குறை தைராயிடு சுரப்பு: செயற்கையான ஓர் இயக்குநீரைக் கொண்டு இயல்பான தைராயிடு செயல்பாடுகள் அதிகரிக்கப்படுகின்றன. இது இயக்குநீர்ச் சிகிச்சை எனப்படும். இந்த செயற்கை இயக்குநீர் லெவோதைராக்சின் என்று அழைக்கப்படுகிறது. இது தினமும் ஒருமுறை வாய்வழி எடுக்கப்படும்.

மிகைத் தைராயிடு சுரப்பு: தினோவமைடுகள் மூலம் இது குணப்படுத்தப்படுகிறது. இது தைரயிடு சுரப்பியால் சுரக்கப்படும் இயக்குநீரின் அளவைக் குறைக்க உதவுகிறது.

கதிரியக்க அயோடின்: மிகையாகச் சுரக்கும் தைராயிடு சுரப்பிக்கு அளிக்கப்படும் இன்னொரு மருத்துவமே கதிரியக்க அயோடின் சிகிச்சை. இதுவும் வாய்மூலமாகவே உட்கொள்ளப்படுகிறது. இது தைராயிடு சுரப்பியை அடைந்து தைராயிடு உயிரணுக்களை அழித்து தைராயிடு சுரப்பியின் அளவைக் குறைக்கிறது. இதனால் தைராயிடு சுரப்பியின் செயல்பாடு அளவுக்கு அதிகமாகக் குறையவும் கூடும்.

அயோடின் சத்து: மருத்துவப் பரிந்துரை இல்லாமலேயே அயோடின் துணை உணவுகள் கடைகளில் கிடைக்கின்றன.

அறுவை மருத்துவம்: கண்டமாலை மூச்சுவிடுவதிலும், விழுங்குவதிலும் குறுக்கிட்டாலோ, சிகிச்சையில் பலன் கிடைக்காவிட்டாலோ தைராயிடு சுரப்பியின் பகுதியோ அல்லது முழுமையுமோ அகற்றப்படும்.

இங்கு தரப்படும் தகவல்கள் ஆரோக்கியத்தைப் பற்றி புரிந்து கொள்வதற்கே. மேலும் விவரங்களுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்