கடுமையான சிறுநீரக செயலிழப்பு என்றால் என்ன?

இவ்வகை சிறுநீரக நோயின் தாக்குதலால், சிறுநீரகங்களின் திறன் குறைதலோ அல்லது முற்றிலுமாக இழப்போ வெகு குறைந்த காலத்திற்குள் (ஒரு சில மணி நேரங்கள், நாட்கள் அல்லது வாரங்களுக்குள்) ஏற்பட்டு விடுகிறது. இது தாற்காலிகமானதும் சாதாரண நிலைக்கு திரும்பக் கூடியதுமான நோயாகும்.

கடுமையான சிறுநீரக செயலிழப்பு எப்படி ஏற்படுகிறது?

இது பல காரணங்களினால் உருவாகலாம். மிக முக்கியமான காரணங்கள் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ளன.

1. சிறுநீரகங்களுக்குப் போகும் இரத்தம் குறைதல். வயிற்றுப் போக்கினால் கடுமையாக நீர்வற்றிப் போதல்.

2. மோசமான நோய்த்தொற்று, அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயுறுதல்.

3. சிறுநீர் கழிப்பதில் திடீரென்று தடங்கல் ஏற்படுதல். பெரும்பாலும் சிறுநீரகத்தில் அடைபட்டிருக்கும் கல்லே இதற்குக் காரணமாக இருக்கும்.

4. மற்றவை ஃபால்ஸிபாரம் மலேரியா, லெப்டோபைரோஸிஸ், பாம்புக்கடி, குறிப்பிட்ட சிறுநீரக நோய்கள், கர்ப்ப கால சிக்கல்கள் மற்றும் சில மருந்துகளின் பக்க விளைவுகளினால் ஏற்படக்கூடியவை ஆகும்.

கடுமையான சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்

இந்நோய் தாக்கும்பொழுது, சிறுநீரகத்தின் செயல்பாடு, வெகு குறுகிய காலத்திலேயே மிக மோசமாக ஆரம்பிக்கிறது. இதனால் கழிவுப் பொருட்கள் அதிகமாக உடலிலேயே தங்கி விடுகின்றன. உடலில் இருக்கும் திரவங்களில் சமநிலை கெடுகிறது. இதனால் சிறுநீரகங்கள் திடீரென்று செயலிழக்கின்றன. இதனால் அறிகுறிகளும் குறிப்பான சில தடயங்களும் வெகு விரைவில் உருவாகின்றன.

இந்த பாதிப்பின் தீவிரம் ஒரு நோயாளிக்கும் மற்றவருக்கும் சற்று வேறுபட்ட நிலைகளில் காண்பிக்கப்படும்.

1. வயிற்றுப் போக்கு, இரத்தம் இழப்பு, காய்ச்சல், உடல் சில்லிட்டுப் போதல்

2. சிறுநீர் குறைவாகப் போக ஆரம்பித்தல். (ஒரு சிலருக்கு சாதாரண நிலையில் இருக்கும்.)

3. திரவங்கள் உடலுக்குள்ளேயே தங்கி விடுவதால், தோள் பட்டை அல்லது பாதங்களில் வீக்கம் ஏற்படுதல்.

4. பசியின்மை, வாந்தி, விக்கல், உடல் அசதி, சோம்பல், மற்றும் மனம் குழப்பத்தில் ஆழ்ந்து விடுதல் போன்ற நிலைகள் ஏற்படும்.

5. மிக மோசமான அறிகுறிகள் - மூச்சுத் திணறல், மார்பில் வலி, நடுக்கங்கள் அல்லது நினைவிழத்தல், இரத்தமாக வாந்தி எடுத்தல், மற்றும் சீரற்ற இதயத் துடிப்புக்கள் (இது பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருந்தால் இருக்கும்.) போன்றவையாகும்.

5. இந்த நோய் தாக்கப்படும் ஆரம்ப காலத்தில், ஒருசில நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறியும் தென்படாது. இது வழக்கமான இரத்த பரிசோதனைகள் ஒன்றின்பொழுது தெரியவரும்

இந்த நோயைக் கண்டறிவது எப்படி?

பல பேருக்கு இந்த நோய் தாக்கும்பொழுது எந்தவித அறிகுறிகளும் தென்படாமல் போகலாம். ஆகவே இந்த நோய் தாக்கியது போன்று மிகச்சிறிய அளவு சந்தேகம் எழுந்தாலும், உடனுக்குடன் சோதனை செய்து கொள்வது நல்லது.

இந்த நோய் தாக்கினால், இரத்த பரிசோதனைகளில் யூரியா மற்றும் கிரியேட்டினைன் அளவு கூடுயிருப்பது தெரியவரும். அதைத் தவிர சிறுநீரின் அளவு, சிறுநீர் பரிசோதனை மற்றும் சில பரிந்துரைக்கப்பட்ட சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நோய்க்கு எப்படி சிகிச்சை செய்வது?

முறையான சிகிச்சைகள் மூலம் இந்த நோயை முற்றிலுமாகவே குணப்படுத்தி விடலாம் இது பெரும்பாலான நோயாளிகளுக்கு சாத்தியமாகியிருக்கிறது. கால தாமதமும் முறையில்லாத சிகிச்சையும் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

இந்நோயை குணப்படுத்துவதற்கான முக்கியமான வழிகளில் சில

1. சிறுநீரக நோய் உண்டாக்கும் காரணிகளை சரிசெய்தல்

2. மருந்து, மாத்திரைகள்

3. சரிவிகித உணவுப் பழக்க வழக்கம்

4. டையாலிஸிஸ்

சிறுநீரக நோய் உண்டாக்கும் காரணிகளை சரிசெய்தல்

அடிப்படை காரணத்தைக் கண்டறிவது என்பது மிக முக்கியமான வழிமுறையாகும். உயர்இரத்த அழுத்தம், தொற்றுதல் ஏற்படுவது, சிறுநீர்ப்பாதை தடைப் படுவது. - இவற்றை முதலில் சரி செய்வது சிறுநீரகங்களை சாதாரண நிலைக்கு உடனடியாகத் திரும்பச் செய்யும். இவ்வகை சிகிச்சைகள், நோயை மேலும் முற்றாமல் பாதுகாக்கிறது.

மருந்து, மாத்திரைகள்

தொற்றுக்களை குணப்படுத்துவதோடு தீவிர பக்க விளைவுகள், விஷத்தன்மை கொண்ட மருந்துகளை தவிர்க்க வெண்டும். (NSAIDS போன்றவை)

Frusemide போன்ற மருந்துகள் சிறுநீர் அளவைக் கூட்டும். உடலில் வீக்கங்களைக் குறைக்கும். மூச்சுத் திணறலைக் கட்டுப்படுத்தும்.

பிற ஆதரவு சிகிச்சை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் : இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம் இவற்றை சரி செய்யும், வாந்தி எடுப்பதை நிறுத்தும். இரத்தத்தில் உள்ள பொட்டாசியத்தின் அளவைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்கும். உடலில் ஏற்படும் நடுக்கத்தையும் குறைக்கும்.

சரிவிகித உணவுப் பழக்க வழக்கம்

முறையான கட்டுப்பாடு உடைய உணவுப் பழக்க வழக்கங்கள், இந்த நோயின் அறிகுறிகளை அகற்றி மேலும் சிக்கல்கள் கூடாமல் கட்டுப்படுத்த உதவுகின்றன.

அன்றாடம் எடுத்துக் கொள்ளப்படும் திரவங்களின் அளவு, வெளிச் செல்லும் சிறுநீரின் அளவை மனத்தில் கொண்டு திட்டமிடல் வேண்டும். எடீமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை கட்டுப்படுத்த திரவங்களை எடுத்துக் கொள்ளுதலில் கட்டுப்பாடு அவசியமாகும்.

பொட்டாசியம் மிகுதியாக இருக்கும் பழங்களை தவிர்க்கவும். உதாரணத்திற்கு, பழங்கள், பழச் சாறுகள், உலர்ந்த பழங்கள் முதலியனவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம். இதை ஆங்கிலத்தில் hyperkalemia என்பார்கள்.

உப்பைக் குறைக்கவும். உப்பை குறைத்தால், தாகம், எடீமா மற்றும் உயர்இரத்த அழுத்தம், மூச்சுத்திணறல் போன்ற சிக்கல்கள் எழாது

போதுமான அளவு சுத்துள்ள உணவை எடுத்துக் கொள்ளவும்.

டையாலிஸிஸ்

(சிறுநீரை செயற்கையாக வெளியேற்றுதல்)

கடுமையான சிறுநீரக செயலிழப்பு உடையவர்களுக்கு, தற்காலிகமாக சிறுநீரகங்களின் வேலையைச் செய்ய இந்த சிகிச்சை மிகவும் உதவும்.

டையாலிஸிஸ் என்றால் என்ன?

சிறுநீரகங்கள் சரியாக இருக்கும்பொழுது செய்யும் வேலையை நோயாளி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்பொழுது, இயந்திரத்தின் மூலமாக செயற்கை முறையில் செய்வதுதான் டையாலிஸிஸ் எனப்படுகிறது.

கழிவுப்பொருட்கள் மற்றும் உபரியான திரவங்களை இது அகற்றுகிறது, அசிடோஸிஸ் மற்றும் மின் கடத்தும் திரவங்களின் சீரற்ற நிலையை சரிசெய்கிறது.

டையாலிஸிஸ் இருவகைப்படும் : ஹீமோடையாலிஸிஸ் மற்றும்பெ ரிடோனியல் டையாலிஸிஸ்.

இந்நோயாளிகளுக்கு எப்பொழுது டையாலிஸிஸ் தேவைப்படும்?

கடுமையாகத் தாக்கும்பொழுது, போதுமான அளவு நோயைக் குணப்படுத்தும் வழிகளை அனுசரித்தாலும், இவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளும், சிக்கல்களும் அதிகரித்தால், அப்பொழுது டையாலிஸிஸ் தேவைப்படும். திரவங்களின் அளவு அதிகரித்தல், கட்டுப்படுத்த முடியாத ஹைப்பர்கலேமியா , மிகக் கடுமையான அசிடோஸிஸ் போன்ற நிலைகள் டையாலிஸிஸ் செய்ய வேண்டியதற்கான அறிகுறிகளாகும்.

டையாலிஸிஸை எத்தனை நாட்களுக்குத் தொடர வேண்டும்?

மிக மோசமாக பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களைக் கொண்டவர்களுக்கு டையாலிஸிஸை தாற்காலிகமாக செயல்படுத்தல் வேண்டும். இருவகைகளில் ஏதாவது ஒன்றை செயல்படுத்தலாம். இதை சிறுநீரகங்கள் சாதாரண நிலைமைக்குத் திரும்பும் வரை மேற்கொள்ளலாம்.

மேற்கண்ட வகையில் தாக்கமடைந்தவர்கள், சில சமயங்களில் 1 முதல் 4 வாரங்களில் சாதாரண நிலைக்குத் திரும்பி விடுவார்கள். டையாலிஸிஸ் என்பது ஒரு முறை மேற்கொண்டால் வாழ்க்கை முழுவதும் அனுசரிக்க வேண்டிய செயல்பாடு என்ற அனுமானம் தவறானது. அந்த அனுமானத்தால் காலம் தாழ்த்திக் கொண்டே போவது உயிருக்கே உலை வைக்கும்.

கடுமையான சிறுநீரக செயலிழப்பை தடுத்தல்

இந்த தாக்குதலை அதன் உள்ளார்ந்த நிலையிலேயே கண்டு கொண்டு சிகிச்சை செய்வதல் மற்றும் அடிக்கடி சோதித்து கண்டறிதல்

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி வைப்பதோடு உடனுக்குடன் இரத்த அழுத்தத்தை சரி செய்துகொள்தல்

தொற்று, குறைவாக சிறுநீர் கழித்தல் போன்றவற்றை உடனுக்குடன் சரி செய்யவும்.

நெப்ரோடாக்ஸிக் என்று அழைக்கப்படும் இவ் வகை மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil