அறிமுகம்

இது ஒரு நரம்புப்பிடிப்புக் கோளாறாகும். இதனால் கைகால் விரல்களும், அபூர்வமாகப் பிற பகுதிகளும் நிறமிழக்கக் கூடும். இதனால் நீள் கோடுகளுடன் உடையக் கூடிய நகங்கள் ஏற்படும். ரெய்நாட் நிகழ்வு, ரெய்நாடு நோயையும் (முதன்மை ரெய்நாட் நிகழ்வு) உள்ளடக்கியது. நிகழ்வின் காரணம் அறியாத ஒன்று.

குளிர் அல்லது உணர்வு அழுத்தத்தின் மிகையான நரம்பியக்க பதில்வினையே ரெய்நாட் நிகழ்வாகும். குறிப்பாக, பரிவுணர்ச்சி மண்டலத்தின் மிகைச்செயல்பாடு புற இரத்தக் குழாய்களில் நரம்புப்பிடிப்பை உருவாக்கித் திசுக்களுக்கு உயிர்வளிப் பற்றாக்குறையை உண்டாக்குகிறது. நீடித்தத், தொடர்ந்து ஏற்படும் ரெய்நாட் நிகழ்வு தோலுக்கும், தோலடி திசுக்களுக்கும், தசைகளுக்கும் மெலிவு உண்டாக்கும். அபூர்வமாக புண்களையும் குருதியூட்டக்குறை திசு அழுகலையும் ஏற்படுத்தலாம்.

நோயறிகுறிகள்

இந்நிலையால் விரல் நுனிகளில் வலி, நிறமாற்றம் (வெளிறுதல்), குளிர் மற்றும் உணர்வின்மை ஏற்படும். தோலில் உண்டாகும் இம்மாற்றங்கள் மூன்று கட்டமாக நிகழும்:

முதல் கட்டம்: இரத்த ஓட்டம் குறைவதால் பாதிக்கப்பட்ட இடம் வெளிறும்

இரண்டாம் கட்டம்: அதன்பின், உயிர்வளி கிடைக்காததால் இது நீல நிறமாகும். குளிரும் உணர்ச்சி இன்மையும் உண்டாகும்.

மூன்றாம் கட்டம்: இரத்தம் முன்பை விட அதிக அளவில் பாய்வதால் உடலின் இப்பகுதி இப்போது சிவப்பாகும். கூச்சமும் துடிப்பும் இருக்கும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீக்கமும் உண்டாகலாம்.

காரணங்கள்

உடலின் நுனிப்பகுதிகளில் உள்ள, மிகை உணர்திறன் இரத்தக் குழாய்களினால், ரெய்நாட் நிகழ்வு நோய் ஏற்படுகிறது. பல நோயாளிகளுக்குக் காரணம் எதுவும் இனம்காண முடிவதில்லை. எனினும், சில வேளைகளில் பிற உடல் நிலைகளோடு இது தொடர்புபடுத்தப் படுகிறது.

முதன்மை ரெய்நாட் நிகழ்வு: வேறு உடல் கோளாறுகளோடு தொடர்பு இன்றித் தானாகவே தோன்றும் பொதுவான வடிவம் இது.

இரண்டாம்நிலை ரெய்நாட் நிகழ்வு: சில நோயாளிகளுக்கு வேறொரு உடல்நிலைக் கோளாறின் அடிப்படையில் இரத்தக் குழாய்கள் மிகையாக வினைபுரிகின்றன. இதுவே இரண்டாம் நிலை ரெய்நாட் நிகழ்வாகும்.

தன் நோய்த்தடுப்பு நிலைகள்

தொற்றுக்கள்

புற்று

அதிக பயன்பாட்டால் காயம் ஏற்படுதல்

நோய்கண்டறிதல்

நோய்வரலாற்றை ஆய்வுசெய்து மருத்துவரால் முதன்மை அல்லது இரண்டாம்நிலை நோயைக் கண்டறிய முடியும். இதை உறுதி செய்த பின் இரண்டாம்நிலை நோயின் காரணங்களை அறியவே சோதனைகள் நடத்தப்படும்.

தமனி அழுத்த இலக்கம்: கைகள் குளிர்ச்சி அடைவதற்கும் முன்னும் பின்னும் விரல்களில் உள்ள தமனிகளின் அழுத்தம் அளக்கப்படும். குறைந்தபட்சம் 15 mmHg அளவு குறைதல், நோயிருப்பைக் காட்டும்.

டாப்ளர் கேளா ஒலி: இரத்த ஓட்டத்தைக் கணிக்க

முழு இரத்த எண்ணிக்கை: இதனால் இயற்செல் இரத்தசோகையைக் கண்டறிய முடியும். இது நீடித்த நோய்கள் அல்லது சிறுநீரகச் செயலிழப்பைக் காட்டலாம்.

எதிர் உட்கரு எதிர்பொருள் சோதனை (ANA): இந்த இரத்தச் சோதனை இரத்தத்தில் எதிருட்கரு எதிர்பொருள் உள்ளதா எனக் காட்டும். இந்த எதிர்பொருட்கள் நோய்த்தடுப்பு மண்டலத்தால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை உடலின் சொந்தத் திசுக்களையே தாக்கும்.

சிவப்பணு படிதல் விகிதம்: இந்த இரத்த சோதனையில், ஒரு சோதனைக் குழாயின் அடிப்பகுதியில், சிவப்பணுக்கள் எவ்வளவு வேகமாகப் படிகிறது என்று அளக்கப்படுகிறது. இயல்பை விட அதிகமான படிதல் விகிதம் ஒரு தன்நோய்த்தடுப்புக் கோளாறைச் சுட்டிக்காட்டுகிறது.

நோய் மேலாண்மை

முதன்மை ரெய்நாட் நோயில் தூண்டும் காரணிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரண்டாம்நிலை நோயின் அடிப்படைக் காரணங்களுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது.

மருந்தியல் சிகிச்சை: கால்சியம் சானல் பிளாக்கர்கள் (நிஃபெடிபைன்-nifedipine) அல்லது டில்டியாசெம் (diltiazem) போன்ற மருந்துகளால் ரெய்நாட் நிகழ்வு நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிக்கல்கள்

ரெய்நாட் நிகழ்வுநோயால் தோல்கெட்டியாதல் போன்ற சிக்கல்கள் உருவாகும் அபாயம் அதிகம்.

தோல்கெட்டியாதல்: உடல் அளவுக்கு மிக அதிகமான அளவு கொலாஜனை உற்பத்தி செய்வதே இப்பிரச்சினை.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்