முன்னுரை குரங்கம்மை (எம்பிஎக்ஸ்) நோய் என்பது ஒரு வைரஸ் ஜூனோடிக் நோயாகும். இது பெரியம்மை போன்ற அறிகுறிகளுடன், குறைவான மருத்துவ தீவிரத்தன்மை கொண்டது. எம்பிஎக்ஸ் முதன்முதலில் 1958 ஆம் ஆண்டில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இது 'குரங்கம்மை /"MonkeyPox" என்று பெயரிடப்பட்டது. இது உலகளாவிய பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாக மாறியுள்ள்ளது. ஏனெனில் இது மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளை மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளையும் பாதித்துள்ளது . தொற்று நோய்கள் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது அவசர கூட்டம் ஜூலை 23ஆம் தேதி நடைபெற்றது. அதில் குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது. நோயின் உண்மையான சுமை தெரியவில்லை. குரங்கம்மை நோய் பரவல் மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவுதல் ஏற்பட பொதுவாக நீண்ட நெருங்கிய தொடர்பு தேவைப்படும். பெரிய சுவாசத் துளிகள் மூலம் பரவுதல் நிகழ்கிறது. இது உடல் திரவங்கள் அல்லது சிரங்கு / புண் /காயங்கள் போன்றவற்றுடன் நேரடித் தொடர்பு மூலமாகவும், பாதிக்கப்பட்ட நபரின் கறைபட்ட ஆடைகள், வைரஸ் கிருமி தொற்றியுள்ள துணிகள், துண்டுகள், படுக்கைகள், உள்ளிட்டவற்றை தொடுவதன் மூலமும் குரங்கம்மை பரவுகிறது. உடலுறவின் போது நெருங்கிய தொடர்பு காரணமாக, பாலியல் பங்காளிகளுக்கு இடையே பரவும் தோல் புண்கள், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே (MSM) பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். விலங்கிடமிருந்து -மனிதனுக்கு பரவுதல் : எலிகள், அணில்கள், குரங்குகள் போன்ற பாதிக்கப்பட்ட விலங்குகள், மனிதனை கடித்தல் அல்லது கீறல் மூலமாகவும், பாதிக்கப்பட்ட இறைச்சி மூலமும் குரங்கம்மை விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவுகிறது. குரங்கம்மை நோய் அறிகுறிகள் ஆரம்பக் கட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி போன்ற அறிகுறிகள் தென்படும். அதன் பின் காய்ச்சல் வந்ததும் தடிப்புகள் ஏற்படுகிறது. முதலில் அது முகத்தில் தோன்றி பின் உடலின் பிற பகுதிகளுக்கு பரவுகிறது. பொதுவாக உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களுக்கு பரவுகிறது. அரிப்பு அதிகமாகி அது வலி மிகுந்ததாகிவிடும். அதன்பின் பல்வேறு கட்டங்களாக உருவெடுத்து சிரங்கு உண்டாகும். அதன்பின் அது மறைந்துவிடும். ஆனால் கொப்பளங்கள் தழும்பை ஏற்படுத்தலாம். பொதுவாக இந்த தொற்று 14 - 21 நாட்களில் தானாக சரியாகிவிடும். தடுப்பு நடவடிக்கைகள் நோய் பரவும் முறைகள் மற்றும் காரணிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் வைரஸின் வெளிப்பாட்டைக் குறைக்க அவர்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குக் கற்பிப்பது முக்கிய தடுப்பு உத்தியாகும். நோய்வாய்ப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த படுக்கை, ஆடை போன்ற எந்தவொரு பொருட்களுடனும் தொடர்பைத் தவிர்க்கவும். பாதிக்கப்பட்ட நோயாளிகளை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தவும். பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது மனிதர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு நல்ல கை சுகாதாரத்தை கடைபிடிக்கவும். உதாரணமாக, உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவுதல் அல்லது ஆல்கஹால் சார்ந்த கை சுத்திகரிப்பு திரவம் (Sanitizer) பயன்படுத்துதல். நோயாளிகளைப் பராமரிக்கும் போது பொருத்தமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் (PPE) பயன்படுத்தவும். தொற்றுக் கழிவுகளுக்கான பயோமெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் வழிகாட்டுதல்களின்படி மாசுபட்ட கழிவுகளை சரியான முறையில் அகற்றுதல். மேலும் தகவலுக்கு சுகாதாரத்துறையை அணுகவும்.