அறிமுகம்

இது ஒரு வகையான குடல் அழற்சி நோய். பெருங்குடலைப் பாதிக்கும் அழற்சி வடிவங்களில் ஒன்று. இதில் அழற்சியும், திறந்த புண்களும் அடங்கும். குடல் அழற்சி நோயின் இன்னொரு வடிவமான குரோகன் நோய் போன்றதே இதுவும். இது விட்டுவிட்டு வரும் நோய். சில காலங்களில் அறிகுறிகள் தீவிரம் அடையும். சில வேளைகளில் அறிகுறிகளே இருக்காது. தன்தடுப்பாற்றல் நோயைப் போன்றே இதற்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நோயறிகுறிகள்

பாதிக்கப்பட்டிருக்கும் பெருங்குடல் பகுதி மற்றும் அழற்சியின் அளவைப் பொருத்து அறிகுறிகள் வேறுபடும். பொதுவான அறிகுறிகளில் அடங்குவன:

வயிற்றுவலி

இரத்தம், சளியுடன் வயிற்றுப்போக்கு

சோர்வும் களைப்பும்

பசியின்மையும் எடை இழப்பும்

இரத்தச்சோகை (மூச்சடைப்பு, முறையற்ற இதயத்துடிப்பு, சோர்வு, தோல் வெளிறல்)

அதிகக் காய்ச்சல்: 38C (100.4F) அல்லது அதற்கு மேல்

நீர்ச்சத்திழப்பு

அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு

காரணங்கள்

சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் இதனுடன் அதிகமான ஆபத்துக்காரணிகள் இணைந்துள்ளன.

மரபியல் காரணிகள் : இதனுடன் மரபியல் காரணிகள் இணைந்துள்ளன. ஆனால் அது எவ்வாறு நடைபெறுகிறது என்பது தெரியவில்லை.

சூழலியல் காரணிகள்:

காற்று மாசடைதல்

உணவு: மாவும் கொழுப்பும் நிறைந்தவை

சுகாதாரம்: கிருமிகள் தாக்கும் போதே தடுப்பாற்றல் தகுந்த முறையில் உருவாக முடியும்.

நோய் கண்டறிதல்

பெருங்குடல் அழற்சிப்புண்ணைக் கண்டறிய, பல்வேறு சோதனைகள் நடத்தப்படுகின்றன:

வளைகுடல் நோக்கல் : பெருங்குடல் அழற்சி அடைந்துள்ள அளவைக் கணக்கிடுவதன் மூலம் நோய்கண்டறிதலை உறுதி செய்யலாம். இது வளைகுடல் நோக்கல் மூலம் செய்யப்படுகிறது. குதத்தின் வழியாக புகைப்படக் கருவி பொருத்தப்பட்ட ஒரு வளையும் தன்மையுள்ள குழாய் செலுத்தப்பட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

பெருங்குடல் நோக்கல் : இதில் இன்னும் நீளமான குழாய் பயன்படுத்தப்பட்டு பெருங்குடல் முழுவதும் ஆய்வு செய்யப்படுகிறது.

நோய் மேலாண்மை

அமினோசேலிசைக்ளேட்டுகள் : மிதமான பெருங்குடல் அழற்சிக்கு இம்மருந்துகளே முதல் தேர்வாகும்.

கார்ட்டிகோஸ்டெராய்டுகள் : நோய் கடுமையாக இருந்து, அமினோசேலிசைக்ளேட்டுகளுக்குக் கட்டுப்பட வில்லை என்றால் ஸ்டெராய்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

சிக்கல்கள்

முதன்மைப் பித்த நாளக் கோளாறு : இது பெருங்குடல் அழற்சி நோயின் ஒரு பொதுவான சிக்கல் ஆகும்.

குடல் புற்று : இதுவும் பெருங்குடல் அழற்சியினால் ஏற்படும் ஒரு சிக்கலே.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்