உலக மனநல தினம் உலக மனநல தினம் (World Mental Health Day), ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இது முதன்முதலில் 1992 ஆம் ஆண்டில் மனநலத்திற்கான உலக கூட்டமைப்பால் தொடங்கப்பட்டது. மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உலகளவில் மனநலப் பராமரிப்புக்கு ஆதரவாக முயற்சிகளைத் திரட்டுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, மனநலப் பராமரிப்பில் நீடித்த மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் அரசுகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஒத்துழைக்க இந்த நாள் ஒரு குறிப்பிடத்தக்க தளமாக வளர்ந்துள்ளது. உலக மனநல தினத்தின் முக்கியத்துவம் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் மனநலம் ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தின் வளர்ந்து வரும் அங்கீகாரத்தால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. உலக மனநல தினம் 2025 2025 ஆம் ஆண்டு உலக மனநல தினத்திற்கான கருப்பொருள் "மனிதாபிமான அவசரநிலைகளில் மனநலம்" என்பதாகும். மன ஆரோக்கியம் இல்லாமல் ஆரோக்கியம் இல்லை என்பதை உலக மனநல தினம் ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக செயல்படுகிறது. இந்த ஆண்டு பிரச்சாரம் மனிதாபிமான அவசரநிலைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் மன ஆரோக்கியம் மற்றும் உளவியல் தேவைகளை ஆதரிப்பதன் அவசரத் தேவையை மையமாகக் கொண்டுள்ளது. இயற்கை பேரழிவுகள், போர் மற்றும் பொது சுகாதார அவசரநிலைகள் போன்ற நெருக்கடிகள் உணர்ச்சி ரீதியான துயரத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய சூழலில் ஐந்து பேரில் ஒருவர் மனநல நிலை உளைசலுக்கு ஆளாகிறார். இத்தகைய நெருக்கடிகளின் போது தனிநபர்களின் மன நலனை ஆதரிப்பது முக்கியம் மட்டுமல்ல, இது சமூகங்களாகவும், உயிர்களைக் காப்பாற்றுகிறது, மக்களுக்கு சமாளிக்க வலிமை அளிக்கிறது, குணமடையவும் மீண்டு கட்டியெழுப்பவும் இடமளிக்கிறது. ஆகையால், அரசு அதிகாரிகள், சுகாதாரம் மற்றும் சமூக பராமரிப்பு ஊழியர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் சமூகக் குழுக்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைவது அவசியம். கைகோர்த்துச் செயல்படுவதன் மூலம், அனைவரின் நல்வாழ்வையும் பாதுகாக்கவும், அதே வேளையில், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்குத் தேவையான ஆதரவை அணுகுவதை உறுதிசெய்யவும் முடியும். ஆதாரங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான தலையீடுகளில் முதலீடு செய்வதன் மூலம், உடனடி மனநலத் தேவைகளை நாம் நிவர்த்தி செய்வத்தோடு, நீண்டகால மீட்சியை வளர்த்து, மக்கள் மற்றும் சமூகங்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் செழிக்கவும் அதிகாரம் அளிக்கலாம். முக்கிய செய்திகள் அவசரநிலைகளில் மனநலம் பெரும் பாதிப்பை அடைகிறது . வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மன ஆரோக்கியம் அவசியம் - உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளுக்கு அப்பால், உயிர் பிழைத்தவர்களுக்கு சமாளிக்க, மீண்டு, மீண்டும் கட்டியெழுப்ப மன ஆரோக்கியம் மற்றும் உளவியல் ஆதரவும் தேவை. மனநலத்தை ஒருங்கிணைப்பது அவசரகால ஏற்பாடுகளை வலுப்படுத்துகிறது மன ஆரோக்கியத்தில் முதலீடு செய்வது மீட்சியில் முதலீடு செய்வதாகும் மனநலப் பராமரிப்பு உயிர்களைக் காப்பாற்றுகிறது அனைவரையும் உள்ளடக்கிய மனநலப் பராமரிப்பு வலுவான சமூகங்களுக்கு வழிவகுக்கிறது - குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், அகதிகள் மற்றும் ஏற்கனவே மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்களை, பராமரிப்பு சென்றடைய வேண்டும். உங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் - மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பது, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் அன்றாட வழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். மது அருந்துவதைக் குறைத்தல், அர்த்தமுள்ள மற்றும் மகிழ்ச்சிகரமான செயல்களில் ஈடுபடுதல் மற்றும் நம்பகமான நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது சுகாதார நிபுணர்களின் ஆலோசனைப் பெறுதல் முக்கியமாகும். அவசரநிலைகளில் பணி செய்யும் பணியாளர்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கவும் - பணியாளர்கள் மிகுந்த மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். மேலும் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளால் பெரும்பாலும் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் பயன் பெரும் வகையில், நிறுவனங்கள் ஓய்வு, மேற்பார்வை, சகாக்களின் ஆதரவு மற்றும் பணியிட மனநலத் திட்டங்களை வழங்க வேண்டும். உள ஆரோக்கியம் பற்றிய கொள்கைப் பரிந்துரைகள் மனநலப் பராமரிப்பில் முன்னேற்றத்தை துரிதப்படுத்தவும், தற்போதுள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்து, அதிகபட்ச தாக்கத்தை உறுதி செய்யவும் திறம்பட செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை கொள்கைகள் வலியுறுத்துகிறது. முக்கிய கொள்கை பரிந்துரைகள் பின்வருமாறு: மனநல மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குதல், 2021 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 0.75 மனநல மருத்துவர்கள் என்பதில் இருந்து உலக சுகாதார அமைப்பின் விதிமுறையான ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 3 ஆக உயர்த்துதல். மனநல சுகாதார வல்லுநர்கள் மற்றும் பயனர்களுடன் இணைந்து அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள சிறப்பு மையங்களின் சேவைகளுக்கான விரிவான வழிகாட்டுதல்களை உருவாக்குதல். பயனாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைச் சேகரிப்பதன் மூலம் திட்டங்களின் செயல்திறனை மதிப்பிடுவதன் மூலம் தேவையான மாற்றங்களைச் செய்து பரந்த மக்களின் தேவைகளை நிறைவு செய்தல். சுய உதவிக் குழுக்கள் மற்றும் சமூக அடிப்படையிலான மறுவாழ்வு திட்டங்களை வளர்ப்பது மனநலக் கோளாறுகளை அகற்றவும், சொந்தமான உணர்வை வளர்க்கவும் உதவும். முயற்சிகளை அளவிடுவதற்கும், அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும், எதிர்காலக் கொள்கைகளை மேம்படுத்துவதற்கும், முன்னேற்றத்திற்கான பகுதிகளை அடையாளம் காண்பதில் உதவுவதற்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கூட்டாண்மை. முன்பருவப் பள்ளி, அங்கன்வாடி அளவில் மனநல குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வழிவகை செய்தல். அரசு மற்றும் தனியார் துறைகளில் மனநலச் சேவைகளுக்கான வழிகாட்டுதல்களை தரப்படுத்துதல். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான வயதுக்கு ஏற்ற மனநல பாடத்திட்டத்தை உருவாக்குதல், பள்ளிகளில் ஆரம்பகால தலையீடு மற்றும் நேர்மறையான மொழியை ஊக்குவித்தல், சமூக அளவிலான தொடர்புகளை ஊக்குவித்தல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கை சமநிலைப்படுத்துதல் உள்ளிட்ட பள்ளிகளில் மனநல தலையீடுகளை ஒருங்கிணைப்பதற்கான பயனுள்ள பாதைகள். முக்கிய முன்முயற்சிகள்: சிறந்த எதிர்காலத்திற்கான அரசின் முயற்சிகள் இந்திய அரசு, பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் மூலம், 2016 இல் தேசிய மனநல கணக்கெடுப்பை நடத்தியது. கணக்கெடுப்பின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களில் சுமார் 10.6% பேர் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இதை நிவர்த்தி செய்வதற்காக, தேசிய மனநலத் திட்டத்தின் முக்கிய அங்கமான மாவட்ட மனநலத் திட்டம்), 767 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது, தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவுடன். தற்கொலை தடுப்பு, பணியிட மன அழுத்த மேலாண்மை, வாழ்க்கைத் திறன் பயிற்சி மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆலோசனை போன்ற சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாவட்ட மருத்துவமனைகள், சமூக சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவற்றில் உள்ள வசதிகள் வெளிநோயாளர் சேவைகள், ஆலோசனை, உளவியல்-சமூக தலையீடுகள், கடுமையான மனநல கோளாறுகளுக்கான தொடர்ச்சியான பராமரிப்பு, மருந்துகள், அவுட்ரீச் திட்டங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்குகின்றன. கூடுதலாக, மாவட்ட அளவில் 10 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் வசதி உள்ளது. மேலும், 1.73 லட்சத்துக்கும் மேற்பட்ட துணை சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களாக தரம் உயர்த்தப்பட்டு, மனநல சேவைகளை அவற்றின் பராமரிப்பு தொகுப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்