கண்புரை நோய் கண்களில் உள்ள லென்ஸ் வழியாக ஒளி சரியாக ஊடுருவாமல் மேகமூட்டத்தைப் போன்று மங்கலான பார்வை உண்டாகும் ஒரு நிலை கண்புரை எனப்படும். பெரும்பாலான கண்புரை மெதுவாக உருவாகி, காலப்போக்கில் பார்வை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என கண் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வையற்றவர்களாக உள்ளனர். இதற்கு கிட்டத்தட்ட 70% கண்புரை நோய் முக்கிய காரணமாகும். ஆரம்ப நிலையில் கண்டறிந்து அறுவை சிகிச்சை மூலம் கண்புரையை அகற்றி பார்வையை தக்க வைக்க முடியும். ஆனால் இந்தியாவில் கண் மருத்துவர்களின் பற்றாக்குறை இதற்கு மிகப் பெரிய தடையாக உள்ளது. கண் மருத்துவர்கள் பற்றாக்குறை இந்தியாவில் 12000 கண் மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். முக்கியமாக கிராமப்புறங்களில் 250000 பேருக்கு ஒரு கண் மருத்துவர் மட்டுமே உள்ளனர். இதன் விளைவாக பலருக்கு கண்புரை நோய் உள்ளது கண்டறியப்படாமல் உள்ள நிலை உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தவிர்க்க முடியாத பார்வை குறைபாட்டிற்கு ஆளாகிறார்கள். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற முக்கியமான துறைகளில் தமிழ்நாடு அரசுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை குறைந்த செலவில் உருவாக்கித் தரும் ஒரு மாநில நோடல் நிறுவனமாகும். இ-பார்வை செயலி தமிழ்நாடு பார்வையற்றோர் கட்டுப்பாட்டு சங்கம் (Blindness Control Society of Tamil Nadu) கண் மருத்துவர் பற்றாக்குறையைப் பற்றி தமிழ்நாடு மின் ஆளுமை முகமையிடம் (TNeGA) முறையிட்டதன் விளைவாக உருவாக்கப்பட்ட தீர்வு இ-பார்வை என்னும் செயலி ஆகும். செயற்கை நுண்ணறிவு மூலம் கண்புரையை கண்டறியவும் (Detection) முதற்கட்ட பரிசோதனையை (Screening) செய்யவும் உதவுகிறது திறன் பேசியில் (Smart Phone) இயங்கும் இந்த இ-பார்வை செயலி. இ-பார்வை செயலி மூலம் தமிழ்நாட்டில் 50+ வயதுள்ள 20 மில்லியன் மக்களுக்கு கண்புரை உள்ளதா என்பதைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். தற்போது 91% துல்லியத்துடன் செயல்படும் இந்த இ-பார்வை செயலி மூலம் முதிர்ந்த கண்புரை (Mature Cataract), முதிர்ச்சியடையாத கண்புரை (Immature Cataract), ஐஓஎல் (IOL) மற்றும் புரையற்ற கண் (No Cataract) ஆகியவற்றை கண்டறிய முடியும். களப்பணியாளர் தங்கள் திறன் பேசியில் (Smart Phone) இ-பார்வை செயலியை 5 நிமிடங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இச்செயலி மூலம் நோயாளியின் கண்கள் படம் பிடிக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம் பகுத்தாய்வு செய்யப்பட்டு மையப்படுத்தப்பட்ட மாவட்ட வாரியான டாஷ்போர்டுக்கு (Centralised District-wise Dashboard) அனுப்பப்படுகிறது. அங்கு மாவட்ட மருத்துவ அலுவலர் (District Medical Officer) முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்ட நோயாளிகளின் விவரங்களைப் பெற்று, மேற்கொண்டு சிகிச்சைக்கு பரிந்துரைப்பார், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். தமிழ்நாடு பார்வையற்றோர் கட்டுப்பாட்டு சங்கம் டாஷ்போர்டில் சமர்ப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் கண்புரை உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கிறது. தமிழ்நாடு பார்வையற்றோர் கட்டுப்பாட்டு சங்கம் (TNSBCS) தற்போது இ-பார்வை செயலியைப் பயன்படுத்துகிறது. பிப்ரவரி 2021 இல் இந்த பயன்பாடு தொடங்கப்பட்டதிலிருந்து, 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு தமிழகத்தின் பல்வேறு கிராமப்புற மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆதாரம்: இந்தியாஏஐ