முன்னுரை

யோகா என்பது மிக முக்கியமாக ஓர் ஆன்மீக அறிவுத்துறை புரிந்துகொள்ள இயலாத அறிவியலின் அடிப்படையிலானது. உடலுக்கும் மனதிற்கும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே ஒத்திசைவைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்துவது யோகா. யோகா, ஆரோக்கிய வாழ்விற்கான கலையும் அறிவியலுமாகும். யோகா காட்டும் முழுமையான அணுகுமுறை மிகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. வாழ்வின் அனைத்து நோய்கள் வராமல் தடுப்பது, ஆரோக்கிய மேம்பாடு, வாழ்க்கை முறைகளோடு தொடர்புடைய பலவிதமான நலக் கேடுகளையும் நிர்வகிப்பது ஆகியவற்றில் உதவக்கூடியதாக யோகா அமைந்திருக்கிறது. யோகா இப்போது உலகம் முழுவதிலும் பிரபலமாக இருக்கிறது. சில வகை நோய்களை நிர்வகிப்பதற்கு திறம்படப் பயன்படுகிறது என்பது மட்டுமல்லாமல், யோகாவைப் பயில்வோருக்கு மனநலம், மனக்கிளர்ச்சிகளிலிருந்து விடுபடுதல் போன்ற துயர் தீர்க்கும் வல்லமைகளையும், நல உணர்வையும் தருவதனால் யோகா உலகம் முழுவதிலும் பிரபலமானதாகத்திகழ்கிறது. ஆக, ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக யோகா உலகம் முழுவதிலும் தற்போது செயல்பட்டுவருகிறது. உணர்வு நிலையின் பழம்பெரும் பண்பாடு, விழிப்பு நிலையின் அறிவியல், சமநிலை மன உணர்வு, பணியில் சிறப்பு ஆகியவற்றைத் தருவதாக யோகா புரிந்துகொள்ளப்படுகிறது. அற்புதமான இத்தகைய பண்பாடு அப்படியே உலககெங்கும் பரவ வேண்டும். உலகெங்குமுள்ள ஒவ்வொருவரும் இதனால் பயன்பெற வேண்டும் என்பது மிக முக்கியமானது. உடலை வளர்ப்பதற்கும், மன அமைதிக்குமான வெறும் ஆசனங்களும், பிரணாயமமுமே யோகா என்று துரதிருஷ்டவசமாக தவறுதலாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. மாறாக, யோகா என்பது ஒரு முழுமையான அணுகுமுறையைக் கொண்டிருப்பது. ஒரு வாழ்க்கை முறையாக யோகாவை உள்ளீர்த்துக் கொள்ளும்போது அது வாழ்க்கையை புரட்சிகரமாக மாற்றி அமைக்கும். மனித குலத்திற்கான மதிப்புமிக்க விண்ணுலகப் பரிசாகும் இது. சாதாரண ஆளுமையை தனித்தன்மை கொண்ட சிறப்பான ஆளுமையாக மாற்றக் கூடியது யோகா.

சுய மேம்பாட்டிற்கான முயற்சிகள் அனைத்துமே யோகாவாகும். தன்னைப் பற்றிய சிறந்த அறிவையும், சுய கட்டுப்பாட்டையும் பெறுவதற்காக ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு காலத்திலும் மனிதன் தன்னை கட்டுப்பாடு ஆக்கிக் கொள்கிறான். இந்தியாவில் இது யோகா எனும் வழி முறையின் மூலமாக சாத்தியப்பட்டுள்ளது. ஒருவரின் ஆளுமையின் மீது முழுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தி, உண்மையான சுயத்தினைக் கண்டறிவதற்கு உதவக்கூடிய ஒரு முழுமையான வழிமுறை யோகாவாகும். யோகிகள் கண்டறிந்தவற்றிலும், கண்டுணர்ந்த வற்றிலும் பெரும்பகுதி இன்றும்கூட, நேரடியான பொருத்தம் உடையதாக உள்ளது. ஆழ்ந்த மன அமைதி, ஐயங்களைப் போக்கிக் கொள்வது, வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிவது என்பன போன்ற வாழ்க்கையின் மிக அடிப்படையான பிரச்னைகளில் யோகி தனது சிந்தனையை நீண்ட காலம் செலுத்துகிறார். அதற்கான தீர்வுகளைக் கண்டறிகிறார். இரக்கமும், பரிவும் கொண்ட முழுத்தெளிவுடன் கூடிய அழகிய வாழ்க்கையை வாழ்வதற்கு எவருக்குமே ஒரு சந்தர்ப்பம் இது. யோகா எனப்படும் வாழ்க்கை அறிவியலின் மூலம் ஒருவர் கற்றுக் கொள்வது இதைத்தான்.

பழங்காலத்திலும் தற்காலத்திலும் யோகா

மனித நாகரிகம் உதயமான போதே யோகா பயிற்சியும் ஆரம்பித்ததாக நம்பப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவில்லாத பண்பாடு யோகா என பரவலாக பெரிதும் கருதப்படுகிறது. மனித குலத்தின் ஆன்மீக, லோகாயத வாழ்க்கை மேம்பாட்டிற்கு உறுதுணை புரியக்கூடியதாக யோகா நிரூபணமாகியுள்ளது. பலவகைப்பட்ட யோகா தத்துவங்கள், பாரம்பரியங்கள், மரபு வழிகள், குருசிஷ்ய பரம்பரைகள் போன்றவை வெவ்வேறு வகைப்பட்ட யோகா பரம்பரைகள் போன்றவை வெவ்வேறு வகைப்பட்ட யோகா பாரம்பரியங்களைச் சேர்ந்த பள்ளிகள் உருவாவதற்கு வழி செய்தன. எடுத்துக்காட்டாக: ஜனன யோகா, பக்தியோகா, கர்ம யோகா, தியான யோகா, மந்திர யோகா, லயயோகா, ராஜ யோகா, ஜெயின் யோகா, பெளத்த யோகா போன்றவை. ஒவ்வொரு குரு சீடர் பரம்பரையும் அதற்கென தனிப்பட்ட கொள்கைகள், பயிற்சி முறைகள் ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளன. யோகாவின் மூலாதாரமான நோக்கங்களை அடைய இவை நம்மை இட்டுச் செல்கின்றன. யோகா நிலமாகிய இந்தியாவில் நிலவும் வெவ்வேறு வகையான சமூகப் பழக்க வழக்கங்களும், சம்பிரதாயங்களும் அன்பையும், சமநிலையையும், பிற படைப்புகள் அனைத்தின் மீதான கருணை மிகுந்த பார்வையையும் பிரதி பலிக்கின்றன. பல்வேறு நிறங்களும், அழகுமிகு வண்ணங்களும் கொண்டிருக்கும் யோகா சாதனா அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கைக்கான சஞ்சீவியாகக் கருதப்படுகிறது.

தனிநபர் அளவிலும், சமூகத்தின் அளவிலும் விசாலமான பரந்த நலம் பேணும் யோகாவின் போக்கு அனைத்து மதங்கள், இனங்கள், தேசங்களைச் சேர்ந்த மக்களும் பின்பற்றுவதற்கு ஏற்றதாக இருக்கிறது. தற்காலத்தில் யோகா பயிற்சியின் மூலம் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இத்தகைய பயிற்சிகள் யாவுமே பழங்காலம் முதல் இன்று வரையிலான திறமைமிக்க யோகா பயிற்றுநர்களால் வளர்த்துப் பாதுகாக்கப்பட்டவை. உலகெங்கிலும் யோகா ஒரு வாழ்க்கைமுறை அங்கமாகவே ஆகி இருக்கிறது. அதிகமாக பயிலப்படும் யோகா சாதனாக்கள். யாமா, நியமா, ஆசனா, பிரணா யாமா, பிரத்ய ஹரா, தரணா, தியானா, சமாதி / சம்யாமா, பன்தா, முத்ரா, ஷத் கர்மா, யுக்த- கர்மா, யுக்த-அஹரா, மந்திர ஜெபா போன்றவை.

நவீன வாழ்க்கை முறையில் யோகாவின் பயன்கள்

நவீன வாழ்க்கை முறை உடல் நலத்திற்கு பெருத்த சவால்களை கொண்டு வந்துள்ளது. உலகெங்கும் வாழக்கூடிய மக்களின் பலவித நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. மன அழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கங்கள், சுறுசுறுப்பில்லாத வாழ்க்கை போன்றவை உடல் நலத்திலும், செயல்பாட்டிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தி நீரிழிவு, ஆஸ்த்மா, இதய நோய்கள், வளர்சிதை மாற்றக்குறைபாடுகள், புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகின்றன. இத்தகைய நவீன கால உடல்நலக் குறைபாடுகளில் பெரும்பாலானவை தவறான வாழ்க்கை முறைகளினால் ஏற்படுபவை. இத்தகைய குறைபாடுகளை எதிர்த்துப் போரிடுவதற்கு யோகா பயன்படுகிறது. அறிவியலும், ஆன்மீகமும் எப்போதுமே தனித்தனியாக பார்க்கப்பட வேண்டியவை அல்ல என்று யோகா காட்டுகிறது. வாழ்க்கை முறையினால் ஏற்படக்கூடிய பிரச்னைகளையும் உடலும் மனமும் சார்ந்து வரக்கூடிய நோய்களையும் தீர்ப்பதற்கு திறனுடையதாக யோகா இருக்கிறது.

நோய்களைத் தவிர்ப்பதிலும், மன அழுத்தம், உடல் மனம் சார்ந்த நோய்கள் ஆகியவற்றை சமாளிப்பதிலும், உடல்நலத்தை மேம்படுத்துவதிலும் யோகா பயன்படுகிறதா? என்பது பற்றி உலகம் முழுவதிலும் ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடற்செயலில் உயிர் வேதியியல், உளவியல் ஆகியவற்றில் மாறுபட்டு தென்படக்கூடிய மதிப்புகளை ஆய்வுகள் மூலம் கண்டறிந்தும் அளந்து அறிந்தும் உடல்நலத்தில் யோகா ஏற்படுத்தும் விளைவுகள் கணக்கிடப்பட்டன. யோகா பயிற்சி பெறுபவர்களின் இச்சை செயல் நரம்பு மண்டலம், நாளமில்லா சுரப்பி மண்டலம் ஆகியவற்றில் உடலணுக்களின் அளவில் யோகா நுணுக்கமாக செயல்பட்டு செல்வாக்கு செலுத்துவதாக அறியப்பட்டுள்ளது. இச்சை செயல் சமநிலைக்கும், அனிச்சை செயல் மண்டலத்தை வலுப்படுத்தி பல்வேறு உடற் செயலியல் மண்டலங்களில் பழுதுகளை நீக்கி வயதாகும் தன்மையை தாமதப்படுத்துவதற்கும் யோகப் பயிற்சிகள் உதவுகின்றன.

உடலின் வளர்சிதை மாற்றத்தை சீர்படுத்தி, மன அழுத்தம் ஏற்படுத்தும் எதிர்வினைத் தாக்குதலின் வேகத்தை குறைக்கும் வேலையையும் யோகா செய்கிறது. உடலியல், அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்தி, உடல் வெப்ப சீர்மையை ஒழுங்குபடுத்தி, உடலைத் தளர்ச்சியாக்கி, அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ளும் வலுவை யோகப்பயிற்சி தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கிறது. ரத்த அழுத்தம், இதய ரத்தக்குழாய் நோய், நீரிழிவு போன்றவற்றிற்கு காலம்காலமாக செய்யப்பட்டு வரும் மருத்துவ மேலாண்மைச் செயல்களுக்கு துணைபுரியக்கூடிய யோகா இருக்கிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம் உடைய நோயாளிகளுக்கு மருந்துகளின் தேவையை மட்டுப்படுத்துவதற்கு யோகா உதவுகிறது. இதய ரத்தக்குழாய் பிரச்னைகளைத் தவிர்க்கவும், சமாளிக்கவும் உதவுகிறது.

யோகாவினால் ஏற்படக்கூடிய பயன்களை மூன்று நிலைகளில் சிந்திக்கலாம். உடல் அள வில் நல்ல ஆரோக்கியத்தை இது தருகிறது. மனதளவில் சிந்தனையை ஒன்று குவிக்கிறது. மன அழுத்தத்தை நீக்கி செயல்திறனை அதிகரிக்கிறது. ஆன்ம நிலை சார்ந்து செயல் பட்டு மனித மதிப்பீடுகளை மேம்படுத்தி வாழ்க்கையில் அமைதியையும், ஆறுதலையும் கொண்டுவந்து சேர்க்கிறது.

யோகாவினால் ஏற்படக்கூடிய பொதுவான உடல், உடற்செயலியல் பயன்கள் சில கீழே தரப்பட்டுள்ளன:

யோகா

இசைவு இணக்கம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.

தசைகளின் நலத்தையும் வலிமையையும் பேணுகிறது.

சுவாசத்தை சீராக்கி உயிர்வீரியத்தை மிகுவிக்கிறது.

வளர்ச்சிதை மாற்ற சமநிலையைப் பேணி வளர்க்கிறது.

உடல் எடையைக் குறைக்கிறது.

இதயம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை சீர் படுத்துகிறது.

உடற்பயிற்சி வல்லமையைக் கூட்டுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை மிகுவிக்கிறது.

இதய ரத்த நாளங்களின் திண்மையைப் பாதுகாக்கிறது.

பொதுவான சில உடற்செயலியல், ஆன்மீக ஆதாயங்கள்

உணர்ச்சிகளிலிருந்து விடுபட்ட ஒய்வை அளிக்கிறது.

தற்போதைய தருணத்தைப் போற்றும் தன்மையை வழங்குகிறது.

மனக்கட்டுப்பாட்டை அதிகமாக்கி சிந்தனை சிந்தையில் தெளிவை ஏற்படுத்துகிறது.

கவனம் சிதறாமல் ஒருமுகப்படுத்துகிறது.

சுய ஒழுங்கினை அதிகரிக்கிறது.

கற்பனையையும் படைப்பாற்றலையும் விரிவாக்குகிறது (குறிப்பாக குழந்தை களிடம்)

மனநிறைவை உண்டாக்கி மனநிலையை மேம்படுத்துகிறது. " தன்னை அறியச் செய்கிறது. " தன்னம்பிக்கையை ஊட்டுகிறது.

மனவலிமையையும் செயலுறுதியையும் ஏற்படுத்துகிறது.

பதற்றம், மனச்சோர்பு அறிகுறிகளைக் குறைக்கிறது.

அன்றாட வாழ்வில் நேர்மறை சிந்தனைகள் வெளிப்படும் ஆற்றலை அளிக்கிறது.

வாழ்க்கையின் நோக்கம், அர்த்தம் பற்றி புரிய வைக்கிறது.

அகமனதோடு அதிகம் ஒத்துப்போகும் நிலையை உருவாக்குகிறது.

மற்றவர்களோடும் உலகத்தோடும் தொடர்புகொண்டிருக்கத் தூண்டுகிறது.

இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, ஆளுமை வளர்ச்சி ஆகியவற்றில் இவர்கள் தீவிரமான அக்கறை கொண்டுள்ளனர். மன அழுத்தமில்லாத வாழ்க்கைக்கும், சிறப்பான செயல்பாடுகளுக்குமென யோகாவை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.

யோகாவின் வலிமைக்கும், ஆற்றலுக்கும் போதுமான முக்கியத்துவம் தரப்பட்டாக வேண்டும். இதற்கு கொள்கை ரீதியான முன்முயற்சிகளும், உபாயங்களுடன் கூடிய இடையீடும் தேவைப்படுகின்றன. யோகாவை ஒழுங்குபடுத்தவும், வளர்த்தெடுக்கவும் முறையான நிர்வாக அமைப்பு தேவைப்படுகிறது. அரசாங்கத்தின் ஆதரவும் இதற்கு தேவையாகிறது. அமைதியை விரும்பக்கூடிய தனிநபர்களால்தான் அமைதியான குடும்பத்தை உருவாக்க முடியும். தனி நபர்களிடத்திலும், குடும்பத்திலும், சமுதாயத்திலும், தேசத்திலும் இத்தகைய ஒத்திசைவை உருவாக்குவதற்கு யோகாதான் வழி. உலகம் முழுவதிலும் அமைதியையும் ஒத்திசைவையும் உருவாக்குவதற்கு யோகாதான் உதவும்

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

டாக்டர் ஜஷ்வர் வி.பசவரட்டி, இயக்குநர், மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையம், ஆயுஷ் அமைச்சகம், புதுதில்லி.