பரிந்துரைக்கப்பட்ட பொதுவான நடவடிக்கைகள் உடலின் நீர்சத்தை பராமரிக்கவும் : உங்கள் உடலின் நநீர்ச்சத்து தேவையான அளவு காணப்பட, நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும். திரவ அளவைப் பராமரிக்கவும், குளிர்ச்சியாகவும் இருக்க மோர், இளநீர் மற்றும் பழச்சாறுகளையும் நீங்கள் சேர்க்கலாம். உடல் வெப்பத்தைக் குறைக்கும் பானங்களை அருந்தவும் : இளநீர், எலுமிச்சை ஜூஸ் அல்லது பழச்சாறு போன்ற இயற்கையானஉடல் வெப்பத்தைக் குறைக்கும் பானங்களை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உடல் வெப்பநிலையைக் குறைத்து உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றன. நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்கவும் : வெளியே செல்லும்போது, சூரிய சூரிய ஒளியின் தாக்கத்தைக் குறைக்க, ஒரு குடையைப் பயன்படுத்துங்கள். அல்லது அகலமான விளிம்பு கொண்ட தொப்பியை அணியுங்கள். இது வெப்பத் தாக்கம் மற்றும் வெயிலின் சுட்டெரிப்புக்கு தப்பிக்க உதவும். லேசான உணவுகளை உண்ணுங்கள் : வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன், லேசான, எளிதில் ஜீரணமாகும் உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும். கனமான அல்லது எண்ணெய் நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை உடல் வெப்பத்தை அதிகரிக்கும். பொருத்தமான ஆடைகளை அணியுங்கள் : பருத்தி போன்ற துணிகளால் செய்யப்பட்ட முழுக் கை, தளர்வான ஆடைகளை அணியுங்கள். இது நேரடி சூரிய ஒளியில் இருந்து சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. உடல் வெப்பத்தைக் குறைக்கும் பொருட்களைப் பயன்படுத்துங்கள்: வெட்டிவேர், நன்னாரி வேர், சீரகம் மற்றும் கொத்தமல்லி விதைகள் போன்ற குளிரூட்டும் பொருட்களை உங்கள் குடிநீரூடன் அருந்துங்கள். இது உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும். சத்து சார்ந்த சிற்றுண்டிகளை உண்ணவும் : குளிர்ச்சி மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சத்து மாவுடன் (பார்லி அல்லது கொண்டக்கடலை பயன்படுத்தி செய்யப்பட்டவை) வெல்லம் அல்லது கல் உப்பு கலந்து சாப்பிடுங்கள். குளிர்ச்சியூட்டும் சிற்றுண்டிகளை உண்ணுங்கள்: ஃபால்சா பழம், காய்ந்த திராட்சை, அரிசி பொரி மற்றும் பரங்கிக்காய் கொண்டு செய்யப்படும் இனிப்பு வகைகள் போன்ற உணவுகளை அவற்றின் குளிர்ச்சியூட்டும் பண்புகளுக்காக உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிர்விக்கும் பசைகளைப் பயன்படுத்துங்கள்: வெப்பமான காலநிலையில் உங்கள் சருமத்தை குளிர்விக்க சந்தனம் மற்றும் வெட்டிவேர் போன்ற நறுமண மருத்துவ தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பசைகளைப் பயன்படுத்துங்கள். நீர்ச்சத்து தரும் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்கவும்: திராட்சை, வெள்ளரி, தர்பூசணி, வாட்டர் செஸ்நட், முலாம்பழம், மாம்பழம் மற்றும் கரும்புச் சாறு போன்ற அதிக நீர்ச்சத்து கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள். வெயிலைத் தணிக்க வில்வப் பழம் சர்பத் ஒரு சிறந்த தேர்வாகும். சர்க்கரையுடன் பால் குடிக்கவும்: உடலின் நீர்சத்தை பராமரிக்கவும், சுறுசுப்புடன் காணப்பட ஒரு எளிய வழி, சர்க்கரை சேர்க்கப்பட்ட பாலை குடிப்பதாகும். மதிய வேளையில் ஒரு தூக்கம் போடுங்கள்: நாளின் வெப்பமான நேரத்தில் ஓய்வெடுப்பது வெப்பம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், உங்கள் ஆற்றல் மட்டங்களை உயர்த்தவும் உதவும். வெப்பமான காலநிலையில் ஒரு சிறிய தூக்கம் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் நன்மை பயக்கும். வெப்ப அலையை எதிர்த்துப் போராடுவதற்கான ஆயுர்வேத நடைமுறைகள் எலுமிச்சை சுவை கொண்ட புத்துணர்ச்சி (எலுமிச்சை பானகம்): தேவையான பொருட்கள்: எலுமிச்சை சாறு: 1 பகுதி தண்ணீரில் கரைத்த சர்க்கரை: 6 பாகங்கள் கிராம்பு & மிளகு : தேவைக்கேற்ப தயாரிக்கும் முறை: ஒரு பங்கு எலுமிச்சை சாறுடன் 6 பங்கு தண்ணீரில் கரைத்த சர்க்கரை சேர்த்து, கிராம்பு பொடி மற்றும் மிளகு சேர்த்து நன்கு கலக்கவும். தேவைக்கேற்ப 50-100 மில்லி என்ற அளவில் பருகலாம். பச்சை மாம்பழ ரெஃப்ரெஷ்மெண்ட் (அம்ரா பிரபனகா) தேவையான பொருட்கள் : மாங்காய் கூழ் : 1 பகுதி தண்ணீரில் கரைத்த சர்க்கரை: 6 பாகங்கள் மிளகு: தேவைக்கேற்ப தயாரிக்கும் முறை மாங்காய் கூழில் ஒரு பகுதியை எடுத்து, கைகளால் மசித்து, 6 பகுதி தண்ணீரில் கரைத்த சர்க்கரை சேர்த்து, ஒரு சிட்டிகை மிளகு பொடியுடன் நன்கு கலக்கவும். தேவைக்கேற்ப, இதனை 50-100 மில்லி அளவில் பருகலாம். புளி சார்ந்த பானம் (சிஞ்சா பனகா) தேவையான பொருட்கள் : புளியம்பழம் கூழ்: 1 பகுதி தண்ணீர்: 6 பாகங்கள் கல்கண்டு : தேவைக்கேற்ப தேன்: தேவைக்கேற்ப தயாரிக்கும் முறை: 1 பங்கு புளியம்பழம் கூழ், 6 பங்கு தண்ணீரில் ஊறவைத்து சாற்றைப் பிழியவும். தேவைக்கேற்ப கல்கண்டு மற்றும் தேன் சேர்க்கவும். இதனை 25-50 மில்லி அளவில் தேவைக்கேற்ப பருகலாம். வெப்ப அலையை எதிர்த்துப் போராடுவதற்கான சித்த பயிற்சிகள் நன்னாரி சுவையுடன் கூடிய புத்துணர்ச்சி (நன்னாரி பானகம்): தேவையான பொருட்கள் : நன்னாரி சிரப்: 3 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு: 5 மிலி ஊறவைத்த துளசி விதைகள் (சப்ஜா விதைகள்): 1 தேநீர் கரண்டி தண்ணீர்: 1 கப் தயாரிக்கும் முறை: அனைத்துப் பொருட்களையும் நன்கு கலந்து பரிமாறவும். நெல்லிக்காய் மோர்(நெல்லி மோர்) தேவையான பொருட்கள்: மோர்: 300 மிலி விதை நீக்கிய இந்திய நெல்லிக்காய் (நெல்லிகாய்): 1 பகுதி கறிவேப்பிலை : 4 இஞ்சி : ½ அங்குல துண்டு கல் உப்பு : தேவைக்கேற்ப தயாரிக்கும் முறை: விதை நீக்கிய இந்திய நெல்லிக்காய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சியை மென்மையாக அரைத்து, மோருடன் தேவையான கல் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வெப்ப அலையை எதிர்த்துப் போராடுவதற்கான யோகா பயிற்சிகள் குளிர்ச்சியாக இருக்க சுவாச நுட்பங்கள் சீத்தலி போன்ற பிராணயாம நுட்பங்கள் கட்டுப்படுத்தப்பட்ட சுவாசத்தின் மூலம் உடலை குளிர்விக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. கடுமையான வெப்ப அலைகளின் போது வெப்ப அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் வகையில் இந்த நடைமுறைகளை தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் கற்பிக்கலாம். வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதற்கான யோகா ஆசனங்கள் மென்மையான நீட்சி மற்றும் தளர்வு (சூக்ஷம வ்யாயம்) போன்ற சில யோகா ஆசனங்கள், குறைந்த உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவும். அமைதியான மற்றும் குளிர்ந்த சூழலில் யோகா பயிற்சி செய்வது இந்த விளைவுகளை மேம்படுத்துகிறது. வெப்ப அலையை எதிர்த்துப் போராட யுனானி பயிற்சிகள் மாங்காய் (ஜுலால்-இ அம்பா காம்) இனிப்புச் சர்க்கரையுடன் சேர்த்து, வடிகட்டிய தண்ணீரைக் குடிக்கவும். வறுத்த மாம்பழக் கூழ், தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் புத்துணர்ச்சியூட்டும் பானமான பன்னாவை உட்கொள்ளுங்கள். சாலிக்ஸ் ஆல்பா இலைகள் (பார்க்-ஐ பெட் சாடா), ஐபோமியா ஆல்பா பூக்கள் (குல்-ஐ சாண்ட்னி), தாமரை பூக்கள் (குல்-ஐ நிலோஃபர்), கோதுமை உமி (சபூஸ்-ஐ கண்டம்) மற்றும் பொட்டாசியம் நைட்ரேட் (ஷோரா கல்மி) ஆகியவற்றைக் கொண்டு கால்களை ஊறவைக்கும் நீரை தயாரிக்கவும். வெயில் காலங்களில் சருமத்தை வெயிலிலிருந்து பாதுகாக்க, சைலியம் பசை, சீமைமாதுளம்பழ விதைகள், கம் அகாசியா, ட்ராககாந்த், முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் பர்ஸ்லேன் விதைகள் போன்ற பொருட்களைக் கொண்ட பேஸ்ட்டை முகத்தில் தடவவும். வெப்ப அலையை எதிர்த்துப் போராடுவதற்கான ஹோமியோபதி நடைமுறைகள் வெப்ப அலை தொடர்பான நோய்களுக்கு எதிரான தடுப்பு மருந்தாக குளோனோயின் 30C இன் ஒரு டோஸ் (6 மாத்திரைகள்) எடுத்துக்கொள்ளலாம். வெயிலில் செல்வதற்கு முன், குறிப்பாக உச்ச வெப்ப நேரங்களில், அதாவது மதியம் 12.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாம். வெப்ப அலையை எதிர்த்துப் போராடும் பாரம்பரிய உணவுப் பொருட்கள் இளநீர்:இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது அதிக நீரேற்றம் மற்றும் புத்துணர்ச்சியூட்டுகிறது. இது பெரும்பாலும் நீர்சத்து அத்கரிக்கவும் உடலை குளிர்விக்கவும் பயன்படுகிறது. வெள்ளரிக்காய்: அதிக நீர் உள்ளடக்கத்துடன், வெள்ளரிக்காய் நீர்சத்திற்கு ஒரு சிறந்த தேர்வாகும். இதை பச்சையாகவோ, சாலடுகளில் சேர்க்கவோ அல்லது சாறு எடுக்கவோ முடியும். தர்பூசணி: தர்பூசணி அதிக நீர்ச்சத்து கொண்ட ஒரு இனிப்பு மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பழமாகும், இது கோடைகால சிற்றுண்டிக்கு ஏற்றது. இதில் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளும் உள்ளன. எலுமிச்சை: எலுமிச்சை உடலுக்கு குளிர்ச்சியூட்டும். மேலும் தண்ணீரில் ஒரு சுவைக்காகச் சேர்க்கலாம். அல்லது உணவுகள் மற்றும் பானங்களின் சுவையை அதிகரிக்கப் பயன்படுத்தலாம். முலாம்பழம் : இந்தப் பழம் அதன் அதிக நீர்ச்சத்து மற்றும் இனிப்புச் சுவைக்காகப் பெயர் பெற்றது. இதைத் தனியாகச் சாப்பிடலாம் அல்லது பழ சாலட்களில் சேர்க்கலாம். சாம்பல் பூசணி : சாம்பல் பூசணி என்பது சித்த உணவு வகைகளில், குறிப்பாக சூப்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு குளிர்ச்சியான காய்கறியாகும். இதில் அதிக நீர் உள்ளது. தக்காளி: தக்காளி பல்துறை திறன் கொண்டது மற்றும் நீர் சத்து தரக்கூடியது. சாலட்களில் பச்சையாக சாப்பிட்டாலும் சரி அல்லது சமைத்த உணவுகளில் பயன்படுத்தினாலும் சரி, அவை வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளிலும் நிறைந்துள்ளன. இளநீர் வழுக்கை : இளநீர் தண்ணீரைத் தவிர, இளநீர் வழுக்கையும் ஒரு சத்தான சிற்றுண்டியாகும். இதை ஸ்மூத்திகள், இனிப்பு வகைகளில் சேர்க்கலாம் அல்லது தனியாகவும் சாப்பிடலாம். செய்யக்கூடாதவை பகலில் அதிக வெப்பமான நேரங்களில், பொதுவாக மதியம் 12:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை, சூரியன் அதிகமாக இருக்கும் போது வெளியே செல்வதைத் தவிர்க்கவும். நீங்கள் மதியம் வெளியே இருக்க வேண்டியிருந்தால், அதிக வெப்பம் மற்றும் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க கடுமையான செயல்களைத் தவிர்க்கவும். சூடான பரப்புகளில் உங்கள் கால்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம். நாளின் வெப்பமான நேரங்களில் சமைப்பதைத் தவிர்க்கவும். நீங்கள் சமைக்க வேண்டியிருந்தால், கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து சரியான காற்றோட்டத்தை உறுதி செய்யுங்கள். அதிக சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட மது, தேநீர், காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களைக் குறைக்கவும் அல்லது தவிர்க்கவும். இவை திரவ இழப்பை அதிகரிக்கலாம் அல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தலாம். நிறுத்தப்பட்ட வாகனத்தில் குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகளை சிறிது நேரம் கூட விட்டுவிடாதீர்கள். உள்ளே வெப்பநிலை ஆபத்தான அளவிற்கு விரைவாக உயரும். மூலம்: சுகாதார சேவை இயக்குநர் ஜெனரலின் தீவிர வெப்பம்/வெப்ப அலை பொது சுகாதார ஆலோசனை