கால்சியம்

கால்சியம் என்ற தனிமம் அனைத்து உயிரிகளின், உடல் செயல்பாட்டுக்கும் கட்டாயம் தேவையாகும். கால்சியம் என்றால் என்ன தெரியுமா? அதுதான் சுண்ணாம்பு. லத்தீனில் கால்சிஸ் என்ற வார்த்தைக்கு சுண்ணாம்பு என்பதுதான் பொருள். பூமியின் மேலோட்டில் கிடைக்கும் சாம்பல் நிற தனிமம் தான் கால்சியம் ஆகும். பூமியில் கிடைக்கும் தனிமங்களில் 5வது இடத்தைப் பெற்றுள்ளது. நம் உடலில் அதிகமாக இருக்கும் தனிமங்களில் கால்சியமும் ஒன்று. மனித உடலின் 70 கிலோ மனிதனின் எடையில், 2% கால்சியம் உள்ளது. அதாவது 1,400 கிராம் கால்சியம் ஆண்களுக்கும், பெண்களுக்கு 1 கிலோவும் இருக்கிறது.

கால்சியத்தின் சலிப்பற்ற பணி

கால்சியம் நம் உடலில் என்னென்ன பணிகள் செய்கிறது தெரியுமா? அலுப்பில்லா, அயரா உழைப்பாளி கால்சியம்! உயிர்காக்கும் நண்பனும் கூட. நம் உடலின் தசைகள் சுருங்கி விரியவும், இதயத்தின் இனிமையான தாள லய துடிப்பிற்கும் கால்சியத்தின் உதவிதேவை. அது மட்டுமல்ல காலில் முள்குத்திய / நெருப்பு சுட்டுவிட்டதா ஆ… வலிக்கிறதே! என வலிஉணர அந்த செய்தியை நரம்புகள் மூலம் மூளைக்கு கொண்டு செல்லவும், ஏதாவது வெட்டுக்காயம் ஏற்பட்டால் அதன் வழியே இரத்தம் வெளியேறுவதை தடுத்து, இரத்தம் உறைய வைக்கவும் கால்சியம் கட்டாயம் தேவை. செல்களுக்கு இடையே, வேதி சமிக்ஞைகள் சரிவர செல்ல கால்சியம் வேண்டும். அதுமட்டுமல்லாமல் நாம் உண்ணும் உணவினை ரசிக்க, ருசிக்க மற்றும் கரைவதற்கு தேவையான எச்சிலை சுரக்க உதவிசெய்கிறது.

பொதுவாக 30 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் எலும்பிலுள்ள கால்சியம் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். ஏனெனில் நம்முடைய எலும்பு வளர்ச்சி அத்துடன் நின்றுவிடும். ஆகையால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தொடர்ந்து உடலுக்கு வேண்டிய கால்சியத்தை தந்து கொண்டே இருக்க வேண்டும். பொதுவாக நாம் உண்ணும் உணவில் கால்சியம் சத்து குறைவாகவே உள்ளது. இது தொடர்ந்து நிகழ்ந்தால் எலும்பிலுள்ள கால்சியம் குறைவதால், அரிமானம் ஏற்பட்டு எலும்பின் உறுதி குறையும். இந்நிலை குழந்தை பருவத்தில் ஏற்பட்டால் எலும்பு வலுவின்றி வளைந்து ரிக்கெட்ஸ் என்ற நோய் வரும். நமக்கு தினமும் சுமார் 400 முதல் 500 மில்லி கிராம் வரையிலான கால்சியம் வியர்வை, சிறுநீர் மற்றும் மலத்தின் வழியே வெளியேறுவதால் உடலின் கால்சியம் அளவு தினந்தோறும் குறைகிறது.

கால்சியத்தின் பணிகள்

கால்சியம் பெருங்குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது

எடை சீராக இருக்க உதவுகிறது

பெண்களுக்கு முதுகுவலி வராமல் பாதுகாக்கிறது

கால்சியம் குறைந்தால்….!

உடல்எடை அதிகரிக்கும்

இரத்தக்குழாய்களின் கழுத்தை நெருக்கி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.

பல் ஆடும்

பற்களுக்கிடையே இடைவெளி ஏற்படும்

பாக்டீரியா பற்களை தாக்கி பற்சிதைவு, வீக்கம் மற்றும் இரத்தம் வடிதல் போன்றவையும் ஏற்படுகிறது.

பெண்களின் பிரச்சனை, கால காப்பாளன்

கால்சியம் பெண்களுக்கு மாதவிடாய்க்கு முந்தைய நாட்களின் மனநிலையை ஒழுங்குபடுத்துகிறது. இல்லையெனில் பெண்களுக்கு தசைப்பிடிப்பு, எரிச்சல், மன அழுத்தம் போன்றவை ஏற்படும். மாதவிடாய் சமயத்தில் தினம் 1 கிராம் கால்சியம் எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு, மாதவிடாயின் தொந்தரவு இருக்காது. அப்போது ஏற்படும் தலைவலி, மனம்சரி இல்லாமை(Moodout), வயிறு உப்பிசம், கை கால் வலி மற்றும் போன்றவற்றை கால்சியம் நீக்குகிறது. மேலும் அப்போது உண்டாகும் வயிற்றுவலியையும் கால்சியம் துரத்தி விடும். மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை கால்சியம் நீக்கிவிடுகிறது என பல்வேறு ஆய்வுகள் விளக்குகின்றன. மேலும் பெண்களின் உடம்பில் சுரக்கும் ஈஸ்டிரோ ஜென் என்ற ஹார்மோன் கால்சியம் உட்கிரகிப்புக்கு மிகவும் உதவுகிறது.

ஆதாரம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், புதுக்கோட்டை