தொடர் மழையின் போது நீர் மாசுபடுவதால், பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால், நோய்கள் பரவாமல் தடுக்க ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தொடர் மழையால், நீர் ஆதாரங்கள் அனைத்தும் மாசுபடும். எனவே பருவமழையின் தாக்கம் சிறிது குறைந்ததும், நீர் மாசுபாடு தொடர்பான பல்வேறு நோய்கள் பரவக் கூடும்.

நோய்கள்

கொசுக்களால் காய்ச்சல், டெங்கு, சிக்குன் குன்யா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. நீர் மாசுபடுவதால் டைபாய்டு, மலேரியா, வயிற்றுப்போக்கு, வாந்திபேதி, காலரா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

குடிக்கப் பயன்படுத்தும் நீரை கொதிக்க வைத்து மட்டுமே பருக வேண்டும். மழைநீர் ஆங்காங்கே தேங்கியிருந்தால், அதில் நடமாடும்போது உடலில் பாக்டீரியாக்கள் நுழையும் அபாயம் உள்ளது. எனவே வெளியே சென்று வந்த உடனே கை, கால்களை சுத்தமாகக் கழுவ வேண்டும்.

தெருவோர உணவு, திறந்தவெளியில் சமைக்கப்படும் உணவு, ஹோட்டல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மழைக் காலங்களில் புதியதாகத் தயாரிக்கப்பட்ட, சூடான உணவை உண்ண வேண்டும். பதப்படுத்தப்பட்ட, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகளைத் தவிரிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு

நீர் மாசுபடுவதால் ஏற்படும் பிரச்னைகளுக்குக் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவர்.

குழந்தைகளுக்கு சளி, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரக்கூடும். எனவே குழந்தைகளை மழை நேரத்தில் தண்ணீரில் விளையாட அனுமதிக்கக் கூடாது.

காய்ச்சிய குடிநீரை குடிக்கப் பழக்க வேண்டும். இரவு நேரங்களில் கம்பளி ஆடை போன்ற கதகதப்பான ஆடைகளை அணிவிக்க வேண்டும். குழந்தைகள் வெளியிலோ, கழிவறைக்கோ சென்று வந்தததும் கை, கால்களை சுத்தப்படுத்த வேண்டும். துரித உணவுகள் உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ஆதாரம்: தினமணி