"ஏலக்காயை பாயசம் மற்றும் பிரியாணிக்கு எதற்காக சேர்க்கிறீர்கள்?" எனக் கேட்டால், பெரும்பாலோனோர் வாசனைக்காக என்றுதான் சொல்வார்கள். ஆனால் அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது.

ஏலக்காயின் பிறப்பிடம் இந்தியாதான். இயற்கை எழில் கொஞ்சும் காடு சார்ந்த பகுதிகளில் விளைகிறது. இது இஞ்சி வகையை சார்ந்தது. வாசனைப் பொருட்களின் ராணியாக திகழ்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் ஏலக்காய்க்கு உண்டு.

ஜீரண உறுப்புகளின் கோளாறுகளை போக்குவதற்கு, வாய்ப் புண், வாய் அல்சர், மன அழுத்தம் என பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

சிறுநீரக மண்டலம்

ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், நச்சுக்களை சிறுநீரகம் மூலமாக வெளியேற்றிவிடும். மேலும், உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு, நீர், மற்றும் கிருமிகளை வெளியேற்றும். சிறு நீரகப்பை, சிறுநீரகம், சிறுநீரகக் குழாய் ஆகியவற்றை சுத்தமாக்கும்.

மூக்கடைப்பு

ஜலதோஷத்தால், மூக்கடைப்பு ஏற்பட்டால் குழந்தைகள் அவதிப்படுவார்கள். அப்போது, நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தால் உடனடியாக மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

மன அழுத்தம்

ஏலக்காய் கலந்த தேநீர் குடிப்பதால் மன அழுத்தத்திலிருந்து எளிதில் விடுபடலாம் என்று மருத்துவத்துறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

புற்று நோய்

ஏலக்காயை தொடர்ந்து உட்கொள்ளும்போது புற்று நோய் செல்கள் உடலில் உருவாவது தடுக்கப்படுகிறது.

இரத்த உறைதல்

இதயத்தில் ரத்தம் உறையும் அபாயத்தை ஏலக்காய் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.

அஜீரணம், வாய்வு

ஜீரண பிரச்சனைகளுக்கு, வாய்வு, ஏப்பம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் என சகல உணவுக் குடல் மற்றும் ஜீரண மண்டல கோளாறுகளுக்கு ஏலக்காய் பலன் தரும்.

தலைசுற்றல்

வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு சில ஏலக்காய்களை தட்டி, அரை டம்ளர் நீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சவும். அதில் சிறிது பனை வெல்லம் போட்டு வெதுவெதுப்பாக குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும்.

வாய்வுத் தொல்லை

ஏலக்காய் இயற்கையான ஆன்டாசிட் ஆக செயல்படுகிறது. 3 ஏலக்காயை பொடி செய்து வெதுவெதுப்பான நீரில் கலந்து, உணவு உண்பதற்கு முன் குடித்தால், வாய்வுத் தொல்லை ஏற்படாது.

விக்கல் நிற்க

விக்கல் நிற்காமல் தொடர்ந்துகொண்டிருந்தால், 2 ஏலக்காயை பொடி செய்து அதனுடன் புதினா இலைகளை சிறிது எடுத்து, நீரில் போட்டு, காய்ச்சி குடித்தால், விக்கல் நின்று விடும்.

ஏலக்காயின் பலன்கள் இன்னும் ஏராளம். சில தான் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் பாலில் கலந்தோ, அல்லது தேநீரிலோ, உணவிலோ சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படட்டும்.

ஆதாரம்: ஒன்இந்திய நாளிதழ்