ஆயுர்வேத அடிப்படையிலான மகப்பேறு நலவாழ்வு ஆதரவு பயிற்சி ஆயுஷ் அமைச்சகத்தின் (Ministry of Ayush) கீழ் செயல்படும் தன்னாட்சிப் பெற்ற முதன்மை நிறுவனமான அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் [All India Institute of Ayurveda (AIIA), New Delhi] 2026 – 27–ம் கல்வியாண்டிற்கான கர்ப்பிணி உதவியாளருக்கான கர்ப்பிணி மித்ரா (Garbhini Mitra) என்னும் பயிற்சி வகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கர்ப்பக் காலம், பிரசவத்திற்கு பிந்தைய காலங்களில் பெண்களுக்கு உரிய சுகாதாரக் கல்வி, வாழ்க்கை முறை வழிகாட்டல், சமூக நிலையிலான ஆதரவை அளிக்கக்கூடிய பயிற்சிபெற்ற பணியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு, கருவுறுதலுக்கு முந்தைய பராமரிப்பு ஆகிய பாரம்பரிய ஆயுர்வேதக் கோட்பாடுகளைக் கொண்டதாகும். திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணிவரை 6 மாத கால நேரடி வாயிலான பயிற்சித் திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பருவத்திற்கேற்ற உணவு முறைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள், கர்ப்பக் காலத்தில் பாதுகாப்பான யோகா முறைகள், பிரசவத்தின்போது உணர்வுப்பூர்வமான ஆதரவு, பச்சிளம் குழந்தைகளை கையாளுதல், உயிர்காக்கும் நடைமுறை குறித்து கற்பிக்கப்படுகிறது. அத்துடன் தொற்றுத் தடுப்பு, சுகாதாரப் பராமரிப்பு, உயிரி மருத்துக்கழிவு மேலாண்மை, பணியிடப் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. புதுதில்லியின் சரிதா விஹாரில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் இப்பயிற்சியின் ஒரு பிரிவுக்கு 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302658®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்