நலம்AI செயலி பொதுமக்கள், சுகாதார தகவல்கள் மற்றும் சேவைகளை எளிதில் பெறுவதற்காகவும், டிஜிட்டல் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் "நலம்AI" எனும் உரையாடலுடன் கூடிய வாட்ஸ்ஆப் செயலி (Whatsapp Chatbot) 08.07.2026 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. பொதுமக்கள் 96192 22999 என்ற எண்ணை தங்களது Whatsapp தொடர்பு பட்டியலில் பதிவு செய்து Hi என்று செய்தி அனுப்புவதன் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இச்சேவையை அணுகி பயன்பெறலாம். இந்த உரையாடல் சேவை மூலம் பொதுமக்கள் தாங்களே பதிவு செய்து கொள்ளுதல், மருத்துவரின் பரிந்துரை சீட்டுகளை பார்வையிடுதல், ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகளை தெரிந்து கொள்ளுதல் மற்றும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை எளிதாக பெறலாம். இச்சேவைகள் படிப்படியாக முதற்கட்டமாக 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு பின்னர் மீதமுள்ள 16 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். முதற்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத் துறையில் "நலம்AI" மூலமாக வெளிநோயாளர் முன்பதிவு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை ஒதுக்கியுள்ள நேர ஒதுக்கீடுகளின் அடிப்படையில் பொதுமக்கள் "நலம்AI" மூலம் தங்களது வருகையை முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ளலாம். இந்த முயற்சி மருத்துவப் பயனாளிகளின் காத்திருப்பு நேரத்தை குறைத்து மருத்துவ சேவைகளை மேலும் எளிமையாகவும் விரைவாகவும் பெற வழிவகுக்கும். இத்திட்டம் படிப்படியாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனைத்து துறைகளுக்கும், அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். மேம்படுத்தப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு முதலமைச்சரின் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்தளத்தில் அமைந்துள்ள வார்டு-111-ஆனது தமிழ்நாடு மருத்துவ சேவைகள் திட்டத்தின் மூலம் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட நிதியில் ரூபாய் 63.48 இலட்சம் மதிப்பில் மூன்றாம் நிலை அதிதீவிர மருத்துவ மற்றும் உயிர் காக்கும் சிகிச்சைப் பிரிவாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவில் 20 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. My Hospital ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் மருத்துவப் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறை பகுதிகளில் பராமரிப்பு பணிகள் முறையாக உள்ளதா என்பதை பொதுமக்கள் தகவல்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்க ஏதுவாக My Hospital எனும் செயலி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறை பகுதிகளில் இந்த செயலியின் QR Code காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் QR Code-ஐ ஸ்கேன் செய்து புகார்களையோ அல்லது தங்களுடைய கருத்துகளையோ தெரிவிக்கலாம். பராமரிப்பில் ஏதேனும் குறைபாடுகள் குறித்து பயனாளர் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவக் கல்லூரி முதல்வர் அவர்களுக்கு செயலியின் மூலமாக தகவல் தெரியவரும். இதனடிப்படையில் தொடர்புடைய இடத்தில் பராமரிப்புப் பணி உடனடியாக மேற்கொள்ளப்படும். ஆதாரம்: செய்தி வெளியீடு எண் 363