இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 எனும் விண்கலத்தை ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று முற்பகல் 11:50 மணிக்கு பி எஸ் எல் வி சி57 (PSLV-C57) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் நான்கு மாதங்கள் பயணித்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் லக்ராஞ்ச்1 (எல்1) [Lagrange point 1 (L1)] பகுதியை அடையும். அங்கிருந்து சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கும். ஆதித்யா எல்1 [Aditya L1] விண்கலத்தில் ஏழு ஆராய்ச்சிக் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை சூரியனின் குரோமாஸ்பியர் அடுக்கு, ஃபோட்டோஸ்பியர் மற்றும் சூரியனின் வெளிப்பகுதியான குரோனா அடுக்குகளை ஆய்வு செய்யும். தொடர்ந்து விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய இஸ்ரோ தலைவர் திரு சோம்நாத், ஆதித்யா எல்1 வெற்றிகரமாக சரியான சுற்றுவட்டப் பாதையில் உள்ளதாகவும், அடுத்தடுத்த நிலைகளில் அதன் சுற்றுவட்டப் பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு எல்1 பகுதியை நோக்கி பயணிக்கும் என்றும் தெரிவித்தார். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்