(Source: ANI News) உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பலான எம்வி கங்கா விலாஸ் (MV Ganga Vilas) மற்றும் கூடார நகரம் (Tent City) ஆகியவை பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் வாரணாசியில் ஜனவரி 13ஆம் தேதி காலை 10:30 மணிக்கு காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கப்படுகிறது. எம்வி கங்கா விலாஸ் எம்வி கங்கா விலாஸ் நதிப்பயண கப்பல் தனது பயணத்தை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ருகர் வழியாக பங்களாதேஷ் சென்றடையும். இந்தியா மற்றும் பங்களாதேஷ் பகுதிகளில் உள்ள 27 நதி அமைப்புகளை இந்த கப்பல் கடந்து செல்ல உள்ளது. மூன்று தளங்கள், 18 அறைகள் கொண்ட இந்த கப்பல், சொகுசு வசதிகளுடன் 36 சுற்றுலா பயணிகளின் தாங்கும் திறன் கொண்டதாக திகழ்கிறது. இந்த கப்பலின் முதல் பயணத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் முழுமையாக பயணிக்கின்றனர். (Source: ANI News) எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பல் நாட்டின் சிறந்த திறனை எடுத்துரைக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் 51 நாட்கள் பயணத்தின் போது, உலக பாரம்பரிய இடங்கள், தேசிய பூங்காக்கள், நதிக்கரைகள், பீகாரின் பாட்னா, ஜார்க்கண்ட்டின் சாஹிபஞ்ச், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, பங்களாதேஷின் டாக்கா, அசாமின் குவாஹத்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணம், சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை தருவதுடன், இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் கலை, கலாச்சாரம், வரலாறு மற்றும் ஆன்மிகம் ஆகியவற்றில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும் வாய்ப்பு அளிக்கும். நதி வழியிலான சொகுசு கப்பல் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பிரதமரின் நோக்கத்திற்கு ஏற்ப, நதி பயண சொகுசு கப்பலுக்கான வாய்ப்பை இத்திட்டம், பெரிய அளவில் ஊக்குவிக்கும் என்பதுடன், இந்த சேவை தொடங்கப்படுவதன் மூலம் இந்தியாவுக்கு நதி சொகுசு கப்பல் சுற்றுலாவில் புதிய சகாப்தத்தை உருவாக்கும். வாரணாசியில் கூடார நகரம் கூடார நகரம் (Tent City) என்ற தத்துவம் கங்கை நதிக்கரைப் பகுதியில் சுற்றுலாவை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டம், நதிக்கரைப்பகுதிக்கு எதிரில் உள்ள நகர பகுதியில் உருவாக்கப்பட்டு, அங்கு தங்குமிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் வாரணாசியின் சுற்றுலா மேம்படும். இந்தத் திட்டம் வாரணாசி மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பொதுத்துறை, தனியார் துறைகளின் பங்களிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூடார நகரத்திற்கு சுற்றுலா பயணிகள் பல்வேறு நதிக்கரையிலிருந்து படகுகள் மூலம் செல்வார்கள். இந்த கூடார நகரம், அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும். மழைக்காலங்களில் நதிநீர் மட்டம் உயரும் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் 3 மாதங்கள் மட்டும் இந்த நகரம் செயல்பாட்டில் இருக்காது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்