வேளாண்மை - உழவர் நலத்துறை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு குளிர்கால (ராபி) பருவப் பயிர்களை உடனடியாக காப்பீடு செய்ய விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழப்புகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில், விவசாயிகள் சார்பாக காப்பீட்டுக் கட்டணத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்துவதற்காக மாநில அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ. 2339 கோடி நிதியினை ஒதுக்கி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. நடப்பாண்டில் இதுவரை காப்பீடு செய்யப்பட்டுள்ள பரப்பு நடப்பு 2022-2023ஆம் ஆண்டில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (PMFBY) சிறப்பு மற்றும் குளிர்கால (ராபி) பருவங்களில், இதுவரை 54.63 இலட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு 33 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. சிறப்பு மற்றும் குளிர்காலப் பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நடப்பாண்டில், சிறப்பு மற்றும் குளிர்கால (ராபி) பருவங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்ய கீழ்க்கண்டவாறு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயிர் மாவட்டம் காலக்கெடு சிறப்பு பருவம் சம்பா நெல் திண்டுக்கல், கன்னியாகுமரி, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் 15 டிசம்பர் 2022 குளிர்கால (ராபி) பருவம் சோளம் கரூர், சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், கோயம்புத்தூர் 15 டிசம்பர் 2022 நிலக்கடலை திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை 15 டிசம்பர் 2022 சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், தர்மபுரி, இராமநாதபுரம், நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், சிவகங்கை 31 டிசம்பர் 2022 மக்காச்சோளம்-III தேனி, தருமபுரி, திருநெல்வேலி 31 டிசம்பர் 2022 கம்பு தூத்துக்குடி 31 டிசம்பர் 2022 ராகி தருமபுரி 31 டிசம்பர் 2022 சூரியகாந்தி தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் 31 டிசம்பர் 2022 எள் தூத்துக்குடி 31 டிசம்பர் 2022 பருத்தி-III தருமபுரி 31 டிசம்பர் 2022 தேவையான ஆவணங்கள் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass Book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் போன்ற ஆவணங்களையும் இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள் / தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ள வேண்டும். பயிர் காப்பீட்டுக் கட்டணத் தொகையில், பெரும்பாலான பங்குத் தொகை மாநில, ஒன்றிய அரசுகள் செலுத்திவிடும் என்பதால் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதுமானது. எனவே, எதிர்பாராமல் இயற்கை பேரிடர், பூச்சிநோய் தாக்குதலால் மகசூல் இழுப்பு ஏற்பட்டால், விவசாயிகளை பாதுகாப்பதற்காக, ரூ. 2339 கோடி நிதி ஒதுக்கீட்டில் அரசு செயல்படுத்தி வரும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீட்டுக் கட்டணத்தை (Premium) செலுத்தி தங்களது பயிர்களைக் காப்பிடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) அரசு செயலர்வேளாண்மை - உழவர் நலத்துறை வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9