குவாண்டம் தொழில்நுட்பத்தில் [Quantum Technology (QT)] துடிப்புமிக்க, புதிய சூழலை உருவாக்குவதையும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி, மேம்பாட்டை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு 2023-24-ல் இருந்து 2030-31 வரை ரூ.6003.65 கோடி செலவில் தேசிய குவாண்டம் இயக்கத்திற்கு (National Quantum Mission) பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குவாண்டம் தொழில்நுட்பத்தால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும், குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாட்டில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உருவாக்கும். சூப்பர்கண்டக்டிங் (Superconducting), போட்டோனிக் தொழில்நுட்பம் (Photonic Technology) போன்ற பல்வேறு தளங்களில் 8 ஆண்டுகளில் 50-1000 பிசிக்கல் க்யூபிட்ஸ் (Physical Qubits) உடன் குவாண்டம் கம்ப்யூட்டர்களை உருவாக்குவதை இந்த இயக்கம் இலக்காக கொண்டுள்ளது. இந்தியாவுக்குள் 2000 கி.மீ. தூரத்தில் உள்ள தரை நிலையங்களுக்கிடையே செயற்கைக்கோள் அடிப்படையிலான குவாண்டம் தகவல் தொடர்புகளை கிடைக்கச்செய்யும். இதர நாடுகளுடன் தொலைதூர குவாண்டம் தகவல் தொடர்புகளையும் 2000 கி.மீ. தூரம் வரை நகரங்களுக்கிடையேயான குவாண்டம் தகவல் பரிமாற்றத்தையும் இது கொண்டிருக்கும். அணுசக்தி நடைமுறைகளில் உயர்நிலை உணர்திறன் கொண்ட மேக்னோமீட்டர்களை (Magnetometers) உருவாக்கவும், துல்லியமான நேரத்திற்கான அணுசக்தி கடிகாரங்களை (Atomic Clocks) உருவாக்கவும் இந்த இயக்கம் உதவிசெய்யும். சூப்பர்கண்டக்டர் (Superconductor), நவீன செமிகண்டக்டர் வடிவங்கள் (Novel Semiconductor Structures) போன்ற குவாண்டம் பொருட்களை வடிவமைக்கவும் இது உதவியாக இருக்கும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்