நெல் செறிவூட்டலுக்கான திட்டம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள், பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் மற்றும் இந்திய அரசின் இதர நலத்திட்டங்களின் கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2024-க்குள் படிப்படியாக செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க 2022-ல் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. உணவு மானியத்தின் ஒரு பகுதியாக 2024 ஜூனில் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் வரை நெல் செறிவூட்டலுக்கான முழுச் செலவையும் (ஆண்டுக்கு ரூ. 2700 கோடி) அரசே ஏற்கும். செறிவூட்டப்பட்ட அரிசி - நுண்ணூட்டச்சத்தின் பயன்கள் செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணூட்டச்சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட மணிகளாக தயார் செய்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை, சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி, பொது விநியோகத்திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள நுண்ணூட்டச்சத்தின் பயன்கள் நுண்ணூட்டச்சத்தின் பெயர் பயன்கள் இரும்புச் சத்து இரத்த சோகையைத் தடுக்கிறது ஃபோலிக் அமிலம் கரு வளர்ச்சிக்கும் இரத்த உற்பத்திக்கும் உதவுகிறது வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது திட்ட செயல்பாடு இதனை ஒன்றிய அரசு நிலை I, நிலை II மற்றும் நிலை III ஆகிய 3 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிலை I : ஒன்றிய அரசு மாநிலம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டு, இந்திய உணவுக் கழகத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி பெறப்பட்டு ஜனவரி 2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது. நிலை II: ஒன்றிய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாக தேர்வு செய்துள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாக ஒன்றிய அரசு தேர்வு செய்தது. இம்மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு 01.12.2022 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது. நிலை III: மார்ச் 2024-க்குள் ஒன்றிய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியை பொது விநியோகத்திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மதிய உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக செறிவூட்டப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகத்திலிருந்து தற்போது பெறப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தமிழ்நாட்டில் கடந்த 21.09.2020 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அறிமுகத் திட்டமாக (Pilot Scheme) செறிவூட்டப்பட்ட அரிசியினைப் பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்க அறிவிக்கப்பட்டு 01.10.2020 முதல் 31.03.2022 வரை செயல்படுத்தப்பட்டது. செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதால் இரும்புச் சத்து மற்றும் போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய மூன்று நுண்ணூட்டச்சத்து குறைபாட்டினைப் போக்கி இரத்த சோகையில்லா நிலையினை உருவாக்கி ஆரோக்கியமாக வாழ உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. நிர்வாக இயக்குநர்தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9