அடல் தொழில் ஊக்குவிப்பு மையம் [Atal Incubation Centre (AIC)], அடல் சமுதாய புத்தாக்க மையம் [Atal Community Innovation Centre (ACIC)] ஆகிய இரண்டு முன்னணி திட்டங்களுக்கான விண்ணப்பங்களுக்கு நித்தி ஆயோகின் (NITI Aayog) அடல் புத்தாக்க இயக்கம் [Atal Innovation Mission (AIM)] அழைப்பு விடுத்துள்ளது. தொழில் ஊக்குவிப்பு அமைப்புகளின் தற்போதைய சூழலியலை விரிவுபடுத்துவதற்கும், உலகளாவிய அளவுகோல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கான அணுகலை வழங்குவதற்கும் விண்ணப்பங்களுக்கான அழைப்பு ஏதுவாக இருக்கும். நாட்டில் வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களை ஏற்படுத்தி, இந்தியாவில் புத்தாக்க சூழலியலை உருவாக்கி, ஆதரவளிப்பது, இந்த இரண்டு திட்டங்களின் நோக்கமாகும். விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுப்பதற்கான நிகழ்ச்சியில் பேசிய நித்தி ஆயோகின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. பரமேஸ்வரன் ஐயர், புத்தாக்கம் என்பது வளர்ச்சிக்கான ஈடு இணையற்ற உந்து சக்தியாக விளங்குவதோடு, சமூக தொழில்முனைவுடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என்றார். ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடைவதற்கு புத்தாக்க சூழலியலின் ஆதரவு இன்றியமையாதது என்றும், இதை நிறைவேற்றுவதில் அடல் புத்தாக்க இயக்கம் உறுதி பூண்டிருப்பதாகவும் இந்த இயக்கத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் சின்தன் வைஷ்ணவ் தமது உரையின் போது தெரிவித்தார். அடல் தொழில் ஊக்குவிப்பு மையத்திற்கு விண்ணப்பிக்க https://aimapp2.aim.gov.in/aic2022/ என்ற மின் முகவரியையும், அடல் சமுதாய புத்தாக்க மையத்திற்கு https://acic.aim.gov.in/acic-application/ என்ற இணைப்பையும் விண்ணப்பதாரர்கள் பயன்படுத்தலாம். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்