மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் குறைதீர்ப்புச் செயலியை, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: குறைதீர்ப்பு செயலி, மின்னணு நிர்வாகத்தை நோக்கிய நடவடிக்கை ஆகும். வெளிப்படைத் தன்மை, நம்பகத் தன்மையை உறுதி செய்ய இது உதவியாக இருக்கும். பல மாவட்டங்களில் குறைதீர்ப்பாளர் நியமிக்கப்படவில்லை. இந்தப் பதவிக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவதாகவும் அரசுக்கு தெரிய வந்தது. இதனால் குறைதீர்ப்புச் செயலியைப் பயன்படுத்தி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை அதிக வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவதில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, பல தரப்பிலிருந்து பெறப்படும் புகார்களை எளிதாக வகைப்படுத்தி தெரிவிக்கும் வகையில், இந்த குறைதீர்ப்பு செயலியை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும். இந்தச் செயலி குறைதீர்ப்பாளர் தனது கடமையைத் தடையின்றி, வெளிப்படையாக மேற்கொள்வதை வலுப்படுத்தும். இந்தச் செயலி மூலம், குறைதீர்ப்பாளரின் செயல்பாட்டை எளிதில் கண்காணிக்க முடியும். குறைதீர்ப்பாளர் தனது காலாண்டு மற்றும் ஆண்டு அறிக்கைகளைச் செயலி மூலமாக இணையளத்தில் பதிவேற்றலாம். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் அலுவலகம்