ஆயுதப்படைகளில் இந்திய இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபத் என்று அழைக்கப்படும் மத்திய அமைச்சரவை ஜூன் 14 ௨௦௨௨ அன்று ஒப்புதல் அளித்தது. திட்டத்தின் கீழ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். தேசபக்தியுடன், துடிப்புமிக்க இளைஞர்கள் ராணுவத்தில் நான்கு ஆண்டு காலத்திற்கு பணியாற்ற அக்னிபத் அனுமதிக்கும். ஆயுதப்படைகளில் இளைஞர்களை பணியமர்த்துவதற்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமுதாயத்திலிருந்து சமகால தொழில்நுட்ப போக்குகளுக்கு ஏற்ற வகையில் திறமை மிக்க இளைஞர்களை சீருடைப் பணிக்கு ஈர்க்க இது வாய்ப்புகளை வழங்கும். இளைஞர்களை படைகளில் சேர்ப்பதன் மூலம் வீரர்களின் சராசரி வயதை நான்கைந்து ஆண்டுகள் குறைக்க இது வகை செய்யும். அரசு அறிமுகப்படுத்தியுள்ள மிகப்பெரிய பாதுகாப்புக் கொள்கை சீர்திருத்தமான இது, முப்படைகளிலும் மனிதவளக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். உடனடியாக அமலுக்கு வரும் இந்தக் கொள்கை முப்படைகளிலும் ஆள்சேர்ப்பை நிர்வகிக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, அபாயம் மற்றும் சிரமப்படிகளுடன் ஈர்க்கும் வகையிலான மாதாந்திர ஊதியம் முப்படைகளிலும் வழங்கப்படும். 4 ஆண்டு பணிக்காலம் முடிவடைந்ததும், அக்னி வீரர்களுக்கு சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். அதில் அவர்களது பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவை அடங்கும். முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ. 30000 நிர்ணயிக்கப்படும். அக்னி வீரர் தொகுப்பு நிதிக்கு ரூ. 9000 அளிக்கப்படும். எஞ்சிய ரூ. 21000 கையில் கிடைக்கும். 2-ம் ஆண்டில் ரூ. 33000, 3-ம் ஆண்டில் ரூ. 36500, 4-ம் ஆண்டில் ரூ. 40000 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30% பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70% தொகை வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ. 5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சேர்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ. 11.71 லட்சம் வீரர்களுக்கு வழங்கப்படும். இந்த சேவா நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இதைத் தவிர பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்படமாட்டாது. அக்னி வீரர்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு ரூ. 48 லட்சத்துக்கு வழங்கப்படும். அக்னிபத் திட்டத்தின் கீழ், 4 ஆண்டு காலத்திற்கு வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அக்னிபத் திட்டத்தின் கீழ் நான்கு வருடங்களை நிறைவு செய்த அக்னி வீரர்கள், மத்திய ஆயுத காவல்படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் சேர 10% காலி இடங்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்னி வீரர்களுக்கு மூன்றாண்டு கால இளநிலை பட்டப்படிப்பு ஆயுதப் படைகளில் இந்திய இளைஞர்கள் சேவை செய்வதற்கான ஈர்ப்புமிக்க அக்னிபத் எனும் ஆள்சேர்ப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஜூன் 14 அன்று ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்படுவோர் அக்னி வீரர்கள் என அறியப்படுவார்கள். இந்த அக்னி வீரர்களின் எதிர்கால பணி முன்னேற்றத்தை விரிவுப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பல்வேறு சிவில் துறையில் வேலைவாய்ப்புக்கு தயார்படுத்தும் விதமாக திறன் அடிப்படையிலான மூன்றாண்டு கால இளநிலை பட்டப்படிப்பை மத்திய கல்வி அமைச்சகம் தொடங்கவுள்ளது. ஆயுதப்படைகளில் பணியாற்றும் காலத்தில், அவர்கள் பெறும் திறன் பயிற்சியும் இதற்கு அங்கீகரிக்கப்படும். இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், அக்னிவீரரால் பெறப்படும் தொழில்நுட்பம் அல்லது தொழில்நுட்பம் சாராத 50% திறன் பயிற்சி இளநிலைப் பட்டத்திற்கான மதிப்பீடாக கொள்ளப்படும். எஞ்சிய 50% மொழிகள், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், கணிதம், வணிகவியல் போன்ற பல்வேறு பாடங்களில் பெறும் பயிற்சியிலிருந்து மதிப்பீடு செய்யப்படும். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCVET) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆகியவற்றால் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது இந்த இளநிலை பட்டப்படிப்பு. பல்கலைக்கழக மானியக் குழுவின் பெயரீட்டு முறைப்படி, B.A., B.Com., B.A. (Vocational), B.A. (Tourism Management), இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தால் (IGNOU) பட்டம் வழங்கப்படும். மேலும், இந்தப் பட்டப்படிப்பு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்படும். இந்தத் திட்டத்தை அமல்படுத்த ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. இந்த ஆண்டு 46000 பேர் பணியில் சேர்க்கப்படுவார்கள். இதற்கான வயது வரம்பு 17.5 வயது முதல் 21 வயதாகும். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்திய கடற்படையிலிருந்து வணிகக் கடற்படைக்கு அக்னிவீரர்கள் சுமூகமாக மாறுவதற்கு வாய்ப்புகள் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் இந்திய கடற்படையில் பணிபுரிந்த பிறகு, வணிகக் கடற்படையின் பல்வேறு பொறுப்புகளில் அக்னிவீரர்களை சுமூகமாக மாற்றுவதற்கு ஆறு கவர்ச்சிகரமான சேவை வழிகளை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் அக்னிவீரர்களுக்கு தேவையான பயிற்சியைப் பெறவும், சிறந்த கடற்படை அனுபவம் மற்றும் தொழில்முறை சான்றிதழுடன் உலகம் முழுவதும் உள்ள ஊதியம் பெறும் வணிகக் கடற்படையில் சேர உதவும். மும்பையில் உள்ள துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைப்பான கப்பல் போக்குவரத்து இயக்குனரகம் இந்த விதிகளை அறிவித்தது. அக்னிவீரர்கள் கப்பல் துறையில் மாற்றம் பெறவும், இந்திய கடல்சார் பொருளாதாரத்திற்கு அவர்களின் வளமான திறன்கள் மற்றும் அனுபவத்தின் மூலம் மகத்தான பங்களிப்பை வழங்குவதன் மூலம் வணிக கடற்படையில் ஒரு கவர்ச்சியான வாழ்க்கையை உருவாக்கவும் உதவும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்