இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் சென்னையில் சிறப்பான முறையில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது. தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, பண்பாடு, உயர்ந்த சிந்தனை, இலக்கியத் தனித்தன்மை, பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழி தமிழ் மொழியாகும். தமிழை, உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். வளம்பெற்ற நம் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்து தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். "இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்பார் பாவேந்தர். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025 -ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9