இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனவரி 1-ஆம் தேதி மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜுலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும் நாட்களில் இளைஞர்கள் அவர்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் மற்றும் 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளைஞர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்குப் பிறகு, உரியவருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் பட்டியலினை தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in/ என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், கீழ்க்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கலாம்: வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். இணையம் மூலமாக https://voters.eci.gov.in/ என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து “Voter Helpline App" செயலியைத் தரவிறக்கம் செய்து அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். சிறப்பு சுருக்கமுறைத் திருத்த காலம் மற்றும் தொடர் திருத்த காலங்களில் பெறப்பட்ட முன்கூட்டிய விண்ணப்பங்கள் தொடர் திருத்த காலத்தின் போது அந்தந்த காலாண்டில் உரிய வாக்காளர் பதிவு அலுவலரால் பரிசீலிக்கப்படும். வாக்காளர் பட்டியலின் மென் நகலினை (புகைப்படமின்றி) வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரூ. 100 விதம் கட்டணம் செலுத்தி பெறலாம். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மாவட்ட தொடர்பு மையங்களை “1950” என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 1800-4252-1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுடன் மாநிலத் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது. தலைமைத் தேர்தல் அதிகாரிதமிழ்நாடு வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9