தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 8 இலட்சம் எக்டர் பரப்பில் பயறுவகைப் பயிர்கள், குறிப்பாக உளுந்து, பச்சைப்பயறு, துவரை மற்றும் தட்டைப்பயறு போன்ற பயறுவகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. காரீப் பருவத்தில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) சுமார் 30 சதவீதமும், மீதமுள்ள 70 சதவீதம் பயறுவகைப் பயிர்கள் ராபிப் பருவத்திலும் (அக்டோபர் முதல் மார்ச் வரை) சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பயறுவகைப் பயிர்கள் குறுகிய காலத்தில் அதிக வருமானம் தருவதுடன், மண்வளத்தையும் பாதுகாக்கும் என்பதால், நடப்பாண்டில் சம்பா நெல் அறுவடைக்குப் பின்பு, பயறுவகைப் பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்வதற்கு தமிழ்நாடு அரசு சீரிய முயற்சிகளை எடுத்துள்ளது. இதுவரை, 1.6 இலட்சம் எக்டரில் உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்யப்பட்டு, வளர்ச்சிப் பருவத்தில் உள்ளது. தற்போது, பயறுவகைப் பயிர்களில், மஞ்சள் தேமல் நோய் (Yellow Mosaic Virus) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களில் முதலில் இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிறப்புள்ளிகள் தோன்றி, பின்னர் இலை முழுவதும் திட்டுதிட்டாக ஒழுங்கற்ற மஞ்சளும், பச்சையும் கலந்த பகுதிகளாக மாறும். சில சமயம், நோயுற்ற இலைகள் சிறுத்தும், சுருங்கியும் காணப்படும். நாளடைவில் மஞ்சள் நிறப்பகுதி அதிகமாகி, துளிர் இலைகள் முழுவதும் மஞ்சளாகி விடும். நோயுற்ற செடிகளில் குறைந்த எண்ணிக்கையில் காய் பிடிக்கும். சில சமயங்களில் காய்களும் விதைகளும் மஞ்சளாக மாறிவிடும். செடிகளின் இளம் பருவத்தில் நோய் தோன்றினால் செடிகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டு, பெருமளவு மகசூல் இழப்பு ஏற்படும். இந்த மஞ்சள் தேமல் நோயானது வெள்ளை ஈயினால் பரவக் கூடியது என்பதால், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு (IPM) முறைகளைப் பின்பற்றுவதே இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழிமுறையாகும். அதன் விபரம் பின்வருமாறு. மஞ்சள் தேமல் நோய் தாக்குதலை தாங்கி வளரக்கூடிய வம்பன் 6, வம்பன் 7, வம்பன் 8 போன்ற உளுந்து இரகங்களையும், கோ 6 பாசிப்பயறு இரகத்தையும் சாகுபடி செய்ய வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். பயறு விதைப்புக்கு நடுவில், ஏழு வரிசைக்கு ஒரு வரிசை சோளப்பயிரை தடுப்புப் பயிராக விதைத்தால், வைரஸைப் பரப்பும் பூச்சிகளை தவிர்க்கலாம். எக்டருக்கு 10 மஞ்சள் ஒட்டுப்பொறிகள் வீதம் வைத்து, அதில் ஒட்டும் பூச்சிகளை எளிதில் அகற்றலாம். விதைக்கும் முன் இமிடாகுளோப்ரிட் 60௦ FS என்ற மருந்தை கிலோவுக்கு 5 மிலி என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். நோய் பாதிப்பு தெரிந்தவுடன், இமிடாகுளோப்ரிட் 17.5 SL எக்டருக்கு 250 மிலி அல்லது டைமெத்தயோட் 3௦ EC 50௦ மிலி அல்லது தையோமீதாக்சம் 75 WG 100 கிராம் என்ற அளவில் காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்து கட்டுப்படுத்தலாம். எனவே, நடப்புப் பருவத்தில் பயறுவகைப் பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மேற்காணும் முறைகளைப் பின்பற்றி, மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மஞ்சள் தேமல் நோய் அறிகுறி ஏதும் தென்பட்டால் அருகில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அல்லது வேளாண் விரிவாக்க அலுவலர்களை அணுகி ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி தெரிந்துகொண்டு தங்கள் வயல்களில் பின்பற்றிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9