புதுதில்லி, சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்கிட தமிழ்நாடு அரசு ரூபாய் 5 கோடி நிதி வழங்கி ஆணையிட்டுள்ளது. புதுதில்லியிலுள்ள புகழ்பெற்ற சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்ப் பிரிவு, இந்திப் பிரிவு, உருதுப் பிரிவு, இந்தி மொழியாக்கப் பிரிவு, கன்னட மொழி இருக்கை, ஒடிய மொழி இருக்கை, வங்க மொழி இருக்கை, ஆகிய அமைப்புகளைக் கொண்டு இயங்குகின்றது. பல்கலைக்கழக நல்கைக்குழு வாயிலாக பேராசிரியர் (Professor) ஒருவரும் தமிழ்நாடு அரசின் நிதி நல்கையின் வாயிலாக உதவிப் பேராசிரியர் (Assistant Professor) ஒருவரும் நியமிக்கப் பெற்று 2007 முதல் பணியாற்றி வருகின்றனர். தமிழ் இலக்கியவியல் ஆய்வு, தமிழ் மற்றும் திராவிட மொழியியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்றியல், சமூகவியல் ஆய்வு என மூவகையாக விரிவுபடுத்தி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ்ப் பிரிவு இனி, தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறையாக முகிழ்த்து எழச் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. இதற்கென ரூபாய் 5 கோடி நிதி வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. தனிப்பெரும் துறையாக உருவெடுக்கும் தமிழ் இலக்கியவியல் துறை வாயிலாக ஒப்பாய்வு, முதுகலை தமிழிலக்கியப் படிப்பு வல்லுநர்வழி மொழியாக்கம், விருந்துநிலைப் பேராசிரியர்வழி ஆய்வுப் பெருந்திட்டம், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி, தமிழாசிரியர்களுக்கு ஆய்வுப் பயிலரங்கம், அயலகப் பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல், தரமான நூல்களை வெளியிடுதல், ஜே என் யூ தமிழியல் எனும் பெயரில் 100 பக்க அளவில் ஆண்டுக்கு இருமுறை ஆய்வு இதழ் வெளியிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். வடஇந்தியாவில் தொடங்கப் பெறும் முதல் தமிழ்த் துறையாகவும் தமிழாய்வுகளை விரைந்தும் விரிந்தும் செய்யும் பெருமிதமும் தனித்தியங்கும் தன்மையையும் கொண்டு உலக அளவில் கவனம் பெறும் துறையாக தமிழ் இலக்கியவியல் துறை மாறும் எனவும் தமிழ்ச் சான்றோர்களும், தமிழார்வலர்களும் கருதுகின்றனர். தமிழ் வளர்ச்சி இயக்குநர் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9