ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கான இணையதளம் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மாணாக்கர்களின் விண்ணப்பங்களைப் பெற கடந்த 30.01.2023 முதல் திறக்கப்பட்டு 4.10 இலட்சம் மாணாக்கர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு 31.05.2023 அன்று கல்வி உதவித் தொகை இணையதளம் முடிவுற்றது. எனினும், 2022-2023 ஆம் கல்வியாண்டில் பயின்று கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கத் தவறிய/விடுபட்ட மாணாக்கர்களிடமிருந்தும், கல்வி நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், தற்போது இவ்விணையதளம் மீண்டும் திறக்கப்பட்டு 30.06.2023 வரை கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கல்வி உதவித் தொகை இணையத்தில் விண்ணப்பிக்கத் தவறிய மாணாக்கர்கள் இருப்பின் இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி மேற்குறித்த காலக்கெடுவிற்குள் கல்வி உதவித் தொகை பெற இணையத்தில் விண்ணப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்திட்ட விதிமுறைகளின்படி, இக்கல்வியாண்டு முதல், முதன்முறையாக ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண், இணையத்தில் பெறப்பட்ட சாதிசான்று, வருமானச்சான்று, ஆதாருடன் இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கு எண் ஆகிய அனைத்து ஆவணங்களையும் இணையவழியில் சரிபார்க்கப்பட்டு, மாணாக்கர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு கல்வி உதவித் தொகை சென்றடையும் வகையில் இணையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையபக்கத்தில் கல்வி உதவித் தொகை பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள காணொளியைப் (Demo Video)) பார்த்து உரிய ஆவணங்களுடன் கல்வி உதவித் தொகைக்கு தகுதியுள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அரசுச் செயலாளர்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9