தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் ஆக்கப்பணிகளை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்டு வந்த பல்வேறு இதழ்கள் அனைத்தையும், ஒரே அரசு இதழாக "தமிழரசு" எனும் பெயரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1970ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் மாத இதழாக உருவாக்கினார். பல்வேறு தனியார் அச்சகங்களில் அச்சிடப்பட்டு, வெளியிடப்பட்டு வந்த தமிழரசு மாத இதழுக்குச் சொந்தமாக ஒரு அரசு அச்சகத்தை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1972ஆம் ஆண்டு உருவாக்கினார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வந்த தமிழரசு அச்சகம், தற்போது சென்னை தரமணியில் புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது. தமிழரசு இதழ், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நான்கு வண்ண வெப்ஆப்செட் இயந்திரம் மூலமாக அச்சிடப்பட்டு மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழரசு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தனி இதழ் ரூ. 7 ஆகவும், ஆண்டுச் சந்தா ரூ. 84 ஆகவும், 10 ஆண்டுகளுக்கான ஆயுள் சந்தா அஞ்சல் கட்டணம் உட்பட ரூ. 840 ஆகவும், மாணவர் சிறப்பு ஆயுள் சந்தா சலுகை ரூ. 588 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும் படித்து பயன்பெறும் வகையில், மாநிலம் முழுவதும் அரசு நலத்திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளின் வளர்ச்சிப் பணிகள், வெற்றிக் கதைகள் உள்ளிட்டவை 'தமிழரசு' இதழில் வெளியாகியுள்ளன.மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ்ச் சாட்சிகள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் தயாரிக்கப்பட்டு அச்சிடப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்படுகிறது. அரசு செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களையும், சாதனைகளையும் பொதுமக்கள் எளிதில் படித்துப் பயன்பெறும் வகையில், தொகுத்து இதழ் வடிவில் வெளியிட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. மேலும், போட்டித் தேர்வுகளுக்கு தங்களைத் தயார் செய்துகொள்ளும் மாணவர்களுக்கும் தமிழரசு இதழ் பயனுள்ளதாக இருக்கும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள், உரைகள், நிகழ்ச்சிகள் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அரசாணைகள் ஆகியவற்றை முழுமையாகப் பொதுமக்கள் அறிந்து பயனடைய ஏதுவாக இருக்கும். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் வெளியிடப்படும் தமிழரசு மாத இதழை, அனைவரும் பெற்று பயனடையும் வகையில் அரசு இ-சேவை மையங்களில் தங்கள் பெயர் மற்றும் முகவரி விவரங்களைத் தெரிவித்து, பதிவு செய்து தமிழரசு இதழை அஞ்சல் வாயிலாகப் பெற்று பயனடையலாம். தமிழரசு இதழுக்கு www.tamilarasu.org என்ற இணையதளத்திலும் சந்தா தொகையினை நேரடியாக செலுத்தலாம். மேலும், தமிழரசு சந்தா தொகையினை வங்கி வரைவோலையாகவோ, பணவிடை மூலமாகவோ இணை இயக்குநர் (வெளியீடுகள்), தமிழரசு அலுவலகம், இராஜீவ்காந்தி சாலை, கானகம், தரமணி, சென்னை - 600 113 என்ற முகவரிக்கு தங்களின் பெயர், கதவு எண். தெருப் பெயர், ஊர், மாவட்டம், அஞ்சல் குறியீட்டு எண் மற்றும் கைப்பேசிஎண்ஆகியவற்றைச் சரியாக எழுதி அனுப்பி தமிழரசு இதழைப் பெற்றுக் கொள்ளலாம். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9