ஜூலை 16, 2025 அன்று மத்திய அமைச்சரவை, 2025-26 முதல் 100 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் ஆறு ஆண்டு காலத்திற்கு "பிரதம மந்திரி தன-தானிய வேளாண் திட்டம் (பிரதமரின் தன்-தான்ய கிருஷி யோஜனா) " என்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி தன-தானிய வேளாண் திட்டம், நிதி ஆயோக்கின் லட்சிய மாவட்ட திட்டத்திலிருந்து உத்வேகம் பெறுகிறது. நோக்கம் இத்திட்டம், வேளாண் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பயிர் பல்வகைப்படுத்தல், நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல், அறுவடைக்குப் பிந்தைய தானிய சேமிப்புத் திறனை அதிகரித்தல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல், விவசாயிகளுக்குக் கடன்கள் கிடைப்பதை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. திட்ட கண்ணோட்டம் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம், மத்திய அரசின் 11 துறைகள், மாநில அரசுகளின் திட்டங்கள், தனியார் துறையினர் ஆகியோரின் கூட்டு ஒத்துழைப்புடன் தற்போது நடைமுறையில் உள்ள 36 திட்டங்களுடன் இணைத்து செயல்படுத்தப்படும். குறைந்த உற்பத்தித்திறன், குறைந்த பயிர் சாகுபடி, விவசாயிகளுக்குக் குறைந்த கடன் வழங்கல் ஆகியவை உள்ள 100 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த மாவட்டங்ளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலும், மாவட்டங்களின் எண்ணிக்கை நிகர பயிர் பரப்பளவு, நிலங்களின் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கும் மாவட்டங்கள் தேர்வு செய்யப்படும். எனினும், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் குறைந்தபட்சம் 1 மாவட்டம் தேர்ந்தெடுக்கப்படும். திட்டமிடல், செயல்படுத்துதல், கண்காணிப்பு ஆகியவற்றுக்காக மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்படும். மாவட்ட "தன-தானிய சமிதியால்" மாவட்ட விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் திட்டம் இறுதி செய்யப்படும். இதில் முற்போக்கான விவசாயிகளும் உறுப்பினர்களாக இருப்பார்கள். பயிர் பல்வகைப்படுத்தல், நீர் மற்றும் மண் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் தன்னிறைவு மற்றும் இயற்கை விவசாயத்தின் விரிவாக்கம் ஆகிய தேசிய இலக்குகளுடன் மாவட்டத் திட்டங்கள் இணைக்கப்படும். ஒவ்வொரு தன்-தான்யா மாவட்டத்திலும் திட்டத்தின் முன்னேற்றம் 117 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை ஒரு டேஷ்போர்டு மூலம் மாதந்தோறும் கண்காணிக்கப்படும். நிதி ஆயோக் மாவட்டத் திட்டங்களை மதிப்பாய்வு செய்து வழிநடத்தும். கூடுதலாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்ட மத்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகளும் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்வார்கள். எதிர்பார்க்கப்படும் விளைவு இந்த 100 மாவட்டங்களில் இலக்கு முடிவுகள் மேம்படும் போது, ஒட்டுமொத்த நாட்டின் முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளும் உயரும். இந்தத் திட்டம் அதிக உற்பத்தித்திறன், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் மதிப்பு கூட்டல், உள்ளூர் வாழ்வாதார உருவாக்கம் மற்றும் அதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து தன்னம்பிக்கையை அடைதல் (ஆத்மநிர்பர் பாரத்) ஆகியவற்றை ஏற்படுத்தும். இந்த 100 மாவட்டங்களின் குறிகாட்டிகள் மேம்படும் போது, தேசிய குறிகாட்டிகள் தானாகவே மேல்நோக்கிய பாதையைக் காண்பிக்கும். மூலம்: பிஐபி