தமிழக அரசால் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித் தொகை மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ.200/- எனவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300/- எனவும், மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு ரூ.400/- எனவும், பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600/- எனவும் காலாண்டிற்கு ஒருமுறை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600/- எனவும், மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750/- மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1,000/- வீதம் மாதந்தோறும் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். தகுதி பத்தாம் வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து, ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழ்நாடு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்களுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 40 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணி புரியாதவராகவும், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72000-க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும். பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் அரசின் பிற துறை சார்ந்த நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. மேற்கண்ட தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறத் தகுதியுடையவர் ஆவர். விண்ணப்பிக்கும் முறை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன. www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப்புத்தகத்துடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் (MR. No.) வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.