ஆண்டுதோறும் நவம்பர் 15 அன்று, பழங்குடியின கௌரவ தினம், குறிப்பாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்த சமூகங்களின் பங்களிப்புகளைக் கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. அறிமுகம் இந்தியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மை பெரும்பாலும் அதன் பழங்குடி சமூகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டின் வரலாறு மற்றும் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். பழங்குடியினத் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் நவம்பர் 15 அன்று, பழங்குடியின கௌரவ தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், அதன் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் பழங்குடி குழுக்களின் முக்கியப் பங்கை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. பின்னணி 2021-ம் ஆண்டு முதல், பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை கௌரவிக்கும் வகையில் நாடு முழுவதும் பழங்குடியின கௌரவ தினம் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. சந்தால்கள், தமார்கள், கோல்கள், பில்கள், காசிகள் மற்றும் மிசோக்கள் தலைமையிலான இயக்கங்களுடன் சேர்ந்து பழங்குடியின சமூகங்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தன. இந்தப் புரட்சிகர போராட்டங்கள் மகத்தான துணிச்சல் மற்றும் தியாகத்தால் நிறைந்திருந்தன. ஆனால் அவற்றின் பங்களிப்புகள் பெரும்பாலும் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. பிர்சா முண்டா தலைமையிலான உல்குலன் (புரட்சி) போன்ற பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான பழங்குடி இயக்கங்கள் பிரிட்டிஷ் ஒடுக்குமுறையை எதிர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தது மட்டுமல்லாமல், ஒரு தேசிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. பழங்குடி சமூகங்களால் பகவான் என்று போற்றப்படும் பிர்சா முண்டா, சுரண்டும் காலனிய அமைப்புக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை மேற்கொண்டார். இந்த அறியப்படாத தியாகிகளின் தியாகங்கள் ஒருபோதும் மறக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் விடுதலைப் பெருவிழா 2021-ன் கொண்டாட்டத்தின்போது நவம்பர் 15-ஐ பழங்குடியின கௌரவ தினமாக மத்திய அரசு அறிவித்தது. பழங்குடி சமூகங்களின் புகழ்பெற்ற வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இந்த நாள் கொண்டாடுகிறது. ஒற்றுமை, பெருமை மற்றும் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்திற்கு அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 2025 - பழங்குடியின கௌரவ தினக் கொண்டாட்டம் பழங்குடி வீரர்களின் வீரம், தொலைநோக்கு மற்றும் பங்களிப்புகளுக்கு உற்சாகமான அஞ்சலி செலுத்தும் வகையில், ஜன்ஜாதியா கௌரவ் வர்ஷ் பக்வாடா (நவம்பர் 1,2025 முதல் 15 வரை) நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரும், காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் நீடித்த அடையாளமான பகவான் பிர்சா முண்டாவின் 150 வது பிறந்த நாளைக் குறிக்கும் ஆண்டு முழுவதும் நடைபெறும் ஜன்ஜாதியா கௌரவ் வர்ஷ் அனுசரிப்பின் ஒரு பகுதியாக இந்த பதினைந்து நாள் கொண்டாட்டம் அமைகிறது. பழங்குடி மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடுவதற்கும் நினைவுகூருவதற்கும் நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இமயமலை முதல் கடலோர சமவெளிகள் வரை, மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தொடர்ச்சியான கலாச்சார, கல்வி மற்றும் சமூகம் சார்ந்த திட்டங்களை தொடங்கியுள்ளன, இது 15 நவம்பர் 2025 அன்று ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் வரை பெருமை மற்றும் நினைவுகூரலின் பகிரப்பட்ட உணர்வை பிரதிபலிக்கிறது. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்