சியாமா பிரசாத் முகர்ஜி ஊரக நகர்ப்புறத் திட்டம் (SPMRM)

நாட்டின் பெரும்பாலான ஊரகப் பகுதிகள் தனித்தனி குடியிருப்புப் பகுதிகளாக இல்லாமல் ஒன்றோடு ஒன்று நெருங்கி அமைந்திருக்கும் கூட்டுப் பகுதிகளாக உள்ளன. வளர்ச்சியடைவதற்கான ஆற்றலை இவை கொண்டிருக்கின்றன. பொருளாதார ஊக்கம் இருக்கிறது. போட்டி போடும் வாய்ப்புகளையும் பெற்றுள்ளன. இத்தகைய கூட்டுப் பகுதிகள் வளர்ச்சி கண்டுவிட்டால் அவை RURBAN (ஊரக நகர்ப்புறம்) என்று வகைப்படுத்தப்படுகின்றன. இதை கவனத்தில் கொண்டு, சியாமா பிரசாத் முகர்ஜி ஊரக நகர்ப்புறத் திட்டம் (SPMRM) என்ற திட்டத்தை இந்திய அரசாங்கம் தொடங்கியிருக்கிறது. இத்தகைய பகுதிகளுக்கு பொருளாதார, சமூக, நிலவியல் கட்டமைப்பு வசதிகளை அளித்து அவற்றை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் பிப்ரவரி 21, 2016 அன்று தொடங்கப்பட்டது.

300 ஊரக நகர்ப்புற கூட்டுப் பகுதிகளை (ரர்பன் கிளஸ்டர்கள்) அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேம்படுத்தும் நோக்கத்தை இந்தத் திட்டம் கொண்டுள்ளது. தேவைப்படும் வசதிகள் அளிக்கப்பட்டு இந்தப் பகுதிகள் மேம்படுத்தப்படும். அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களை ஒன்று குவித்து இதற்கான வளங்கள் திரட்டப்படும். இதற்கும் அதிகமாக தேவைப்படும் போது தீவிர இடைவெளி நிதி [Critical Gap Funding (CGF)] இந்தத் திட்டத்திற்குத் தரப்படும்.

திட்டத்தின் பார்வை

தேசிய ஊரக நகர்ப்புறத் திட்டம் (NRuM) ஊரக சமூக வாழ்வின் சாரத்தை பாதுகாத்துப் போற்றும். இத்தகைய ஊரக கூட்டுப் பகுதிகளின் மேம்பாட்டை உருவாக்கும் சமநிலை, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நிலை ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி, நகர்ப்புறத்திற்குத் தேவைப்படும் வசதிகள் என்று கருதப்படும் வசதிகளோடு சமரசம் செய்து கொள்ளாமல், ஊரக நகர்ப்புறக் கூட்டுப் பகுதிகளை இந்தத் திட்டம் உருவாக்கும்.

திட்டத்தின் நோக்கம்

உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், அடிப்படை சேவைகளை மேம்படுத்துதல், திட்டமிடப்பட்ட ஊரக நகர்ப்புற கூட்டுப் பகுதிகளை உருவாக்குதல் ஆகியன இந்தத் திட்டத்தின் நோக்கங்கள்.

வெளிப்பாடுகள்

ஊரக பகுதிக்கும், நகர்ப்புறத்திற்கும் உள்ள இடைவெளியை நிரப்புதல், அதாவது, பொருளாதார, தொழில்நுட்ப இடைவெளிகள், வசதிகளிலும் சேவைகளிலும் உள்ள இடைவெளிகள் ஆகியவற்றை நிரப்புதல்.

வறுமையைக் குறைப்பது, ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பின்மையைக் குறைப்பது போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து உள்ளூர் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவது.

ஊரக நகர்ப்புறப் பகுதிகளில் வளர்ச்சியை பரவலாக்குவது.

ஊரகப் பகுதிகளில் முதலீடுகளை ஈர்ப்பது.

ஊரக நகர்ப்புற கூட்டுப் பகுதிகள்

புவியியல் ரீதியாக தொடர்ச்சியாக அமைந்திருக்கும் கிராமங்கள் ஊரக நகர்ப்புற கூட்டுப் பகுதிகளாக இருக்கும். சமவெளிப் பகுதிகளில் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மக்கள் தொகையும், பாலை நிலம், குன்றுகள், பழங்குடி பகுதிகளில் 5000 முதல் 15000 வரை மக்கள் தொகையும் கொண்டுள்ள பகுதிகள் இதில் அடங்கும். நடைமுறை சாத்தியப்பாடுகளுக்கு ஏற்ப கூட்டுப் பகுதிகளை ஒன்று சேர்த்து நிர்வாக அலகுகளான கிராமப் பஞ்சாயத்துகளை ஒற்றை வட்டாரமாக / தாசில் ஆக இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை

NRuM திட்டத்தின் கீழ் இரண்டு வகையான ஊரக நகர்ப்புற கூட்டுப் பகுதிகள் இருக்கும். ஒன்று பழங்குடி இனத்தவர் பகுதி, மற்றது பழங்குடியினர் அல்லாத பகுதி. இந்த வகைகள் ஒவ்வொன்றிற்கும் தேர்வு வழிமுறைகள் மாறுபடும்.

ஊரக நகர்ப்புற கூட்டுப் பகுதி ஒன்றைத் தெரிவு செய்யும் போது, அந்தப் பகுதியில் பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய வளங்கள் அனைத்தையும் கொண்ட வளர்ச்சி மையங்களாக அந்தப் பகுதிகள் இருக்கின்றனவா? என்பதை அரசாங்கம் பார்க்க வேண்டும். இத்தகைய வளர்ச்சி மையங்கள் வட்டாரத் தலைமையிட கிராமமாகவோ அல்லது அளவான மக்கள் தொகையுள்ள நகரங்களாகவோ கூட இருக்கலாம். புவியியல் தொடர்ச்சியைக் கணக்கில் கொண்டு, அடையாளம் காணப்பட்ட வளர்ச்சி மையத்தைச் சுற்றி 5 முதல் 10 கி.மீ. வட்டாரத்தில் இருக்கக் கூடிய தொடர்ச்சியான கிராமங்கள் / கிராமப் பஞ்சாயத்துக்கள் கொண்டதாக ஊரக நகர்ப் பகுதி அமைக்கப்படலாம். மக்கள் தொகை அடர்த்தி, அந்தப் பகுதியின் நிலவமைப்பு ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் இந்த வட்டாரத்தின் அளவு இருக்க வேண்டும்.

பழங்குடி அல்லாத ஊரக நகர்ப்புற கூட்டுப் பகுதி

இவற்றை தெரிவு செய்வதற்கு அமைச்சகம், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முன்னணி துணை மாவட்டங்களின் பட்டியலைத் தரும். கூட்டுப் பகுதிகளை இவற்றிலிருந்து அடையாளம் காணலாம். இத்தகைய துணை மாவட்டங்களை தேர்ந்தெடுப்பதற்கு பின் வரும் அடிப்படைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன:

ஊரக மக்கள் தொகையில் காணப்படும் பத்தாண்டு வளர்ச்சி.

வேளாண்மை அல்லாத பிற துறைகளில் பணி புரிவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பத்தாண்டு வளர்ச்சி.

பொருளாதார கூட்டுப் பகுதிகளின் இருப்பு நிலை.

சுற்றுலா, ஆன்மிக முக்கியத்துவமுள்ள இடங்களைக் கொண்டிருப்பது.

போக்குவரத்து வசதிகள் அருகிலிருப்பது.

இத்தகைய அளபுருக்கள் ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான மதிப்பீடு வழங்கப்படுகிறது. அமைச்சகம் அடையாளம் காட்டியிருக்கும் துணை மாவட்டகளில் இருந்து மாநில அரசுகள் ஊரக நகர்புற கூட்டுப் பகுதிகளை அடையாளம் கண்டு தெரிவு செய்து கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது பின் வரும் அளபுருக்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஊரக மக்கள் தொகையில் பத்தாண்டு வளர்ச்சி

நில மதிப்பு உயர்வு

வேளாண்மை அல்லாத பிற தொழில்களில் ஈடுபட்டிருப்போரின் பத்தாண்டு கால வளர்ச்சி பங்களிப்பு

மேல்நிலைப் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை சதவீதம்

பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜ்னா திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் குடும்பங்களின் சதவீதம்

தூய்மை இந்தியா திட்டத்தில் கண்டுள்ள முன்னேற்றம்

கிராமப் பஞ்சாயத்துகளில் சிறந்த அரசாட்சி முன் முயற்சிகள்

இதைத் தவிர, தேவை எனக் கருதும் மற்றெந்த அளபுருக்களையும் மாநிலங்கள் சேர்த்துக் கொள்ளலாம். ஆயினும், முதல் நான்கு அளபுருக்களுக்கு 80% மதிப்பு தரப்பட வேண்டும். கடைசி மூன்று அளபுருக்களில் 20% மிகாமல் மாநிலங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

பழங்குடியினப் பகுதிகள்

பழங்குடியின கூட்டுப் பகுதிகளை அடையாளம் காண்பதற்கு நாட்டின் 100 முன்னணி பழங்குடி மாவட்டங்களிலுள்ள சிறந்த துணை மாவட்டங்களை பழங்குடி இன மக்கள் தொகையின் அடிப்படையில் அமைச்சகம் தெரிவு செய்யும். இந்தத் தெரிவு பின் வரும் அடிப்படைகளில் அமையும்.

பழங்குடி மக்கள் தொகையில் பத்தாண்டு வளர்ச்சி

பழங்குடி மக்களின் தற்போதைய கல்வியறிவு விகிதம்

வேளாண்மை அல்லாத பிற தொழில்களில் ஈடுபட்டிருப்போரின் எண்ணிக்கையில் பத்தாண்டு கால வளர்ச்சி

ஊரக மக்கள் தொகையில் பத்தாண்டு வளர்ச்சி

பொருளாதார கூட்டுப் பகுதிகளின் இருப்பிட நிலை

துணை மாவட்டங்களைத் தெரிவு செய்யும் போது இந்த அடிப்படைகள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன. அமைச்சகம் அடையாளம் கண்டு தெரிவித்துள்ள துணை மாவட்டங்களிலிருந்து மாநில அரசுகள் கூட்டுப் பகுதிகளை தெரிவு செய்யும். அப்படிச் செய்யும் போது மாநில அரசுகள் பின் வரும் அடிப்படை அளபுருக்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

பத்தாண்டுகளில் பழங்குடி மக்கள் தொகையில் வளர்ச்சி

பழங்குடி மக்களின் கல்வியறிவு வளர்ச்சி

வேளாண் அல்லாத பிற தொழில்களில் ஈடுபட்டிருப்போரின் பத்தாண்டு கால வளர்ச்சி

பொருத்தம் என்று மாநில அரசு கருதக் கூடிய வேறு எந்த அடிப்படைகளையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் முதலாவதாக குறிப்பிட்டுள்ள அடிப்படைகளுக்கு 80 சதவிகிதத்திற்கும் குறையாமல் மதிப்பீடு தரப் பட வேண்டும்.

ஆதாரம்: தேசிய ஊரக நகர்ப்புறத் திட்டம்