கண் தானம் கண் தான உறுதிமொழி குறித்து குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் கூறி, உறுதிமொழியை காப்பாற்றுவது அவசியம். அவ்வாறு செய்தால் கண் தான உறுதிமொழியை அளித்தவர் இறக்கும் நிலையில் அவரது கண்களைத் தானம் கொடுக்க குடும்பத்தினர் தயங்கமாட்டார்கள். ஒரு இறந்த நபரின் கண்களை தானமாகக் கொடுத்து பார்வையற்றோருக்கு கண் மாற்று சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை அளிக்க முடியும். ஆனால், மிகக் குறைவான அளவே கண் தானமாகக் கிடைக்கின்றது. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்த நோய்கள், கண்ணாடி அணிந்தவர்கள். கண் புரை உள்ளவர்கள் கூட கண் தானம் செய்யலாம். இதற்கு வயது வரம்பு இல்லை. ஒருவர் இறந்தவுடன் 6 மணி நேரத்திற்குள் தகவல் அளித்தால் 20 நிமிடங்களில் கண்கள் பாதுகாப்பாக தானமாக எடுக்கப்படும். இதனால் இறந்தவரின் முகத்தில் எந்த விகாரமும் ஏற்படாது. இதுதொடர்பாக நாட்டில் நடத்தப்படும் விழிப்புணர்வு முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் கண் தானம் செய்வதாக உறுதிமொழிப் படிவம் அளிக்கின்றனர். ஆனால், விபத்து உள்ளிட்ட காரணங்களால் கண் தான உறுதிமொழி கொடுத்தவர் இறக்க நேரிடும் போது கண்களைத் தானமாகப் பெற அணுகினால் இறந்தவர்களின் உறவினர் மிகவும் தயங்குவதுடன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே கண் தானம் செய்ய ஒப்புக் கொண்டவர்கள் அது குறித்து தங்களது பெற்றோர், உறவினர், நண்பர்களிடம் கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும். கண் தானம் செய்து , கண் இல்லாதவர்களைக் காப்பாற்றுங்கள்! ஆதாரம்: தினமணி