தத்தெடுப்பு நடைமுறைகளை வலுப்படுத்த நாடு தழுவிய விதிமுறைகள் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் (Ministry of Women and Child Development) கீழ் செயல்படும் மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் [Central Adoption Resource Authority (CARA)] அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள மாநில தத்தெடுப்பு வள முகமைகளுக்கு (எஸ்ஏஆர்ஏ) மூன்று முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இவை தத்தெடுப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றுதல், குழந்தைகளின் பதிவுகளை பாதுகாப்பாக வைத்தல் மற்றும் குழந்தைகளின் அடையாளத்தை ரகசியமாகக் காப்பது ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. இந்த அறிவுறுத்தல்கள் சிறார் நீதிச் சட்டம் 2015 மற்றும் தத்தெடுப்பு நடைமுறைகள் 2022 அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. முதல் அறிவுறுத்தலில், ஆதரவற்ற அல்லது கைவிடப்பட்ட குழந்தைகளை தத்தெடுப்பிற்கு சட்டபூர்வமாக விடுதலையாக அறிவிப்பதற்கு முன் அனைத்து சட்ட நடைமுறைகளும் மற்றும் விசாரணைகளும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிஏஆர்ஏ தெரிவித்துள்ளது. ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளுக்கு சட்டத்தில் கூறியபடி இரண்டு மாத மறுபரிசீலனை காலத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இரண்டாவது அறிவுறுத்தலில், குழந்தைகள் மற்றும் தத்தெடுக்கப்பட்டவர்களின் பதிவுகளை நீண்டகாலம் பாதுகாப்பாக வைத்திருக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் மூடப்பட்டதால் பதிவுகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால், அனைத்து அச்சு மற்றும் மின்னணு பதிவுகளையும் பாதுகாப்பாக சேமித்து தேவையான அதிகாரத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் ஆணையம் கூறியுள்ளது. மூன்றாவது அறிவுறுத்தலில், சிறார் நீதிச் சட்டத்தின் பிரிவு 74-ன் படி குழந்தைகளின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது அவர்களை அடையாளம் காணக்கூடிய தகவல்கள் சமூக ஊடகங்கள் உட்பட எங்கும் வெளியிடப்படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் தத்தெடுப்பு அமைப்பில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலுப்படுத்துவதே மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் நோக்கமாகும். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240443®=3&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்