இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் நவம்பர் 26 அரசியலமைப்பு தினமாக (சம்விதான் திவாஸ்) கொண்டாடப்படுகிறது. 1949 நவம்பர் 26, அன்று இந்திய அரசியலமைப்பு சபை முறையாக அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. இது 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்தியாவை ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசாக நிறுவியது. 1949-ம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை கௌரவிக்கும் வகையில், 2015-ம் ஆண்டில், மத்திய அரசு நவம்பர் 26-ஐ அரசியலமைப்பு தினமாக (சம்விதான் திவாஸ்) முறைப்படி அறிவித்தது. அப்போதிலிருந்து, ஆண்டுதோறும் இந்த நாளில், அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை நாடு கொண்டாடுகிறது. இந்திய அரசியலமைப்பு பற்றி ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளும்போது உருவாக்கப்பட்டிருந்த இந்திய அரசு சட்டம், 1935 அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு சட்டகமாக இருந்தது. ஆனால் இதியாவை இறையாண்மை கொண்ட குடியரசு நாடாக நிர்வகிக்க அது போதுமானதாக இல்லை. 1946 டிசம்பரில் கேபினட் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது. இதில் அம்பேத்கர், நேரு, வல்லபாய் படேல் ஆகிய முக்கிய தலைவர்களுடன் 389 பேர் இடம்பெற்றிருந்தனர். 11 அமர்வுகளில் அரசியலமைப்புச் சட்டம் விவாதிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாள்கள் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் பணிகள் நீண்டன. நவம்பர் 26, 1949 அன்று, அரசியலமைப்பு சபை அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. முதலில் 395 ஆர்டிகள்கள் 8 அட்டவணைகளுடன் (பின்னர் திருத்தப்பட்டது) உலகிலேயே நீண்ட அரசியலமைப்புச் சட்டமாக உருவானது இந்திய அரசியலமைப்புச் சட்டம். அரசியலமைப்பின் முகவுரையை 22 அதிகாரபூர்வ மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் இணையதளத்தில் வாசிக்க: https://legislative.gov.in/constitution-in-regional-languages/ ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்