இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வது மற்றும் மாற்று அறுவை சிகிச்சை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் மொத்த எண்ணிக்கையில் இந்தியா உலக அளவில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப் பிறகு மூன்றாவது இடத்தில் உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு காரணமாக, 2024-ம் ஆண்டில் 18,900 க்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்து இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இறந்த ஒருவரது இதயம், 2 நுரையீரல்கள், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கணையம், குடல் போன்ற உயிர் காக்கும் முக்கிய உறுப்புகளையும், கருவிழிகள், தோல், எலும்பு மற்றும் இதய வால்வுகள் போன்றவற்றையும் தானம் செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம், இறந்த நன்கொடையாளர் 8 உயிர்களைக் காப்பாற்றவும், பலரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் முடியும். தேசிய உறுப்பு மாற்று திட்டம் தேசிய உறுப்பு மாற்று திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மூன்று அடுக்கு கட்டமைப்பான தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு [National Organ & Tissue Transplantation Organisation (NOTTO)], பிராந்திய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புகள் [Regional Organ and Tissue Transplant Organizations (ROTTOs)] மற்றும் மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புகள் [State Organ and Tissue Transplant Organizations (SOTTOs)] ஆகியவற்றின் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இதில் அடங்கும். தகவல் வழங்கவும், தொலைபேசி ஆலோசனை வழங்கவும், உடல் உறுப்பு தானத்திற்கான ஒருங்கிணைப்புக்கு உதவவும் கட்டணமில்லா எண் 1800114770 செயல்படுகிறது. www.notto.mohfw.gov.in என்ற இணையதளமும் இதற்கென செயல்படுகிறது. அரசின் சலுகைகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்காக, தேசிய ஆரோக்கிய நிதியின் கீழ் ஏழை நோயாளிகளுக்கு சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு ₹15 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. மருத்துவ செலவுகளை ஈடுகட்ட ஏழை நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு மாதத்திற்கு ₹10,000 வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொகுப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய உடல் உறுப்பு தான தினம் - ஆகஸ்ட் 2 ஆண்டுதோறும் இந்திய உடல் உறுப்பு தான தினத்தை [Indian Organ Donation Day (IODD)] ஆகஸ்ட் 2 அன்று கொண்டாடப்படுகிறது. கருத்தரங்குகள், பயிலரங்குகள், விவாதங்கள், விளையாட்டு நிகழ்வுகள், நடைப்பயிற்சி, மாரத்தான்கள் போன்ற பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அச்சு ஊடகங்களில் விளம்பரம், சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் தகவல்களை பரப்புதல் போன்றவையும் மேற்கொள்ளப்படுகின்றன. நாடு முழுவதும் உறுப்பு மற்றும் திசு தானத்தை ஊக்குவிக்கும் நோக்கில் , ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் " அங்தானம்- ஜீவன் சஞ்சீவனி இயக்கம் " என்ற தேசிய இயக்கத்தின் கீழ், 15-வது இந்திய உறுப்பு தான தினம் கொண்டாடப்பட்டது . இந்த இயக்கம், பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் அவசியத்தையும், கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்களை நீக்குவதையும், மக்கள் உறுப்பு தானத்திற்கு உறுதியளிக்க ஊக்குவிப்பதையும் வலியுறுத்துகிறது. உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், வாழ்க்கை என்ற பரிசை வழங்கிய தன்னலமற்ற நன்கொடையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கௌரவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்