முகவுரை இன்றைய சூழலில் ஆடை வடிவமைப்பு துறையில் கணிப்பொறி வரைகலை அல்லது CAD (Computer Aided Design) என்ற முறை துணி உற்பத்தித் தொழிற்சாலையில் ஒரு புரட்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது எனலாம். மாறி வரும் உலகத்தில், நாளுக்கு நாள் துணி உற்பத்தித் துறையில் மேம்படுத்தப்பட்ட மாற்றங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது என்பதை மறுக்க இயலாது. மேலும் துணிகளில் வடிவமைப்பு செய்யும் முறையானது தற்போது கணிப்பொறி வரைகலை செய்யும் மென்பொருளினால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், தனித்தன்மையுடன் விளங்கவும், போட்டியாளர்களின் கூட்டத்தில் உச்ச நிலையை அடையவும், தொழிற்சாலைகளில் துணி உற்பத்தி முறைகள் அனைத்தும் கணினியின் மூலம் வடிவமைப்பினை மேற்கொள்ளுகின்ற விதங்கள் கட்டாயமாக இருந்தாக வேண்டிய சூழ்நிலை இன்றைக்கு உருவாகி வருகின்றது. சிக்கல்கள் மிகுந்த, கால நேரத்தை விரயம் செய்யும் வடிவமைப்பு முறையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள CAD என்ற மென்பொருள் உதவுகிறது. புதிய எண்ணங்கள் மற்றும் அணுகுமுறைகள், பரிமாணங்கள் அடங்கிய மென்பொருட்கள் அனைத்தும் இன்று துணி உற்பத்தியாளர்களுக்கும், ஆடை வடிவமைப்பாளர்களுக்கும் எளிதாகக் கிடைக்கிறது. ஆகவே CAD என்ற மென்பொருளின் உதவியோடு மிகவும் துரிதமாகவும், துல்லியமாகவும், வடிவமைப்புகளை உருவாக்க முடியும். வழக்கத்தில் இருந்த பழைய முறை, அதாவது போர்டுகளில் வரையும் வடிவங்களை, உடலை வருத்திக் கொண்டு சிரமத்துடன் மேற்கொண்ட வேலைகளை, வளைந்து கொடுக்கும் நாற்காலியில் அமர்ந்த வண்ணம் அதிசய வடிவ அமைப்புகளை கணினியின் உதவியுடன் மிகவும் சுலபமாக செய்து கொண்டிருக்கின்ற காலத்தில் நாம் இருக்கின்றோம். இந்த மென்பொருளின் மூலம் உருவாகும் வடிவமைப்புகள் மிகவும் துல்லியமானதாகவும், தெளிவானதாகவும், உயர்ந்த தன்மையுடன் கண்களைக் கவரும் விதத்தில் இருக்கின்றன. அது மட்டுமின்றி, வடிவமைப்பில் மாற்றம் செய்வது, தேவையெனில் அதை உடனடியாக மாற்றம் செய்ய இந்த மென்பொருளினால் மட்டுமே முடியும் என்பது மட்டுமின்றி, பல முறைகளிலும், பலவிதக் கோணங்களிலும், பரிமாணங்களிலும் எளிதாகப் பயன்படுத்தி செயல்படுத்தவும் உதவுகின்றது எனலாம். CAD என்பது என்ன? உற்பத்தி செய்யப்படும் பொருளின் வடிவமைப்பை கணினியின் உதவியுடன், அதற்கு மூளை போல் செயல்படும் நுண்பொருள் மூலம் வரையப்படும் வடிவமைப்பு CAD (Computer Aided Design) என்று அழைக்கப்படுகிறது. இதைப் போலவே பொருளுள்ள சொல்லாக இருக்கும் CADD (Computer Aided Design and Drafting) அல்லது CAID (Computer Aided Industrial Designing) என்பது கணிப்பொறி வரைகலை மற்றும் குறிப்புப் படம் மற்றும் கணிப்பொறி வரைகலையில் தொழிலக வடிவமைப்பு என்றும் அழைக்கப்படுகின்றன. பொறியியல் சார்ந்த பொருள் உற்பத்தித் துறையில் தான் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. துணி உற்பத்தித் தொழிற்சாலையை பொறுத்த வரை CAD என்பது கணினி வடிவமைப்பினை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மென்பொருள் மற்றும் சில நேரங்களில் பிரத்யேக வன்பொருளான CADம் உள்கட்டமாக செயல்பட்டு வருகின்றது. CADன் பயன்பாடு (Application of CAD) ஆடை வடிவமைப்பு என்பது வடிவமைப்பாளர்களின் பிரத்யேகக் கடமை. மாதிரிப் பொருட்களை உருவாக்காமலேயே, வடிவமைப்பாளர்களின் கற்பனை சக்தியின் இறுதி வடிவமைப்பை CADன் மூலம் உருவாக்கலாம். சில சமயங்களில் வாடிக்கையாளர்களும் தங்கள் தேவைக்கு ஏற்றாற் போல் வடிவமைப்பில், சிந்தனைகளையும், ஆலோசனைகளையும், அறிவுரைகளும் வழங்குவார்கள். இவற்றை வண்ண வரைபடங்கள் மூலமாகவோ, துணி மாதிரிகள் மூலமாகவோ அல்லது படச்சுருளின் எதிர்மறைப் படலம் (Flim Negatives) மூலமாகவோ கொடுப்பார்கள். இதனை வைத்துக் கொண்டு ஆடை வடிவமைப்பாளர்கள் கணினியின் உதவியுடன் நடைமுறையில் மாற்றம் செய்ய மாதிரிகளில் நுட்ப சோதிடும் மானி (Scanner) அல்லது Digital Cameraவை (நுண்காட்சி புகைப்படக் கருவி) பயன்படுத்தியும், ஒழுங்குபடுத்தியும் இறுதியில் துணிகளில் வடிவமைப்பினை பெற முடியும். CAD முறைகள் பயன்படுத்தப்படும் துணி தயாரிப்பு CAD முறைகள் பயன்படுத்தப்படும் துணி தயாரிப்பு / ஆடைத் தயாரிப்பின் பல்வேறு பகுதிகள் (Different Areas of Textiles where CAD Systems are Mostly Used) துணியில் வடிவமைப்பு முறைகள் (Textile Design System) பெரும்பாலான துணிகள், நூல் சாயங்கள், சாதாரண நெசவுகள், ஜக்கார்டுகள் அல்லது டாபிக்கள் போன்றவைகளை CADஐ பயன்படுத்தி வடிவமைக்கலாம். பின்னலாடை துணிகள் (Knitted Fabrics) சில கணிப்பொறி வடிவமைப்பின் மூலம் பெறப்படுகின்ற பின்னலாடை, உற்பத்தியில் முறையில் சிறந்து விளங்கும். நிறைவு பெற்ற பின்னல் வடிவங்கள் தையல் உருவாக்க வழிமுறைகளுடன் கணிப்பொறி திரையில் காண முடியும். அச்சிடப்பட்ட துணிகள் (Printed Fabrics) அச்சிடப்பட வேண்டிய கருவடிவத்தை வடிவமைப்பாளர்களின் குறிக்கோளுக்கேற்ப, அளவை சிறியதாக்கவோ, பெரியதாக்கவோ, புதிய வண்ணங்களைக் கொண்ட வடிவமைப்புக்களாக சுழற்றி வளைக்கவோ, எண்ணிக்கைகளை அதிகரிக்கவும் மாற்றங்களை செய்திடலாம். அதிநவீன CADல் அதன் உள்ளடங்கிய மென்பொருளின் உதவியின் மூலம் அச்சிடப்பட வேண்டிய வண்ணங்கள், நம் கண்களால் காணும் வண்ணங்களையும், கணினியின் திரையில் தெரியும் வண்ணத்தை ஒத்தும், தானே வடிவமைக்கக் கூடியதும் விரைவில் வெளி வர உள்ளது. வரிவடிக பலகை வரைபட முறை (Sketch Pad System) ஆடை வடிவமைப்பாளர்களை பேனா அல்லது எழுத்தாணி கொண்டு மின்னனுவில் இயங்கும் பலகை (Electronic Pad) அல்லது உலோகப் பலகையில் கைகளால் உருவங்களைத் தெளிவாக உருவாக்கி கணினியில் சேமித்து வைக்கும் வரைபடத் தொகுப்பாகும். எம்ப்ராய்டரி முறைகள் (Embroidery Systems) துணியில் தேவையான வண்ணங்கள் மற்றும் தையல்களை பல்வேறு வடிவத்தில், பல்வேறு பகுதிகளில் கொடுப்பது அவசியமாகிறது. நமக்குத் தேவையான விவரங்களைக் கணினியில் சேகரித்து வைத்து, நமது பணியினை எளிதில் செய்யலாம். ஸ்கேன் செய்யப்பட்ட உருவப் படங்களையும் இதில் பயன்படுத்தலாம். எண்களைக் குறித்துக் காட்டும் முறை (Digitizing System) இது X, Y என்ற தொடர்களை ஒருங்கிணைத்து, தேர்ந்தெடுத்த அச்சு மாதிரிகளை சுற்றி வரையறுத்து அச்சிடும் முறையாகும். கிரேடிங் செய்தல் (Grading System) கிரேடிங் என்பது குறிப்பிட்ட காகித மாதிரியிலிருந்து கூடுதலாக்கப்பட்ட அளவு அல்லது குறைக்கப்ட்ட அளவு மாதிரிகளை தயாரிக்கும் முறையாகும். இம்மாதிரியை நடுத்தர நிலை அளவுக்கு தயாரித்த பிறகு குறைந்த நிலை, கூடுதல் நிலை மாதிரி தயாரித்தல் முறை மொத்த உற்பத்திக்கு அவசியப்படுகின்றன. “வளர்ச்சி புள்ளிகள்” என சில புள்ளிகள் மாதிரிகளின் அளவுகளில் அதிகமாகி பல்வேறு உடல் அளவுகள் ஆன 32/34/36 என குறிக்கப்படுகின்றன. ஓர் உடையின் மாதிரியை முதலில் நடுத்தர அளவுகளைக் கொண்டு தயாரிக்க வேண்டும். அதன் பிறகே அளவுகளுக்கு கிரேடிங் செய்ய வேண்டும். அடையாளக் குறி உருவாக்கும் முறை (Marker Making System) இம்முறையைப் பயன்படுத்தும் போது துணி வீணாவது குறைகிறது. மேலும், வரிகளுடைய துணிகளிலும் அடையாளக் குறியைப் பயன்படுத்தலாம். வெட்டுவதற்கான செயல்முறை (Cutting Operation) அடையாளக் குறியின் (Master Making) வழிகாட்டுதல் படி தானியங்கி வெட்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே ஆடை தயாரிப்பில் CAD சக்தி வாய்ந்த, சிறப்பு அம்சம் மற்றும் விரும்பிய பயன் அளிக்கக் கூடியதாகவும் திகழ்கிறது. ஆடை வடிவமைப்பாளர்களுக்கு CAD ஒரு புதிய வடிவத்தை உருவாக்கவும், அதே சமயத்தில் சிறந்த பயனை அளிக்கக் கூடிய வகையில் குறைந்த நேரத்தில் செய்து முடிக்க உதவுகிறது. ஆடை தயாரிப்பின் ஒவ்வொரு தொகுதியிலும் நெசவு CAD, அச்சிடும் CAD, அடையாளக் குறி உருவாக்கும் மென்பொருள் CAD போன்றவை பயன்படுத்தப்படுகிறது. கணிப்பொறி வரைகலை - வன்பொருள் மற்றும் மென்பொருள் CAD - (Hardware Software) பொதுவாக கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவை பின்வருமாறு விவரிக்கப்படுகின்றன. வன்பொருள் (Hardware) கணினி வன்பொருள் என்பது கவனிக்கத்தக்க கருவியாகும். கணினியின் திரை (Monitor), Hard Drive, கீ போர்டு மற்றும் விசைப்பொறி (Mouse) ஆகிய கருவிகள் கணினி வன்பொருளில் அடங்கும். இதர பிரத்யேக சாதனங்களான திட்டம் வகுப்பது (Plotters) எண்களை குறித்துக் காட்டும் அட்டவணை (Digitizing Tables) அல்லது அச்சிடும் இயந்திரம் (Printers) வன்பொருள்களுடன் சேர்த்துக் குறிப்பிட்ட சில வேலைகளைச் செய்கிறது. வன்பொருள் இயக்கும் முறைகள் (Operating System) வன்பொருள் மூலம் மென்பொருளின் திட்டங்களை அறிந்து கொள்ள உதவும் வழிமுறையே இயக்கும் முறைகள் என கூறப்படுகிறது. இவ்விதமாய் இயக்கும் முறைகள் மென்பொருள் திட்டங்களுடன் இணைத்து பயன்படுத்தப்படுகின்றன. சில மென்பொருள் திட்டங்கள் குறிப்பிட்ட முறைகளில் மட்டுமே இயங்கும். வின்டோஸ் (Windows), லினெக்ஸ் (Linux) அல்லது மேக் (Mac) ஆகியன இயங்கும் முறைகளின் உதாரணங்களாகும். மென்பொருள் (Software) மென்பொருள் திட்டங்கள் என்பன குறிப்பிட்ட சில வேலைகளைச் செய்வதற்காக எழுதப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு, ஆவணங்கள் தயாரித்தலில் பொதுவாக மென்பொருள் திட்டம் மைக்ரோசாஃப்ட் (Microsoft Office) பயன்படுத்தப்படும். கோரல் ட்ரா (Corel Draw) போன்ற மென்பொருள் திட்டங்களின் மூலம் வடிவத்தை உருவாக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ பயன்படுத்தப்படுகிறது. ஒரு மென்பொருள் திட்டத்தின் சிறப்பு பண்பானது பல தரப்பட்ட செயல்பாடுகளை செய்யக்கூடியதாகவும் உள்ளது. கோரல் ட்ராவை வரைபட வடிவமைப்பு மற்றும் நாகரீக ஆடை வடிவமைப்பிலும் பயன்படுத்தலாம். சில மென்பொருள் திட்டங்கள் ஒரு சில குறிப்பிட்ட பிரிவுத் துறைக்காகவே படைக்கப்பட்டிருக்கும் காரியத் திட்டங்களாகும். உதாரணமாக, ஸ்டோர்க் (Stork) என்பது பிரத்யேக மான வடிவமைப்பிற்காகவே உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் திட்டமாகும். துணிகளுக்கான மென்பொருள் (Textile Software) இம்முறையில் CAD பெரும் உதவி புரிவதால், குறிப்பிட்ட பிரத்யேக மென்பொருளை துணி உற்பத்தியிலும், ஆடை தயாரித்தலுக்கும் உருவாக்க முடிகின்றது. காலணிகள், தொப்பிகள், கைப்பைகள் போன்றவைகளை வடிவமைக்க மென்பொருள் இருப்பது போல் நாகரீக உடைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஐயப்பாடுகளுக்கு ஏற்ப மென்பொருள்களின் மூலம் தீர்வு காணப்படுவது போல் வடிவமைக்கப்பட்டு அல்லது நெய்து உருவாக்கப்பட்ட ஜக்கார்டு துணிகளின் ஐயப்பாடுகளுக்கும் தீர்வு உள்ளது. மேலும், ஆடைகளின் மாதிரி வடிவமைப்புகள் மற்றும் வீட்டை அழகுபடுத்தும் வல்லுநர்கள் மற்றும் உத்யோக சம்பந்தமானவர்கள் மூலம் எளிதாகக் கிடைக்கிறது. மிக துல்லியமாக துணிகளை வெட்டும் முறைகள், வெட்டித் திட்டமிடும் முறைகள் மாதிரி வடிவமைப்புகள், கிரேடிங் மற்றும் அடையாளக்குறி உருவாக்குதல் என அனைத்துப் பிரிவுகளுக்கும் துணிகள் தொடர்புடைய ஒவ்வொரு பணிகளுக்கும் பெயரிட்டு மென்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவே ஆடை தயாரிப்புத் தொழிற்சாலையில் தொழில்நுட்பம் செய்துள்ள புரட்சியாகும். கணிப்பொறி வரைகலையின் மென்பொருள் வகைகள் (Types of CAD System) மென்பொருள் உருவாக்குபவர்கள் பல்வேறு கணிப்பொறி வரைகலை மென்பொருட்களை உருவாக்கி மிகுந்த பயனை அடைந்துள்ளனர். கணிப்பொறி வரைகலை மென்பொருட்கள் பல, இரு பரிமாண வடிவமைப்புகளையும், முப்பரிமாண வடிவமைப்புகளையும் அளிக்கின்றன. உலகின் வெவ்வேறு மூலைகளில் இருக்கும் இருவர் இணைந்து ஒரு பொருளை வடிவமைத்து உருவாக்க கணிப்பொறி வரைகலை (CAD) மென்பொருள் மற்றும் இணையதளம் (Internet) ஆகியவற்றின் மூலம் எளிதாகச் செய்திட சாத்தியம் உள்ளது. ஓவியர்கள் (Artists), இயந்திர (Mechanical), மின்னணு (electronic) மற்றும் கட்டிட (Civil) பொறியாளர்கள், கட்டிடக்கலை வல்லுநர்கள் (Architects) மற்றும் கட்டிடத்தின் உட்புறப்பகுதியினை அலங்கரிப்பவர்கள் (Interior Decorators) என கணிப்பொறி வரைகலை மென்பொருளை அவரவர் வடிவமைப்பின் செயல் பாட்டிற்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர். வடிவமைப்பாளர்கள் இருவகையான கணிப்பொறி வரைகலை மென்பொருள்களுள் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். தற்போது பயன்பாட்டில் உள்ள 2-D கணிப்பொறி வரைகலை மென்பொருளையோ அல்லது தொழில் நுட்பத்திலே மேம்படுத்தப்பட்ட 3-D கணிப்பொறி வரைகலை மென்பொருளையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சில பயன்பாடுகளுக்கு 2-D கணிப்பொறி வரைகலை ஆதாரமாக விளங்குகிறது. AUTOCAD, CAD KEY, CADDS-5, MEDUSA, CATIA V4 முதலியன 2-D கணிப்பொறி வரைகலை மென்பொருளுக்கு உதாரணங்களாகும். வடிவமைக்கும் மென்பொருள் கோரல் வரைபடங்கள், அடோப் விளக்கப்படங்கள், அடோப் போட்டோ ஷாப் ஆகியன பல்வேறு துறைகளில் உள்ள வடிவமைப்பாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் வெளியீட்டு மென்பொருளில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரசித்தி பெற்ற திட்டங்களாகும். கோரல் வரைபடங்கள் கோரல் வரைபடம் என்பது வெக்டார் வரைகட்டப்பட்ட மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை பயன்படுத்தும்போது பயன்படுத்துபவர் உலகத் தரம் வாய்ந்த விளக்கப்படங்களை 16.7. மில்லியன் நிறங்களைப் பயன்படுத்தி உருவாக்க உதவுகிறது. முக்கிய அம்சங்கள் அடிப்படை முறையில் இருந்து விளக்கப்படங்களை உருவாக்கவும். வடிவமைப்புகளை சிறப்பாகச் செய்யவும், ஸ்கேன் செய்யப்பட்ட வடிவமைப்பின் போட்டோக்களை அலங்கரித்து பயன்படுத்தவும், பல வழிகளில் வடிவமைப்புகளை ஏற்றுமதி செய்யவும் பயன்படுகிறது. வெக்டாரை அடிப்படையாகக் கொண்ட வரைபட திட்டத்துடன் பெரிய சூத்திரத்தைக் கையாண்டு நுட்பமான அம்சங்களைக் கொண்ட வரைபடங்களை பயன்படுத்தி வடிவமைப்பை சிறக்கச் செய்யலாம். வடிவமைப்பு தொழில் நுட்ப விளக்கப்படங்கள், விளம்பரங்கள், வெளியீடுகள் மற்றும் இணையதள வெளியீடுகளில் இருந்து தத்ரூபமான வடிவமைப்புத் திட்டத்தைப் பெற சிறந்த கருவியாக உள்ளது. பயன்கள் முழு வண்ணத்தில் தோற்ற விளக்கப்படங்கள் சிக்கலான வடிவமைப்பு வரைபடம் நாகரீக வடிவமைப்பு வடிவங்கள் உயிரோட்டமுள்ள புகைப்பட வடிவமைப்பு உருவம் அசல் உருவங்கள் அனிமேஷன் வடிவமைப்பு வடிவமைப்புகளின் நூலகங்கள் திடமற்ற நோக்கமுடைய உண்மைப் பிரதியில் இருந்து உயர் தரமான வரைபடங்கள் வலைபக்க வடிவமைப்பு அடோப் விளக்கப்படங்கள் அடோப் விளக்கப்படங்கள் வடிவமைப்பு மற்றும் உருவ வடிவ மாதிரியை தயாரிக்கும் மென்பொருளாகும். விளக்கப்படம் என்பது தையல்காரர் உருவாக்கும் நாகரீக பயன்பாடுகள் அல்ல. குறிப்பிட்ட பயன்பாடுகள் தவிர இன்னும் பலவற்றையும் அடோப் விளக்கப்பட மென்பொருள் மிக சுலபமாக முடித்துவிடும். இந்த அடோப் விளக்கப்பட்ட மென்பொருள் அனைத்து பணிகளையும் செய்யக்கூடியது. வரைகட்ட வடிவமைப்பு, நாகரீக வரைபடங்கள், நாகரீக அச்சுக்கள், இன்னும் பல. விளக்கப்பட மென்பொருள் என்பது முதலாவதும், சிறந்ததுமான நாகரீக வடிவமைப்பின் தயாரிப்புக் கருவியாக நாகரீக வடிவமைப்பால் தயாரிக்கப்பட்டது. தயாரிக்கப்பட்டவை போதுமான அளவு அதிக தரத்துடன் நேரடியாக தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு பின்பு பிரதிகள் எடுத்துத் தயாரிக்கப்படுகின்றன. தொழிற்நுட்ப முறையில் வரைபடம் சரியானதாகவும், விரிவான ப்ளாட்களும் அடோப் விளக்கப்படங்களின் மூலமாக செயல்படுத்தப்படுவதாக கருதப்படுகிறது. கணினி மூலம் உருவாக்கப்பட்ட ப்ளாட்டுகள் மிக்க ஒழுங்கமைப்புடன் தெரிவதாக கூறப்படுகிறது. ஆனால் கைகளால் ப்ளாட் வரையப்பட்டு இருந்தால் தொழிற்நுட்பத்தில் இருந்து பார்த்து வரைவதன் மூலம் தெளிவாக தெரியச் செய்யப்படுகிறது. அடோப் போட்டோஷாப் அடோப் போட்டோ ஷாப் வடிவமைப்பு என்பது முடிவில்லாது வளர்ந்து கொண்டே இருக்கும். முதலில் போட்டோவை மெருகூட்டி தேவையற்றதை நீக்கி, குறிப்பாக வரைகட்ட வடிவமைப்பை தொழிற்சாலைகளில் பயன்படுத்தினர். இது உண்மையில், துணி வியாபாரச் சந்தையில் முழுத் தேவைகளையும் பூர்த்தி செய்யாது. எவ்வாறாயினும் வடிவமைப்பாளர்களுக்கு பேருதவியாக CADஐ பயன்படுத்த வழிவகை செய்துள்ளது. மாதிரிகளை தயாரிக்கும் மென்பொருள் கெர்பர் கணிப்பொறி வரைகலை, பொதுவாக CAD என அழைக்கப்படுகிறது. அதிதொழிற்நுட்பவியல் கலை மற்றும் தீர்வுகளுக்கு, விநியோகித்தில் முன்னோடியாக திகழ்பவர் கெர்பர் என்பவர். அவரது கம்பெனி தானே உருவாக்கும் மாதிரி வடிவமைப்பு, கிரேடிங் மற்றும் குறியீடு செய்தல் ஆகியவற்றிற்கு மென்பொருள் மற்றும் வன்பொருளை உருவாக்குகிறது. 1960லிருந்து கம்பெனிகளுக்கு தீர்வு காணவும், இன்றைய தொழில்நுட்ப கலை மற்றும் நாகரீகத்தின் வேகத்திற்கு ஈடுசெய்யவும் முடிகிறது. கெர்பரின் குறிக்கோள் என்னவெனில், வடிவமைப்பாளர்களும், மாதிரிகளை உருவாக்குபவர்களும் சிறந்த சூழலில், வேகமான உற்பத்தியில் நிறைவு பெற்ற வடிவமைப்பு ஆடைகள் மற்றும் பொருட்களை உருவாக்க உதவுதல் ஆகும். கெர்பரின் தொழில்நுட்ப கலை, ஆடை, மரச்சாமான்கள், போக்குவரத்து, தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் துணிகள் மற்றும் கூட்டுப்பொருள் தொழிற்சாலைகள் போன்றவற்றில் பயன்படுகிறது. தைக்கப்பட்ட பொருளாக இருந்தால் அது கெர்பரால் முறையாக உருவாக்கப்பட்டதாகும். மாதிரி வடிவமைப்பு மென்பொருள் (Pattern Designing Software - PDS) என்பது இத்தாலி மற்றும் ஜெர்மனியில் பரவலாக உள்ளது. மற்றொரு புதிய வர்த்தக ரீதியான வளர்ச்சி பெற்ற மென்பொருள் எதுவெனில், மாதிரி உற்பத்தி செய்யும் மென்பொருள் ஆகும் (Pattern Generation Software - PGS). கணிப்பொறி வரைகலையினால் ஏற்படும் நன்மைகள் (Advantages of CAD) மிக எளிதாக இயக்கக்கூடிய வடிவமைப்பு முறை ஆகும். கணிப்பொறி வரைகலையினால் பல நன்மைகள் உள்ளன. பழைய முறையில் வசதியின்றி, உடலை வருத்தி செய்த வடிவமைப்புகளை தற்போது மிக சுலபமாக அதே சமயத்தில் குறைந்த செலவிலும், நேரம் வீணாவதைக் குறைத்தும் செய்ய முடிகிறது. வாடிக்கையாளர்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் செயல்பாட்டினைக் கட்டுப்படுத்தி வடிவமைப்புகளைச் செய்யலாம். கணிணி கோப்பின் மூலம் (Computer Files) விவரங்களை எளிதாகச் சேமித்து, அனுப்பி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். எண் வரிசைகளை Floppy Disc, Zip Disc, CD-ROMகளில் அல்லது Hard Driveகளிலும் சேமித்து இடத்தை மிச்சப்படுத்தலாம். மேலும் இவற்றை எளிதாக அமைத்து வேகமாக செயல்படுத்தவும், சீர்படுத்தவும் முடியும். வடிவமைப்புகளை எளிதாகப் பழகவும், தனிப்பட்ட முறையில் எந்த நேரத்திலும் திருத்தங்களைச் செய்து பதிப்பிற்கு தயார் செய்யும் போது செலவு அதிகமாகாமலும், நேரம் விரயமாகாமலும் செய்ய முடியும். வடிவமைப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் மாதிரி வடிவங்களை புதியதாக உருவாக்கத் தேவையில்லை. ஏனெனில் தற்போது ஒரு குறிப்பிட்ட துணி அல்லது ஆடை பல்வேறு வண்ணத்திலும், வடிவத்தில் எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை கணினியின் திரையில் பார்த்துக் கொள்ளலாம். முடிவுரை CADன் நற்பயனையும், பயன்களையும் மனதில் கொண்டு, கணிப்பொறி வரைகலையின் மென்பொருளினை தேர்ந்தெடுக்கும்போது மிகவும் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டும். நம்மிடம் உள்ள வன்பொருளோடு ஒத்துப்போகும் மென்பொருளைத் தான் தேர்வு செய்ய வேண்டும் அல்லது வன்பொருளை புதிய மென்பொருளுக்கு தகுந்தது போல் மேம்படுத்த வேண்டும். கணிப்பொறியை இயக்குபவருக்கு போதிய பயிற்சி அளித்தால் தான் பயன்களை முழுவதுமாக அடைய முடியும். கவனத்துடன் சரியான மென்பொருளை தேர்வு செய்து கணினித்துறையில் பயிற்சி பெற்ற வல்லுநர்களைக் கொண்டு செயல்படும் போது தான் துணி தொழிற்சாலையில் தகவல் தொழில்நுட்பத்துறையின் புரட்சிகரமான பலன்களை அவர்களது வாயிலில் இருந்தபடியே அனுபவிக்க முடியும் என்பதில் மாற்றமில்லை . ஆதாரம்: தமிழ்நாடு அரசு பாடநூல்