முன்னுரை மாதிரிகளை தயாரித்தல் மற்றும் ஆடை வடிவமைத்தலுக்கு துணிகளைப் பற்றிய அறிவு அவசியமாகிறது. துணிகளை பற்றி அறிவதற்கு நூலின் திசை, துணியின் முன் மற்றும் பின்பக்கத்தை அறிதல், துணியின் தொடு உணர்வு போன்ற பல வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆடை உருவாக்கத்திற்கு அதிக கவனம் தேவைப்படுகிறது. ஆடைகள் கச்சிதமாக பொருந்துவதற்கு வடிவம் மற்றும் அளவுகளுக்கான வெட்டப்பட்ட துண்டுகள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். மாதிரி துண்டுகள் வெட்டப்பட்ட உடனே இணைக்கப்பட வேண்டியது அவசியம். அளவு மற்றும் வடிவத்தை பராமரிப்பதற்காக அடிப்படை தையல் மாதிரிகளில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பு தையல் மற்றும் பாஸ்டிங் தையல் அடிப்படை தையல்கள் ஆகும். துணியின் தன்மையை பார்த்தல் மற்றும் தொடுதல் மூலம் அறிதல் தற்போதைய காலத்தில் சந்தையில் பல வகை துணிகள் உள்ளன. அவை நாரின் அளவு, நிறம் அல்லது சாயம், பிரிண்டு, வேலைப்பாடு மற்றும் நிறைவு பெறுதல் ஆகியவற்றில் வேறுபடுகின்றன. ஒவ்வொரு துணியின் மாதிரியும் ஆய்வகங்களில் அதன் உழைக்கும் திறன் மற்றும் அதன் சேவை பற்றி ஆய்வு செய்து கண்டறிய இயலாத நிலை நிலவுகிறது. ஆகவே துணிகள் சம்பந்தப்பட்ட துறையிலுள்ளவர்கள் துணியை பார்த்தல் மற்றும் தொடுதலின் மூலம் அறிவதற்கு போதுமான அனுபவம் பெற்றிருத்தல் இன்றியமையாதது. இதன் மூலம் சரியான துணியை தேவைகளுக்கு ஏற்றார்போல் தேர்ந்தெடுக்கலாம். துணிகளை பார்த்தல் மற்றும் தொடுதல் மூலமாக அறிந்து கொள்வதற்கான குறிப்புகள் பருத்தி துணிகள் விரைப்பாக இருக்கும். எளிதில் கசங்கிவிடும். கசங்கினால் சுருக்கங்கள் துணியில் அப்படியே நின்றுவிடும். பட்டு துணிகள் தொடுவதற்கு மென்மையாக இருக்கும். கம்பளி துணிகள் மேற்பரப்பில் தொடும்போது சொரசொரப்பாக இருக்கும், மேற்பரப்பில் கம்பளி நார் இழைகள் தோன்றும். பாலியஸ்டர் மற்றும் ரேயான் துணிகள் பளபளவென்றும் தொடுவதற்கு மென்மையானதாகவும் இருக்கும். இவை எளிதில் கசங்காது. டுவில் துணிகள் பார்க்கும்போது சாய்வாக உள்ளது போன்ற விளைவினை ஏற்படுத்தும். தொடும்போது சொரசொரப்பான தன்மையை கொண்டிருக்கும். நேப்பட்டு துணிகள் (பைல் மற்றும் வெல்வெட் முடிச்சுகள் அல்லது சிறு இழைகளை கொண்டிருக்கும். இவை தொடுவதற்கு மென்மையாக இருக்க வேண்டும். நைலான் மற்றும் சாட்டின் துணிகள் வளுவளுப்பாக இருக்கும். இவ்வகை துணிகள் ஒளியை பிரதிபலிக்கும். துணியில் நூலின் திசையை கண்டறிதல் துணி நெய்தல் மற்றும் ஆடை உருவாக்கத்தில் நூலின் திசை மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. நூலின் திசை நாகரீக ஆடைகளில் முக்கிய பங்கினை வகிக்கிறது. நூலின் திசை துணிகள் மற்றும் ஆடைகள் நிறைவு செய்யப்படுவதில் மேம்படுத்தி காட்டுவதற்கு உதவுகிறது. எனவே துணியில் உள்ள நூலின் திசையை பற்றிய அறிவு வருங்கால ஆடை வடிவமைப்பாளர்கள். ஆடைகளை உருவாக்குபவர்கள் மற்றும் துணி தொழிற்சாலைகளில் பணிபுரியும் நபர்களுக்கு பெரிதும் உதவும். துணியின் நூல் திசை (Grain) துணியின் நூல் என்பது நெசவு செய்யப்பட்ட துணியில் நூலின் திசையை குறிக்கிறது. துணியின் செல்வெட்ஜ் ஓரத்திற்கு நேராக செல்லும் நூல் வார்ப் அல்லது நேர்கோட்டு நூல் என்று கூறப்படுகிறது. துணியின் செல்வெட்ஜ் ஓரத்திற்கு குறுக்காக செல்லும் நூல் நிரப்புபவை அல்லது குறுக்கு கோட்டு நூல் என்று கூறப்படுகிறது. செல்வெட்ஜ் என்பது துணியில் நிறைவுசெய்யப்பட்ட கெட்டியான ஓரம் ஆகும். படத்தில், துணியின் நூல் ஜியோமெதி முறையில் அல்லது வார்ப் நூலின் நிலை மற்றும் நிரப்பும் நூலின் நிலையும், துணியில் காண்பிக்கப்பட்டுள்ளது. நூலின் திசையை பொறுத்து (Grain) கிரைன் இருவகையாக பிரிக்கப்படுகிறது. அவை ஆன்-கிரைன் (on-grain) மற்றும் ஆஃப் கிரைன் (off-grain). நேர்கோட்டு நூலும் மற்றும் வெப்ட் நூலும் சரியான விகிதத்தில் அல்லது திசையில் இணைந்திருப்பது ஆன்-கிரைன் (on-grain) எனப்படும். இதுவே சரியான நூல்திசையாக கூறப்படுகிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடை வடிவமைப்பின் போது நூலின் திசை சரியாக இல்லையென்றால் ஆடையின் அமைப்பு மற்றும் பொருந்துதல் சரியாக இருக்காது. குறுக்கு நூல் அல்லது நேர்கோட்டு நூலும் வெப்ட் (Filling yarns) சரியான திசையில் இல்லாமல் இருப்பது ஆஃப் கிரைன் ஆகும். நூலிழைகள் செங்கோணத்தில் அமையப்பெறாமல் இருக்கும். எல்லா துணிகளும் தைப்பதற்கு முன் நூலின் திசை சரிபார்க்கப்படுகிறது. நூலின் திசை சரியாக இருக்கும் துணிகளை தைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தைத்த ஆடை பார்ப்பதற்கு அழகாகவும், அணிவதற்கு ஏற்றதாகவும் இருக்கும். துணியில் நூல் குறுக்கு திசையாக (cross-grain) இருப்பவை காலர் தைப்பதற்கும், ஜாக்கெட் தைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், இவற்றிற்கு நீளும் தன்மை உண்டு. துணியின் முன் மற்றும் பின் பக்கத்தை கண்டறிதல் (Identification of Right and Wrong side) பெரும்பாலான துணிகளின் முன் மற்றும் பின்பக்கம் ஒரே மாதிரியாக இருக்கின்றன. அவ்வாறு இருக்கும்போது அதன் முன்பக்கத்தை கண்டறிதல் மிகவும் கடினமாக உள்ளது. சில சமயங்களில் துணியின் பின்பக்கத்தை பயன்படுத்தி, பாக்கெட் போன்ற பாகங்கள் தைக்கப்படுகிறது. இதை தெரியாமலோ அல்லது கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது. இருந்தாலும், ஒரு நல்ல ஆடை வடிவமைப்பாளர் இதை தெளிவாக கண்டுபிடித்து விடுவார். எனவே துணியின் முன் மற்றும் பின்பக்கத்தை கண்டறிதல் மிகவும் அவசியமாகிறது. எல்லா துணிகளிலும் இழை அளவுகளை பொருட்படுத்தாமல் அதன் தன்மை மற்றும் பயன்கள் சிறிய அளவில் குறிப்பிடப்பட்டிருக்கும். இவை துணியின் முன்பக்கத்தில் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். இதில் துணியின் வகை, விலை, கம்பெனி பெயர், குறியீடு, அரசு முத்திரை (texmark) மற்றும் நூலிழையின் அளவு ஆகியவை இருக்கும். இவை பார்த்தவுடன் புரியும் வண்ணம் குறிக்கப்பட்டிருக்கும். மொத்த துணியிலும் ஒவ்வொரு மீட்டருக்கும் குறிப்புகள் இருக்கும். குறிப்புசீட்டு தகவல் துணியில் ஏதும் குறிக்கப்படவில்லை என்றால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். துணியின் மடிப்பு, நெய்தல், பிரிண்ட் தன்மை மற்றும் பினிஷ் (finish) ஆகியவை வழிகாட்டியாக அமைகிறது. துணியின் முன் மற்றும் பின் பக்கத்தை கண்டறிய உதவும் எடுகோள்கள் பொதுவாக அனைத்து துணிகளின் முன்பக்கமும் மென்மையாக இருக்கும். கம்பளி மற்றும் ரேயான் துணிகள், பின்புறம் வெளியே தெரியுமாறு மடிக்கப்பட்டிருக்கும். பருத்தி அல்லது காட்டன் துணிகள் முன்புறம் வெளியே தெரியுமாறு மடிக்கப்பட்டிருக்கும். நெய்யப்பட்ட துணிகளில் டிசைன்களுக்கு பயன்படுத்திய நூல் பின்புறம் தெளிவாக தெரியும். பிரிண்ட் செய்யப்பட்ட துணிகளின் பின்புறம் மங்கலாகவும், முன்புறம் பளிச்சென்று இருக்கும். ஏனெனில் பிரிண்டிங் பசை துணியின் முன்பக்கம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. துணியின் ஓரம் முன்புறம் தெளிவாகவும் பின்புறம் மங்கலாகவும் இருக்கும். வெல்வெட் மற்றும் பைல் (Pile fabric) துணிகளின் முன்புறத்தில் நூல் தெளிவாகவும், தளர்வான இழையாகவும் தெரியும். டுவில் துணியில் நூல் முன்பகுதியில் கீழ்நோக்கி செல்லும். இருப்புத் தையல் வரிசையாக, ஒழுங்கான முறையில் தைக்கப்படுகின்ற இயந்திரத் தையலே இருப்புத் தையல் என வரையறுக்கப்படுகிறது. ஒரு கடினமான துணியின் வெட்டப்பட்ட ஓரம் மற்றும் தைக்க வேண்டிய இடத்திற்கும் நடுவில் இருப்புத் தையல் தைக்கப்படுகிறது. வெட்டப்பட்ட ஓரத்தில் இருந்து 0.2 செ.மீல் தைக்கப்படுகிறது. இதனால் மாதிரிகளின் மூலமாக வெட்டப்பட்டவைகளில் கோடுகளும், இழை அமைப்பும் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக இருப்புத் தையல் கழுத்து பாகம், கைகள் இணைப்பு பாகம், புஜத்துவார பாகம் மற்றும் தோள்பாகம் போன்ற வளைவான ஓரங்களில் தைக்கப்படுகின்றது. வடிவம் மாறாமல் இருக்க தைக்கப்படுகிறது. நூல் இழை பிரியும் திசையின் எதிர்பக்கத்திலிருந்து போடப்படுகிறது. துணிகளின் தன்மையை சார்ந்து ஆடையின் பகுதி மாதிரிகள் வெட்டப்படும்போது குறுக்கு இழையில் வெட்டப்பட்ட ஓரமானது இழுதன்மை பெற்றிருக்கும். குறிப்பாக, கிரேப்கள் மற்றும் கனமான வழுக்கக்கூடிய நழுவும் துணிகளில் இழுதன்மையை காணமுடியும். டஃபேட்டா மற்றும் கான்வாஸ் துணிகள் தவிர மற்ற அனைத்து வகை துணிகளிலும் இழுதன்மை ஏற்படும். இருப்புதையல் செய்வதன் நோக்கமே குறுக்கு இழையில் வெட்டப்பட்ட துணியின் ஓரம் பிரிந்து விடாமலும் மாதிரியின் சரியான அளவு மாறாமல் இருப்பதற்காகவும், இருப்புத் தையல் செய்யப்படுகிறது. துணியில் நீளகோடு மற்றும் குறுக்குக் கோடு நூலின் பண்புகள் என்னவெனில், அவை நீளும் தன்மை அற்றது. ஆனாலும், லேசான சாய்ந்த குறுக்குக்கோடு என்பது சாய்வான குறுக்கு நூல் இழைகோடு ஆகும். இந்த சாய்வான குறுக்கு நூல் இழை இழுதன்மை கொண்டிருக்கும். ஆடையில் இது போன்ற குறுக்கு அல்லது வளைவான ஓரங்களாவன முன் மற்றும் பின் ஆரம் ஹோல்கள், முன் மற்றும் பின் தோள் பகுதி, முன் மற்றும் பின் கழுத்து ஓரங்கள் மற்றும் ஆடையின் டிசைனுக்கு ஏற்ற பிற ஓரங்கள் ஆகும். என்றாலும் சில வளைந்த ஓரங்களில் இருப்புத் தையல்கள் செய்யக்கூடாது. ஒருவரது உடலுடன் கச்சிதமாக பொருந்த வேண்டிய பகுதிகளைக் கொண்ட ஆடைகளின் ஓரங்களில் இருப்புத்தையல் அவசியம். ஆனால் உடலோடு ஒட்டாமல் தனித்து உள்ள ஆடையின் பகுதிகளில் இருப்புத் தையல் அவசியம் இல்லை. ஆரம்ப காலத்தில் உள்ள தையல்காரர்களுக்கு, இருப்புத் தையல் நேரத்தை மிச்சப்படுத்தும். கீழ்வரும் பல்வேறு ஓரங்களுக்கு இருப்பு தையல்கள் பயன்படுத்தப்படுவதில்லை. நீளவாக்கில் அல்லது குறுக்கு வாக்கில் நூலிழைகள் கொண்ட ஓரங்கள் வெட்டப்படும்போது. கழுத்துப்பட்டியின் பொய்த்துண்டின் வெளிப்புற ஓரங்கள் (வெட்டப்படாத ஓரங்கள்) கை இணைப்பு பகுதி. இருப்புத் தையலிடுவது எப்படி? ஆடைக்காக துணி வெட்டப்பட்ட உடன், தையற்காரர்களின் டேக்குகள் (tacks) செய்யப்பட்டவுடன் அல்லது அதற்கு முன்பாகவோ, ஒவ்வொரு மாதிரி துண்டாக பிரித்து எடுத்து, தேவைப்படும் ஓரங்களில் இருப்புத் தையல் செய்ய தயார்படுத்தவும். இருப்புத் தையல் துணியின் ஒரு கனத்தில் மட்டுமே செய்யப்படுகிறது. தையல் இயந்திரத்தை பயன்படுத்தி சற்று நீண்ட தையல்களாக, மாதிரியின் அளவில் தைத்து முடித்து நிறைவு பெற்றபின் பிரித்தெடுத்து விடக்கூடியதாக தைக்க வேண்டும். அதே சமயத்தில் ஓரங்களை ஒழுங்காக இணைக்க உறுதியாக இருக்குமாறு தைக்க வேண்டும். அநேக துணிகளில், அதிக எடையுடைய, கம்பளிகள் தவிர, பிற துணிகளில் 1/0 அங்குலங்கள் நீளமாக தைக்கப்பட வேண்டும். ஒரு அங்குலத்தில் 10 தையல்கள்) அதிக எடையுள்ள கம்பளி ஆடைகளில் 1/8 அங்குள நீள தையல்கள் போட்டால் தான் இலகுவாக மேலே இழுக்க முடியும். ஆடைகளுக்குப் பொருத்தமான நூல்களை பயன்படுத்தவும். ஏனெனில் பொருத்தமான நூலை பயன்படுத்தினால் கச்சிதமாக ஆடை தைக்கப்பட்ட பிறகு நூலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆடையின் உட்பக்கம் பார்க்கும்போது அழகாக இருக்கும். இணைத்து தைக்க வேண்டிய இடத்திற்கு வெளியே சிறிது இடம் விட்டு இருப்புத் தையலை தைக்கவும். வெட்டப்பட்ட ஓரத்தில் இருந்து 1/8 முதல் 1/12 அங்குலத்தில் இருப்புத் தையல் தைக்க வேண்டும். அநேக தையல்கலைஞர்கள் 1/8 அங்குல இடைவெளிவிட்டு இணைப்பார்கள். ஏனெனில் இருப்புத் தையல்கள், மாதிரிகள் இணைக்கப்பட்ட பின் வெளியே தெரியாது. மேலும் இருப்பு தையல்கள் நீக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை. 1/8 அங்குல அளவு விட்டு இருப்புத் தையல் செய்யும்போது, வழுவழுப்பான துணிகளுக்கும், மிக மெல்லிய துணிகளுக்கும், நிரந்தர தையல் செய்ய வசதியாக இருக்கும். வெட்டப்பட்ட பகுதியில் இருந்து 1/2 அங்குல அளவில் தைப்பது மிக பயனுள்ளதாக இருக்கும். இணைப்பு இடத்திற்கு பக்கத்தில் இருப்புத் தையல் இடும்போது துணியினை நழுவவிடாது தைக்க வசதியாக இருக்கும். துணியின் ஒரு கனத்தில் மட்டுமோ, இரு கனத்தில் தைக்கப்படுவதாலோ மற்றும் வழக்கமாக நீண்ட தையல் பயன்படுத்துவதாலும் துணியில் சுருக்கங்கள் விழும் நிலை ஏற்படும். மெதுவாக இயந்திரத்தினுள் இருந்து துணியை வெளியே எடுக்க வேண்டும். எவ்வளவு துணியை பிடிக்க வேண்டும், எவ்வாறு இழுக்க வேண்டும் என்பது துணியின் தன்மையை பொறுத்து அமையும். ஒரு மாதிரி துண்டின் ஒரு ஓரத்தில் இருப்புத் தையலிட்டு, துணியை இழுத்து பிடித்துக் கொண்டு தைக்கும்போது இயந்திரத்தில் இருந்து வெளிவரும்போது சுருக்கங்களினின்றி வரும். பிறகு, மாதிரி துண்டினை துணியின் மீது வைத்து, இருப்புத் தையல் செய்யப்பட்ட ஓரம், மாதிரியை ஒத்து உள்ளதா என்று பார்க்கவும். இப்போது மாதிரியை விட துணி சிறியதாக இருப்பின், துணியினை திடமாக பிடித்துக் கொண்டு தையல் இயந்திரத்தினுள் ஓடவிடவும். ஆனால், துணி மாதிரியை விட பெரியதாக இருந்தால், துணியினை சற்று தளர்வாக பிடித்துக் கொள்ளவும். துணியின் ஒவ்வொரு ஓரத்தையும் வெவ்வேறு நூல்களால் இருப்புத்தையல் தைக்கவும். தைக்கும்போது சிறிய அளவு நூல்களை முனைகளில் விட்டு வெட்டவும். காகித மாதிரி துண்டுகளை ஒவ்வொரு முறையும் தைத்த துணி மீது வைத்து, ஓரங்களை சரிபார்க்கவும். சரியான அளவுகளில் தைக்கப்பட்டுள்ளதா, அளவுகள் காகித மாதிரிகளை ஒத்து பராமரிக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும். ஒரு ஓரம் மிக நீளமாக இருந்தால் பாபின் நூலினை, அந்த ஓரம் காகித மாதிரி அளவினை ஒத்திருக்கும்படி அமையும் வரை இழுக்கவும். ஒரு சமயம், ஓரம் மேலிழுத்து இருந்தாலோ அல்லது சிறிதாக இருந்தாலோ, தையல்களை தளர்வாக்கி தேவைப்பட்டால் தையலை வெட்டிவிட்டு, காகித மாதிரியை ஒத்து இருக்குமாறு அமைய செய்ய வேண்டும். இணைப்புத் தையல் இரண்டு மாதிரித் துண்டுகளை இயந்திரத்தில் தைக்கும் முன் இணைப்பதே இணைப்புத் தையல் எனப்படும். இணைக்கப்பட வேண்டிய மாதிரித் துண்டுகளை ஒன்றாக சரியான முறையில் வைத்து குண்டூசியால் இணைக்கப்படுகிறது. பிறகு கைகளால் ஊசி கொண்டு சிறிய ஓட்டுத் தையல்கள் துணியின் நிறத்திற்கு ஏற்ற நூலை பயன்படுத்தி தைக்கப்படுகிறது. இந்த தையல் மாதிரிகள் உறுதியாக பிரியாமல் இருக்கவும், நழுவாமல் இருக்கவும் உதவுகிறது. இந்த இணைப்புத் தையல் இயந்திரத்தில் தைக்கக் கற்றுக்கொண்டு இருக்கும் ஆரம்பகால தையல் கலைஞர்களுக்கு சுலபமாக தைப்பதற்கு உதவியாக இருக்கும். ஊசியால் இழையோட்டல் (Pin Basting) குண்டூசிகளை பயன்படுத்தி உறுதியான துணிகளின் ஓரங்களை நன்றாக பொருத்தலாம். உறுதியான துணியின் தைக்கும் ஓரங்களில் (தைப்பதற்கு முன்) குண்டூசிகளை பயன்படுத்த வேண்டும். இம்முறைக்கு பின்னால் இழையோட்டல் (அ) ஊசியால் இழையோட்டல் என்று பெயர். குண்டூசிகளை நீக்குவதற்கு ஏற்றவகையில் பயன்படுத்த வேண்டும். தைக்கும் பொழுது தையல் பொறி ஊசி குண்டூசிகளின் மேல் படாமல் தைக்க வேண்டும். எனவே, குண்டூசிகளை தைக்கும் கோட்டிற்கு 1 செமீ. தள்ளி பொருத்த வேண்டும். இம்முறை சுலபமாகவும், தைக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் உள்ளது. இந்த முறை லேசான துணிகளுக்கும், மிகுந்த கடினமான பேண்ட் துணிகளுக்கும் ஏற்றதல்ல. இந்த பின்பாஸ்டிங்கிற்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பெல்பின்கள் பயன்படுத்தப்படுகிறது. தையல் பொறியால் இழையோட்டல் (Machine basting) தையல் பொறியின் உதவியால் போடப்படும் இழையோட்டல் தையலின் அளவு / நீளத்தை சரிசெய்ய திருகாணியை மேலே பொருத்த வேண்டும். இதன் மூலம் தையல் பெரிதாக விழும். அதாவது ஒரு அங்குலத்திற்கு 6 முதல் 8 தையல்கள் இருக்கும். உறுதியான தையல் போட்ட பிறகு இத்தையலை எளிதாக பிரிக்கலாம். இவ்வகை இழையோட்டல் பட்டு வகை துணிகளுக்கு உபயோகப்படுத்தலாம். வெல்வெட், சாட்டின் போன்ற துணிகளுக்கு ஏற்ற இழையோட்டலாக இது அமையும். தையல் கற்போருக்கு இந்த இழையோட்டல் மிகவும் பயன்படும். கையால் இழையோட்டல் (அ) ஓட்டு தையல் உடையின் கழுத்து பகுதி, புஜ வளைவு மற்றும் வளைவான ஓரங்கள் போன்ற இடங்களுக்கு கையால் இழையோட்டல் மிகவும் உபயோகமாகிறது. சமமான இழையோட்டல், சமமற்ற இழையோட்டல் போன்ற தையல்களை உபயோகப்படுத்தியும் வளைவான இடங்களை தைக்கலாம். உறுதியாக தைக்க வேண்டுமென்றால் கெட்டி தையலை பயன்படுத்தலாம். ஸ்லிப் பாஸ்டிங் ஆதார தையல் உடையின் வளைவான ஓரங்களையும், குறுக்காக வெட்டி தைக்கும் ஓரங்களை உறுதிபடுத்தவும் பயன்படுகிறது. தைக்கும் கோட்டிற்கும் தைப்பதற்கு விடப்பட்டுள்ள இடத்திற்கும் நடுவில் தைக்கப்படுவது ஆதார தையல் எனப்படும். தையல் பழகுபவர்களுக்கு இம்முறையில் தைப்பது மிகவும் உதவுகிறது. பிறகு தையல் பொறியில் தைப்பதன் மூலம் உறுதியான தையலை பெறலாம். முதலில் இத்தையலை நேராக தைக்க பழகவும், பிறகு வளைவுகளில் தைக்க வேண்டும். இது கழுத்து பாகம், தோள்பாகம், புஜ வளைவு ஆகிய பகுதிகளை இணைக்க உதவுகிறது மற்றும் v போன்ற இடத்தை இணைக்க பெரிதும் உதவுகிறது. ஆதார தையலை வேறு நிற நூலால் தைக்க வேண்டும். அப்பொழுது தான் தையல் பொறியில் தைத்த பின் சுலபமாக பிரிக்க உதவிபுரியும். முடிவுரை இந்த தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளவை அனைவருக்கும், துணியை பற்றி அறிவதற்கு உதவும். துணியை பார்ப்பது மற்றும் தொடுவதன் மூலம் அறிய முடியும். எனவே துணியின் தேவையை புரிந்து தேர்ந்தெடுக்க உதவும். நூலின் திசை துணியின் அடிப்படையாக உள்ளது. ஆடை வடிவமைப்பிற்கு நூலின் திசையை அறிதல் இன்றியமையாததாக உள்ளது. ஆடை வடிவமைப்பாளர் மட்டுமல்லாது அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது. துணியின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தை பற்றி அறிய உதவுகிறது. இதன் மூலம் தேவையற்ற குழப்பத்தை தவிர்க்கலாம். வெட்டப்பட்ட மாதிரி துண்டுகளை ஒன்றாக இணைத்து தைத்து ஒழுங்கான முறையில் ஆடையை உருவாக்க அடிப்படைத் தையல்கள் உதவியாக இருக்கின்றன. மேலும் ஆடைகளை உருவத்திற்கு ஏற்றவாறு பொருத்தமான ஆடையாக அமைக்கவும் உறுதுணையாக உள்ளன. ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்