தொழில் - அறிமுகம்

மனிதனின் அடிப்படைத் தேவையில் ஒன்று உணவு. இவ்வுணவினைப் பெற்றிட இவ்வுலகில் மனிதனால் பல்வேறு பயிர்வகைகள் பயிரிடப்படுகின்றன. இது “வேளாண் தொழில்’ எனப்படுகின்றது. அடுத்த அடிப்படைத் தேவையான உடைக்காக, பருத்தி, சணல், பட்டு, கம்பளி போன்றவை தொழிற்சாலைகளின் மூலம் ஆடைகளாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இது ‘நெசவுத் தொழில்’ எனப்படுகின்றது. இருப்பிடத் தேவைக்காக உற்பத்தி செய்யப்படும் கட்டுமானப் பொருட்களான செங்கல், இரும்பு எஃகு பொருட்கள், சிமென்ட் போன்றவையும் தொழிற்சாலைகளின் மூலமாகவே தயாரித்தளிக்கப்படுகின்றன. உண்ணத் தகுந்த பொருட்கள் பலவும், அரவை மற்றும் பதப்படுத்தும் ஆலைகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. எனவே மனிதனின் அனைத்துத் தேவைகளையும் இவ்வாறாக பூர்த்தி செய்து அளிப்பது “தொழில்’ எனப்படுகின்றது.

ஆரம்ப காலத்தில் மக்கள் தொகை மிகக் குறைவாக இருந்தது. மனிதனின் அறிவு வளர்ச்சி மற்றும் தேவைகள் குறைவாக இருந்தது. நாளடைவில் மக்கள் தொகை பெருக ஆரம்பித்தது. நாகரீக வளர்ச்சியும் அதிகரித்தது. எனவே பதினெட்டாம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி ஏற்பட்டு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்பவும் அவர்களின் தேவைக்கேற்பவும் பல்வகைத் தொழிற்சாலைகள் பெருகின. தொழில்களை உற்பத்தி நிலைகளின் அடிப்படையில் நான்கு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

முதன்மை நிலைத் தொழில்கள்

இவை வேட்டையாடுதல், மீன்பிடித்தல், வேளாண் தொழில் மற்றும் சுரங்கத் தொழில் ஆகியவனவாகும். இவை அனைத்தும் இயற்கையிலிருந்து நேரடியாக வளங்களைப் பெறும் தொழில்களாகும். இந்த முதன்மை நிலைத் தொழில்கள் யாவும் மனிதனின் அடிப்டைத் தேவைகளை நிவர்த்தி செய்கின்றன. மேலும் இவை இரண்டாம் நிலைத் தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களையும் அளிக்கின்றன.

இரண்டாம் நிலைத் தொழில்கள்

முதன்மை நிலைத் தொழிலிருந்து பெறப்படும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, மனிதனின் தேவைகளைப்பூர்த்தி செய்கின்ற தொழில்களே இரண்டாம்நிலைத் தொழில்களாகும். எடுத்துக்காட்டாக, பருத்தியிலிருந்து ஆடை தயாரித்தல், சுரங்கத் தொழிலிருந்து மனிதனுக்குத் தேவையான பொருட்கள் தயாரித்தல் போன்றவை ஆகும்.

மூன்றாம் நிலைத் தொழில்கள்

முதலிரண்டு நிலைத் தொழில்கள் மூலமாக கிடைக்கும் உற்பத்தி பொருட்களைக் கொண்டு தேவைகளை நிவர்த்தி செய்ய மேற்கொள்ளப்படும் போக்குவரத்து, வணிகம், வங்கி, தொலைத் தொடர்பு, பொழுதுபோக்கு போன்றவை மூன்றாம் நிலைத் தொழில்களாகும்.

நான்காம் நிலைத் தொழில்கள்

இது மக்களுடன் தொடர்பு கொள்ளும் பணிகளான கல்வி, ஆராய்ச்சி, நிர்வாகம், நிதி மேலாண்மை, வழக்காடுதல், மருத்துவம் போன்ற தொழில்களை உள்ளடக்கியது. இத்தொழிலுக்கு உயர்தரத்திறமை, தேர்ச்சி மற்றும் சிறப்புத்தன்மை ஆகியன தேவையாகும். மேலும் இது முதல் மூன்று தொழில்களும் சிறப்புற நடைபெற உறுதுணையாக உள்ளதொன்றாகும். இந்நான்கு நிலைத் தொழில்களின் வாயிலாக உருவான ‘மிதிவண்டியின் சிறப்பினைக் காண்போம்.

முதன்மை நிலைத்தொழில் – சுரங்கத் தொழிலிருந்து இரும்புத் தாதுவும் மணற்பாறைகளும், இரப்பர் தோட்டத்திலிருந்து இரப்பரும் கிடைக்கின்றன.

இரண்டாம் நிலைத் தொழில் – இவை எஃகு குழாய்களாகவும், கண்ணாடிகளாகவும், டயர்களாகவும் மாற்றப்பட்டு மிதிவண்டிகளாக இணைக்கப் படுகின்றன.

மூன்றாம் நிலைத்தொழில் - போக்குவரத்து மூலம் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

நான்காம் நிலைத் தொழில் – நிதி, மேலாண்மை, கல்வி, மருத்துவம் போன்றவை திறம்பட செயல்பட உதவுகின்றன.

செயற்பாட்டு பிணைப்பு

மூலப்பொருட்கள் உற்பத்தி பொருட்களாகவும், உற்பத்தி பொருட்கள் சந்தையில் விற்கப்பட்டு நுகர்ப்பொருட்களாகவும் பல்வேறு செயல்பாடுகளில் மாற்றப்படுகின்றன. இவ்வித செயல்பாடுகள் நான்கு நிலைத் தொழில்கள் மூலம் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு நடைபெறுவது "செயற்பாட்டு பிணைப்பு’ எனப்படுகின்றது.

இச்செயற்பாட்டுப் பிணைப்பு இரு வழிமுறைகளில் நடைபெறுகிறது. அவையாவன:

1. இடுபொருள் பிணைப்பு

2. வெளிபடுபொருள் பிணைப்பு

இடுபொருள் பிணைப்பு :

ஒரு குறிப்பிட்ட தொழிலுக்குத் தேவையான பொருட்களை வேறு தொழில்களிடமிருந்து பெற்றுக் கொள்வது இடுபொருள் பிணைப்பு’ எனப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, சர்க்கரை ஆலைக்குத் தேவையான மூலப்பொருளாகிய கரும்பு வேளாண் தொழிலின் மூலம் பெறப்படுதல் ஆகும்.

வெளிபடுபொருள் பிணைப்பு

உற்பத்தி செய்யப்பட்ட பொருள் மற்ற தொழில்கள் மூலமாக சந்தையில் நுகர்ப்பொருளாக விற்கப்படுகின்றது. இதில் நுகர்ப்பொருள் விற்கப்படுவதற்காக இணைக்கப்படும் பிணைப்பு வெளிபடுபொருள் பிணைப்பு எனப்படுகின்றது.

தொழிற்சார் இணைப்புகளின் தன்மை

நான்கு நிலைத் தொழில்களின் பிணைப்புகளும், எல்லாத் தொழில்களுக்கும் ஒரே அளவினதாக இருப்பதில்லை. ஒவ்வொரு தொழிலுக்கும் வெவ்வேறு விதமான அளவில் மற்ற தொழில்களின் பிணைப்பு காணப்படும். அதாவது, ஒரு குறிப்பிட்டத் தொழிலை எடுத்துக் கொண்டால் இன்றியமையாத பிணைப்புகளுமுண்டு, அத்தியாவசியமற்ற பிணைப்புகளுமுண்டு.

அத்தியாவசியப் பிணைப்புகள்:

ஒரு தொழிலுக்கு மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் இல்லையேல், மாற்றுப் பொருட்களைக் கொண்டு அத்தொழிலை நடத்தவே இயலாது. எடுத்துக்காட்டாக, இரும்பு எஃகு தொழிலுக்கு இரும்பும் நிலக்கரியும் அத்தியாவசியத் தேவையாகும். அவ்வாறே இரும்பு எஃகு தொழில் பாதிக்கப்பட்டால் சுரங்கத் தொழிலும் பாதிக்கப்படும். எனவே, இவை அத்தியாவசியப் பிணைப்புகள் ஆகும்.

அத்தியாவசியமற்ற பிணைப்புகள்: ஒரு தொழிலுக்கு மற்ற தொழில்கள் பயன்பட்டாலும், அவைகள் நிறுத்தப்பட்டால் மாற்று வசதியுடன் உற்பத்தியைத் தொடர இயலும். எடுத்துக்காட்டாக, எஃகுத் தொழிலுக்குத் தேவையான வங்கி தொடர்ந்து செயல்படாவிட்டாலும், எஃகுத் தொழில் பாதிக்கபடாமல் தொடர்ந்து நடைபெற வழியுண்டு. இதுவே அத்தியாவசியமற்ற பிணைப்பு எனப்படுகிறது.

பெரும்பாலும் அத்தியாவசியப் பிணைப்பைப் பொறுத்தே தொழிலகங்களின் அமைவிடங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கப்பல்கட்டும் தொழிலை கடற்கரை பெருநகரங்களிலும், கண்ணாடித் தொழிலை சந்தைக்கருகிலும் மட்டுமே அமைக்க முடியும். தவிர, மூன்றாம், நான்காம் நிலைத்தொழில்கள் பெரும்பாலும் நகரங்களிலேயே அமைவிடங்களைப் பெருகின்றன. மேலும் ஒரு சில இடங்களில் தொழிலகங்கள் செறிந்து காணப்படும். இத்தகைய இடங்கள் தொழிலக வட்டங்கள் எனப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் மதுரை, கோயம்புத்துாரும், பீகார், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காள மாநிலங்களிலுள்ள சோட்டா நாகபுரி பீடபூமிப் பகுதியும் தொழிலக வட்டங்களாகும். அவ்வாறே ஜெர்மனியில் ரூர், அமெரிக்கா ஐக்கிய நாட்டில் சுப்பீரியர் ஏரி பகுதிகளும் தொழிலக வட்டங்களாகும்.

தொழிலக அமைவிடக் காரணிகள்

ஓரிடத்தில் தொழிலகங்கள் அமைக்கப்பட பல்வேறு காரணிகள் முக்கியமாகத் திகழ்கின்றன. ஏனெனில் காரணிகள் அமைவதின் அடிப்படையிலேயே தொழிலகங்களின் உற்பத்தியும், லாபமும் நிர்ணயிக்கப்படுகின்றன. அடிப்படைக் காரணிகளாக நிலத்தோற்றமும், காலநிலையும் அமைகின்றன. சமதளமான மற்றும் நீர்வளம் மிக்க இடங்கள் தொழிலகங்கள் அமைய ஏற்றவையாகும். தவிர மூலப்பொருட்கள், மூலதனம், போக்குவரத்து, எரிசக்தி, பணியாட்கள், அரசாங்கம் போன்றவையும் முக்கிய காரணிகளாகும்.

மூலப்பொருட்கள்

இயற்கை வளங்களான இரும்புத் தாது, தோல், இரசாயனப் பொருட்கள், மரங்கள் போன்றவை தொழிற்சாலைகளுக்கான ஒரு சில மூலப்பொருட்களாகும். இம்மூலப்பொருட்களைச் சார்ந்தே தொழிலக அமைவிடங்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. எவ்வாறெனில், கனமான இரும்புத்தாது போன்ற மூலப்பொருட்கள் தேவைப்படும் தொழிற்சாலைகளும், அதிகமான அளவு மூலப்பொருட்கள் தேவைப்படும் தொழிற்சாலைகளும் மூலப்பொருட்கள் கிடைக்குமிடத்திலேயே நிறுவப்படுகின்றன. இத்தொழிலகங்களின் உற்பத்தியும் மூலப்பொருட்களின் அளிப்பைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகின்றது. மூலப்பொருட்கள் இறக்குமதி செய்ய வேண்டி இருப்பின், தொழிலகங்கள் துறைமுகங்களுக்கருகில் நிறுவப்படலாம். இரண்டாம் நிலைத் தொழிலகங்கள், தாது வளங்கள், வேளாண், காட்டு மற்றும் விலங்குகள், கடல் சார்ந்த பொருட்கள் போன்றவை கிடைக்கப் பெறும் இடங்களிலேயும், மற்றும் அழுகும் தன்மையுடைய பொருட்கள், பதப்படுத்தவேண்டிய பொருட்கள் உள்ள இடங்களிலேயும் நிறுவப்படுகின்றன.

சிறுதொழில், கனரகத் தொழில் என எத்தொழிலாயினும் மூலதனம் மிக மிக, அவசியமானதொன்றாகும். மூலப்பொருட்கள் பெறுவதற்கும் இயந்திரக் கருவிகள் வாங்கவும். ஊதியம் கொடுக்கவும் மூலதனம் இன்றியமையாததொன்றாகும்.

போக்குவரத்து

தொழிலகங்களின் இரத்தநாளம் என போக்குவரத்தைக் கூறலாம். ஏனெனில், மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை தொழிலகங்களுக்கும், சந்தைக்கும் கொண்டு சென்று தொழிலகம் சிறப்புற நடைபெற வழிவகுப்பதே போக்குவரத்து ஆகும். எரிசக்தி

தொழிலகங்களை இயக்கும் உயிர்நாடி எனப்படுவது எரிசக்தியாகும். நிலக்கரி, பெட்ரோலியம், நீர்ச்சக்தி, அணுமின்சக்தி போன்றவை எரிசக்திகளாகும். இச்சக்திகளில் நிலக்கரி தவிர மற்ற எரிசக்திப் பொருட்கள் தொலைவான தூரத்திற்கும் அனுப்பக் கூடியவையானதால், அவை உற்பத்தியாகும் இடங்களில் தொழிலகங்கள் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.

பணியாட்கள் தொழிலகத்தின் உற்பத்திப் பெருக்கம் தொழிலாளர்களின் எண்ணிக்கை, நுட்பத்திறன் இவற்றையே அடிப்படையாக கொண்டுள்ளது. தொழில் நுட்பத் திறனுடைய மிகுதியான தொழிலாளர்கள் தொழிலக அமைவிடத்தை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றனர். அரசாங்கம் தொழிற்சாலை நிறுவுவதற்கான இடம், தொழில் நுட்ப வளர்ச்சி, விலை நிர்ணயம், வரி நிர்ணயம், ஏற்றுமதி இறக்குமதி மற்றும் தொழிற் கொள்கைகள் போன்றவை அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால், தொழிலக அமைவிடத்தில் அரசு முக்கிய பங்கு வகிக்கின்றது. சில சமயங்களில் சில குறிப்பிட்ட காரணங்களால் தொழிற்சாலை இடமாற்றம் நேரிட்டால் தொழிலகம் மூடப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலக அமைவிடக்கோட்பாடுகள் உலகின் தொழில் மண்டலங்களைக் கொண்டு பலர் பல தொழிலகக் கோட்பாடுகளை வெளியிட்டுள்ளனர்.

இலாபத்தை மையமாகக் கொண்டு தொழிலக அமைவிடம் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்ற கருத்தினைக் கொண்ட கோட்பாட்டில் இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. அவையாவன:

உற்பத்தி செலவு குறைப்பு

அதிக அளவு வருவாய்

சில வல்லுனர்கள் இவ்விரு வழிகளை கருத்தில் கொண்டு 1) குறைந்த செலவில் அமையும் அமைவிடங்கள், 2) உச்ச வருவாய் அமைவிடங்கள் என இருவித தொழிலக அமைவிடக் கோட்பாடுகளை விளக்கியுள்ளனர்.

வெபரின் கோட்பாடு

குறைந்த செலவு அமைவிடக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தொழிலக அமைவிட கோட்பாட்டினை வெபர் என்பவர் விளக்கியுள்ளார். இக்கோட்பாடு போக்குவரத்து செலவினங்களையும் வேறு சில அனுமானங்களையும் அடிப்படையாக வைத்து கூறப்பட்டுள்ளது. மூன்று வேறுபட்ட சூழ்நிலைகளில் எங்கு தொழில்கள் அமையும் என்பது இவரது கோட்பாட்டில் இருந்து தெளிவாகின்றது.

அனுமானங்கள்

சில மூலப்பொருட்கள் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைக்கின்றன. எனினும் நீர் போன்ற பொருட்கள் எங்கும் பரவிக் கிடக்கின்றன.

குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சந்தைகள் காணப்படுகின்றன.

பொருட்களின் எடையையும், தூரத்தையும் பொறுத்தே போக்குவரத்துச் செலவு கணக்கிடப்படுகின்றது.

தொழிலகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சந்தையில் நிறைவான போட்டியே காணப்படுகின்றது.

உற்பத்திப் பொருட்களை நுகருவதற்கு மனிதர்கள் பகுத்தறிந்து செயல்படுகிறார்கள். வெபரின் குறைந்த செலவு தொழிலக அமைவிடக் கோட்பாடு

இது முக்கோண அமைவிட அமைப்பை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. முக்கோணத்தின் சமதள இருமுனைகள் இரு வகைமூலப்பொருட்கள் கிடைக்குமிடங்களை (R, R) குறிப்பனவாகவும், மற்றொரு முனை சந்தையை (M) குறிப்பனவாகும் அமைக்கப்பட்டுள்ளது. P என்பது தொழிலக அமைவிடமாகும்.

வெபரின் தொழிலக அமைப்பில்

1) மூலப்பொருட்கள்

2) சந்தையின் அமைவிடம்

3) உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தன்மைகள்

4) போக்குவரத்து செலவுகள்

போன்ற நான்கு முக்கிய காரணிகளின் அடிப்படையில் குறைந்த செலவு தொழிலக அமைவிடக் கோட்பாடு வெளியிடப்பட்டுள்ளது.

i) R என்ற மூலப்பொருள் கிடைக்குமிடத்தில் P என்ற தொழிலகம் அமைந்தால் R, என்ற இரண்டாவது மூலப்பொருளை P என்ற தொழிலகத்திற்கு கொண்டு வரவும், அங்கு உற்பத்தி செய்யப்பட்ட பொருளை M என்ற சந்தைக்கு அனுப்பவும் போக்குவரத்து செலவு அதிகமாகின்றது.

ii) அதுபோல் R, என்ற மூலப்பொருள் கிடைக்குமிடத்தில் P அமையுமானால் முன்போலவே போக்குவரத்து செலவு அதிகமாகின்றது.

iIi) சந்தைக்கு (M) அருகில் தொழிலகம் அமையுமானால், R, R, மூலப்பொருட்கள் கிடைக்குமிடங்களிலிருந்து அவற்றை P க்கு கொண்டு வர போக்குவரத்துச் செலவு அதிகமாகின்றது.

iv) ஆனால் R, R, மூலப்பொருட்கள் கிடைக்கு மிடங்களுக்கும் M என்ற சந்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் P என்ற தொழிலக அமைவிடம் இருக்குமேயானால் R, R, மூலப் பொருட்களைத் தொழிலகத்திற்கு கொண்டு வரும் போக்குவரத்து செலவு சமமாகின்றது. அதுபோலவே P என்ற தொழிலகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லும் செலவும் குறைகிறது. குறைந்த செலவால் தொழிலகத்திற்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, முக்கோண மையத்தில் அதாவது R, R, மூலப்பொருட்கள் M என்ற சந்தை இவைகளுக்கு மையப்பகுதியில் P என்ற தொழிலகம் அமைவதே ஏற்புடையது என வெபர் தனது கோட்பாட்டில் விளக்குகிறார்.

தவிர, சில எடை குறைந்த, எடை அதிகரிக்கும் உற்பத்தி பொருட்களை அடிப்படையாகக் கொண்டும் தொழிலக அமைவிடத்தை கீழ்க்கண்டவாறு அவர் விளக்குகின்றார்.

எடை குறைந்த உற்பத்தி பொருட்கள்

எடை குறைந்த உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிலகங்களில் R, R, மூலப்பொருட்களின் அருகில் P என்ற தொழிலகம் அமைந்துள்ளதால். மூலப்பொருட்களை அமைவிடத்துக்குக் கொண்டு செல்லும் செலவு குறைகின்றது.

மேலும், உற்பத்திப் பொருள் எடை குறைந்துள்ளதால் தூரமுள்ள M என்ற சந்தைக்கு கொண்டு செல்லும் செலவும் குறைகின்றது. எனவே வெபர் தனது கோட்பாட்டின்படி தொழிலகம், மூலப்பொருட்கள் கிடைக்குமிடங்களுக்கு அருகில் அமைவதே லாபகரமானது எனக் கருதுகின்றார்.

எடை அதிகரிக்கும் உற்பத்திப் பொருட்கள்

எடை அதிகரிக்கும் உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிலகங்களில் R, R, மூலப்பொருட்களின் எடை உற்பத்திப் பொருட்களின் எடையைக் காட்டிலும் குறைவாக உள்ளதால், மூலப்பொருட்களை தொழிலகத்திற்குக் கொண்டு செல்ல ஆகும் செலவு குறைகின்றது. உற்பத்திப் பொருட்களின் எடை கூடுதலாக உள்ளதால், உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல ஆகும் செலவு அதிகமாக இருக்கும். எனவே, தொழிலக அமைவிடம் சந்தைக்கு அருகில் அமைவதே லாபகரமானது என வெபர் கருதுகின்றார்.

வெபரின் குறைந்த செலவு தொழிலக அமைவிடக் கோட்பாடு, போக்குவரத்து செலவை அடிப்படையாகக் கொண்டுள்ளதே இதன் குறைபாடாக இருப்பினும், மற்ற கோட்பாடுகளை விட இது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வி நிறுவனம், சென்னை