நோக்கம்

தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் சட்டம் 1998-ன் வரையறைகளின்படி உள்நாட்டு குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் இனங்களுக்கு 15 விழுக்காடு விலை முன்னுரிமை அளிக்கப்படும். மாநில அரசு அவ்வப்போது அறிவிக்கை வெளியிடும் இனங்களுக்கு கொள்முதல் முன்னுரிமை வழங்கப்படும். பிணை வைப்புத் தொகை செலுத்துவதில் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு விதிவிலக்குச் சலுகை தொடரும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்கள் பொருட் காட்சிகள் நடத்துவதற்கு ஆகும் செலவில் விழா அரங்கத்திற்கான கட்டணத்தில் 50 விழுக்காடு (சென்னையில் நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு அதிகபட்சமாக ரூபாய் 5 இலட்சம் மற்றும் இதர மாவட்டங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.100 இலட்சம் வரை) திரும்ப தரப்படும் அடிப்படையில் மானியமாக வழங்கப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்கள் பிற மாநிலங்களில் நடத்தப்படும் பொருட்காட்சிகளில் பங்கு கொள்ள ஆகும் செலவினை ஈடுசெய்தல் என்ற அடிப்படையில் அரங்கு வாடகையில் 50 விழுக்காடு, அதிகபட்சம் ஒவ்வொரு பொருட்காட்சிக்கும் ரூபாய் 5 இலட்சம் வரை, திரும்ப தரப்படும் அடிப்படையில் மானியமாக வழங்கப்படும்.

தொழில் முனைவோரின் குழுமங்கள் தங்களது உற்பத்திப் பொருளை பொதுவான பெயர் அல்லது வணிகச் சின்னத்தில் விற்பனை செய்ய திட்டம் தீட்டப்பட்டு ஆதரவு அளிக்கப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் சார்பாக, மைய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சி அமைப்பிடம் உதவி கேட்டு விண்ணப்பிக்கும் கீழ்க்குறிப்பிட்டுள்ள நேர்வுகளில் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் அலுவலகத்தில் இயங்கும் தகவல் மையம் தேவையான ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் தொடர்பு கொள்ளுதல் ஆகியவற்றில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன வளர்ச்சி நிலையத்துடன் இணைந்து உதவும்.

வளர்ச்சியை தொடர்பு கொள்ளுதல்

அகில உலகப் பொருட்காட்சிகளில் பங்கு பெறுதல் - சிறு நிறுவனங்கள் பங்கு பெறும் பொருட்காட்சிக்கான அரங்கு வாடகை மற்றும் பொருட்களை கப்பலில் அனுப்ப ஆகும் செலவு ஆகியவற்றுக்கு முழு மானியம் வழங்குதல்.

சிறு தொழில்களுக்கான விற்பனை மேம்பாடு உதவி - தொழில் பிரதிநிதித்துவ குழுக்களில் மற்றும் பொருட்காட்சிகளில் சிறு தொழில் முனைவோர் கலந்து கொள்ளுவதற்குச் சென்று வருவதற்கான விமானக் கட்டணத்தில் 90 விழுக்காடு நிதி உதவி செய்தல் மேலும் பிரசாரத்திற்கான விளம்பர பொருட்களைத் தயாரிக்க ஆகும் செலவில் 25 விழுக்காடு வரை நிதி உதவி செய்தல்.

குறிப்பான தொழிற் பிரிவு தொடர்பான ஆய்வு - குறிப்பான தொழிற் பிரிவு தொடர்பான ஆய்வுக்கு (ரூபாய் 2 லட்சம் வரை) மற்றும் உற்பத்தி பொருள் குவிப்பிற்கு எதிரான வழக்குகளில் எதிர்வாதிடல் (செலவில் 50 விழுக்காடு அல்லது ரூபாய் 1 லட்சம் வரை அளித்தல்).

துணை ஒப்பந்த இணைப்பகங்கள் அமைக்கும் திட்டம் - துணை ஒப்பந்த இணைப்பகங்கள் அமைப்பதற்குத் தேவையான வன்பொருள் கொள்முதல் செய்ய ஒரு முறை மானியமும் அதற்கு பின்னர் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆகும் நடைமுறை செலவில் குறைந்து வரும் சதவீத அடிப்படையில் முறையே 50 விழுக்காடு, 30 விழுக்காடு மற்றும் 10 விழுக்காடு, அதிகபட்சமாக முறையே ரூபாய் 1.25 இலட்சம், ரூபாய் 0.75 இலட்சம் மற்றும் ரூ.0.25 இலட்சத்திற்கு மிகாமலும் ஒரு இணைப்பகத்திற்கு அதிக பட்சம் ரூபாய் 1.57 இலட்சம் வரையிலும் இணை மானியமாக வழங்குதல்.

ஆதாரம்: குறு, சிறு மற்றும் நடுத்துர தொழில் நிறுவனங்கள் துறை