அறிமுகம்

தொழில் நுட்ப மற்றும் திறன் மேம்பாடு மற்றும் நவீனப்படுத்தலுக்கான உதவி, சிறு கருவி மையங்கள் மைய அரசின் தேசிய உற்பத்தி திறன் மேம்பாட்டுத் திட்டம் வாயிலாக செயல்படுத்தப்படவுள்ள சிறு கருவி மையங்கள் அமைக்க அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தேவைக்கு ஏற்ப, மாநில அரசு வழங்கும்.

அத்துடன் சம்பந்தப்பட்ட குழுமம் / சங்கங்கள் சிறு கருவி மையங்கள் தகுதியான இடங்களில் அமைக்க முன்வந்தால் அதற்கு தேவையான நிதி உதவியை, திட்ட மதிப்பில் 25 விழுக்காடு அளவில் அதிக பட்சமாக ரூ.1 கோடி வரை அரசு வழங்கும். சம்பந்தப்பட்ட குழுமம் சங்கங்கள் இதற்கான நிலத்தினை ஏற்பாடு செய்ய வேண்டும்.

உற்பத்தி நிறுவனங்களின் போட்டியிடும் திறமையை அதிகரித்தல்

அரசின் தேசிய உற்பத்தித் திறன் மேம்பாட்டுத் திட்டம் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ள தேக்கண்ட திட்டங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தேவைக்கேற்ப மாநில அரசு வழங்கும்.

சிக்கன உற்பத்தி உத்திகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அளவிலான திட்டம்

உற்பத்தித் துறையில் தகவல் மற்றும் தகவல் தொடர்புக்கான தொழில் நுட்பங்களை மேம்படுத்துதல்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் நுட்பம் மற்றும் தரம் உயர்த்துதலுக்கு உதவுதல்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை வளர்ச்சிக்கு உதவுதல்.

உற்பத்தி நிறுவனங்களுக்கு பொருட்களின் வடிவமைப்பு மேம்படுத்தும் நோக்கோடு வடிவமைப்பு அமைத்தல்.

உற்பத்தி நிறுவனங்களின் போட்டியிடும் திறனை தர மேலாண்மை அளவைகள் மற்றும் தரமுள்ள தொழில் நுட்ப கருவிகள் மூலம் மேம்படுத்துதல்.

அறிவுசார் சொத்துரிமையில் முதலீட்டை ஈர்க்க தேசிய அளவிலான பிரச்சார இயக்கம்.

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான உதவிகள்

தொழில் குழும மேம்பாட்டுத் திட்டம்

அரசு குழும வளர்ச்சியை ஊக்குவித்து மைய அரசுத் திட்டங்களின் அதிகபட்ச பலன்களை அந்நிறுவனங்கள் அடைய உதவும். அத்துடன் சம்பந்தப்பட்ட குழுமம் / சங்கங்கள் தகுதியான இடங்களில் பொது வசதி மையங்கள் அமைக்க முன்வந்தால் அதற்கு தேவையான நிதி உதவியை, திட்ட மதிப்பில் 5 விழுக்காடு அளவில் அதிக பட்சமாக ரூ.1 கோடி வரை அரசு வழங்கும். சம்பந்தப்பட்ட குழுமம் / சங்கங்கள் இதற்கான நிலத்தினை ஏற்பாடு செய்ய வேண்டும்.

பின்முனை வட்டி மானியம்

மைய அரசின் கடன் உத்திரவாதத்துடன் இணைந்த முதலீட்டு மானிய உதவித் திட்டத்தின் விதிமுறைகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நன்கு உறுதிசெய்யப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் கொண்ட இயந்திரங்களை நவீனப்படுத்தலுக்காக நிறுவும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு அவற்றால் பெறப்பட்ட ரூபாய் 100 லட்சம் வரையுள்ள கடன்களின் மீது 3 விழுக்காடு, (நிறுவனம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஐந்தாண்டு காலத்தில் மொத்த வட்டி மானியம் ரூ.10 இலட்சம்) பின்முனை வட்டி மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

தொழில் நுட்ப வளர்ச்சி நிதி

சிறு மற்றும் நடுத்தர தொழில் உற்பத்திப் பிரிவில் துாய்மையான மற்றும் / அல்லது சக்தி திறனுள்ள அல்லது தகவல் தொழில் நுட்பம் தொடர்புடைய தொழில் நுட்பங்களை ஏற்படுத்த சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்கள் ஆதரவுடன் அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி வளாகம், நிகர் நிலை பல்கலைக் கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், தொழில் நுட்ப விலகங்கள், இந்திய தொழில் நுட்ப கல்வி நிலையம் மற்றும் மாநிலத்திலுள்ள புகழ் வாய்ந்த மைய அரசு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கான செலவுக்காக ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் தொகைகள் பெறும் வகையில் ரூ.25 இலட்சம் தொகையுடன் ஒரு நிதியம் ஏற்படுத்தப்படும். இந்நிதியத்தின் மூலம் ரூ.2.5 இலட்சம் வரை அல்லது திட்ட மதிப்பீட்டில் 50 விழுக்காடு இவற்றில் எது குறைவானதோ அத்தொகை ஆதரவு தொகையாக வழங்கப்படும். இந்த உதவியைப் பெற சம்பந்தப்பட்ட திட்டத்திற்கு தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரின் முன் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். மேலும் முதலில் வந்தவர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் குறு உற்பத்தி நிறுவனங்களின் தொழில் முனைவோர்களுக்கு தேவைப்படும் ஒட்டு மொத்த செயல்பாட்டுத் திறமை தொடர்பான 20 ஆய்வுகளுக்கான செலவில் 50 விழுக்காடு, ஒவ்வொரு ஆண்டும் இந் நிதியம் வழங்கும். அத்தகைய ஆய்வு ஆறு வேலைநாட்கள் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இதற்கான செலவு விவரப் பட்டியல்களை தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் நிர்ணயிப்பார். இந்நிதியம் சிட்கோ நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வெளியிடப்படும்.

தொழில் நுட்ப வணிக சேவை

வசதி வளர்ப்பகங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில், தானியங்கி தொழில், சிறு கருவிகள் மையங்கள், உணவு பதப்படுத்துதல் ஆகிய தொழில் பிரிவுகளில் நவீன உற்பத்தி உத்திகள் மற்றும் வடிவமைப்பு மேம்பாடு இவற்றைப் புகுத்தும் நோக்கோடு அமைக்கப்படும் "திறன்மிகு மையங்கள்" மற்றும் "தொழில் நுட்ப வணிக சேவை வசதி வளர்ப்பகங்கள்" அமைக்க தேவையான நிதியுதவியை மையம் ஒன்றுக்கு அதிக பட்சமாக ரூ.50 இலட்சம் வரை அரசு வழங்கும்.

அறிவுசார் சொத்துரிமைக்கான மானிய உதவி

தொழிற் பயன்பாட்டுக்கு உதவும் புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் தகுதியுடைய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் இணைந்த அல்லது தனித்து இயங்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் இவைகளின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உரிமைக்காப்பு" பதிவு செய்யும் செலவில் 50 விழுக்காடு அல்லது ரூபாய் 2.00 லட்சம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

இம் மானிய உதவி உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் பதிவு செய்யப்படும் அனுமதிக்கப்பட்ட உரிமைக் காப்புகள் தொடர்பான பதிவுக்கட்டணம் மற்றும் முதல் தடவை செலுத்தும் பராமரிப்பு தொகை ஆகியவற்றிற்கும் கிடைக்கும்.

அத்துடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு வணிக குறியீடு பதிவு செய்யும் செலவில் 50 விழுக்காடு அல்லது ரூபாய் 25,000/- இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். இந்த ஆதரவு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் பதிவு செய்யப்படும் அனுமதிக்கப்பட்ட உரிமைக் காப்புகள் தொடர்பான பதிவுக்கட்டணம் அல்லது முதல் தடவை செலுத்தும் பராமரிப்பு தொகை ஆகியவற்றிற்கும் கிடைக்கும்.

குறிப்பிட்ட வகை தொழில்களுக்கான தொழில் நுட்ப மேம்பாட்டு திட்டம்

கயிறு, கையால் செய்யப்படும் தீப்பெட்டி, கூட்டுறவு தேயிலை உற்பத்தி மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி ஆகிய தொழில் பிரிவுகளுக்கான தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் உற்பத்திச் சிக்கன நடவடிக்கைகளுக்கு உதவ சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சான்றளித்தல் மற்றும் பரிசோதனை

உலகமயமாக்கலால் தொழில் துறையினர் குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் போட்டிகளை சமாளிக்கும் நோக்குடன் அவர்களது பரிசோதனை தேவைகளை சந்திக்கும் பொருட்டு தொழில் வணிக இயக்குநர் கட்டுப்பாட்டில் இயங்கும் பரிசோதனை மற்றம் மின் மருத்துவ கருவிகள் பழுது பார்க்கும் மையங்கள், நவீன கருவிகள் நிறுவுவதன் மூலம் மேம்படுத்தப்படும். இம்மையங்களுக்கு பொது துறை மற்றும் தனியார் துறை கூட்டு முயற்சி அடிப்படையில் தன்னாட்சி வழங்குவதற்கான வாய்ப்புகள் ஆராயப்படும். தொழில் வணிக இயக்குநரகம், மைய அரசு திட்டத்தின் கீழ் ஆய்வு மையங்கள் அமைக்க குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி அமைப்பின் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் நேர்விற்கான திட்ட ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் மைய அரசுடன் தொடர்பு கொள்ளும் வசதி ஆகியவற்றை ஏற்படுத்திட உதவும்.

செயல்திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி

செயல் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிக்காக தொழில் நிறுவன சங்கங்களுடன் இணைந்து கீழ்க்காணும் திட்டங்கள் வகுக்கப்படும்

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான தகவல் தொழில் நுட்பம்,

தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள்,

அறிவு சார் செயற்பாடு ஒப்படைப்பு,

வணிக செயற்பாடு ஒப்படைப்பு,

நிறுவன செயற்பாடு ஒப்படைப்பு,

உயிரி தொழில் நுட்பம்

ஆகிய தொழில்களின் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கென சிறப்பு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி திட்டங்கள் பல்வேறு கால அளவுகளில் நிதி நிறுவனங்கள், தொழில் நிறுவன சங்கங்கள், தொழில் மற்றும் சேவை துறையில் பிரபலமான பயிற்சி நிறுவனங்கள் மூலம் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு முயற்சி வாயிலாக செயல்படுத்தப்படும்.

தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரின் முன் அனுமதியுடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கத்தினர் மாநிலத்தில் உள்ள புகழ் வாய்ந்த பயிற்சி நிறுவனங்களுடன் கூட்டாக, படித்து வேலையில்லாதவர்களுக்கு பயன் தரும் வகையில் நடத்தப்படும் சிறப்பு குறுகிய கால பயிற்சி வகுப்புக்கான பயிற்சி கட்டணத்தில் 50 விழுக்காடு திரும்ப வழங்கப்படும். அவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு உடனடி வேலை அளிப்புக்காக உத்திரவாதம் அளிக்கும் சம்பந்தப்பட்ட சங்கத்திற்கு இம்மானியம் வழங்கப்படும்.

தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரின் முன் அனுமதியுடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் செயல் திறனை மேம்படுத்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கத்தினர் நடத்தும் குறுகிய கால பயிற்சி வகுப்புகளுக்கான பயிற்சி கட்டணத்தில் 50 விழுக்காடு திரும்ப வழங்கப்படும். இவை தவிர அரசின் பிற துறைகளைச் சார்ந்த முகமைகளில் மேற்கொள்ளப்படும் செயல்திறன் வளர்ச்சி நடவடிக்கைகளின் நன்மைகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்றிடும் வகையில் தேவையான விவரங்களை திரட்டி எங்கெங்கு தேவையோ அங்கெல்லாம் அத்தகவல்கள் விரிவாகக் கிடைப்பதை உறுதி செய்ய தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் நடவடிக்கை மேற்கொள்வார்.

ஆதாரம்: குறு, சிறு மற்றும் நடுத்துர தொழில் நிறுவனங்கள் துறை