அறிமுகம்

நலிவுற்ற நிறுவனங்களை புனரமைப்பது என்பது, விரைவான பகுப்பாய்வு, வழங்கப்பட வேண்டிய நிவாரணம் குறித்த துரிதமான முடிவுகள் மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியுடன் கூடிய செயல்படுத்துதல் சார்ந்ததாகும். அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் விளக்கத்தின் அடிப்படையில் நிறுவனங்களின் நலிவுற்ற தன்மை வரையறுக்கப்படும்.

கீழே குறிப்பிடப்படும் சலுகைகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களாக தொழில் முனைவோர் பதிவறிக்கை (பகுதி-2) எண் பெற்றுள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இக்கொள்கையானது (மூலப் பொருட்களை பதப்படுத்தும் பணியில் ஈடுபடும் மற்றும் மூலப் பொருள்கள் மற்றும் உற்பத்தி செய்த பொருள்களை எடுத்துச் செல்லும் சில்லரைப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை உள்ளடக்கிய) குறு, சிறு மற்றும் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

நிர்வாக அமைப்பு

மாவட்ட தொழில் மையங்கள், இந்திய ரிசர்வ் வங்கி அமைக்கும் மாநில அளவிலான நிறுவனங்களுக்கிடையிலான குழு (ஸ்லிக்) மற்றும் மாநில அளவிலான நிறுவனங்களுக்கு இடையிலான குழுவின் துணைக் குழு, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் அதிகாரம் பெற்ற மாநில அளவிலான புனரமைப்புக் குழு (எஸ்.எல்.ஆர்.சி) ஆகியன புனரமைப்புத் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களாக இருக்கும்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கும் மாவட்டத் தொழில் மையங்கள் அவற்றை ஆய்வு செய்தவற்குமான நடைமுறைகள்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், பகுப்பாய்வுப் பணியை ஒப்படைக்கும் பொருட்டு ஆலோசனை நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றைத் தயாரிப்பதுடன் (அதில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமும் இடம் பெறலாம்) ஒவ்வொரு மூன்று ஆண்டுகளிலும் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான தரப்பட்டியல் நிர்ணயம் செய்யும். மேலும், புனரமைப்புக்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பத்தையும், அவ்விண்ணப்பதாரர்கள் நிறுவனம், நலிவுற்ற நிறுவனங்கள் நிறைவு செய்ய வேண்டிய நிபந்தனைகளை நிறைவு செய்கின்றனவா என மதிப்பீடு செய்திட, மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர் ஆரம்ப கட்ட ஆய்வு மேற்கொள்வதற்குத் தேவையான ஒரு கணினி மென்பொருள் தயார் செய்யும்.

புனரமைப்பு தொடர்பான விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்பும் நிறுவனம் உரிய விண்ணப்பத்துடன் திரும்பச் செலுத்த தக்கதல்லாத கட்டணமாக ரூ.1000/த்தையும் பகுப்பாய்வு பணி மேற்கொள்வதற்கான கட்டணத்தின் 25 விழுக்காட்டையும் மாவட்ட தொழில் மையம் சென்னையிலுள்ள மண்டல தொழில் இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனங்களிடமிருந்து தேவையான விளக்கங்களையும் புள்ளி விவரங்களையும் பெற்று தொடர்புடைய மென்பொருளை பயன்படுத்தி ஆய்வு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனம் நலிவுற்ற நிலையில் இல்லையென்பது தெரியவந்தால் அந்த நேர்வுகளுக்கு மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் பகுப்பாய்வுப் பணிக்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பிக் கொடுத்து கோப்பினை முடித்து விடலாம். தொழில் முனைவோர் குறைந்த பட்சம் 6 மாத காலம் இடைவெளிக்குப் பின் மீண்டும் புதியதாக மனுச் செய்து கொள்ளலாம்.

நிறுவனம் நலிவுற்றுள்ளது என்பது ஆரம்ப கட்ட ஆய்வில் தெரிய வந்தால் பகுப்பாய்வு செய்து அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்க தகுதியானவை என தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தால் பட்டியலிடப்பட்ட பகுப்பாய்வு அமைப்பு ஒன்றிடம், 45 நாட்களில் அறிக்கை செய்யும் பொருட்டு விண்ணப்பத்தை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஒப்படைத்திட வேண்டும்.

ஆலோசகர் கேட்கும் கூடுதல் விவரங்கள் அனைத்தையும் வழங்குமாறும் ஆய்வுக்கான எஞ்சிய நிலுவை 75 விழுக்காடு கட்டணத்தை ஆலோசகருக்கு செலுத்துமாறும் விண்ணப்பதாரரை பொது மேலாளர் அறிவுறுத்த வேண்டும்.

இத்தகைய விண்ணப்பம் பெறப்பட்டு ஆலோசகரின் ஆய்வில் உள்ளது பற்றி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் மற்றும் வணிக வரித்துறை துணை ஆணையருக்கும் மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர் தெரிவிக்க வேண்டும்.

ஆலோசகர் நியமனம் பற்றிய விவரம் தெரிய வந்து 21 நாட்களுக்குள் முந்தைய மாதம் வரையிலான நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவை கேட்புத் தொகை, செலுத்த வேண்டிய வரி தொடர்பான கூறுகள் மின்கட்டண நிலுவை மற்றும் செலுத்த வேண்டிய வட்டி தொடர்பான விவரங்களை மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கும், ஆலோசருக்கும் அவர்கள் அனுப்ப வேண்டும்.

வணிக வரித்துறையின் துணை ஆணையர் நிலுவை வசூல் தொடர்பான கட்டாய வசூல் முறைகளை 6 மாதங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பார்.

ஆய்வறிக்கை பெறப்பட்டவுடன் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் மாநில அளவிலான நிறுவனங்களுக்கிடையிலான குழு (SLIC) வின் துணைக்குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்து மேற்படி துணைக் குழுவின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பொருள்களில் சேர்க்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

இத்துணைக் குழுவானது ஒவ்வொரு இரண்டு மாத கால இடைவெளியில், பொதுவாக ஒவ்வொரு இரண்டாவது மாதத்தின் முதல் வேலை நாளில் கூடும். ஆலோசகர், வணிகவரித்துறை இணை ஆணையர் மற்றும் தமிழ்நாடு மின்வாரியத்தின் கோட்டப் பொறியாளர் ஆகியோர் மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளரால் இக்கூட்டத்திற்கு அழைக்கப்படுவர். நிவாரணம் அளிப்பது தொடர்பாக குழுவிற்கான வழிகாட்டுதல்கள் 41 மாநில அளவிலான நிறுவனங்களுக்கிடையிலான குழுவின் துணைக்குழு பகுப்பாய்வு அறிக்கையில் உள்ள முடிவுகளை ஆய்ந்து மாநில அளவிலான புனரமைப்பு குழுவிற்கும் (எஸ்.எல்.ஆர்.சி) மாநில அளவிலான நிறுவனங்களுக்கிடையிலான குழுவிற்கும் (SLIIC) எந்த வகையில் குறிப்பான உதவி வழங்கலாம் என பரிந்துரை செய்யும். அவ்வாறு பரிந்துரை செய்யும் போது மாநில அளவிலான நிறுவனங்களுக்கிடையிலான குழுவிற்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகள், இது தொடர்பாக நடைமுறையில் உள்ள ரிசர்வ் வங்கியின் கொள்கை நெறிமுறைகளுக்குட்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மாநில அளவிலான புனரமைப்புக் குழுவுக்கு அனுப்பப்படும் பரிந்துரையானது குறிப்பிட்ட ஒவ்வொரு தனி நேர்வின் தன்மையைப் பொருத்ததாக இருக்கும்.

வரையறைகள்

மாநில அளவிலான புனரமைப்புக் குழு கீழ்க்கண்ட வரையறைக்குள் புனரமைப்பு உதவிகள் வழங்கலாம். அவை சம்பந்தப்பட்ட தனி நேர்வின் தகுதி அடிப்படையிலானதாக இருக்க வேண்டும்.

(அ) நிலுவையில் உள்ள விற்பனை வரி / மதிப்புக் கூடுதல் வரி மற்றும் அவற்றின் மீதான வட்டி (அதிகாரம் பெற்ற குழு உதவித் திட்டத்தை அங்கீகரிக்கும் நாள் வரையிலான தொகைகள்) ஆகியவற்றை மென் கடனாக மாற்றுதல். அக்கடன் தொகையானது 9 விழுக்காடு வட்டியுடன் நான்காவது ஆண்டு தொடக்கத்திலிருந்து நான்கு ஆண்டுகளில் சமமாத தவணைகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு திரும்பச் செலுத்த வேண்டும். அக்கடன் தொகை மீது முதல் மூன்று ஆண்டுகளுக்கு வட்டி ஏதும் விதிக்கப்பட மாட்டாது. இந்த சலுகையானது சம்பந்தப்பட்ட நிறுவனம் நலிவுற்ற நிலையில் ஏற்பட்ட நிலுவைத் தொகைகளுக்கு மட்டுமே பொருந்தும். நிறுவனம் நலிந்த நிலையில் இல்லாத முன் ஆண்டுகளுக்கான நிலுவை வரி மற்றும் வட்டி நிலுவை ஆகியவற்றிற்குப் பொருந்தாது. அத்தகைய நிலுவைகள் முழுவதுமாக செலுத்தி தீர்க்கப்பட வேண்டும் என்பதை உதவித் திட்டம் அனுமதிப்பது தொடர்பான ஆணையில் முன் நிபந்தனையாக சேர்க்க வேண்டும்.

(ஆ) நலிவுற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, அவை வாங்கியுள்ள புனரமைப்பு / இணைப்புக்கடன் தொகையில் 4 விழுக்காடு வட்டி மானியமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்புதல் அளித்தல்.

(இ) மைய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சட்டம் 2006-ன் படி அறிவிக்கப்படவுள்ள தொழிலை விட்டு வெளியேறும் கொள்கையை செயல்படுத்துதல்.

(ஈ) புனரமைப்பு காலத்தில் பங்கு ஈட்டுத் தொகை வழங்குதல் மற்றும் இலாபத்தை பிரிப்பதை ஒழுங்குபடுத்துதல்.

(உ) நலிவுற்ற நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டவற்றிற்கு அரசுடைமை நிறுவனங்களின் கொள்கைப்படியான ஒரு தவணை தீர்வு திட்டத்தை செயல்படுத்துதல்.

(ஊ) விற்பனை வரி மற்றும் மதிப்புக் கூட்டுதல் வரிக்கான (மாநில அளவிலான புனரமைப்பு குழுவின் நிவாரண திட்டத்திற்கு ஒப்பளிப்பு ஆணை வெளியிடும் நாள் வரையிலான) நிலுவை வட்டியை நிர்ணயம் செய்தல் மற்றும் புனரமைப்பு கொள்கைப்படியான சலுகை உதவிகளைப் பயன்படுத்தியும் இலாபகரமாக இயங்கும் திறன் அற்ற மற்றும் புனரமைக்க லாயக்கற்ற நிறுவனங்கள் என முடிவு செய்யப்பட்டு அவை செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள தொகைகளை தள்ளுபடி செய்ய அரசுக்குப் பரிந்துரை செய்தல். இத்தகைய பரிந்துரையானது நிறுவன உரிமையாளர், தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய நிலுவை கூலித் தொகை, சட்டபூர்வமான தொழிலாளர் நல அலுவலர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை, பணியிலிருந்து வெளியேற்றப்பட்ட தொழிலாளர்களுக்குச் சட்டப்படியாக சேர வேண்டிய நிவாரணத் தொகை மற்றும் நிலுவையில் உள்ள விற்பனை வரி மற்றும் மின் கட்டண நிலுவைகளை, மாநில அளவிலான புனரமைப்பு குழுவின் ஆணை வெளியிடப்பட்ட மூன்று மாத காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் செய்யப்படும்.

(எ) புனரமைப்பு உதவித் திட்டங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மின்சக்தி திறனை குறைக்க ஆணையிடுதல்.

நிபந்தனைகள்

மாநில அளவிலான புனரமைப்புக் குழு தனது தீர்ப்புரிமையின்படி, இலாபத்தில் இயங்கும் தன்மை அற்றதாக முடிவு செய்யப்படும் நலிந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் கடன்களை வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனம் கீழே குறிப்பிடப்பட்ட நிபந்தனைக்குட்பட்டு ஏற்றுக் கொள்ளுமாறு அனுமதிக்கலாம்.

பொறுப்பில் எடுத்துக் கொள்ள அனுமதியளித்து ஆணை வெளியிடப்பட்ட மூன்று மாத காலத்திற்குள் மூடப்பட்ட நிறுவனத்தை திறப்பது.

பொறுப்பில் எடுக்கப்பட்ட நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை செலுத்துவதற்கு வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய ஆதாரம் சமர்ப்பித்தல் மற்றும் தொழிலாளர்களுக்கு, சட்டபூர்வ அதிகாரம் உடைய துறை மற்றும் அரசு முகமைகள் ஆகியவற்றிற்கு எடுக்கப்பட்ட நிறுவனம் செலுத்த வேண்டிய தொகைகளை செலுத்த ஏற்பாடு செய்தல்.

பொறுப்பில் எடுக்கப்பட்ட நிறுவனத்தின் உபரியாக உள்ள நிலத்தை விற்பதற்கு கடன் வழங்கியவர்கள் மற்றும் அரசின் முன் ஆணைகள் பெறுவதற்கான அனுமதி பெறவும், அவ்வாறு உபரி நிலத்தை விற்றதால் கிடைத்த தொகைகளைக் கொண்டு, பொறுப்பில் எடுக்கப்பட்ட நிறுவனம் செலுத்த வேண்டிய தொழிலாளர்கள், சட்டபூர்வமாக அரசு முகமைகள், அரசு மற்றும் வங்கிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகைகளை செலுத்தி முடிக்க சம்மதம் தெரிவித்தல்.

மேற்படி அனுமதிகள் உறுதிப்படுத்தப்படும் வரை, விற்பனை மதிப்புக்கு ஈடான தொகை அவ்வாறு ஆணையிடப்படும் வரை ஒரு தனி கணக்கில் வரவு வைக்கப்படும். பொறுப்பில் எடுத்துக் கொள்ளும் நிறுவனம் சமர்ப்பிக்கும் விண்ணப்பத்தின் பேரில், மாநில அளவிலான புனரமைப்புக் குழு நிலுவையில் உள்ள விற்பனை வரி / மதிப்புக் கூட்டுதல் வரி மற்றும் அவற்றின் மீதான வட்டி (மாவட்ட அளவிலான புனரமைப்புக்குழு நிவாரணத் திட்டம் ஒப்பளிக்கும் ஆணை வெளியிடும் நாள் வரையிலானது) ஆகியவற்றின் 75 விழுக்காட்டை மென் கடனாக மாற்றி ஆணையிடலாம். அக்கடன் தொகையானது 9 விழுக்காடு வட்டியுடன் நான்காவது ஆண்டு தொடக்கத்திலிருந்து நான்கு ஆண்டுகளில் சமமாத தவணைகள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு திரும்பச் செலுத்தப்பட வேண்டும். அக்கடன் தொகை மீது முதல் மூன்று ஆண்டுகளுக்கு வட்டி ஏதும் விதிக்கப்பட மாட்டாது. மாநில அளவிலான புனரமைப்புக் குழுவின் ஆணைப்படி பொறுப்பில் எடுத்துக் கொள்ளும் நிறுவனம், கடனாக மாற்றப்படாமல் உள்ள நிலுவை விற்பனை வரி / மதிப்பு கூட்டுதல் வரி மற்றும் வட்டி ஆகியவற்றை செலுத்த வேண்டும் என்பது மென் கடன் பெறுவதற்கான முன் நிபந்தனையாக இருக்கும்.

இலாபகரமாக இயங்கும் தன்மை உடைய, புனரமைப்புக்கு ஏற்றதாக கருதப்படும் நிறுவனங்கள் அல்லது இலாபகரமாக இயங்கும் தன்மையற்று புனரமைக்கு தகுதியற்ற நிறுவனங்கள் என்று மாநில அளவிலான புனரமைப்பு குழு எடுக்கும் உத்தேச முடிவுகள் அடுத்து நடைபெறும் மாநில அளவிலான நிறுவனங்களுக்கு இடையிலான குழுவின் கூட்டத்தின் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மாவட்ட அளவிலான புனரமைப்புக்குழு அரசுக்குச் சேர வேண்டிய கடன் தொடர்பாக வழங்க முன் வரும் சலுகைகள், மாநில அளவிலான நிறுவனங்களுக்கிடையிலான குழுவின் முடிவு மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள், வங்கிகள் மற்றும் கடன் வழங்கிய நிறுவனங்களின் ஏற்பு என்ற நிபந்தனைக்கு உட்பட்டதாகும். மாநில அளவிலான புனரமைப்புக்குழு, புனரமைப்பு தொடர்பான வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்ட சலுகைகளுக்கு அதிகமாக எந்த பரிந்துரையும் செய்யாது.

மாநில அளவிலான நிறுவனங்களுக்கிடையிலான குழுவால், ஒரு நிறுவனம் குறித்து ஏற்புடைய முடிவு எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வங்கி புனரமைப்புக்கான செயல்பாட்டு அட்டவணையை குறிப்பிடும் பட்சத்தில், மாநில அளவிலான புனரமைப்புக் குழுவின் உத்தேச முடிவானது ஒரு ஆணையாக வெளியிடப்பட்டு உறுதி செய்யப்படும். மாநில அளவிலான நிறுவனங்களைக்கிடையிலான குழு வங்கிகளுக்கு அல்லது நிதி நிறுவனங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைக் கடன், தொடர்பாக ஏற்புடைய நிவாரணம் வழங்குவது பற்றி அட்டவணை ஏற்படுத்த இயலாத நிலையில் இருந்தாலோ, மாநில அளவிலான புனரமைப்புக் குழு குறிப்பாக நிர்ணயித்த 3 மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனம் சலுகைகள் வழங்குவது குறித்த ஆணைகள் வெளியிடப்படாவிட்டாலோ மாநில அளவிலான புனரமைக்குழு ஏற்றுக் கொண்ட சலுகைகளை தாமே திரும்பப் பெறப்பட்டதாகிவிடும்.

கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு

சலுகை திட்டங்கள் உரியவாறு செயல்படுத்தப்படுகின்றவா என்பதை கண்காணிக்கவும் சம்பந்தப்பட்ட தொடர்புடைய நபர்கள் ஏற்றுக் கொண்ட ஒப்பந்தப்படி செயல்படுவது பற்றியும் மாநில அளவிலான புனரமைப்பு குழுவுக்கும் நிறுவனங்களுக்கிடையிலான குழுவுக்கும் விபரங்கள் அளிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் ஒரு தனிப்பிரிவு தொடங்கப்படும்.

புனரமைப்புக்கான சலுகைகள் மற்றும் அவற்றை பெற உள்ள நிபந்தனைகள் மற்றும் அவற்றை பின்பற்றுவதால் ஏற்படும் விளைவுகள் குறிப்பிடப்பட்ட ஒரு பட்டியலை தயாரித்து அவற்றை தவறாமல் பின்பற்றுவது குறித்த ஒரு நிபந்தனையற்ற உறுதிமொழியை, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளரிடமிருந்து பெறும்.

பயனாளி நிறுவனம் நிபந்தனைகளை நிறைவு செய்யத் தவறும் போது வழங்கப்பட்ட எல்லா சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டு, அவை வழங்குவதற்கு முன்பு இருந்த பழைய நிலையை அடைவதால், நடைமுறையில் இருக்கும் சட்டப்படி அனுமதியளிக்கப்பட்டுள்ள வலுக்கட்டாயமான வசூல் நடவடிக்கைளைத் தொடரும் நிலைமை ஏற்படும்.

நிருவாகச் செலவுகள் மற்றும் மாநில அளவிலான புனரமைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தி ஒருங்கிணைப்பதற்கான செலவுகளுக்காக வழங்கப்படும் ஒட்டு மொத்த உதவித் தொகையாக ரூபாய் 5 லட்சமும் கண்காணிப்புக்காக ஒவ்வொரு நிறுவனத்திடமிருந்தும் ரூபாய் 5000/- ஆண்டுக் கட்டணமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வசூல் செய்து கொள்ள அனுமதிக்கப்படும்.

புனரமைப்பு நிதி

நலிவுற்ற நிறுவனங்களை புனரமைப்பதற்காக ஒரு புனரமைப்பு நிதி உருவாக்கப்பட்டு தொடக்கத்தில் அந்நிதி தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரால் நிருவகிக்கப்படும். மாநில அளவிலான புனரமைப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கூடுதல் தொகைகள் இந்நிதியத்திற்கு கால முறையில் வழங்கப்படும். அந்நிதியத்திலிருந்து கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள இனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இயங்கும் தன்மையுள்ளவை என கண்டறியப்பட்டால் அவற்றிற்கான பகுப்பாய்வுக்கான செலவினம் 75 விழுக்காடு தொகையை செலுத்துதல்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புனரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக புனரமைப்பு / இணைப்புக்கடன் ரூ.15 இலட்சம் வரை வழங்கப்படுவதற்கு வட்டி மானியமாக 4 விழுக்காடு, இரு ஆண்டுகளுக்கு வழங்குதல்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திற்கு நிருவாக செலவிற்கென ஆண்டு ஒன்றிற்கு ஒட்டுமொத்த உதவித் தொகையாக ரூ.5 இலட்சம் வழங்குதல் போன்றவையாகும்.

ஆதாரம்: தமிழ்நாடு குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனத்துறை