அறிமுகம்

இன்று உலகத்தில் எல்லோராலும் அறிந்து பேசப்படும் சொல்லான சுற்றுலா மக்களின் தேவைகளின் ஒன்றாக மாறிவிட்டது. அதிசயமானவை, ஆர்வமூட்டக்கூடியவை, மனதைக் கவர்பவை, இயற்கைக் காட்சிகள் போன்றவைகளைக் காண மக்கள் விரும்புகின்றனர். தாங்கள் வசிக்கும் இடங்களிலிருந்து சென்று பிற இடங்களைக் காணும் ஆர்வமே சுற்றுலா தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாகும். ஓவ்வொரு மனிதனும் மன மகிழ்ச்சசிக்காகவும், ஓய்வு நேரத்தை இன்பமாகச் செலவிடவும் சுற்றுலாவை விரும்புகிறான். ஆதிகமாக கிடைக்கும் ஓய்வு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு, மக்களின் வாழ்க்கைத்தரம். போக்குவரத்து முன்னேற்றம், விரைவான செய்தித் தொடர்பு வசதி, மக்களின் செலவழிக்கும் திறன் போன்றவை சுற்றாலாவை ஒரு முக்கியமான தொழிற்துறையாகவே மாற்றியுள்ளன.

தனிமனிதனின் மனநிறைவில் தான் சுற்றுலா அடங்கியுள்ளது. இன்பமாக பொழுது போக்கவேண்டும் என்பது மனிதனின் விருப்பமாகும். இந்த உணர்வானது உலகம் தழுவிய ஒன்றாகும். சுற்றுலா பற்றிய அனைத்து அம்சங்களையும் நாம் படிப்பதற்கு முன்பாக 'சுற்றுலா' என்ற வார்த்தை எப்படி வந்தது என்றும் அதன் பொருள் விளக்கத்தையும் காணலாம்.

TOURISM என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கமே சுற்றுலா ஆகும். பல இடங்களைச் சுற்றி வருவதற்கு பயணம் என்று பெயர். பயணம் என்பதில் ஆங்கில வார்த்தை TOUR ஆகும். இதிலிருந்து உருவான வார்த்தையே TOURISM.

TOUR என்ற ஆங்கில சொல்லானது TORNOS என்ற இலத்தீன் சொல்லிருந்து பிறந்தது ஆகும். டோர்னஸ் என்ற லத்தீன் வார்த்தை சக்கரத்தினைக குறிக்கிறது. அதாவது சுற்றிவருவதைக் குறிக்கிறது. இவ்வாறு லத்தீன் மொழியிலிருந்து பிறந்தTOUR என்ற சொல்லானது 'கி.பி.1292-ல் ஆங்கில மொழியில் இணைந்தது. எனவே பல இடங்களுக்குச் சென்று பார்த்து விட்டு மீண்டும் தனது இருப்பிடம் வந்து சேர்வதைத்தான் இந்த TOUR என்ற வார்த்தை குறிக்கிறது.

மேலும் TOUR என்ற வார்த்தையானதுTORAH என்ற ஹீப்ரு வார்த்தையிலிருந்தும் பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது. TORAH என்றால் யூத சட்டத்தை படித்து ஆராய்வதைக் குறிக்கிறது. சுற்றுலா என்பதும் பயணி ஒருவர் தான் செல்லும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்வதும் ஆகும்.

விளக்கம்

ஓரிடத்தில் வசிப்போர் தமது ஓய்வு நேரத்தில் மற்றொரு இடத்திற்கு சுற்றுப் பயணம் செய்து மன நிறைவு கொள்வதை சுற்றுலா எனக் கூறலாம். சுற்றுலா பற்றி அறிஞர்கள் பலர் பின்வருமாறு விளக்கம் கொடுத்துள்ளனர்.

“பல்வேறு வகையான நடவடிக்கைகளின் மொத்தத் தொகையே சுற்றுலா ஆகும். அது குறிப்பாக ஒரு நாடு, ஒரு நகரம், ஒரு பகுதி போன்றவற்றில் வெளிநாட்டவரால் செய்யப்படுகின்ற புகுதல், தங்குதல், வெளியேறுதல் போன்ற தன்மைகளின் அடிப்படையில் செயல்படுகின்ற பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய தன்மைகள் கொண்டதாகும்” என்று கி.பி.1910-ல் ஆஸ்திரேலியப் பொருளியல் அறிஞர் ஹெர்மன் வி. சுவில்லார்டு என்பவர் கூறியுள்ளார். இந்த விளக்கம் பொருளாதார அடிப்படையை மட்டும் குறிக்கிறது. ஆனால் சமூகவியல், உளவியல், பண்பாட்டியல், புவியியல் அமைப்பு போன்றவற்றை உள்ளடக்கிக் கூறவில்லை. இவ்விளக்கம் உள்நாட்டுச் சுற்றுலாவைப் பற்றிக் கூறவில்லை .

"பயணிகளின் பல்வேறு நடவடிக்கைகளின் கூட்டுத் தொகையே சுற்றுலா ஆகும். பொருள் தேடும் அடிப்படையிலோ, ஓரிடம் சென்று நிலையாகத் தங்கி வாழ வேண்டும் என்னும் எண்ணத்திலோ அல்லாமல் அந்நியர்களால் மேற்கொள்ளப் பெறுகின்ற பயணம், தங்குதல் போன்றவற்றின் மொத்த உருவே சுற்றுலா எனப்படும்” என்று 1942-ல் குனிகர் மற்றும் கிராப் என்னும் அறிஞர்கள் விளக்கியுள்ளனர். இவ்விளக்கத்தில் பிற நாட்டைச் சார்ந்தவருடைய பயணம், தங்குதல், வருமானமின்மை என்னும் மூன்று காரணிகள் குறிப்பிடப் பெற்றுள்ளன. இவ்விளக்கம் சுற்றுலாச் சந்தையைப் பற்றி எதுவும் கூறவில்லை. இவ்விளக்கம் 1971 வரை ஏ.ஐ.இ.எஸ்.டி நிறுவனத்தால் எற்றுக் கொள்ளப் பெற்றது.

ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்லல், அவ்விடத்தைச் சாராத மக்கள் அவ்விடத்தில் தற்காலிகமாகத் தங்குதல், ஓரிடத்தில் நிலையாகத் தங்கியிருக்காமை, பொருளீட்டாமை போன்றவற்றுடன் தொடர்புடைய செயல்களின் கூட்டுத் தொகையே சுற்றுலா ஆகும், என்று அரசாங்க சுற்றுலா வெளியீடு கூறுகின்றது.

"ஓரிடத்தினர் இன்னோர் இடம், நாடு, நகரம் பகுதி போன்றவற்றில் தற்காலிகமாகத் தங்குதல், பயணிகளின் குறிக்கோளை நிறைவு செய்தல், பொருள்களின் குறிக்கோளை நிறைவு செய்தல், பொருள் ஈட்டாமை, ஓரிடத்தில் நிலையாகத் தங்காமை, பணம் செலவழித்தல் போன்றவற்றின் கூட்டுத்தொகையே சுற்றுலா ஆகும்" என்று ஒரு விளக்கம் காணப்பெறுகிறது.

"விளையாட்டுப் போட்டிகளைக் காணச் செல்லல், விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்தல், ஊர்களைச் சுற்றிப்பார்த்தல், சைக்கிள்களில் பயணம் செய்தல், குறிப்பிட்ட இடத்தில் தங்குதல், உல்லாசப் படகில் பயணம் செய்தல், படகுப் பந்தயம் காணச் செல்லல், மன மகிழ்ச்சிக்காகப் பிற இடங்களுக்குச் செல்லல் போன்றவற்றிற்குச் செல்லும் நிகழ்ச்சிகளைச் சுற்றுலா என்று அழைத்தனர்” என்று ஜோசி இக்னாசியோ தெ. அரில்லாகா குறிப்பிட்டுள்ளார்.

எனவே சுற்றுலா என்பது ஒருவர் தாம் வாழும் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் பொருள் தேடும் எண்ணம் இல்லாமல், நிலையாகத் தங்கி வாழ வேண்டும் என்னும் கொள்கையில்லாமல் பல்வேறு காரணங்களுக்காகப் பணம் செலவு செய்து பயணம் செய்வதாகும். அப்பயணம் அவருக்கு மனநிறைவை அளிக்கும்.

உலக நாடுகளில் சுற்றுலா வளர்ச்சி

பழங்காலத்தில் இருந்தே சுற்றுலாச் செல்வது ஒரு வழக்கமாகவும், மோகமாகவும் இருந்துள்ளது. பண்டைக்காலத்தில் சென்று வந்துள்ளான். முதலில், மனிதனின் குறிக்கோள் இல்லாமல் எளிய காரியங்களுக்காக வெளியிடங்களுக்குச் சென்று வந்தான். சுற்றுலாவில் இன்று இருக்கும் சிக்கல்கள் பழங்காலத்தில் இருந்தனவல்ல. சுற்றுலாவிற்குரிய விதிமுறைகள் அன்று தோன்றவில்லை. பண்டைக் காலத்தில் இன்பத்திற்காகவும், மனமகிழ்ச்சிக்காகவும் மக்கள் பிற இடங்களுக்குச் செல்லவில்லை. பிற இடங்களைக் காணவும். வாணிகம் செய்யவும், கோயில் குளங்களைக் காணவும், பழங்கலைகளை அறியவும். கல்வி கற்கவும் வெளியிடங்களுக்குச் சென்றனர். சிலர் போர் செய்யவும் வெளிநாடுகளுக்குச் சென்றனர். அன்று பெரும்பாலும் பொருள் தேடவே வெளியிடங்களுக்குச் சென்றனர். ஹிராட்டஸ் என்பாரின் பயணம் என்னும் நூல் அவரது பயண அனுபவத்தைக் கூறுவதாகும். பயணிகளில் பலர் தங்கள் வாழ்க்கையைச் சத்திரங்களிலும் படகுகளிலும் கழித்ததாகப் புளுடார்க் என்பவர் எழுதியுள்ளார். பயணிகளில் பலர் தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ள உலகம் சுற்றினர் என்று டேனியல் கூறுகிறார்.

பண்டைக் காலத்தில் மனிதன் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலேயே வாழ விரும்பினான். அங்கு அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் கிடைக்காத பொழுது வேறிடங்களுக்குச் செல்லலாயினர். வீரர்கள் பிற இடங்களைச் சுற்றிப் பார்த்து அங்குள்ள தட்பவெப்பநிலை. தங்கும் வசதி. உணவு வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் இடங்களைத் தேர்ந்து எடுத்து மக்களுக்கு அறிவித்தனர். மக்கள் அங்குக் குடியெரலாயினர். பருவகால மாறுபாட்டினாலும், உணவுத் தட்டுப்பாட்டினாலும், ஆரியர்கள் மத்திய ஆசியாவை விட்டு வேறிடங்களுக்குச் செல்லலாயினர்.

புதிய பாதைகள்

நாளடைவில் வெளியிடங்களுக்குச் செல்லப் புதிய பாதைகள் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் தூரப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பலர் கூட்டமாகச் சென்று வெளிநாடுகளில் வாணிகம் செய்யலாயினர். வாணிகம் செய்யச் சென்ற இடங்களில் மக்கள் பல இனத்தவர்களுடன். பல நாட்டு மக்களுடனும் கலந்து பழகினர். அதனால் வாணிகம் பெருகியது. வாணிகத் தொடர்பு மக்களின் நாகரிகம், பண்பாடு போன்றவற்றை வளர்த்ததுடன் மக்கள் சுமுகமாக வாழவும் வழி வகுத்துத் தந்தது. பினீசியர்கள் முதன் முதலில் தற்கால முறையில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதுடன் வாணிகமும் செய்து வந்தனர்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுமேரியர்கள் வண்டிகளையும், பணத்தையும் கண்டுபிடித்தால், வாணிகம் பெருகலாயிற்று. பல வணிகர்கள் வண்டிச் செலவிற்கும், தங்கும் இடத்திற்கு வாடகை தருவதற்கும், உணவிற்கும் பணத்தையோ, பண்டங்களையோ மாற்றாகத் தந்தனர். ஆரம்பத்தில் பண்டமாற்று முறையே வழக்கில் இருந்தது. அதனால் பல இடையூறுகளும் சிக்கல்களும் ஏற்பட்டன. ஒரு பொருளின் மதிப்பிற்கு ஏற்ற முறையில் மற்றொரு பொருளைக் கொடுக்க முடியாத காரணத்தால் பணப்புழக்கம் ஏற்பட்டது. அதே காலத்தில் இந்தியாவிலும் வாகனங்களும், பணமும் கண்டு பிடிக்கப்பட்டதால், இந்தியாவிலும் மிகுதியான சுற்றுப்பயணம் இருந்தது. அதனை மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் காட்டும். உலகப் பயண வரலாற்றில் இந்தியாவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வாணிகமும், புனித இடங்களுக்குச் செல்வதுமே அவர்களது நோக்கமாக இருந்தது. பண்டைக்காலத்தில் முனிவர்கள் இமயமலையின் அடிவாரத்திலும், தென்னிந்தியக் காடுகளிலும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அங்குக் குருகுல முறையை உருவாக்கி மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தனர்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எகிப்திற்குச் சென்று வருவதை மக்கள் பெருமையாகக் கருதினர். நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்கி என்ற பாபிலோனிய அரசர் சாலைகளை அமைத்தும், பூஞ்சோலைகளை உருவாக்கியும், மரியாதைக்குரிய பயணிகளுக்கு ஓய்வு இல்லங்களைக் கட்டியும் பயணத்தை ஆதரித்தார். அக்காலத்தில் பயணிகள் அவ்விடங்களில் பாதுகாப்பாகத் தங்கிச் சென்றனர். பலர் பல நாடுகளுக்குச் சென்று தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டனர் என்று விவிலியம் கூறுகிறது.

உரோம நாட்டு மக்கள் தற்காலச் சுற்றுலா போல மன மகிழ்ச்சிக்காகவும், இன்பத்திற்காகவும் பயணம் செய்தனர். ஏசு பிறக்கும்பொழுது சுற்றுப்பயணம் சொகுசான ஒன்றாக மாறியது. அக்காலத்தில் மன மகிழ்ச்சிக்காகப் பயணம் செய்யும் முறை சீனாவிலும் இந்தியாவிலும் சப்பானிலும் பரவியது. உரோமப் பேரரசில் எளிதான செய்தித் தொடர்பு சாதனங்களும், பயணிகளுக்குப் பாதுகாப்பும் இருந்தமையால் மக்கள் இன்பப்பயணத்தை விரும்பினர். அரசும் மிகுதியான பயணத்தை ஊக்குவித்தது. உரோம நாட்டுச் சாலைகளும் நாகரீக முறையில் அமைந்திருந்தன. அவர்கள் பழைய சாலைகளைப் புதுப்பித்தனர்: புதிய சாலைகளை அமைத்தனர். சாலைகளை நன்றாகப் பராமரித்தனர். அப்பொழுது பயண நூல்களும் தோன்றின. அவற்றில் வழித்தடங்களும், பெரிய சாலைகளின் பெயர்களும், ஓரிடத்திற்கும் இன்னோர் இடத்திற்கும் உள்ள தூரமும், அவ்விடங்களுக்கு வண்டிகள் செல்லும் நேரமும், அவ்விடங்களுக்குச் செல்ல ஆகும் நேரமும், இடம் பெற்றிருந்தன. அஞ்சல் முறையில் குதிரைகளைப் பயன்படுத்தி உரோமர்கள் ஒரு நாளில் நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் செய்தனர். அவர்கள் சாலைகளில் ஐந்து ஆறு மைல்களுக்கு ஒரு தங்குமிடத்தைக் கட்டியிருந்தனர். அவர்கள் ஆரம்பத்தில் மத்தியதரைக் கடல் பகுதிகளில் இருந்த கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும், எகிப்தில் இருந்த பிரமிடுகளையும் காணச் சென்றனர். உரோமர்கள் அடிக்கடி கிரீசுக்கு சென்று வந்தனர். ஒலிம்பிக் விளையாட்டைக் காணச் சென்றனர். ஓய்வு நேரத்தில் இன்பச் சுற்றுலா மேற்கொண்டனர். ஆற்றங்கரைகளில் மக்கள் கூடுவதற்கு ஏற்ற வகையில் சுற்றுலா மையங்களை அமைத்து இன்பப் பயணத்திற்கு ஆக்கம் தந்தனர். அவர்கள் மருத்துவக் குளியலுக்காகக் கடற்கரைப் பகுதிகளுக்குச் சென்றனர். மூலிகை நிறைந்த நீரில் குளிப்பதற்கும், நீரைக் குடிப்பதற்கும் அருவிகளை நாடிச் சென்றனர். நோயாளிகள் நோயைக் குணப்படுத்த ஆற்றங்கரைகளுக்கும், தாதுக்கள் உள்ள நீர்த்தடங்களுக்கும் சென்று வந்தனர். ஸ்பாசு என்று சொல்லப்படும் இடங்கள் உரோமர்களுக்கு இன்பத்தையும் மகிழ்ச்சியையும் நல்கியதோடு, விருந்து அளிக்கும் இடங்களாகவும் இருந்தன. அவை நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவனைகளாகவும் பயன்களைக் குணப்படுத்தும் மருத்துவமனைகளாகவும் பயன்பட்டன. அவ்விடங்களில், விளையாட்டுப் போட்டிகள், திருவிழாக்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன. அவை மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன. அதன் பயனாக அவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தனர். இங்கிலாந்து, பிரான்சு, மத்திய ஐரோப்பா போன்ற இடங்களில் 1865-ல் கடற்கரைகளில் பல சுற்றுலா மையங்கள் ஏற்பட்டன. அதனால் விடுமுறை நாட்களில் அவ்விடங்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் சென்று வந்தனர். ஸ்பாசும், கடற்கரைகளில் அமைந்த சுற்றுலா மையங்களும் தற்காலச் சுற்றுலாவிற்கு வழியமைத்துத் தந்தன.

சமயப் பயணம்

இடைக்காலத்தில் மதங்களை அறியச் சிலர் நாடுகளைச் சுற்றினர். கோயில் குளங்களை நாடி மக்கள் சென்றனர். இடைக்காலத்தில் இறுதியில் ஐரோப்பாவில் உள்ள புனித இடங்களுக்கு மக்கள் சென்றனர். இன்றும் புனித இடங்களுக்குச் செல்லும் பயணமே மிகுதியாக உள்ளது. அப்பொழுது இன்பத்திற்காக மிகக் குறைந்த பயணங்களை மேற்கொள்ளப் பெற்றன. கிறிஸ்தவ மதம் பரவியதால் பலர் பெத்தலகேம் சென்று வந்தனர். சமயச் சடங்குகள் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வது என்னும் எண்ணம் மக்களிடம் பரவியபின், சுற்றுலா சூடு பிடிக்க ஆரம்பித்தது. சமயம் மக்களை ஒன்று சேர்க்கும் கருவியாகப் பயன்பட்டது. புனிதப் பயணம் சமயத்தைப் பலப்படுத்தியது. வேளாண்மை செய்தவர்களும் நாடு நகரங்களைக் கடந்து புனிதப் பயணம் மேற்கொண்டனர்.

நீண்ட பயணங்கள்

இத்தாலியர்கள் மறுமலர்ச்சிக்குப் பின் நீண்ட பயணங்களை மேற்கொண்டனர். அவர்கள் பெரிய சாலைகளை அமைத்தனர். 15-ம் நூற்றாண்டின் இறுதிக்குள் இத்தாலி உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. அக்காலத்தில் இத்தாலி ஐரோப்பிய நாடுகளுக்கு நாகரிக வழிகாட்டியாக விளங்கியது. 16-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இத்தாலிக்குச் சென்று வந்தனர். கி.பி.1776-ல் சாமுவேல் ஜான்சன் என்பவர் இத்தாலியில் சுற்றுப்பயணம் செய்தார். இத்தாலிக்குச் சென்று வராதவர்கள் தாழ்வாகக் கருதப்பட்டனர். மதம், சட்டம், கலைகள் போன்றவற்றை அறிவதற்காகவும் மக்கள் பிற நாடுகளுக்குச் சென்று வந்தனர். கி.பி.1785-ல் 40,000 ஆங்கிலேயர்கள் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளனர். அவர்கள் பொருட் காட்சிகளையும், கண் காட்சிகளையும், கலைக் கூடங்களையும் கண்டு வந்தனர். கி.பி.1763 முதல் கி.பி.1793 வரை ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீண்ட சுற்றுலாக்களின் பொற்காலம் எனலாம்.

இங்கிலாந்து

இங்கிலாந்தில் கல்வி முற்றுப் பெறுவிப்பதற்கான வெளிநாட்டுச் சுற்றுலா கி.பி.1670-ல் நடந்தது. ரோசஸ் சண்டைகள் முடிந்தபின் மக்கள் பல இடங்களுக்குச் செல்லலாயினர். டுடோர் என்னும் அரசன் படித்த நாகரிகமானவர்களையும், கூலிக்காக வேலை செய்கின்றவர்களையும் ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்தான். அச்சு இயந்திரக் கண்டு பிடிப்பும், இத்தாலியின் மறுமலர்ச்சி இயக்கமும் மாணவர்கள் பலரைச் சுற்றுலாச் செல்லத் தூண்டியது. அந்த முடியாட்சியானது பணக்காரர்களையும், அரசியல்வாதிகளையும் அரசியல் விரகர்களாக அயல்நாடுகளுக்கு அனுப்பியது. அரசியல் விரகர்கள், வணிகர்கள், அறிஞர்கள், ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்தனர். இளைஞர்களில் சிலர் வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆகவேண்டியும், அரசியல் விரகராக வேண்டியும் வேறிடங்களுக்குச் செல்லலாயினர். சிலர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதற்காகக் கூறிக் களிமகனாக மாறினர். அதைப் பெரியவர்கள் வெறுத்தனர். அப்பயணங்களினால் தீய விளைவுகள் ஏற்பட்டதை உணர்ந்தனர். கி.பி.1678-ல் ஜான் கெயில் கார்டு என்பவர் பிறநாடுகளுக்கு வழி கூறும் வழிகாட்டி நூலொன்று எழுதினார்.

18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்திற்குள் நுழைவதற்குச் சுங்கச் கட்டுப்பாடு இருந்தது. சுங்க அதிகாரிகள் பயணிகளின் பொருள்களைச் சோதனை செய்து கள்ள வணிகச் சரக்குகளைக் கைப்பற்றினர். எனவே அக்காலத்தில் வெளிநாட்டினர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. 19-ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் ஜான்லூடன் மேக் ஆடமும், தாமசு டெல்போர்டும் வசதியான சாலையின் மேற்பரப்பைக் கண்டுபிடித்தனர். அதனால் மாசு நிறைந்த சாலைகள் புதுப்பிக்கப் பெற்றன. அழகான, அமைப்பான மேற்பரப்பையுடைய முன்னேறிய சாலை வசதிகளினால் கோச் வண்டிப் பயணங்கள் மிகுதியாயின. சார்லஸ் டிக்கன்ஸ் என்னும் எழுத்தாளர் கோச் வண்டியில் இத்தாலிக்குப் பயணம் செய்ததை விவரித்து எழுதியுள்ளார்.

பாரதத்தில் சுற்றுலா வளர்ச்சி

இந்தியாவின் இயற்கை அழகு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்து கிடக்கிறது. பழங்கால நினைவுச் சின்னங்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் கடற்கரை பகுதிகள், திராவிடப் பாரம்பரியத்தைப் போற்றும் தென்னகக் கோவில்கள் மற்றும் தேவாலயங்கள், மசூதிகள் போன்றவைகள் காணப்படுகின்றன. இவ்வாறு இயற்கை சொத்துகளைத் தன்னகத்தே கொண்ட இந்தியா சுற்றுலாத் துறைக்குத் தேவையான அம்சங்கள் அனைத்தும் கொண்டுள்ளது. மேலும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒவ்வொரு நாடும் சுற்றுலா வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்திய அரசும் சுற்றுலா வளர்ச்சிக்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தியாவில் சுற்றுலா படிப்படியாக வளர்ச்சியடைந்த விதம் பற்றிக் காணலாம்.

சார்ஜண்ட் குழு

இரண்டாம் உலகப்போருக்கு பின்பு தான் உலக நாடுகளில் சுற்றுலா வளர்ச்சியடைய ஆரம்பித்தது என்பதை வரலாறு நமக்குப் புலப்படுத்துகிறது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உணர்ந்த அப்போதைய ஆங்கில அரசு சுற்றுலா வளர்ச்சிக்கான பணிகளை ஆராய முற்பட்டது. 1945-ம் ஆண்டில்தான் இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆண்டில்தான் இந்திய அரசு இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று ஆராய சர்ஜாண் சார்ஜன்ட் என்ற அரசின் கல்வி ஆலோசகர் தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைத்தது. அக்குழு 1945 அக்டோபரில் தனது அறிக்கையைச் சமர்பித்தது. இது தான் இந்திய சுற்றுலா வளர்ச்சிக்கு எடுக்கப்பட்ட முதல் அரசாங்க நடவடிக்கையாகும்.

சார்ஜண்ட் குழுவின் நோக்கம்

சார்ஜண்ட் குழு கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டது.

சுற்றுலா வர்த்தகத்தை அதிகரித்து விரிவுபடுத்த வேண்டும்.

சுற்றாலாவிற்கு ஏற்ற இடங்களை உருவாக்கி அல்லது தேர்ந்தெடுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் செய்யவேண்டும். சீதோஷ்ண நிலைகளுக்கேற்ப ஸ்தலங்களை அழகுபடுத்த வேண்டும்.

சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சகலவசதிகளையும் போக்குவரத்து வசதி, இருப்பிடவசதி, உணவு விடுதிகள், வழிகாட்டும் புத்தகங்கள், சுற்றுலா சம்பந்தப்பட்ட ஏடுகள், அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலாத் துறையின் வழிகாட்டிகள் போன்றவைகளை பயணிகளுக்கும் கிடைக்கும் வண்ணம் செய்ய வேண்டும்.

மாநில அரசுகளும், மத்திய அரசும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலா ஸ்தலங்களை மேம்படுத்துவதற்காகவும், அடிப்படை வசதிகள் செய்வதற்காகவும் பரிந்துரைகள் செய்யவேண்டும்.

மேற்கண்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான பரிந்துரைகளை சர்ஜெண்ட் குழு அக்டோபர் 1946-ல் அரசாங்கத்திடம் சமர்பித்தது. இந்தக் குழுவின் இன்றியமையாத பரிந்துரை என்னவென்றால் இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சிக்கு முழுநேரக் கவனத்தைச் செலுத்த ஒரு தனி நிறுவனத்தை ஏற்படுத்துவது என்பதேயாகும்.

சார்ஜெண்ட் குழுவின் பரிந்துரைகள்

சுற்றுலாவின் பொருளாதார சமுதாய முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் மேம்பாட்டிற்குத் தனி நிறுவனம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதன் கிளைகள் பம்பாய், டில்லி, சென்னை, கல்கத்தா ஆகிய பெருநகரங்களில் அமைக்கப்பட்ட வேண்டும்.

சுற்றுலா நிறுவனமானது அதிகப்படியான பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் செயல்பட வேண்டும். சுற்றுலாப்பயணிகளின் அதிகமான வருவாயால் அதிகப்படியான வருவாயைப் பெற முடியும்.

நாட்டின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையிலும் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தோடும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுலாத்துறை பிரத்யேக அலுவலர்களைக் கொண்டு தனி நிறுவனமாகச் செயல்படவேண்டும்.

இந்திய சுற்றுலா மையங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் விளம்பரப் பிரிவு உலகமெங்கும் நிறுவப்பட வேண்டும்.

சுற்றுலாவுக்குப் பொருத்தமான வழிகாட்டி நூல்கள், சுவரொட்டிகள், துண்டுவெளியீடுகள், சிறுசிறு நூல்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டும்.

வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவில் விடுமுறை நாள்களைச் செலவழிக்க வசதிகள் செய்துகொடுக்க வேண்டும். நல்ல தட்பவெப்பமுள்ள இடங்களைச் சுற்றுலா மையங்களாக்க வேண்டும். இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடத்தை அழகுபடுத்த வேண்டும். புனிதமான இடங்களை விரிவுபடுத்த வேண்டும். வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களை வெளிக்கொணரவேண்டும். தொல்பொருள் இடங்களைச் சிறப்பிடங்கள் ஆக்குவது போன்ற திட்டங்களைத் தீட்டவேண்டும்.

சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகள் தங்குமிட வசதிகள் செய்துகொடுக்க வேண்டும்.

வழிகாட்டிகளுக்குப் பயிற்சி தர ஆவன செய்யவேண்டும்.

சுற்றுலாப் பயணிகளுக்குப் பயன்படும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

தரம் வாய்ந்த உணவு விடுதிகள் அமைக்கப்பட வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் சுற்றுலாத் துறையில் ஈடுபாடு கொள்ளச் செய்யவேண்டும்.

அயல்நாட்டுப் பயணிகளின் வசதிக்கேற்ப பன்னாட்டுத் தரம் வாய்ந்த சொகுசான விடுதிகளை அமைக்க வேண்டும்.

வெளிநாடுகளிலுள்ள பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்காக லண்டன் மற்றம் நியூயார்க் நகரங்களில் இந்திய சுற்றுலா மையங்களின் சிறப்புக்களை எடுத்துரைப்பதற்காக தகவல் மையங்களைத் தொடங்க வேண்டும்.

சுற்றுலா பயணிகள் இடற்பாடில்லாமல் பயணம் செய்வதற்காக வானூர்தி, ரயில் வண்டி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

16. சுற்றுலாப் பயணிகளைப் பற்றிய புள்ளிவிபரம் சேகரிக்க வேண்டும்.

அடிப்படை வசதிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு செய்துகொடுத்து சுற்றுலாத் துறையின் முக்கிய அம்சத்தை விளம்பரப்படுத்த வேண்டும்.

சார்ஜண்ட் குழுவால் செய்யப்பட்ட மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் இந்திய சுற்றுலா வளர்ச்சிக்குத் தொடக்கமாகவும், திருப்புமுனையாகவும் அமைந்ததோடல்லாமல் நாடு விடுதலை பெற்றதும் இந்தியாவில் உருவான நிறுவனத்திற்கு வழிகாட்டும் கோட்பாடுகளாக அமைந்தன.

சுதந்திரத்திற்குப் பின் இந்திய சுற்றுலாத்துறையின் வளர்ச்சி

சார்ஜெண்ட் குழு அறிக்கையானது எப்படியெல்லாம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டுமென்ற பல ஆலோசனைகளை வழங்கியது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சுற்றுலாத்துறைக்கு ஏற்ற அனைத்து தேவையான வசதிகளை நம்நாடு பெற்றிருந்தது. சுற்றுலாப் பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டுசெல்ல தரைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து வசதிகளையும், பயணிகள் வேகமாக சுற்றுலா ஸ்தலங்களை சென்றடைய விமானப் போக்குவரத்து வசதியும் இருந்தது. மிகப்பெரிய பன்னாட்டு விமானங்களும் இந்தியா வந்து செல்லும் அளவிற்கு விமான நிலையங்களும் அமைந்திருந்தன.

ஆனால் மைய அளவில் சுற்றுலா அமைப்பொன்று அமைக்கப்படாத காரணத்தினால் இவற்றையெல்லாம் ஒருங்கிணைந்து செயல்பாட்டிற்குக் கொண்டுவர இயலவில்லை. செயல்படுத்த முடியவில்லை. எனவேதான் சார்ஜெண்ட குழு மத்திய அளவில் ஒரு சுற்றுலாக் கழகம் அமைக்க பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் 1949-ம் ஆண்டு போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் 'சுற்றுலா போக்குவரத்து பிரிவு' ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி, கல்கத்தா, பம்பாய், சென்னை போன்ற நகரங்களில் வட்டார சுற்றுலா அலுவலகங்கள் திறக்கப்பட்டன. மேலும் ஸ்ரீநகர், ஆக்ரா, பனாரஸ், ஜெய்ப்பூர், அவுரங்காபாத், பெங்களுர், டார்ஜிலிங், சிம்லா மற்றும் ஊட்டி ஆகிய சுற்றுலா மையங்களில் 'சுற்றுலா மையங்களில் தகவல் அலுவலகங்கள்' திறக்கப்பட்டன.

ஆதாரம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்