தமிழ் நாட்டில் சுற்றுலா வளர்ச்சி

இந்திய சுற்றுலாத்துறையில் மூன்றாவது இடம் வகிக்கும் மாநிலம் தமிழ்நாடு ஆகும். இங்கே சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அம்சங்கள் அனைத்தும் காணப்படுகிறது. குளுமையான மலைவாசஸ்தலங்கள், நீர் வீழ்ச்சிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால கோவில்கள், குகைகள் போன்ற பல சுற்றுலா இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. மேலும் பக்கத்து நாடான இலங்கைக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் பலர் தமிழகத்தில் சில நாட்கள் தங்கிவிட்டுச் செல்கின்றனர்.

எனவே தமிழ்நாட்டில் சுற்றுலா ஒரு சிறப்பிடம் பெற்றுள்ளது. தமிழக அரசும் சுற்றுலாவை மேம்படுத்த இந்த துறைக்கு 'தொழில் மதிப்பை' வழங்கி உள்ளது. அதாவது தொழிற்துறைக்குக் கொடுக்கப்படும் அனைத்துச் சலுகைகளும் சுற்றுலாத்துறைக்கும் வழங்கி உள்ளது.

தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சிக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள சுற்றுலா இடங்களைப்பற்றி இன்டர்நெட் மூலம் வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செய்துள்ளது. அறநிலையத்துறையின் 15 ஆலயங்களைப் பற்றியும் இன்டர்நெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மண்டபம் அருகே கடலில் 22 தீவுகள் மன்னார்வளைகுடாவில் உள்ளன. கடல்பசு, டால்பின், கடல்குதிரை, பவளப்பாறைகள் மற்றும் அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. ராமேஸ்வரத்திற்கு வரும் வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் இவற்றைக் காண விரும்புகின்றனர். இதில் மண்டபத்திலிருந்து 8 கி.மீ. தூரத்திலுள்ள 'குருசடை பவளப்பாறைத்' தீவை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் 27 லட்சம் ரூபாய் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த 'குருசடைதீவு' 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இத்தீவைப் பார்ப்பதற்கு வசதியாக நான்கு நவீனபடகுகள் வாங்கப்பட்டுள்ளது. இந்தப்படகின் கீழ்பகுதி முழுவதும் கண்ணாடிப் பேரிழைகளால் ஆனது. இதன் மூலம் படகில் சவாரி செய்தபடியே கடல்வாழ் உயிரினங்களை கண்டுகளிக்கலாம். மேலும் இங்குள்ள பவளப்பாறைகளை கடலில் மூழ்கிக் காண்பதற்கும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படும். இவ்வாறு சுற்றுலா மையங்கள் பயணிகளை கவரும் விதமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டுப் பயணிகளும் உள்நாட்டுப் பயணிகளும் அதிக எண்ணிக்கையில் வரும் கன்னியாகுமரியில், சுற்றுலா வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 'உலக சுற்றுலா ஸ்தலமாக' அறிவிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியில் மத்திய அரசு அறிவித்தபடி 'இந்திய வருகை ஆண்டு' கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி 'உல்லாச படகு சேவை' துவக்கப்படுகிறது. கன்னியாகுமரி, பூம்புகார் படகுத்துறையில் இருந்து புறப்பட்டு சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களுக்குச் சென்று திரும்பும் இந்த 3 கி.மீ தூரம் நிமிடத்தில் முடிவடையும். இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இது தவிர தமிழக சுற்றுலாத்துறையும் தெற்கு ரயில்வேயும் சேர்ந்து ஒரு புதிய சுற்றுலாத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி கொடைக்காணலை சுற்றிப் பார்க்கும் வகையில் ரயில்நிலையம் அருகே ஒரு பேருந்தும், ஊட்டியைக் காணவரும் பயணிகளுக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே ஒரு பேருந்தும், அருகே ஒரு பேருந்தும், ஏற்காடு மலையைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சேலம் ரயில் நிலையத்தில் ஒரு சுற்றுலா பேருந்தும் நிறுத்தப்படும். இந்த ரயில் நிலையங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பஸ்கள் மூலம் அந்தந்த இடங்களை இரண்டு நாட்களுக்கு சுற்றிப்பார்க்க முடியும்.

ஆதாரம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்