தொழில் மயமாக்கலின் தேவை (Need for Industrialisaiton)

தொழில்துறையின் தேவை மற்றும் பணி, உலகம் முழுவதும் வளர்ச்சிச் சிந்தனையுடைய அனைத்து நாடுகளாலும் உணரப்பட்டுள்ளது. தொழில்துறையானது, இதர துறைகளுடனான தனது முன்னேற்றம் மற்றும் பின்னடைவுத் தொடர்புகளினால், விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தனது தொழிற்புரட்சியினால் தற்கால செல்வந்த நாடுகள் நன்கு வளர்ச்சியுற்ற தொழிற்துறையைப் பெற்றுள்ளது. “தொழில் மயமாக்குதல்” என்பது அதிக அளவு உற்பத்தி செய்யும் தொழில்துறை பரவலாக்கம், அதிக நபர்களை வேலைக்கு அமர்த்துதல், பன்னாட்டுச் சந்தையை ஊக்குவித்தல், தனித்திறன் மேம்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், உற்பத்தியை மேம்படுத்த மின் அணு சாதனங்கள், கனிணி தொழில்நுட்பம் போன்றவற்றின் செயல்பாடுகள் அதிகரிக்கச் செய்தன. இவ்வாறான முனைப்பான தொழில் மயமாக்குதல் இல்லாமையாலேயே பல நாடுகள் பின்னடைவு பெற்று ஏழ்மை நிலையில் உள்ளன. எனவே, நவீன வளர்ச்சி நிலைகளில் விரைவான வளர்ச்சியையும் பொருளாதார மேம்பாட்டையும் பெறுவதற்கு தொழில் துறையின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. பின் வருபவை தொழில் துறையின் அவசியத்தை உணர்த்துகிறது.

நாட்டு வருமானத்தை உயர்த்துதல்

தொழில் மயமாக்குதல் மூலம் நாட்டு வருமானம் உயர்வதால் பொருளாதாரம் சீரடைகிறது. தொழில் துறையில் முன்னேறிய நாடுகளில் நாட்டு வருமானத்தின் பெரும்பங்கு தொழிற்துறையிடமிருந்து வருகிறது.

வேலைவாய்ப்புகள் (Employment Opportunities)

வளரும் நிலைக்கு உபரியான உழைப்பும் (அதிக மக்கள் தொகை) வேலையின்மையும் (unemployment) ஒரு பெரும் சவாலாகும் (Challenge). தொழில்மயமாதல், நாட்டின் உற்பத்தி வளங்களை நன்கு பயன்படுத்திக் கொள்வதால், வேலை வாய்ப்புப் பெருகிறது. இதனால் மக்களின் வருமானம் உயர்ந்து வாழ்க்கைத் தரமும் மேம்படுகிறது.

உயர்வான வாழ்க்கைத் தரம் (Higher Living Standard)

தொழில் மயமாதலின் மூலம் நாட்டு வருமானம் உயர்வதால் தொழில் பொருட்களின் மீது மக்களுக்கு நாட்டம் ஏற்படுகிறது. இதனால், மக்களின் 'தலா வருமானம் உயர்வடைகிறது. எனவே வாழ்க்கைத்தரம் மேம்படுகிறது. இது திட்டமிட்ட வளர்ச்சிப் பாதையின் மூலமே சாத்தியமாகும்.

ஏற்றுமதியை ஊக்குவித்தல் (Promoting Exports)

தொழில் வளர்ச்சியில் முன்னேறிய நாடுகள், அதிக ஏற்றுமதியை செய்வதனால் அதிகப்படியான அந்நியச் செலவாணியை ஈட்ட முடிகிறது. தொழில் பொருட்களின் வருமான நெகிழ்ச்சி; அடிப்படைப் பண்டங்களைக் காட்டிலும், மிக அதிகமாக உள்ளது. எனவே, முன்னேறிய தொழில் பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம், ஏற்றுமதி ஊக்குவிக்கப்பட்ட போதுமான அளவு அந்நியச் செலாவணியை ஈட்ட முடிகிறது.

மூலதன ஆக்கம் (Capital Formation)

வேலைவாய்ப்புக்களை பெருக்குதல், விரைவான தொழில் மயமாக்குதலினால் ஏற்படும் வருமானப் பெருக்கம் ஆகியன பொருளாதாரத்தில் சேமிப்பு மற்றும் மூலதன ஆக்கத்தை பெருக்குகிறது. மேலும், இதனால் ஏற்படும் அதிக முதலீட்டினால் தொழில் துறைகள் பல வகைகளிலும் முன்னேறுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி (Technological Progress)

வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தால் தொழில்துறை, தொழில்நுட்ப வளர்ச்சியினையும் ஊக்குவிக்கிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியும், அதன் இயக்க ரீதியான பொருளடக்கமும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை பலப்படுத்துகிறது.

தொழில் முன்னேற்றத்தின் வகைகள் (Patterns of Industrial development)

விடுதலைக்கு முன்னர், இந்தியா பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. இங்கு முறையான தொழில்துறை ஏதும் இல்லை. இரண்டாம் உலகப் போர், தொழில் வளர்ச்சியில் ஒரு சிறு முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், நாட்டு வருமானத்தில் தொழில்துறையின் பங்கு மிகவும் குறைவாகவே இருந்தது. விடுதலை பெற்ற இந்தியாவில், ஐந்தாண்டு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட பின்பு தொழில் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. தற்கால இந்தியாவின், திட்டமிடுபவர்களால், விரைவான பொருளாதார வளர்ச்சியும், ஒட்டுமொத்த வளர்ச்சியும், தொழில் மயமாதலின் மூலமே முடியும் என்பது உணரப்பட்டது. விரைவான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் தவிர, பொருளாதார நாட்டுடைமையாதல் ஈர்க்கப்பட்ட வளர்ச்சித் திட்டத்தின் இந்திய நிலைப்பாடானது, பொதுத் துறையின் நெறிகாட்டுதலுடன் தன்னிறைவு பெற விரும்பியது. மேலும், இதன் வழியே பெற்ற பொருளாதார வளர்ச்சியை அனைவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பயன்படுத்திக் கொண்டது. அதிக அளவு உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பு, பொருளாதார சமத்துவம் அடைதல் ஆகியவை முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் நீண்டகால நோக்கங்களாகும். இதன் கொள்கைகள், வளர்ச்சி மற்றும் பகிர்மான நீதி (distributive justice) ஆகியவற்றை நோக்கங்களாக கொண்டது. எனவே, தொழிற்சாலைகளின் விரிவான முன்னேற்றம் மற்றும் பல்துறைப் பெருக்கம் வளர்ச்சிக்கு அடிப்படையில் தேவை என தீர்மானிக்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் அரசே பங்கேற்ற வளர்ச்சித் திட்டத்தின் மூலமாக நாம் பெற்ற அனுபவம் இந்திய தொழில் மற்றும் கட்டமைப்பின் வளர்ச்சியில் மிகப்பெரிய முக்கியமான சாதனைகளை கொண்டு வந்துள்ளது.

'சமுதாய நீதியுனூடே' வளர்ச்சி (Growth with Social Justice) என்பது 1951ல் ஏற்படுத்தப்பட்ட திட்டமிடுதலின் முக்கிய நோக்கமாக தொடர்ந்து வந்து கொண்டு உள்ளது. சமுதாயத்தின் பெருவாரியான மக்கள் பயன்பெறும் வகையில் வளர்ச்சிப் பாதை மாற்றியமைக்கப்பட்டதோடு, போதுமான வேலைவாய்ப்பைப் பெருக்கி, வருமானப் பகிர்வினை செய்து, விரைவான தொழில் வளர்சியின் மூலம் அனைவரின் நலனும் பாதுகாக்கப்பட்டது.

பொதுத்துறை

நோக்கங்கள்

வளர்ச்சியை முடுக்கி விடுதல், வேலை வாய்ப்பை பெருக்குதல், வட்டார ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல், பொருளாதார சக்தி குவிப்பினை சோதனை செய்தல், தற்சார்பினை அடைதல்.

முக்கியத்துவம்

'பொதுத்துறை' என்பது பொருளாதாரத்தின் ஒரு பங்கினை 'அரசே' நிர்வகித்துக் கொள்வதாகும். தனியார் துறை, தனி நபரோ அல்லது நிறுவனங்களோ சொந்தமாக ஏற்று நடத்துவதாகும். உற்பத்தி வளங்களை வேலைக்கமர்த்திக்கொண்டு பொதுத் துறைகள்' பொதுமக்களுக்கு வேண்டிய பல வசதிகளான ஆரம்பக் கல்வி, பொதுச் சுகாதாரம், குடிநீர், சமூகப் பணிகள், குழந்தைச் சத்துணவு, பெண்கள் மற்றும் தொழிலாளர் நலன், சமூகப் பாதுகாப்பு, உடல்நலம், வறுமை ஒழிப்பு, சாலை போக்குவரத்து, பாதுகாப்பு போன்றவற்றை அளித்து வருகிறது. மேற்கூறிய அனைத்தும் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வுக்கும் வழிவகை செய்யும். பொதுத்துறை பொறுப்புடன் பொதுமக்களுக்கு பண்டங்களை வழங்குவதைப் போல தனியார் அமைப்புக்களோ அல்லது நிறுவனங்களோ செயலாற்றுவதில்லை. இவ்வாறு “தனியார்த் துறையும், பொதுத் துறையில் சேர்ந்து செயல்படும் “கலப்புப் பொருளாதாரம்” அநேக தற்கால நாடுகள் கடைபிடிக்கும் வழிமுறையாகும். விடுதலைக்குப் பின்னர் பொருளாதாரத்தை ஒழுங்குமுறைப்படுத்தியும் நலத் திட்டங்களுக்கு வழிவகை செய்தும் இந்திய அரசு மாபெறும் பங்காற்றியது. இத்தகைய தேவைகளை நிறைவேற்ற இந்திய அரசானது பொதுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து உற்பத்தியை உருவாக்கி ஏறத்தாழ 45 ஆண்டுகளாக வளர்ச்சித் திட்டத்திற்கு அடிகோலியது.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு

பல வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அதிக பங்கினை பொதுத்துறை நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவு தந்து வருகிறது. வளரும் உலகத்தில் அநேக நாடுகள் 1950 களில், தனது தொழில்துறையை புதுப்பித்துக் கொள்வதிலும், "தற்சார்பு” மற்றும் 'பொருளாதார நாட்டுடைமையாதல் கொள்கை' ஆகிய இரண்டையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டன. வளர்ச்சித் திட்டத்தின் வழியேயான பொதுத்துறை மேம்பாடு என்பது அடிப்படையில் வளங்களை உத்தம அளவு பயன்படுத்திக் கொள்வதும் சமமாகப் பங்கிடுவதும் ஆகும். அரசியல் சாசன கடமையான "சமுதாயத்தின் பொருள்சார் வளங்கள் அனைத்தும் பொதுநலனை அடிப்படையாகக் கொண்டு பங்கீடு செய்தல் வேண்டும்” என்பதை இந்திய நாடும் உணர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அதிக அளவு விரிவாக்கம் செய்தது. விடுதலை பெற்றது முதல் 50, 60, 70 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு முதன்மையான இயங்கு சக்தியாக முக்கியப் பங்கு வகித்தது. பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு வருமானத்திற்கு அளித்த பங்களிப்பு 1950-51ல் 7.5% ஆகும். ஆனால் 1982-83ல் இதுவே 24% ஆக உயர்ந்தது. பொருளாதார முன்னேற்றம் அடிப்படை, கனரகத் தொழில் மற்றும் போர்த்திறன் சார்ந்த தொழில்கள் வாயிலாக பொதுத்துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்தது.

பொதுத்துறையில் தொழில், வேளாண்மை மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் அனைத்து தனியார்த் துறைகளின் வளர்ச்சிக்கும் பொதுத்துறையின் பங்கு மற்றும் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு இருந்தது. தொழில் துறையில் பொதுத்துறையின் முதலீடு, வலுவான பல நிலை தொழில் ஆதாரத்தை உருவாக்கியது. இது பொருளாதாரத்திற்கு பலவழிகளில் உதவி புரிந்தது. பின்னடைவு (Backward) மற்றும் முன்னேற்ற (forward) தொடர்பின் (linkages) காரணமாக சிறுதொழில்கள் மற்றும் துணைத் தொழில்கள் வளர்ச்சியுற்றன. இது வேளாண் அடிப்படையிலான தொழில்களை வளர்ச்சியுறச் செய்ததோடு, வேளாண் தொழிலுக்கு அவசியமான இடுபொருள்கள், இரசாயன உரங்கள், மின்சாரம் போன்றவற்றை அளித்து வேளாண் தொழில் சார்ந்த தொழில்களை வளர்த்தன. இதனால், உள்கட்டமைப்பு மேம்பட்டு தனியார்த் துறைக்கு உதவியது. பொதுத்துறை அதிக வேலை வாய்ப்பளித்ததன் மூலம் மக்களின் நலனில் மாபெரும் அக்கறை கொண்டுள்ளது. எனினும், 1990 சந்தைப் பொருளாதாரம் மற்றும் தனியார் துறை பற்றிய சிந்தனையாளர்கள் மேற்காணும் வளர்ச்சியை குறை கூறினர். இருப்பினும் பொதுத்துறை அநேக முக்கிய பங்கு ஏற்று பணியாற்றி வருகிறது.

தொழில் வளர்ச்சியின் வகைகள் (Pattern of Industrial Growth)

குறிப்பிட்ட வகையான தொழில் வளர்ச்சி, பயன்பாடு அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட தொழில்களைப் பொறுத்து காணப்படும். தொழில்கள் நான்கு மிக முக்கியப் பிரிவுகளை கொண்டுள்ளது.

1. அடிப்படைப் பண்டங்கள் : சிமெண்ட், இரசாயனப் பொருட்கள், உரம் போன்றவை.

2. மூலதனப் பண்டங்கள் : இயந்திரங்கள், இயந்திர தளவாடங்கள், பொறியியல் பண்டங்கள்.

3. நுகர்வுப் பண்டங்கள் : மிதிவண்டி, தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, இருசக்கர வாகனம், மகிழ்வூந்து, உணவுப் பண்டங்கள், குளிர் பானங்கள்.

4. இடைவினைப் பண்டங்கள் : பெயிண்ட், பிளைவுட், பைப் மற்றும் குழாய்கள், துணைப் பொருள்கள் போன்றவை.

இரும்பு எஃகுத் தொழில் (Steel Industry)

இரும்பு எஃகுத் தொழில்கள் மற்ற எல்லா தொழில்களுக்கும் திறவுகோலாக உள்ளது. உற்பத்தி, சுரங்கத் தொழில், கட்டுமானம், மின்சாரம், போக்குவரத்து மற்றும் இதர உள்கட்டமைப்பு மற்றும் பணிப்பிரிவுகள் அனைத்திற்கும் இரும்பு எஃகு உள்ளீடாகப் பயன்படுகிறது. எனவே, எஃகு வளர்ச்சி பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளுக்கும் முடுக்கி விசையை ஏற்படுத்துகிறது. எனவே இரும்பு எஃகுத் தொழில் “தாய்த் தொழில்” என்று அழைக்கப்படுகிறது. தொழில்மயமாதல், நாட்டு வருமானம், அதிக வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு இரும்பு எஃகுத் தொழில் அதிக அளவு தனது பங்கினை ஆற்றி வருகிறது.

எனினும், அதிக ஊதியமற்ற விலைகள் (unremunerative prices), மிகப்பெரிய பொதுத்துறை இரும்பு எஃகு நிறுவனங்களில் காணப்படும் திறமையற்ற மேலாண்மை, தொழில் நுட்பவாதிகளை விட அதிகாரிகளின் ஆதிக்கம் ஆகியவை இரும்பு எஃகுத் தொழிலில் நிலவும் மிகப்பெரிய பிரச்சினைகள் ஆகும். இந்திய இரும்பு எஃகுத் தொழில் நிறுவனம் (SAIL) 70வதுகளின் இடைக்காலத்தில் நிறுவப்பெற்றது. இதன் முக்கிய பணிகள் மூலப்பொருள்களை (raw materials) பெற உதவி செய்வதும் மற்றும் அநேக இரும்பு எஃகுத் தொழில்களின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதும் ஆகும். 1992 ஆம் ஆண்டு விலை மற்றும் பகிர்மானக் கட்டுப்பாட்டை இந்நிறுவனம் (SAIL) அகற்றியது ஒரு மிகப்பெரிய கொள்கைச் சீர்திருத்தம் எனலாம். விடுதலை பெற்றது முதல் இரும்பு எஃகுத் தொழில் உற்பத்தி ஏறத்தாழ 57 மடங்கு உயர்வடைந்துள்ளது. 1951ஆம் ஆண்டு ஆண்டொன்றுக்கு 7 மில்லியன் டன் ஆக இருந்த இரும்பு எஃகுத் தொழில் உற்பத்தி 2004-05 ஆண்டுகளில் 40 மில்லியன் டன் ஆக உயர்ந்துள்ளது.

நெசவுத் தொழில் (Textiles)

இந்தியாவில் நெசவுத்தொழில் மிகவும் பெரியதுமான மற்றும் பழமை வாய்ந்ததுமான தொழிலாகும். இத்தொழில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது. இத்தொழில் உழைப்பை வேலைக்கமர்த்திக் கொள்வதிலும் வெளியீட்டினை (output) வியாபாரமாக்குவதிலும் நன்றாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. மொத்த தொழில்துறை உற்பத்தியில் 20 விழுக்காடு நெசவுத்தொழில் மூலம் கிடைக்கிறது. 20 மில்லியன் மக்கள்தொகை இதன் மூலம் வேலை பெறுகின்றனர். முதல் ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் 4,775 மில்லியன் சதுர மீட்டர் துணி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதுமுதல் இத்தொழிலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. 2004-05 ஆண்டுகளில் 45,378 மில்லியன் சதுர மீட்டர் துணி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது விடுதலை பெற்றது முதல் நெசவு உற்பத்தியை கணக்கிடும் போது ஏறத்தாழ 10 மடங்கு உயர்வினைக் குறிக்கிறது. போதுமான அளவு மூலப்பொருள் கிடைக்காமை, உள்ளீடுப் பொருள்களின் விலை ஏற்றம், சிறு ஆலைகளின் குறைவான இலாபம், நவீனமாக்குதலில் ஏற்படும் அதிக செலவு ஆகியவை நெசவுத் தொழில் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்சினைகள் ஆகும். சமீப ஆண்டுகளில், நிதிநிலை அறிக்கையில் அளிக்கப்படும் சலுகைகள், இறக்குமதி வரி வதிப்பில் உள்ள பங்கீட்டு முறை, தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அரசின் உதவி ஆகியவை நெசவுத்தொழிலுக்கு இறுதிநிலை பங்குத்தொகையை அளிக்கத் தொடங்கியுள்ளது.

சிமெண்டு ஆலைத்தொழில் (Cement)

அதிக வளர்ச்சி வாய்ப்புக்கள் உள்ள ஒரு மிகப்பெரிய தொழில் சிமெண்டு தொழில் ஆகும். தற்போது உள்ள நாட்டின் வளர்ச்சிப் பாதையில் கட்டுமான தொழில் மிக முக்கிய பணியாற்றி வருவதால் இதற்கு சிமெண்ட் பெரும் கச்சாப் பொருளாக அமைகிறது. இத்தொழில் கச்சாப் பொருள், இயந்திரங்கள், தொழில்நுட்பம் மற்றும் பெருகிவரும் உள்ளூர் தேவை ஆகியவற்றில் 'தன்னிறைவைப் பெற்றுள்ளது.” மேற்காணும் அனைத்து நன்மைகளின் விளைவாக உலகின் சிமெண்ட் உற்பத்தியில் 6 விழுக்காடு பங்கினை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 8.4 விழுக்காடு வளர்ச்சியினைப் பெற்றுள்ளது. சிமெண்ட் தொழிற்சாலை 140.53 மில்லியன் மெட்ரிக் டன் நிறுவன திறனைப் பெற்றுள்ளது. இதனுள் 365 சிறு தொழிற்சாலைகளும், 120 பெரிய தொழிற்சாலைகளும் அடங்கும். பெரிய தொழிற்சாலைகளின் திறன் பயன்பாடு 80 சதவீத அளவிற்கு அதிகம் உயர்ந்தது. தற்கால கொள்கைச் சீர்திருத்தங்கள் சிமெண்டு தொழிற்சாலைகளின் திறன் பயன்பாட்டினை மேலும் உயர்த்துவதாக உள்ளது. அதிக உள்ளீட்டுச் செலவுகளும் மற்றும் ஏற்றுமதிக்கான உள்கட்டமைப்பு இன்மையும் இத்தொழில் (சிமெண்ட்) சந்திக்கும் பிரச்சினைகள் ஆகும். 10ஆம் ஐந்தாண்டுத் திட்டம் 203 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி இலக்கு நிர்ணயித்து; 2002-07 ஆண்டுகளில் 17600 கோடி முதலீட்டினை நிர்ணயித்துள்ளது.

சர்க்கரை ஆலை தொழில்

சர்க்கரைத் தொழில் வேளாண்மையைச் சார்ந்த ஒரு முக்கியத் தொழில் ஆகும். பொருளாதாரத்திற்கு இதன் பங்களிப்பு பலவகையாகும். வேலைவாய்ப்பின் மூலம் வருமானத்தைப் பெருக்குதல், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் சர்க்கரைத் தொழில் கிராமப்புற வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்து வருகிறது. இத்துடன் கூட சர்க்கரை ஆலை தொழில் பிற தொழில்களுக்கு உள்ளீடுகளை (inputs) அளிக்கிறது. ஏற்றுமதியின் வாயிலாக அயல்நாடுகளிலிருந்து அந்நியச் செலாவணியையும் இத்தொழில் ஈட்டித் தருகிறது. உலகிலேயே அதிக அளவு சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது. உலக சர்க்கரை உற்பத்தியில் 15 விழுக்காட்டினை இந்தியா பெற்றுள்ளது. எனினும், பன்னாட்டு வாணிபத்தில் இந்தியாவின் சர்க்கரைத் தொழிலின் பங்கு மிகவும் குறைவே. அதாவது 0.05 விழுக்காடு சர்க்கரை ஆலைத் தொழில் எதிர்நோக்கும் சில பிரச்சினைகள், ஆலைகளின் திறனை முழுமையாகப் பயன்படுத்தாமை, கரும்பு உற்பத்தியாளர்களுக்குக் குறைவான விலை நிர்ணயம் செய்தல், தொழில் நலிவு, தொழிற்சாலைகளை மூடுதல் ஆகியனவாகும். அரசின் ஆதரவு, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் நிவாரணம் மூலம் நலிவடைந்த சர்க்கரை ஆலைகளை உயிர்பிக்கச் செய்தல், 10ஆம் ஐந்தாண்டுத் திட்டம் (2002-2007) ஆண்டுகளில் ரூ. 1300 கோடி முதலீட்டினை இலக்காகக் கொண்டுள்ளது.

தொழில் கொள்கைகள்

விடுதலைக்கு முன்னர் தொழில்துறை மிகச் சிறியதாக இருந்தது. நாட்டில், குறிப்பிடத்தக்க அளவில் தொழில் கொள்கை ஏதும் இல்லை. ஆனால், விடுதலைக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட தொழிற்கொள்கை முதன்முதலில் தொழில்மயமாக்கலுக்கு அளிக்கப்பட்ட ஊக்கமெனலாம். எனினும், 1951 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் விரிவான, குறிப்பிடத்தக்க மற்றும் உண்மையான தொழில் மயமாக்குதல் கொள்கை உருவாகியது. தொழில் மயமாக்குதலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் என்பது 1951 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட (வளர்ச்சி மற்றும் ஒழுங்குபடுத்துதல்) சட்டம் ஆகும். இச்சட்டத்தின் மூலம் மிக முக்கிய மற்றும் அடிப்படை தொழிற்சாலைகளை அரசு தன் வசம் கொண்டு வந்தது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பின்வரும் தொழில்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. அவையாவன, அணுமின்சக்தி, போர்த்தளவாடங்கள், விமானப் போக்குவரத்து, கப்பல் கட்டுதல், தொலைத்தொடர்பு, இரும்பு எஃகுத் தொழில், நிலக்கரி, கனிமவளங்கள் போன்றவை ஆகும். இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம், தொழிற்கொள்கை மற்றும் நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. விரைவான தொழில் வளர்ச்சியின் மூலம் பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விடுதலே இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கியக் குறிக்கோளாகும்.

1950 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பையொட்டி 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொழிற்கொள்கைத் தீர்மானத்தின்படி விரைவான தொழில்மயமாதலின் அடிப்படை திட்டமிடுதலும், நெறிப்படுத்துதலும் உருவாக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டு தீர்மானம் “நாட்டின் நோக்கம் சமதர்ம பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்ளுதல்” என்பதாகும். இதன்படி அனைத்து தொழில்களும் (அடிப்படை மற்றும் போர்த் தொழில்கள்) அல்லது சமூகப் பயன்பாட்டு தன்மையுடைய அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த தொழில்கள் பொதுத்துறையின் பொறுப்பிலிருந்து நல்ல முறையில் திட்டமிட்டு விரைவான வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும். இவ்வாறு, அரசு எதிர்கால தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு நேரடி பொறுப்பேற்க நேரிட்டது. 1956 ஆம் ஆண்டு தீர்மானத்தின் மற்றுமொரு பரிமாணம் என்னவெனில், அடிப்படை மற்றும் கனரகத் தொழில்கள், மூலதனப் பொருள்களை உருவாக்கும் தொழில்கள், 'தற்சார்பு” பெறும் வகையில் முக்கியத் துறைகளில் பங்கேற்க செய்தல் ஆகும். நுகர்வு பண்டங்களை உற்பத்தி செய்யும் தொழிலைவிட, மூலதனப்பண்டங்களை உற்பத்தி செய்யும் தொழில்களை ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் விரைவான வளர்ச்சிப் பெற இயலும் என்பதை உணர்த்தியது. இத்திட்டம் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. மேலும் இத்திட்டம் வேளாண்மை, ஊரக சிறு தொழில்களுக்கும், அடிப்படைக் கட்டமைப்புகளுக்கும் பேருதவி புரிந்தது.

பொதுத் துறையை மாற்றியமைத்தல் (Public Sector Restructuring)

1991ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பெற்ற பேரியல் பொருளாதார சீர்திருத்தங்கள், பொதுத்துறை நிறுவனங்களை குறிப்பிடத்தக்க அளவிற்கு சீரமைத்தது. விடுதலைக்குப் பின்னர் தொடரப்பட்ட இந்தியப் பொருளாதாரக் கொள்கைகள், புதிய பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் மூலம் முற்றிலும் மாற்றப்பட்டது. நாட்டின் பொருளாதாரம், அரசின் தலையீடுகளிலிருந்து விலகி சந்தையை சார்ந்ததாக மாறியது. பேரியல் பொருளாதார நிலைத் தன்மையின் பாதை; நாட்டின் திட்டமிட்ட பொருளாதாரத்தை சந்தை வழி போட்டியிடும் பொருளாதாரமாக ஆக்கியது. இதனைப் பொருளாதாரக் கொள்கைச் சீர்திருத்தம் என்று அழைக்கிறோம். இந்த வழிமுறை, தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல் மற்றும் உலக மயமாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இப்புதிய கொள்கைகள் பொதுத்துறையின் பெரும்பங்கினை (dominant role) குறைத்தது. இதற்கு (பொதுத்துறையின் பங்கு குறைவிற்கு) காரணம், 1991 புதிய தொழில் கொள்கை, பங்கு விலக்கல் (disinvestment), தனியார் மற்றும் அயல்நாட்டு மூலதனத்தை விலக்கல், பொதுத்துறையின் பொதுத்துவம், உலக மயம், ஊக்குவித்தல் போன்றவை ஆகும்.

மேற்கூறிய அனைத்து கொள்கைத் தூண்டுதல்களும் பொதுத்துறை நிறுவனங்களை மாற்றி அமைத்தது. பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பை பெருக்குதல் மற்றும் வருமானப் பகிர்வு செய்தல் என்ற நிலையிலிருந்து மாறி உச்ச இலாபத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. பொதுத்துறையின் செயல்பாடுகள் இலாப நோக்கத்தைக் கொண்டு செயல்படுவதை பலர் குறை கூறினர். நலம் அடிப்படையிலான விலை கொள்கை திறனாய்வுக்குட்பட்டது. 1991ஆம் ஆண்டின் புதிய தொழில் கொள்கை ஜூலை 1991ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்ட புதிய தொழில் கொள்கையின் மிக முக்கிய நோக்கம் தொழில் துறையில் போட்டியை ஊக்குவித்தலின் மூலம் தனியார் நிறுவனங்களை அதிக அளவு உற்பத்தியில் ஈடுபடச் செய்தலே ஆகும். கடந்த ஆண்டுகளில் தொழில் அமைப்பு வளர்ச்சியில் ஏற்பட்டிந்த ‘உருச்சிதைவை' சரிசெய்யும் விதத்திலும், முந்தய இலாபத்தை சேர்த்து ஈட்டும் பொருட்டும் தொழில்துறை செயல்படத் துவங்கியது. மேலும் இத்துறை வேலை வாய்ப்பு மற்றும் உற்பத்தியில் பன்னாட்டு அளவில் போட்டியிட்டு முன்னேறும் நோக்கத்தையும் கொண்டிருந்தது.

பொது நிறுவனங்களை மறுச்சீரமைத்தலின் சிறப்பு சீர்திருத்தங்கள்

(i) பொருளாதாரத்தில் தனியார்த் துறை பங்கேற்பை ஊக்குவித்தல் : பொதுத் துறைக்கென தொழில்துறையில் ஒதுக்கப்பட்ட பகுதிகள் 17லிருந்து 8 ஆக குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டது. குறிப்பாக தொலைத் தொடர்பு, மின்சாரம், விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம் போன்ற துறைகள் தனியாருக்கு திறந்துவிடப்பட்டன.

(ii) பங்கு விலக்கல் (disinvestment of share) கொள்கை மூலம் பொதுத்துறையின் வளங்களை பெருக்குவதுடன்; பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்கேற்பையும் ஊக்குவித்தல்.

(iii) நலிந்த தொழில் நிறுவனங்களுக்கு (sick industries), மறுவாழ்வு கொடுக்கவும், மறுச்சீரமைக்கவும் தொழில் மற்றும் நிதி மறுக்கட்டமைப்பு குழுவிற்கு (Board of Industrial Financial Reconstruction (BIFR) பரிந்துரை செய்தல்.

(iv) திறன் பெற்ற பொதுத்துறை நிறுவனங்களை (PSU) மட்டும் புதுப்பித்து புதிய சட்டதிட்டங்கள் மூலம் அதன் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்தல்.

(v) 'ஆண்டு நிதிநிலை அறிக்கை' மூலம் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் ஆதரவை படிப்படியாக விலக்கிக் கொள்ளுதல்.

(vi) நன்றாக செயல்படக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை (Public Sector Undertaking PSU) மட்டுமே வைத்துக்கொண்டு மற்ற நிறுவனங்களை மூடிவிடுவது ஆகும்.

1998-99 ஆம் ஆண்டு மேலும் இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் அகற்றப்பட்டது. மூன்று துறைகள் மட்டுமே பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்டு மற்ற அனைத்தும் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டிற்கு ஒதுக்கப்பட்டது. இவ்வாறு 1991ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை தொழில் கட்டுப்பாட்டினைத் தளர்த்தியது. எனவே குறிப்பிடத்தக்க அளவு பொதுத்துறை நிறுவனங்கள் சீரமைக்கப்பட்டதோடு தனியார்த் துறை வளர்ச்சியும் ஊக்குவிக்கப்பட்டது.

பொது நிறுவனங்களின் பங்குவிலக்கல் (Disinvestment of Public Enterprises)

1991 ஆம் ஆண்டின் புதிய தொழில் கொள்கையினால் தொழில் மறுச்சீரமைப்பு தொடர்ந்தது. இப்புதிய கொள்கை பங்கு விலக்கலில் அதிக அளவு (Ceiling) எதையும் நிர்ணயிக்காமல் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விலக்கல் செய்து கொள்ள பரிந்துரை செய்தது. நிதி நெருக்கடியின் காரணமாக பொதுத் துறை நிறுவனங்கள் பெருமளவில் பங்கு விலக்கல் கொள்கையை செயலாக்க விரிவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தனியார் மயமாக்குதல் தவிர வேறொன்றும் இல்லை. இதில் மூன்று மாதிரிகள் உள்ளன. அவை யாவன,

பொது வெளியீடு (Public Offer)

யுக்தி அளவு (Strategic Scale) மற்றும்

குறுக்கு உடமை (Cross holding).

1998ஆம் ஆண்டு அரசு 51 விழுக்காடுக்கு மேல் 'யுக்தி அளவு’ விற்பதற்கு முடிவு செய்தது. புதிதாக 74 முதல் 100% நிர்ணயித்தது. பங்குவிலக்கலின் நோக்கம் முக்கிய பகுதிகளான சமூகத் துறைகளுக்கு அதிக அளவில் முதலீடு செய்யும் பொருட்டு வேறு சில துறைகளிலிருந்து பங்கு விலக்கலை மேற்கொண்டு வளங்களைத் திரட்டுதல் ஆகும். இவ்வாறு திரட்டிய வளங்களை விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு (VRS) தொகை வழங்குதல், தொழிலாளர் பணிநீக்கத்திற்கு பயன்படுத்துதல், தொழிற்சாலைகளுக்கு வேலைக்கமர்த்தப்பட்டோர் (redeployment) போன்றவர்களுக்கு வழங்குதல் தனியார்த் துறையை வளர்ச்சியுறச் செய்தல், திறனையும் போட்டியையும் மேம்படச் செய்தல் ஆகியன பங்கு விலக்கலின் வேறு சில நோக்கங்களாகவும் இருந்தது. 1991-92ஆம் ஆண்டு ரூ. 30 பில்லியனுக்கு மேல் பொதுத் துறைப் பங்கு விலக்கல் மூலம் எழுப்பப்பட்டது. 199293ஆம் ஆண்டு ரூ. 35 பில்லியன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ. 18.6 பில்லியன் எழுப்பப்பட்டது. 2002-2003ஆம் ஆண்டு வரை ரூ. 300 பில்லியன் பங்கு விலக்கல் மூலம் எழுப்பப்பட்டது. இடது சாரிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் பங்கு விலக்கல் கொள்கையை குறைகூறிய போதிலும் அரசானது தொடர்ந்து பங்கு விலக்கல் கொள்கையை பொதுத்துறை மற்றும் லாபமீட்டும் துறைகளிலும் செயல்படுத்தி வருகிறது.

தாராளமயமாக்கலும் மற்றும் தனியார்மயமாக்கலும் (Liberalisation and Privatisation)

தாரளமயமாக்குதல் என்பது "சந்தை முறை அல்லது முதலாளித்துவ பொருளாதாரம் போட்டியையும் தனியார்த் துறையையும் முற்றிலும் சார்ந்திருத்தல்” ஆகும். இது தடையிலா வாணிபம், பேதமற்ற சுங்க வரி மற்றும் முழு பங்கேற்பினை ஏற்றல் ஆகியவற்றை கொண்டிருந்தது. தாராளமயமாக்குதல் கொள்கை தனியார்த் துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அரசின் பங்கினை பொருளாதார நடவடிக்கைகளில் மிகக் குறைவான அளவே செயல்படுத்துதல் ஆகும். மேலும் வெளியிலிருந்து மூலதனத்தை வரவேற்றல், மூலதன ஆக்கத்தைப் பெருக்குதல், ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல், மூலதனப் பயன்பாட்டின் திறனை அதிகரித்தல் இதன்மூலம் ஏற்றுமதிப் பொருட்களின் தர மேம்பாடு உறுதி செய்யப்படுதல் ஆகியனவும் ஆகும். இந்தியாவில் தாராளமயமாக்கல் ஆரம்பத்தில் சந்தைக் கட்டுப்பாட்டினையும் அல்லது சந்தை ஒழுங்கின்மை மூலம் தனியார் மயமாக்குவதையும் குறிக்கும்.

தாராளமயமாக்கலின் ஒரு பகுதியாகவே தனியார்மயமாக்கல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தனியார் மயமாக்கல் என்பது தொழிற்சாலைகளை பொதுதுறையிலிருந்து தனியாருக்கு உரிமை மாற்றத்தை குறிப்பிடுவதாகும். இது (Transfer of Ownership) நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் பங்கினைக் குறைக்கும் ஒரு வழிமுறையாகும். அதிகமான வளர்ச்சியைப் பெறுவதற்காக, தனியார் துறை வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதலின் மூலம் வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு முதல் தனியார் மயமாக்குதல் ஊக்குவிக்கப்பட்டது. இம்முறை மேற்கொள்ளப்பட்டதன் வகைகள் முறையே பங்குவிலக்கல் முறை, பொதுதுறையை தனியாருக்குக் கொடுத்தல், பொதுத்துறையில் தனியார் துறையை தாராளமாக (deregulation and delicencing) நுழையச் செய்தல், மேலாண்மையை பொதுத்துறையிலிருந்து தனியார்த் துறைக்கு கொடுத்தல், பொது முதலீட்டை தடுத்து நிறுத்துதல் போன்றவையாகும். பொதுத்துறையை மறுசீரமைத்தல் என்பது தற்போதுள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு பங்குவிலக்கல் அல்லது தனியார் மயமாதலைக் (Denationalisation) குறிக்கும். தாராளமயமாதல் மற்றும் தனியார்மயமாதலை வரன்முறை மற்றும் உரிமம் மறுத்தலின் வாயிலாக பொதுத்துறையின் பங்கினைக் கட்டுப்படுதலைக் குறிக்கும்.

1992-97ஆம் ஆண்டின் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் பொதுத்துறையின் புதிய இலக்குகளை அடைய மறுச்சீரமைப்பு தேவை என்பதை வலியுறுத்துகிறது. புதிய நோக்கம் யாதெனில், “பொதுத்துறை நிறுவனங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கவேண்டி உள்ளது. எவ்வாறெனில் தன்னிச்சையோடும், போட்டி மனப்பான்மையோடும் திறமையான நிர்வாகத்தோடும் திகழவேண்டிய இத்துறை, அத்தியாவசிய உள்கட்டமைப்புப் பண்டங்கள் மற்றும் இயற்கை வள மேம்பாடுகளையும் யுக்தி சார்ந்தப் பகுதிகளையும் அளிக்கவேண்டும்”.

எட்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் பொதுத்துறை சீர்திருத்தங்கள்

1. மறுச்சீரமைப்பு, ஈடுபடச் செய்தல், நவீனமாக்குதல், பகுத்தறிவுச் செயல்பாடுகள், உற்பத்திக் கலவை மாற்றம், தன்மை வெளியேற்றம் (Selective Exit) மற்றும் தனியார் மயமாதல்.

2. ஏழாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் கொண்டுவரப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் (MOU) நிர்வாக அமைச்சுப்பணி மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் தன்னிச்சை செயல்பாடுகளை அதிகரித்து விரைவுபடுத்தியது.

3. குறிப்பிட்ட நிறுவன அளவில் திறன் மேம்பாடு, திறமையான தலைமை, வளம் மற்றும் புத்தாக்கம் வாயிலாக மேலாண்மையை மாற்றியமைத்தல்.

4. பொதுத்துறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவர மாநில அரசுகள் முயற்சித்தன.

5. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (R&D) வாயிலாக தொழில்நுட்ப இறக்குமதி, தொழில்நுட்ப மேம்பாடு.

6. தாராளமயமாக்குதல் மற்றும் வெளிச்சந்தை முறையை பற்றி அரசு மற்றும் அமைச்சகங்களுக்கு போதிய புத்தாக்கப் பயிற்சி அளித்தல்.

சுற்றுச்சூழல் மாசடையக் காரணங்கள் (Environmental Hazards)

மனித இனத்திற்கு சுற்றுச்சூழல் மாசடைதல் மிகப்பெரிய கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. மேலைச் சமுதாயம் 'நுகர்வுத்தன்மை' (consumerism) என்னும் பண்பாட்டினால் அதிக உற்பத்தியை முடுக்கிவிட்டது. இத்தகைய மேலை நாட்டுச் செயல்பாடு கீழை நாடுகளிலும் “பயன்படுத்து மற்றும் எரிந்துவிடு” (use & through) என்னும் உற்பத்திப் பண்டங்களை பெருமளவில் பெருகச்செய்தது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்ற சுற்றுச்சூழலில் மாற்றத்தை சந்திக்க நேர்ந்தது. செல்வந்தநாடுகள், சுற்றுச்சூழலுக்கு போதிய அளவு சேதம் ஏற்படுத்திய பிறகு, வளரும் நாடுகளின் தொழில் வளர்ச்சிக்கு அதிகத் தடைகளை விதிக்க நினைக்கிறது. அதே நேரத்தில் வளர்ந்த நாடுகள் தங்களது சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வழிமுறைகளை வளரும் நாடுகளோடு பகிர்ந்து கொள்ள மறுக்கிறது. விடுதலைக்குப் பின்னர் இந்தியா கனரகத் தொழில்களை தொடங்கியதன் மூலம் புதிய தொழில்கள் உருவாகின; ஏற்கனவே இருந்த தொழில்கள் நவீனப்படுத்தப்பட்டன மற்றும் மேம்படுத்தப்பட்டன. தொழில் மயமாக்குதல் சுற்றுச்சூழலுக்கு தீங்காக அமைந்தது. 'பசுமைப் புரட்சி' சுற்றுச்சூழலை பெருமளவு சேதமடையச் செய்தது. மேலும் காடுகளை அழித்தல் மீன்பண்ணைகள் போன்றவை சுற்றுச்சூழலை மிகவும் சேதமடையச் செய்தது மத்திய, மாநில அரசுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்க, மேம்படுத்த பல சட்டங்களை இயற்றியுள்ளன. இப்பிரச்சினைகளை போக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கப்பட்டது. பின்வருபவை இந்தியாவில் மாசுக்கட்டுப்பாட்டின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகும்.

1. நாட்டின் சுற்றுச்சூழல் கொள்கை ஒன்றை ஏற்படுத்துதல்.

2. கியாட்டோ (Kyoto Protocol) முறையைப் பின்பற்றி தேசிய சுத்தம் சார்ந்த வளர்ச்சி கருவி (Clean Development Mechanism - CDM) அதிகாரக்குழு ஒன்றை ஏற்படுத்துதல்.

3. மறுபொறியியல் சுற்றுச்சூழல் சுத்தமுறையை மேற்கொள்ளல்.

4. கடலோர கட்டுப்பாட்டு பகுதியை (Coastal Regulation Zone - CRZ) ஏற்படுத்துதல்

5. நாட்டின் தேசிய இரசாயன நிர்வாக அமைப்பு ஒன்றை வளர்ச்சியுறச் செய்தல்.

இவ்வாறான முயற்சிகள் பல இருந்தும் மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் குறிப்பாக பல பேரளவுத் தொழில்கள், மீன் வளர்ப்பு, அனல் மின்சாரம் மற்றும் அணுமின்சார நிறுவனங்கள் போன்றவை காற்று, நீர், நிலம் ஆகியவற்றை பெருமளவில் மாசுபடுத்துகின்றன. உலகளவில், பெரிய நகரங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், எண்ணெய் கிணறுகள், நாடுகளிடையே தொடர்ச்சியான போர்கள் (எ.கா. அமெரிக்கா, ஈராக்குடன் தொடுத்துள்ளபோர்) நாடுகள் அடிக்கடி நடத்தும் அணுகுண்டுச் சோதனைகள் போன்றவை சுற்றுச் சூழலை அதிக அளவு சேதப்படுத்தி நாகரிக சமுதாயங்களின் சீரமைத்தலைப் பற்றி அக்கரைக் கொள்வதில்லை.

தொழில் நிதி (Industrial Finance)

'நிதி', தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகும். தொழிற்சாலைகளின் 'நிதி'த் தேவை என்பது குறுகிய கால அளவில் நடைமுறை மூலதனம்'. (Working capital) தேவையைக் குறிப்பதாகும் (அ) நீண்ட கால அளவில் நிரந்தர மூலதன (Fixed Capital) தேவையைக் குறிப்பதாகும். இவ்வாறான தேவையை நிறைவேற்ற தொழிற்சாலைகள் பல வழிகளில் நிதியை எழுப்புகிறது. இந்தியாவில், பல நாடுகளில் உள்ளது போன்றே தொழில் நிதியானது இருபெரும் வழிகளில் கிடைக்கிறது அவையாவன

(1) வெளிவழி

(2) உள்வழி.

உள்வழி (Internal Source) : தொழில் நிதிக்கான உள்வழி என்பது சிறுதொழில்களைப் பொறுத்தவரை தானே திரட்டிக்கொண்ட நிதி ஆகும். பேரளவு தொழிலைப் பொறுத்தவரை பங்கு மூலதனம், சந்தாத் தொகை போன்றவற்றின் மூலம் செலுத்தப்பட்ட மூலதனத்தைக் குறிப்பதாகும். தொழிற்சாலைகளில் சொந்தமான உபரியையும் வைப்புநிதியையும் இது குறிக்கும்.

வெளி வழி (External Source) : வெளி வழியாக பெறப்பட்ட தொழில் நிதி என்பது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட வைப்புநிதி, சமச்சீர் மூலதனம், கடன்பத்திரம், வணிக வங்கிகளிடமிருந்தும் இதர நிதி நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்ட கடன் போன்றவை ஆகும்.

நிதி நிறுவனங்கள் குறுகிய கால நிதித் தேவைகளை பொதுவைப்பு பங்கு மூலதனம் மற்றும் வணிக வங்கிகளின் கடன் போன்றவற்றின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம். எனினும் நீண்டகால தேவைகளுக்கு தொழிற்சாலைகள் சிறப்பு வாய்ந்த நிதி நிறுவனங்களையே அணுக வேண்டியுள்ளது. வளரும் நாடுகளில் இந்நிதி நிறுவனங்கள் வளர்ச்சி வங்கிகள் என்று அழைக்கப்படுகின்றன. இதன் பொருள் இந்நிறுவனங்களின் பணி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இவ்வாறு, இந்நிறுவனங்கள், தங்களின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் வளர்ச்சிப் போக்கை தூண்டுபவைகளாக உள்ளன.

நாட்டு அளவில் (At National Level)

1. இந்தியத் தொழில் நிதிக் கழகம் (IFCI)

2. இந்தியத் தொழில் முன்னேற்ற வங்கி (IDBI)

3. இந்தியத் தொழில் கடன் முதலீட்டுக் கழகம் (ICICI)

4. இந்திய தொழில் முதலீட்டு வங்கி (IBI)

5. தேசிய சிறுதொழில் கழகம் (NSIC)

மாநில அளவில் (At State Level)

1. தமிழ்நாட்டு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) (1949 முதல்)

2. மாநில நிதிக் கழகம் (SFC)

3. மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் (SIDC)

இடைநிலையளவில் (At the Intermediate Level)

1. யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (UTI)

2. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC)

3. இந்திய பொது இன்சுரன்ஸ் கழகம் (GIC)

பொருளாதார வளர்ச்சியில் சிறுதொழில் நிறுவனங்களின் பங்கு

ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சிறு தொழில்கள் தலையாய பங்கு வகிக்கின்றன. உற்பத்தி, வேலைவாய்ப்புப் பெருக்கம், ஏற்றுமதியின் பங்கு, வருமானத்தை பகிர்ந்தளித்தல் ஆகியவற்றிற்கு சிறுதொழில்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது.

சிறுதொழில்களை இருவகைகளாகப் பிரிக்கலாம்.

1. தொன்மை வாய்ந்த கிராம மற்றும் குடிசைத் தொழில்கள். அதாவது, கதர் கிராமத் தொழில், கைவினைத் தொழில், கைத்தறி நெசவு, பட்டுப் புழு வளர்த்தல், கயிறுத் தொழில்கள் போன்றவை சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.

2. நவீன சிறு தொழில் நிறுவனங்கள்.

தொன்மைவாய்ந்த கிராம மற்றும் குடிசைத் தொழில்கள் பெருவாரியாக கிராமப்புறங்களிலும், நகரை ஒட்டிய பகுதிகளிலும் காணப்படும். இத்தொழில்களில் சாதாரணமாக மின்சாரத்தினால் இயங்கும் இயந்திரங்களை பயன்படுத்தமாட்டார்கள். மேலும் குறைவான முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே உற்பத்தியில் ஈடுபடுவார்கள். ஆனால், இவை சமுதாயத்தில் அதிக அளவு ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பை பெற்றுத் தருகின்றன. மேலும் இவை அத்தியாவசியப் பண்டங்களை உற்பத்தி செய்து தருவதுடன் ஏற்றுமதிக்கு வழி வகுக்கிறது.

தற்கால சிறு தொழில்கள், முதலீட்டின் அளவைப் பொறுத்தும், உழைப்பின் சக்தியைப் பொறுத்தும் வரையறுக்கப்படுகின்றன. தொழில்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைப் படுத்துதல்) சட்டம் 1951 சிறுதொழில்களை (SSI) மின்னிணைப்புடன் செயல்படும் சிறுதொழிற் சாலைகள் 50 நபர்களுடனும், மின்சார உதவியின்றி செயல்படும் சிறு தொழில்களுக்கு 100 நபர்கள் வரை வேலை செய்யலாம் என வரையறை செய்துள்ளது.

அசையா சொத்துக்கள் ரூ. 35 இலட்சத்திற்கு குறைவாக (1981ன்படி) இருத்தல் வேண்டும். 1991ல் இதன் வரையறை ரூ. 60-75 இலட்சத்துக்கு உயர்த்தப்பட்டது. 9ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தின்படி இதன் உச்ச வரம்பு ரூ. 100 இலட்சமாக உயர்த்தப்பட்டது. 10ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தின்படி இதன் உச்ச வரம்பு உயர்தொழில் நுட்ப (Hi-tech) ங்களை பயன்படுத்தும் சிறுதொழில்களுக்கு ரூ. 50 கோடி ஆக உயர்த்தப்பட்டது. சிறுதொழில் வளர்ச்சிக்கு (SSI) அரசு பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் 'ஒதுக்கீடு' (Reservation) என்னும் தனிச் சிறப்பு வாய்ந்த சாதனம் 1970ஆம் ஆண்டு முதல் சிறு தொழில்களைக் காத்து வருகிறது. இதன்படி பெருந்தொழில்களுக்கு உற்பத்தி மற்றும் வளர்ச்சியை சட்ட ரீதியாக தடுக்க சில தடைகளும், சிறுதொழில் உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் பாதுகாப்பு அளித்து உயர்வடையச் செய்கிறது. 9 ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் சிறுதொழில்கள் ஏறத்தாழ 8000 பொருள்களை உற்பத்தி செய்கிறது. இதனுள் 812 பொருள்கள் (15 விழுக்காடு) சிறு தொழில்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனுடன் கூட, உள்கட்டமைப்புக்கு துணைபுரிதல், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், கடன் பெறுவதற்கு முக்கியத்துவம் அளித்தல், கொள்கை ரீதியாக சிறு தொழில்களுக்கு உதவி புரிதல் ஆகிய வகைகளில் 'அரசின் கொள்கைகள்' சிறுதொழில்களை ஊக்குவித்தும் உதவி புரிந்தும் வருகின்றது.

பொருளாதார வளர்ச்சியில் சிறுதொழில்களின் பங்கு (Role of SSI in Economic Development)

பின்வருபவற்றை செய்து உதவி புரிவதன் மூலம் சிறுதொழில் முக்கியத்துவம் பெறுகிறது.

அதிக அளவு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துகிறது.

அநேக பொருள்களை அளிக்கிறது,

ஏற்றுமதிக்கு அதிக அளவு பங்களிப்பு செய்கிறது.

வருமானத்தை சமமாக பங்கீடு செய்வதற்கு வசதி வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

வெளித்திறன் பதவி பெறுவதற்கு (Outsourcing Designation) வழி வகுக்கிறது.

இதனால் கடந்த 50 ஆண்டுகளில் சிறுதொழில் துறை மிக முக்கிய இடத்தைப் பெற்று விளங்குகிறது. ஒட்டுமொத்த தொழில் துறை பெற்ற வளர்ச்சியைவிட கூடுதலாக ஒன்று முதல் இரண்டு விழுக்காடு வரை வளர்ச்சியை சிறுதொழில்கள் (SSI) பெற்றுள்ளன. 2002 மார்ச் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 3.4 மில்லியன் சிறுதொழில் அலகுகள் உள்ளன. இவை உற்பத்தித் துறையில் 40 விழுக்காட்டிற்கு அதிகமாக மொத்த மதிப்பினைப் பெற்றுள்ளது. மேலும் மொத்த ஏற்றுமதிக்கு 35 விழுக்காடு தனது பங்களிப்பை செலுத்தியுள்ளது. பின்வருபவை (SSI) சிறுதொழில்களின் மிக முக்கிய பங்கு ஆகும்.

1. உற்பத்தித் துறை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) ஒட்டுமொத்தத்திற்கு சிறுதொழில்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது.

2. நீண்ட காலத்திற்கு வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய துறையாகவும், சிறு தொழில் துறை விளங்குகிறது.

3. வாணிபச் செலுத்து சமநிலையில் உள்ள சமநிலையின்மையை போக்குவதற்கு சிறுதொழில்கள் தனது ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலம் உதவி புரிகிறது.

4. பேரளவுத் தொழில்கள் வருமான ஏற்றத் தாழ்வுகளையும், 'செல்வக் குவிப்புக்கும் வழிவகுக்கும் நிலையில், சிறுதொழில்கள், செல்வம் மற்றும் சமமான வருமானப் பகிர்வதற்கு உதவி புரிகிறது.

5. நலிந்த, வாய்ப்பை இழந்த, திறமையான தொழில் முயல்வோர்களுக்கு அதிக வாய்ப்புக்களை சிறுதொழில்கள் வழங்குகின்றன.

6. போதிய மூலதனத்தை உற்பத்திப் பயன்பாட்டிற்கு கொடுத்து உதவுகிறது.

7. சிறுதொழில்கள் புதிய செலவுக்கு ஏற்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதால், உற்பத்திக்கு ஏற்ற நன்மைகள் ஏற்படுகின்றன.

8. சிறுதொழில்கள் வளங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும். இதில் அதிக கழிவு (Wastage) இருக்க வாய்ப்பில்லை.

9. சிறுதொழில்கள் அதிக ஒதுக்கீட்டுத் திறனை பெற்றுள்ளன. சிறுதொழில்களில் இடர்ப்பாடுகள் குறைவு. எனவே, அதிக வளங்களை பெருமளவிலான உழைப்புச் சக்திகள் (Huge Labour Force) பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சிறுதொழில்களில் காணப்படும் பிரச்சினைகள் (Problems of Small Scale Industries)

சிறுதொழில்கள் அநேக பிரச்சினைகளை சந்திக்கின்றன. பின்வருபவை அவற்றுள் மிக முக்கியமானவை ஆகும். அவையாவன

உள்ளீடுகளில் பற்றாக்குறை

மூலதனப் பற்றாக்குறை

சந்தைப்படுத்துதல்

திறன்களை முழுமையாகப் பயன்படுத்தாமை

மிக அதிகமான உற்பத்திச் செலவு

சிறுதொழில்களும், அரசின் கொள்கையும் (Government Policy on SSI)

இந்தியப் பொருளாதாரத்தில் சிறு தொழில்களின் அவசியத்தை உணர்ந்தமையால், விடுதலை பெற்ற நாள் முதல் அரசு சிறு தொழில் நிறுவனங்களை பாதுகாக்க பல்வேறு கொள்கை முடிவுகளை கொண்டு வந்துள்ளது.

1. 1955ஆம் ஆண்டு திட்டக்குழுவில் "சிறுதொழில் மேம்பாட்டு வழிமுறைகளைக் கண்டறிய ”நியமிக்கப்பட்ட “கார்வே குழு” இதற்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின்போது இந்திய சிறுதொழில்களை (SSI) ஆராய்ந்த ஜப்பான் வல்லுநர் குழு 'தொழில் பேட்டைகளை” (Industrial Estate) பெருமளவில் பரிந்துரை செய்தது சிறுதொழில் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவியது.

2. 1967ஆம் ஆண்டின் “உற்பத்திப் பொருள்கள் ஒதுக்கீட்டுக் கொள்கை” சிறு தொழிலுக்கென உருவாக்கப்பட்டது. இது 1984 ஆண்டு சட்டப்பூர்வமான வங்கியைப் பெற்றது.

3. 1991ஆம் ஆண்டின் தொழில் கொள்கை சிறுதொழில் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியது.

4. S.P. குப்தாவின், பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் சிறுதொழில்களுக்கு பின்வரும் சலுகைகளை அளித்தது.

(அ) உற்பத்தி வரி விதிவிலக்கு உயர்த்தப்பட்டது.

(ஆ) கடன் வரையறை உயர்த்தப்பட்டது (Loan limit)

(இ) கடன் வசதிகள்.

(ஈ) முதலீட்டளவு உயர்த்தப்பட்டது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்