முன்னுரை இந்தியப் பங்கு சந்தையின் வளர்ச்சிக்காக பங்கு மாற்றகங்களின் செயல்களை ஒழுங்குபடுத்த சுதந்திரமான ஒரு தனி அமைப்பின் மேற்பார்வையிலும் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டு வருதல் அவசியமாகிறது. எனவே மத்திய அரசு இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தை ஏற்படுத்தியது. செபி (SEBI) April 1988-ல் ஒரு நிர்வாக அமைப்பாகச் செபி ஏற்படுத்தப்பட்டது. 30.01.1992 அன்று இந்திய பாராளுமன்றத்தில் செபி சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் இதற்குச் சட்ட வடிவம் கொடுக்கப்பட்டது. நோக்கம் செபியின் அடிப்படை நோக்கங்களாவன: முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல். பத்திரச் சந்தை நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் மற்றும் ஒழுங்கு படுத்துதல், அதனைச் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுதல். 1992-ல் வாரியமாக செபி ஏற்படுத்தப்பட்டபோது, இடைத்தரகர்களின் செயல்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துதல், உள் வணிகத்தை (insider trading) தடை செய்தல், பங்குகளின் ஏலத்தை நடைமுறைக் கோட்பாடுகள் உருவாக்கி நாணயமாக நடக்கச் செய்தல் ஆகிய பணிகள் அதற்கு இருந்தது. செபியின் முக்கிய கூறுகள் (இயல்புகள்) செபி, சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட நீடித்த வாழ்வு மற்றும் பொது முத்திரையைக் கொண்ட ஒரு கூட்டுருவாக்கமாகும். செபியின் தலைமை அலுவலகம் மும்பையிலும் கிளை அலுவலகங்கள் இந்தியாவின் மற்ற நகரங்களிலும் இயங்கும். இவ்வாரியம் கீழ்கண்ட உறுப்பினரைப் பெற்றிருக்கும். அ) சபைத்தலைவர் ஆ) நிதி மற்றும் சட்ட அமைச்சக அலுவலர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் இ) ரிசர்வ் வங்கி அலுவலர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் ஈ) மேலும் இரண்டு உறுப்பினர்கள் சபைத் தலைவர் மற்றும் வாரியத்தின் ஐந்து உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுவர். செபியின் பொதுக் கண்காணிப்பு, வழிகாட்டுதல் (ஆணை), மேலாண்மை ஆகியவை உறுப்பினரவையிடம் (Board of members), இருக்கும். இவ்வுறுப்பினர்களவை வாரியத்தின் எல்லா அதிகாரங்களையும் பெற்று பணிகளை நிறைவேற்றும். வாரியத்தின் சபைத் தலைவரையும், மற்ற உறுப்பினர்களையும் அப்பொறுப்பிலிருந்து நீக்க மத்திய அரசுக்கு அதிகாரமுண்டு. மத்திய அரசு நிதியுதவி செய்வதுடன் வாரியத்திற்கு அவ்வப்பொழுது தேவைப்படும் மானியங்களையும் வழங்குகிறது. செபியின் கொள்கைகளையும், திட்டங்களையும் வகுக்கும்பொழுது அவற்றிற்க்கான ஆணைகள் வழங்க மத்திய அரசுக்கு அதிகாரமுண்டு. வாரியம் தவறுகள் செய்யும்பொழுது அவற்றை விலக்கி சரிசெய்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. பணிகள் பத்திரங்களின் சந்தையை வளர்ச்சியடையச் செய்யவும், அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், செபி வாரியம் கீழ்காணும் செயல்களில் ஈடுபடுகின்றது. பங்கு மாற்றகங்களின் வியாபாரத்தை ஒழுங்கு படுத்துதல் இடைத்தரகர்களான பங்குத் தரகர்கள், துணைத் தரகர்கள், வெளியீட்டு வங்கியர், ஒப்புறுதியாளர்கள் மற்றும் பத்திரச் சந்தையுடன் தொடர்புடைய மற்ற இடைத்தரகர்களின் செயல்பாடுகளைப் பதிவுசெய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் பரஸ்பர நிதியங்கள்(Mutual funds) உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்களைப் பதிவு செய்து ஒழுங்கு படுத்துதல். சுயக் கட்டுப்பாட்டு நிறுவனங்களைத் தோற்றுவித்தலும் ஒழுங்குபடுத்துதலும் பத்திரச் சந்தையில் மோசடியான மற்றும் நேர்மையற்ற வணிக நடவடிக்கைகளைத் தடை செய்தல் முதலீட்டாளர்களிடையே விழிப்புணர்ச்சியை வளர்த்தல் மற்றும் இடைத்தரகர்களுக்கான பயிற்சி அளித்தல். பத்திரங்களுக்கான உள் வணிகத்தைத் தடை செய்தல். பங்குகளைக் கணிசமான அளவில் வாங்கி, நிறுமங்களை எடுத்துக் கொள்ளல் போன்ற நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல். பங்கு மாற்றங்களிலிருந்து அவற்றின் அமைப்பு போன்ற விவரங்கள் பெறுவது, பங்கு மாற்றங்களைப் பரிசோதனை செய்தல், விசாரணை மற்றும் தணிக்கை செய்தல். மத்திய அரசால் ஒப்படைவு (delegation) செய்யப்பட்ட பணிகளைச் செய்தல். பங்கு மாற்றகத்தில் செபியின் பங்கு முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பத்திரச் சந்தையை வளர்ச்சி பெறச் செய்வதற்கும், அவற்றின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும் மத்திய அரசால் பத்திரங்கள் மற்றும் மாற்றகங்கள் வாரிய சட்டத்தின் (1992) கீழ் செபி நிறுவப்பட்டது. ஒவ்வொரு பங்கு மாற்றகம் மத்திய அரசிடமிருந்து அங்கீகாரம் பெற வேண்டும். அவ்வாறு அங்கீகாரம் பெறுவதற்கான விதிகளைப் பங்கு மாற்றகங்கள் பின்பற்றியிருக்கின்றனவா எனக் கண்டறிய செபி உதவுகிறது. அங்கீகாரம் பெற விரும்பும் பங்கு மாற்றகம் மத்திய அரசுக்கு விண்ணப்பம் செய்தல் வேண்டும். அவ்விண்ணப்பத்துடன், பங்கு மாற்றகத்தின் அமைப்பைப் பற்றிய விதிகள், ஒப்பந்தங்களை ஒழுங்கு படுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிற்குரிய பங்கு மாற்றகத்தின் நடைமுறை விதிகள் - இவற்றின் நகலை இணைக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களை மத்திய அரசின் சார்பில் செபி ஆராய்ந்தறியும். கீழ்காணும் நிபந்தனைகளை பங்குமாற்றகம் திருப்தி படுத்தியிருந்தால் அவற்றிற்கு அங்கீகாரம் அளிக்கப்படும். அ) பங்கு மாற்றகத்தின் நடைமுறை விதிகள் நேர்மையான வணிகத்தை ஏற்படுத்தும். வணிகம் மற்றும் முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கும். ஆ) மத்திய அரசு விதிக்கும் பிற நிபந்தனைகளைப் பங்கு மாற்றாகங்கள் தவறாமல் பின்பற்றும். பங்கு மாற்றகத்தின் மீதான செபியின் அதிகாரங்கள் செபி சட்டம் கீழ்காணும் அதிகாரங்களைச் செபிக்கு வழங்கியுள்ளது. பங்கு மாற்றகத்திடமிருந்து பருவகால அறிக்கைகளைக் கோருதல். சில ஆவணங்களைப் பராமரிப்பது குறித்து பங்கு மாற்றாகங்களுக்கு வழிமுறைகளை வகுத்தளித்தல் பங்கு மாற்றாகங்களின் அலுவல்கள் குறித்து பங்கு மாற்றங்களையோ அல்லது அதன் உறுப்பினரையோ அழைத்து விவரம் கோருவது. பங்குகளைப் பட்டியலிடக் கோரி பொது நிறுமங்களைக் கட்டாயப்படுத்துதல். பத்திர ஒப்பந்தச் (ஒழுங்காற்று) சட்டம் தன் ஒரு சில அதிகாரங்களைச் செபிக்கு கீழொப்படைவு செய்ய மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கிறது. அவைகளாவன: பங்கு மாற்றகத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் உரிமை அமைப்பு, உறுப்பினர்கள் அனுமதி போன்றவற்றில் பின்பற்றப்படும் விதிமுறைகளை மாற்றியமைக்க ஆணையிடும் அதிகாரம். பங்கு மாற்றங்களின் மேலாண்மைக் குழுவின் செயல்பாட்டை விலக்கி (supersede) வைக்கும் அதிகாரம். ஒரு அங்கீகரிக்கப்பட்ட பங்கு மாற்றகத்தின் நடவடிக்கைகளைத் (பங்கு மாற்றகத்தில் நடைபெறும் வணிகத்தை) தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உரிமை. குறிப்பிட்ட சில நிலைகளில் ஒப்பந்தங்களைத் தடை செய்வதற்கான உரிமை. செபியின் செயல்பாடுகள் செபி தன் கடமைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்துகிறது. முதலீட்டாளர்களின் பாதுகாப்பு, நிறும நிதி நிலவரங்களை வெளியிடுதல் குறித்து செபி வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. வர்த்தக வங்கிகளுக்கான வழிமுறைகளையும், பரஸ்பர நிதிகள் விளம்பரம் செய்வதில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் ஆகியவைகளையும் செபி வெளியிட்டுள்ளது. ஆதாரம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்